Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

மனிதர்கள் நிறைந்த உலகில் யாரும் அனாதையில்லை!

நன்றி குங்குமம் தோழி

சமூக சேவை செய்ய வேண்டும் என்பது பலரின் கனவாக இருந்தாலும், அதை நிறைவேற்ற வேண்டும் என்று முனைப்போடு இருப்பவர்கள் ஒரு சிலர்தான். அதில் ஒருவர்தான் ‘சுயம்’ அறக்கட்டளையின் அமைப்பாளர் உமா. பத்து வயதில் இருந்தே சமூக சேவையில் ஈடுபட்டு வரும் இவர் அதன் பயணம் மற்றும் அறக்கட்டளையின் செயல்பாடு குறித்தும் பகிர்ந்தார். ‘‘நான் சின்ன வயசில் இருந்தே சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறேன்.

ஒரு முறை பொது சேவையில் ஈடுபடும் போதுதான் ‘நடைபாதை பூக்கள்’ என்ற தலைப்பில் சாலையில் வசிப்பவர்கள் குறித்த ஆவணப்படம் ஒன்றை எடுத்தோம். அவங்களின் பூர்வீகத்தை கேட்டறிந்த போது அவர்கள் பிச்சை எடுத்து பிழைப்பினை நகர்த்தி வந்தது தெரியவந்தது. மேலும், போக்குவரத்து சிக்னலில் இயர்பட்ஸ், துடைக்கும் துணி மற்றும் குழந்தைகளுக்கான கலரிங் புத்தகங்கள் போன்றவற்றை விற்பனை செய்தார்கள். இவர்களை பற்றி தெரிந்தவுடன் நிரந்தர வருமானம் ஏற்படுத்தி தர விரும்பினோம். ஆட்டோ வாங்கிக் கொடுத்து ஒரு வருமானத்திற்கான வழிவகுத்துக் கொடுத்தோம். அதனைத் தொடர்ந்து இவர்கள் மத்தியில் நிலவிய குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தி அந்தக் குழந்தைகளுக்கு எங்க பள்ளி மூலம் இலவசக் கல்வி அளித்து வருகிறோம்.

இதுபோல் 300 குடும்பங்களை மீட்டெடுத்து அவர்களுக்கு எங்களால் முடிந்த உதவியினை செய்து வருகிறோம். குறிப்பாக எந்தவித சமூக அடையாளமும் இல்லாமல் இருக்கும் இவர்களுக்கு அரசு மூலம் அதனை ஏற்படுத்தி தருவதுதான் எங்களின் முக்கிய நோக்கமாக இருந்து வருகிறது. இவ்வாறு அறக்கட்டளை மூலம் பலவித திட்டங்களை செயல்படுத்தி வந்தாலும், அதில் ஒரு பகுதிதான் கல்வித் திட்டம்’’ என்றவர் அது குறித்து விவரித்தார்.

‘‘வறுமைக் ேகாட்டிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு பள்ளிக்கூடம் என்பது எட்டாதக் கனி. அவர்களுக்கு ICSE பாடத்திட்டங்களை அமைத்து ‘சிறகு மான்டசரி’ என்ற பெயரில் பள்ளி ஒன்றை 2003ல் ஆரம்பித்தோம். +2 வரை இந்தப் பள்ளி இயங்கி வருகிறது. வறுமைக்கோட்டில் உள்ளவர்கள், வீட்டு வேலை பார்ப்பவரின் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி அளிக்கிறோம். நாங்க படிப்பு மட்டும் இல்லாமல் வெளியூரில் இருந்து வரும் குழந்தைகள் தங்க ஹாஸ்டல் மற்றும் உணவுகளும் வழங்குகிறோம். பாடங்களுக்கு டியூஷனும் அமைத்திருக்கிறோம்.

அன்றாட வாழ்க்கைக்கே கஷ்டப்படும் இவர்களிடம் பள்ளிக் கட்டணம் எதிர்பார்க்க முடியாது என்பதால், பள்ளியின் அனைத்து செயல்பாட்டினையும் அமைப்பு சார்பாக நாங்களே பராமரித்து வருகிறோம். எங்க பள்ளியில் படிக்க மூன்று வயதில் ஒரு குழந்தை வந்தால், அந்தக் குழந்தை +2 மற்றும் கல்லூரிப் படிப்பு முடித்து வேலைக்கு போகும் வரை நாங்க ஆதரவு அளிக்கிறோம். அதில் பெற்றோர் இல்லாத குழந்தைகள் என்றால் அவர்கள் திருமணமாகி வாழ்க்கையில் செட்டிலாகும் வரை நாங்க சப்போர்ட் செய்கிறோம்.

இந்தியாவின் முதுகெலும்பே குடும்பம்தான். அந்தக் குடும்ப அமைப்பினை இது போன்ற ஆதரவற்ற குழந்தைகளுக்கு உருவாக்கித் தர வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம். பெற்றோர் இல்லை என்றாலும் அந்தக் குழந்தைக்கு வேறு சொந்தங்கள் இருப்பார்கள். அவங்க மூலமாக நாங்க இந்தக் குழந்தைகளுக்கு அனைத்து உதவிகளும் செய்து வருகிறோம்’’ என்றவர், ஒவ்வொரு குழந்தையின் பின்னணியினை முழுக்க ஆராய்ந்த பிறகு தான் அவர்களை தன்னுடைய பள்ளியில் ேசர்த்துக் கொள்கிறார்.

‘‘எங்களைப் பொறுத்தவரை இல்லாதவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். அதனால் ஒரு குழந்தை எங்க பள்ளியில் படிக்க வந்தால் அவர்களின் முழு பயோடேட்டாவினை சேகரித்த பிறகுதான் பள்ளியில் அட்மிஷன் தருவோம். +2 வரை அவர்கள் இங்கு கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. கல்லூரிப் படிப்பிற்கான கட்டணத்தை மட்டும் அவர்கள் வேலைக்குச் சென்ற பிறகு கொடுக்க வேண்டும். காரணம், அந்தக் கட்டணம் மற்றுமொரு குழந்தைக்கு படிக்க உதவும் என்பதால் அதை மட்டுமே நாங்க திருப்பி தரச்சொல்கிறோம். இங்கு ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு என தனித்தனி ஹாஸ்டல் இருப்பதால், அவர்கள் இங்கு தங்கியும் படிப்பதற்கான வசதியும் அமைத்திருக்கிறோம்.

எங்க அறக்கட்டளையின் கீழ் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி, மான்டசரி ஸ்கூல், டெய்லரிங் சென்டர், ஆண் மற்றும் பெண்களுக்கான ஹாஸ்டல், கோசாலா இயங்கி வருகிறது. இவை தவிர கம்யூனிட்டி பிராஜக்ட்டுகள் என 40க்கும் மேற்பட்ட சமூக வேலைகளை செய்து வருகிறோம். கல்விக்கு அடுத்து மிகவும் முக்கியமானது மருத்துவம். அதையும் மக்களுக்கு இலவசமாக வழங்க ஏற்பாடு செய்து வருகிறோம்.

உடல் நிலை சரியில்லாத போது மருத்துவம் மூலம் குணமாக்கலாம். ஆனால், வயதான காலத்தில் படுத்த படுக்கையாக இருப்பவர்களை உறவினர்கள் பார்க்க தவறுகிறார்கள். அவர்களை பார்த்துக் கொள்வதற்காக கேர் சென்டர் ஒன்றை அமைக்க இருக்கிறோம்’’ என்றவர், இந்த அமைப்பு மற்றும் சமூக சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதன் பின்னணிப் பற்றி விவரித்தார்.

‘‘என்னோட அம்மா அரசுப் பள்ளியில் ஆசிரியரா வேலை பார்த்தார். அவர் வீட்டில் டியூஷனும் எடுப்பார். பள்ளிப் படிக்கும் காலத்தில் நானும் அம்மாவுடன் சேர்ந்து டியூஷன் எடுத்தேன். அதன் பிறகு டியூஷன் சென்டர் ஒன்றை அமைத்தேன்.

அதில் பயின்ற மாணவர்களுடன் இணைந்து சின்னச் சின்ன உதவிகளை செய்து வந்தோம். அதில் நாங்க மிகவும் போராடியது குழந்தைத் தொழிலாளருக்காகத்தான். இதனை முற்றிலும் அழிக்க வேண்டும் என்று செயல்பட்டு வந்தோம். அதன் வெளிப்பாடு இந்தியா முழுக்க பிரதிபலித்தது. அடுத்தகட்டமாக செங்கல் சூளையில் வேலையில் ஈடுபட்ட குழந்தைகளையும் மீட்டு அவர்களை படிக்க வைத்தோம். அவ்வாறு மீட்கப்பட்ட பல குழந்தைகள் இன்று நல்ல நிலையில் இருக்கிறார்கள். அங்கிருந்துதான் சமூக சேவையில் என்னை ஈடுபடுத்த ஆரம்பித்தேன்.

கல்வியை தொடர்ந்து மருத்துவ துறைக்கு வர கொரோனா ஒரு காரணமாக அமைந்தது. கொரோனா பாதிக்கப்பட்ட போது, நாங்க அரசு உதவியுடன் ஒரு மெடிக்கல் சென்டர் அமைத்து அங்கு கொரோனாவிற்கு இலவச மருத்துவம் அளித்தோம். அதன் பிறகு இதையே ஒரு மருத்துவமனையா மாற்றியமைத்து அதன் மூலம் பலருக்கு இலவச மருத்துவம் அளிக்க திட்டமிட்டோம். முக்கியமாக வயதானவர்களுக்கு. காரணம், வயதான காலத்தில் அவர்களுக்கு மருத்துவ செலவு அதிகமாக இருக்கும். அதை ஈடுகட்ட முடியாமல்தான் பலர் அவர்களை ஹோமில் சேர்த்து விடுவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு நாங்க சப்போர்ட் செய்ய ஆரம்பித்தோம். ஒருவருக்கு உறவுகள் இல்லை என்றால் அநாதை என்பார்கள். இந்த உலகில் இன்னொரு மனுஷன் இருக்கும் வரை யாரும் அநாதை கிடையாது.

அதனால்தான் எங்க அமைப்பு எண்ட் டூ எண்ட் வேலை பார்க்கிறது’’ என்றவர், தங்களுக்கு உதவி செய்து வரும் பல நல்ல உள்ளங்களுக்கு கடமைப்பட்டிருப்பதாக கூறினார். ‘‘எங்க அமைப்பில் நாங்க பல சேவைகளை செய்து வருகிறோம். அதற்கான நிதி சார்ந்த விஷயங்களில் பலர் தங்களின் உதவியினை செய்து வருகிறார்கள். அதில் துபாய் நாட்டை சேர்ந்த டி.பி.வேர்ல்டு என்ற நிறுவனம்தான் ஆண் குழந்தைகளுக்கான தனிப்பட்ட ஹாஸ்டலினை கட்டிக் கொடுத்தாங்க.

சிறிய வயதில் இருக்கும் போது ஆண்-பெண் குழந்தைகளை ஒன்றாக வளர்க்கலாம். ஆனால், அவர்கள் வளர்ந்த பிறகு ஒரே ஹாஸ்டலில் தங்க வைக்க முடியாது. அவர்களுக்கு தனிப்பட்ட ஹாஸ்டல் கட்ட திட்டமிட்டோம். அதில் எங்களின் அமைப்பில் வாலன்டியராக இருந்தவர்தான் கிரிதரன். இந்த திட்டத்தினை முன்னெடுத்து, இந்த நிறுவனம் மூலம் ஆண் பிள்ளைகளுக்கான ஹாஸ்டலினை கட்டிக் ெகாடுக்க ஏற்பாடு செய்தார்’’ என்றவர், தங்களின் எதிர்கால திட்டம் குறித்து விவரித்தார்.

‘‘பள்ளிக் கல்வி மற்றும் தங்குவதற்கான இடம் எல்லாம் அமைத்து தருகிறோம். அதைத் தொடர்ந்து அரசு சார்ந்த பயிற்சி மற்றும் அரசு வேலைக்கான ஏற்பாட்டினை செய்து தர வேண்டும் என்ற திட்டம் இருக்கிறது. மேலும், ேமலை நாடுகளிலும் வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தரும் எண்ணம் உள்ளது. கல்வி, மருத்துவம் மட்டுமில்லாமல், இயற்கை விவசாயம், ஜீரோ வேஸ்ட் பொருட்களை எப்படி பயனுள்ள பொருட்களாக மாற்றலாம், அரசின் ஸ்காலர்ஷிப் என அனைத்திற்கான ஏற்பாடுகள் செய்து வருகிறோம். வறுமைக்கோட்டிற்கு கீழ் இருப்பவர்களுக்கு எல்லா விதமான உதவிகளையும் செய்து தர நாங்க தயாராக இருக்கிறோம்’’ என்றார் உமா.

தொகுப்பு: ஷம்ரிதி