Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இந்தியாவின் முதல் பெண் புகைப்பட பத்திரிகையாளர்!

நன்றி குங்குமம் தோழி

இந்திய ஊடக வரலாற்றில் பெண்களின் முன்னேற்றம் குறித்து பேசும்போது தவிர்க்க முடியாத ஒரு பெயர் ஹோமாய் வயரவல்லா (Homai Vyarawalla). தொடக்கத்தில் ஆண்களே அதிகமாக இருந்த இத்துறையில், கேமராவை ஆயுதமாக எடுத்துக்கொண்டு வரலாற்றை பதிவு செய்த இந்தியாவின் முதல் பெண் புகைப்பட பத்திரிகையாளர் என்ற பெருமை பெற்றவர். அவர் எடுத்த ஒவ்வொரு புகைப்படமும், ஒரு காலத்தின் சாட்சியமாக உள்ளது.

1913-ம் ஆண்டு குஜராத்தில் நவசாரி எனும் சிறிய கிராமத்தில் பிறந்த ஹோமாய், சிறுவயதிலிருந்தே கலை மற்றும் காட்சியமைப்பில் ஆழ்ந்த ஆர்வம் கொண்டவர். அந்த ஆர்வமே அவரை புகைப்படக் கலை உலகிற்குக் கொண்டு சென்றது. சமூகக் கட்டுப்பாடுகளை பொருட்படுத்தாமல், தனது விருப்பத்தைத் தேர்ந்தெடுத்தார். அவருடைய முதல் புகைப்படம், மும்பையில் உள்ள மகளிர் மன்றத்தின் ஒரு சுற்றுலா விருந்தில் கலந்து கொண்ட பெண்களை படம் பிடித்ததாகும். அது 1930-ல் ‘பாம்பே க்ரோனிக்கல்ஸ்’ இதழில் வெளியிடப்பட்டது.

ஹோமாய் வயரவல்லாவின் புகைப்படங்கள் சாதாரண காட்சிகள் அல்ல. அவை வரலாற்றின் உயிருள்ள பதிவுகள். இந்தியா சுதந்திரம் அடைந்த காலகட்டத்தில் நிகழ்ந்த பல முக்கிய தருணங்களை அவர் தனது கேமராவில் பதிவு செய்துள்ளார். 1947 ஆகஸ்ட் 16 அன்று டெல்லி செங்கோட்டையில் நடந்த முதல் கொடியேற்ற விழா முதல் மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு போன்ற உலகப் புகழ்பெற்ற பிரமுகர்களின் ஈமச்சடங்குகள் வரை, இந்திய வரலாற்றின் மிகவும் மறக்கமுடியாத மற்றும் அற்புதமான சில தருணங்களை அவர் படம்பிடித்தார்.

ராணி எலிசபெத் மற்றும் டியூக் அவர்களின் இந்தியப் பயணம் மற்றும் இந்தியப் பிரிவினைக்கு வழிவகுத்த ஜூன் 3 திட்டத்திற்குத் தலைவர்கள் வாக்களித்த கூட்டம் போன்ற பெரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மற்ற தருணங்களையும் அவர் புகைப்படம் எடுத்தார். பத்திரிகைத் துறையில் அவரது பங்களிப்பை மதித்து இந்திய அரசு அவருக்கு பத்ம விபூஷன் விருதை வழங்கி அங்கீகரித்தது. அவர் எடுத்த புகைப்படங்கள் இன்று வரலாற்று ஆவணங்களாகவும், கலைப்பொருட்களாகவும் மதிக்கப்படுகின்றன.

அன்று பத்திரிகையாளர் கூட்டங்களில் பெண்களுக்கு அனுமதி குறைவாக இருந்தது. இருப்பினும், தனது திறமை மற்றும் தன்னம்பிக்கையால் அந்த எல்லைகளைக் கடந்து சென்றார். ‘Dalda 13’ என்ற புனைப்பெயரில் தனது படங்களை வெளியிட்டது, அவரது தனித்துவமான அடையாளமாக மாறியது.

தொகுப்பு: ஆர்.ஆர்