Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

இந்தியாவின் முதல் பெண் கட்டிடக்கலை நிபுணர்!

நன்றி குங்குமம் தோழி

நான் முதல்வன்

சிறப்பான முகப்புத் தோற்றத்தோடு கட்டிடங்களை உறுதியான தன்மையோடு வடிவமைப்பது, அதே சமயம் தரமான பொருட்களை பயன்படுத்துவது, சிக்கனமான செலவில் கட்டிடங்களை உருவாக்குவது போன்ற பல தனித் திறமைகள் கட்டுமானக் கலைஞராக ஜொலிப்பதற்குத் தேவைப்படும் சில அடிப்படைத் தகுதிகள். திட்டமிடுதல், வடிவமைத்தல் மற்றும் கட்டுமானத்தை மேற்கொள்வது போன்றவற்றை திறம்படச் செய்ய வேண்டிய இந்தத் துறையில் ஆண்களே அதிகம் ஈடுபடுவதைக் காணலாம்.

இந்தியாவின் முதல் பெண் கட்டிடக் கலைஞர் என்ற அங்கீகாரத் தகுதி பெற்ற பெண், ஊர்மிளா யூலி சௌத்ரி. ஆசியாவிலேயே முதல் பெண் கட்டிடக் கலை நிபுணரான இவருக்கு ஆசிரியை, எழுத்தாளர் என்ற பிற முகங்களும் உள்ளன. 1923-ம் ஆண்டு, உத்தரப்பிரதேசத்தில் இருக்கும் ஷாஜஹான்பூரில் இவர் பிறந்தார். இவரது தந்தை பன்னாட்டுத் தூதராகப் பணியாற்றியதால் உலகெங்கும் பயணம் செய்யும் வாய்ப்பு இவருக்கு இளமையிலேயே கிடைத்தது.

பல நாட்டுக் கலாச்சாரங்களையும் தெரிந்த, முற்போக்குச் சிந்தனையுடைய பெண்ணாக வளர்ந்தார்.1947-ம் ஆண்டு, சிட்னி பல்கலைக்கழகத்தில் இவர் கட்டிடக் கலையில் இளங்கலைப் பட்டம் பெற்றார். அதற்கு முன்னர் ஜப்பானில் உள்ள கோபெ என்ற இடத்தில் இயங்கிய விண்ட்சர் ஹவுஸ் பள்ளியில் கேம்பிரிட்ஜ் ஸ்கூல் சர்டிஃபிகேட் என்னும் சான்றிதழைப் பெற்றிருக்கிறார். மேலும், ஆஸ்திரேலியாவில் இருக்கும் சிட்னியில் உள்ள கன்சர்வேடரி ஆஃப் மியூசிக் ஆஃப் தி ஜூலியன் ஆஷ்பார்ன் ஸ்கூல் ஆஃப் ஆர்ட் என்ற நிறுவனத்தில் பாடல் மற்றும் பியானோ வாசிப்பது ஆகியனவற்றைக் கற்றார். அமெரிக்காவில் இருக்கும் நியூஜெர்ஸியில் உள்ள இங்கில்வுட் அமைப்பிடமிருந்து செராமிக்ஸ் தொடர்பான பட்டயமும் பெற்றிருக்கிறார்.

அமெரிக்காவில் சிறிது காலம் பணியாற்றிய பிறகு 1951-ம் ஆண்டு இந்தியா திரும்பினார். சண்டிகர் நகரின் வடிவமைப்பு பலரையும் கவரும் விதமாக இருக்கும். அதை வடிவமைத்த லீ கோர்ப்யூசியர், பியர் ஜீன்னெரெட், மேக்ஸ்வெல் ஃப்ரை மற்றும் ஜேன்ட்ரூ ஆகியோருடன் இணைந்து சண்டிகர் நகரை கட்டமைக்கும் பணியில் ஈடுபட்டார்.அந்தக் காலகட்டத்தில் பஞ்சாப் அரசில் கட்டிடக்கலை ஆலோசகராகப் பணியாற்றிய ஜுகல் கிஷோர் சௌத்ரி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.

1981-ம் ஆண்டு வரை, சண்டிகரில் பணிபுரிந்தார். இடையே 1963 முதல் 1965 வரை புதுடெல்லியில் ஸ்கூல் ஆஃப் பிளானிங் அண்ட் ஆர்க்கிடெக்சர் அமைப்பில் இயக்குநராக இருந்தார். இவரது முப்பதாண்டு அரசுப் பணியில் பல கட்டிடங்களை இவர் வடிவமைத்திருக்கிறார். சண்டிகரில் இருக்கும் டவர் ஆஃப் ஷேடோஸ், ஜியாமெட்ரிக் ஹில், போர் வீரர் நினைவுச்சின்னம் மற்றும் உயர் நீதிமன்ற வளாக விரிவாக்கம் ஆகியவற்றின் வடிவமைப்பில் ஊர்மிளாவின் பங்கு கணிசமானது.

சண்டிகரில் பெண்களுக்கான அரசு பாலிடெக்னிக் கல்லூரி, மனையியல் கல்லூரி, அரசு அடுக்குமாடிக் குடியிருப்புகள் போன்ற கட்டிடங்கள் இவரது கட்டிடக்கலை நிபுணத்துவத்துக்கு இன்றளவும் சாட்சி சொல்லிக்கொண்டிருக்கின்றன. சண்டிகரில் மட்டுமல்லாது, பஞ்சாபின் தல்வாரா நகரியத்தின் பல திட்டங்களிலும் யூலி சௌத்ரி தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார். அரசுப் பொது மருத்துவமனை, ஃபீல்ட் ஹாஸ்டல், பணியாளர் விடுதி போன்றனவும் இவரால் உருவானவைதாம்.

1971-ம் ஆண்டு முதல் 1976-ம் ஆண்டு வரை ஹரியானா தலைமைக் கட்டிடக்கலை நிபுணராகவும், 1976 முதல் 1981-ம் ஆண்டு வரை பஞ்சாபின் தலைமைக் கட்டிடக்கலை நிபுணராகவும் பணியாற்றியிருக்கிறார். 1983-ம் ஆண்டு, அல்லையன்ஸ் ஃபிரான்சைஸ் டி சண்டிகர் (Alliance Francaise de Chandigarh) என்னும் இந்தோ - ஃப்ரெஞ்ச் மொழியியல் கற்பிக்கும் அமைப்பை உருவாக்கினார். சண்டிகர் நகரை கட்டமைப்பதில் முக்கியப் பங்கு வகித்த தமது சகாவான லீ கோர்ப்யூசியர் நினைவாக, ‘தோஸ் வேர் தி டேஸ்’ (Those Were The Days) என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார். லீ எழுதிய புத்தகமான ‘த்ரீ ஹ்யூமன் எஸ்டாபிளிஷ்மென்ட்ஸ்’ என்ற புத்தகத்தை ஃப்ரெஞ்சு மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருக்கிறார்.

இவருக்கு ஃப்ரெஞ்சு மொழி சரளமாகத் தெரியும் என்பதால் லீ கோர்ப்யூசியர் மற்றும் பியர் ஜீன்னெரெட் ஆகியோருக்கு இடையில் தகவல் தொடர்பாளராகச் செயலாற்றவும் இவரால் முடிந்திருக்கிறது.பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதிவந்தார். பியர் ஜீன்னெரெட்டுடன் இணைந்து, சண்டிகரில் இருக்கும் பல அமைச்சர்களது இல்லங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றை இவர் கட்டமைத்திருக்கிறார். சண்டிகரில் உள்ள அரசு அலுவலகங்கள் பலவற்றுக்கும் தேவையான மரச் சாமான்களையும் இவரே வடிவமைத்திருக்கிறார்.

“பணியில் இவர் மிகவும் ஈடுபாட்டோடு இருப்பார்; எப்போதுமே பணியை பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பார்; சில நிமிடங்கள் கூட தொழிலைத் தாண்டி அவர் வேறெதிலும் கவனம் செலுத்தி நாங்கள் பார்த்ததில்லை” என அவருக்குக் கீழ் பணியாற்றி, இன்றைக்குத் தலைமைப் பொறுப்பில் இருக்கும் பல அலுவலர்களும் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

சண்டிகரில் இருக்கும் கட்டிடக் கலைக் கல்லூரியில் ஆசிரியராகவும், டெல்லியில் இருக்கும் ஸ்கூல் ஆஃப் ஆர்க்கிடெக்சர் அண்ட் பிளானிங் நிறுவனத்தில் முதல்வராகவும் ஊர்மிளா பணியாற்றியிருக்கிறார்.1923-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 4-ம் தேதி பிறந்த இவர், 1995-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 20-ம் தேதி மறைந்தார்.

தொகுப்பு : லதானந்த்