Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இந்திய மீன்பிடிக் கப்பலின் முதல் பெண் கேப்டன்!

நன்றி குங்குமம் தோழி

நான் முதல்வன்

கப்பலில் கேப்டனாக இருப்பதற்கே சில பிரத்யேகத் தகுதிகள் வேண்டும். மீன்பிடிக் கப்பல் என்றால் இன்னும் சில கூடுதல் தகுதிகளும் பெற்றிருக்க வேண்டும். அப்படிப்பட்ட தகுதிகள் அனைத்தையும் பெற்று, இந்திய மீன்பிடிக் கப்பலின் முதல் பெண் கேப்டன் என்ற பெருமைக்குரியவரானவர் கேரளாவைச் சேர்ந்த ஹரிதா என்ற 25 வயதுப் பெண்.கேரளாவில் இருக்கும் ஆலப்புழையின் எழுபுன்னா பஞ்சாயத்தைச் சேர்ந்தவர் ஹரிதா. கொச்சியில் உள்ள சென்ட்ரல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஃபிஷரீஸ் நாட்டிகல்&எஞ்சினீரிங் ட்ரெயினிங் (CIFNET) நிறுவனத்தில் பயிற்சி பெற்றவர்.

‘பெண் நினைத்தால் வெற்றிகொள்ள முடியாதது எதுவுமே இல்லை-கடல் உட்பட’ என்பதில் உறுதியாக இருந்தார் ஹரிதா. ஹரிதாவுக்கு மீன்பிடிப் பின்புலம் ஏதும் இல்லை. அவரது தந்தை குழாய் பழுதுபார்ப்பவர். தாயார் இல்லத்தரசி. சகோதரர் ஓட்டுநராகப் பணியாற்றுகிறார். இருப்பினும் ஹரிதாவுக்குக் கடல் மேல் தீராக் காதல் இருந்தது. “என் குடும்பம்தான் என் பலம். என் பெற்றோர் எப்போதும் என்னை உற்சாகப்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள்” என்கிறார் ஹரிதா. கப்பற் படையில் சேரவேண்டும் என்பதுதான் ஹரிதாவின் ஆரம்ப கால ஆசை. ஆனால், அதற்குரிய உடற் தகுதிகளைப் பூர்த்தி செய்ய முடியாததால் அவரால் அதில் சேர முடியவில்லை.

2016ம் ஆண்டு, CIFNETல் ஃபிஷிங்& நாட்டிகல் சயின்ஸ் பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றார். இவர் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் போது கேப்டன் அருண் என்பவர் ஹரிதாவிடம் ஒரு கேள்வி கேட்கும்போது அவரைப் பார்த்து, “கேப்டன் ஹரிதா, நீங்கள் பதில் சொல்லுங்கள்” என்று சொல்லியிருக்கிறார். அன்று முதலே தானும் உண்மையிலேயே ஒரு கேப்டன் ஆகித் தீரவேண்டும் என முடிவு செய்தார் ஹரிதா. பின்னர் பிராஷிக்‌ஷானி என்ற பயிற்சிக் கப்பலில் ஊழியராகப் பணியில் சேர்ந்தார். சுமார் 180 நாட்கள் அதில் பயணம் மேற்கொண்டார். மீன்பிடிக் கப்பல் ஒன்றின் முதல் பெண் ஊழியரும் இவரே ஆவார். அப்போது அந்தக் கப்பலின் கேப்டனாக இருந்தவர்தான் அருண். அவர்தான் இவரை ‘கேப்டன்’ என அழைத்து ஊக்கப்படுத்தினார்.

அதன் பின்னர் தலைமை அதிகாரியாவதற்குத் தேவையான ‘மேட் ஆஃப் ஃபிஷிங் வெஸெல்ஸ்’ என்னும் தேர்வை எழுத இன்னும் சில பயிற்சி வகுப்புகளிலும் சேர்ந்தார். அந்தத் தேர்வு எழுத்துத் தேர்வு, சமிக்ஞைத் தேர்வு மற்றும் வாய்மொழித் தேர்வு ஆகியனவற்றை உள்ளடக்கியது. எழுத்துத் தேர்வில் 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெற்றிபெற்றார். பின்னர் வருவாய் தேவைப்பட்டதால் மெர்ச்சன்ட் நேவியில் ஊழியராகச் சேர்ந்தார். பின்னர் இதர தேர்வுகளிலும் வென்றார்.

2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் 13ம் தேதி, தலைமை அதிகாரி என்ற பதவியை எட்டினார் ஹரிதா. CIFNETன் வரலாற்றிலேயே இந்த சாதனையை படைத்த ஒரே பெண் இவர் என்னும் பெருமையும் இவருக்கே உண்டு.பிராஷிக்‌ஷானி கப்பலிலும் லாவணிகா என்ற கப்பலிலும் 450 நாட்கள் கடற் பயணம் மேற்கொண்டார். லட்சத் தீவுக் கடற்கரையை அடைந்தார். அது தமக்களிக்கப்பட்ட மிகப்பெரிய பொறுப்பு என நினைவுகூர்கிறார் ஹரிதா.செப்டம்பர், 2021ல் ஆஸ்திரேலியாவிலிருந்து அமெரிக்காவுக்கு கடற் பயணம் மேற்கொண்டார்.2019ம் ஆண்டு, சர்வதேசப் பெண்கள் தினத்தன்று, கொச்சின் யூனிவர்சிட்டி ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி நிறுவனத்தின் விமன்’ஸ் ஸ்டடீஸ் சென்டர் என்ற அமைப்பின் மூலம் கௌரவிக்கப்பட்ட ஐந்து பெண்களில் ஹரிதாவும் ஒருவர்.

கப்பலின் இயக்கத்தை வழிநடத்துவது, இரவு நேரக் கடல் பகுதி நடமாட்டங்களைக் கண்காணிப்பது, பயணங்களைத் திட்டமிடுவது போன்றன இவரது முக்கியப் பணிகளில் சிலவாகும். உயிர் காக்கும் கருவிகள் மற்றும் தீயணைப்புக் கருவிகள் ஆகியனவற்றின் பயன்பாடுகளுக்கும் இவரே பொறுப்பு.“இதர கப்பற் பணிகளைக் காட்டிலும், மீன்பிடிக் கப்பலில் வாழ்க்கை என்பது சிரமமானதுதான். 20 முதல் 30 மீட்டர் வரை மட்டுமே நீளம் கொண்டதாக இந்தக் கப்பல் இருக்கும். கடற் கொந்தளிப்பு சமயங்களில் கப்பலைச் செலுத்துவது சவால் நிரம்பிய ஒன்றாகும். மீன் பிடித்தல் என்பது அபாயம் நிறைந்த தொழில். 32 ஆண்களுடன் நான் ஒருத்தி மட்டுமே பெண்” என்று தனது பயண அனுபவத்தைப் புன்னகையுடன் சொல்கிறார் ஹரிதா.

“இத்தகைய சவால்கள் இருந்தாலும் அவற்றை ஆண்கள் சமாளித்துக் கொண்டுதானே இருக்கிறார்கள்? ஆண்களால் செய்யப்படும் போது அதை ஏன் பெண்களாலும் செய்ய முடியாது?” என்பது ஹரிதாவின் வாதம்!இவரது மீன்பிடிக் கப்பலில் ‘ட்ராவ்லிங்’ என்ற முறையிலும், ‘லாங்-லைன் ஃபிஷிங்’ என்ற முறையிலும் மீன்கள் பிடிக்கப்படுகின்றன. ட்ராவ்லிங் முறையில் வலையைக் கப்பலுக்குப் பின் விரித்துவிடுவார்கள். அதைக் கப்பல் இழுத்துக்கொண்டு போகும். லாங்-லைன் ஃபிஷிங் முறையில் ஆயிரக்கணக்கான தூண்டில் முட்கள் ஒரே கயிற்றில் கட்டப்பட்டு அவற்றின் மூலம் மீன்கள் பிடிக்கப்படும்.

“அதிகாலை 4 மணிக்கே எழுந்துவிடுவோம். இரவு 7 மணி வரை மீன்பிடிப்போம். கடலோடுதான் எங்கள் மொத்த நேரமும் செலவிடப்படும். சில சமயங்களில் கடுமையான காய்ச்சலாலும் வாந்தியாலும் நடுக் கடலில் அவதியுற்றிருக்கிறேன். அப்போதெல்லாம் என் சக ஊழியர்கள் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தனர். நமது சமுதாயத்தில் ஒரு மூட நம்பிக்கை இன்னும் சிலரிடம் இருக்கிறது. சவால்கள் நிரம்பிய பணிகளைப் பெண்கள் செய்யத் தகுதியற்றவர்கள் என்பதே அது. பெண்கள் கடினமான பணிகளிலும் ஜொலிப்பார்கள். அந்தத் திறமை அவர்களுக்கு இருக்கிறது” என்று உறுதியாகச் சொல்கிறார் இவர்.ஹரிதா சொல்வது சரிதானே!

தொகுப்பு: லதானந்த்