Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

சமூக வலைத்தளங்களின் மாய உலகம்!

நன்றி குங்குமம் தோழி

காலை விடிந்ததும் கண்ணாடியை பார்த்துத் தன் முகத்தில் அரும்பும் புன்னகையோடு நாளை தொடங்குவதைக் காட்டிலும், படுக்கையை விட்டு எழும்போதே கைபேசியை திறந்து இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களையும், பிற சமூக வலைத்தளப் பதிவுகளையும் பார்ப்பதே இன்றைய தமிழ்நாட்டு இளம்பெண்களின் பிரிக்க முடியாத விடியற்காலை வழக்கமாகிவிட்டது. திரையை தேய்க்கத் தேய்க்க அங்கே மின்னும் மாடல்களின் தடையற்ற செயற்கை அழகு, எடிட் செய்யப்பட்ட தழும்புகளற்ற முகம், வழுவழுப்பான சருமம் மற்றும் கச்சிதமான பூஜ்ஜிய அளவு உடல்வாகு போன்ற போலி பிம்பங்களை தங்களோடு ஒப்பிட்டுப் பார்த்து, ‘‘நான் ஏன் இவ்வளவு குண்டாக இருக்கிறேன்?”, ‘‘நான் ஏன் இவ்வளவு கருப்பாக இருக்கிறேன்?”, ‘‘என் முகம் ஏன் இத்தனை கரடுமுரடாக இருக்கிறது?” என்று தங்களுக்குள்ளேயே உருகிப் போகும் இளம்பெண்களின் எண்ணிக்கை இன்று பல மடங்கு அதிகரித்துள்ளது. சமூகம் மற்றும் ஊடகங்கள் கட்டமைக்கும் இத்தகைய போலியான அழகியல் அளவுகோல்களால், தங்களின் இயல்பான உடலமைப்பை கண்டு தாங்களே கூச்சமடையும் இந்தத் தீவிர மனநிலைதான் உளவியலில் ‘உடல் உருவ அமைப்புக் கவலை’(Body Image Issues) என்று அழைக்கப்படுகிறது.

நம் ஊர்ப் பெண்கள் இந்த டிஜிட்டல் மாய வலையில் சிக்கித் தவிப்பதையும், அதிலிருந்து அவர்கள் மீள வேண்டிய உளவியல் அவசியத்தையும் நாம் மிக ஆழமாக விவாதிக்க வேண்டிய தருணம் இது.​நமது சமூக வலைத்தளங்கள் இன்று ஒரு பெரும் மாய உலகத்தை உலகளாவிய ரீதியில் உருவாக்கியுள்ளன என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அதன் ஆதிக்கம் நம் தமிழ்நாட்டுச் சூழலில் ஏற்படுத்தும் தாக்கம் மிகவும் ஆபத்தானது.

நாம் திரையில் பார்க்கும் ஒரு 15 வினாடி ரீல்ஸ் வீடியோ அல்லது ஒரு இன்ஸ்டாகிராம் புகைப்படம், நூறு அழகு ஃபில்டர்கள் (Filters), தீவிரமான டிஜிட்டல் எடிட்டிங், சரியான கேமரா கோணங்கள் மற்றும் பளபளக்கும் ஒளி அமைப்புகளுக்குப் பின்னால் திட்டமிட்டு உருவாக்கப்படும் ஒரு வணிகப் பொருள் என்பதைப் பலரும் உணர்வதில்லை. பாரம்பரியமும் இயல்பான அழகும் நிறைந்த நம் தமிழ்நாட்டுப் பெண்கள், வடநாட்டு மற்றும் மேலைநாட்டு மாடல்களின் இத்தகைய போலி பிம்பங்களை உண்மை என்று நம்பி, தங்களின் இயற்கையான நிறத்தையும், பாரம்பரிய உடலமைப்பையும் வெறுக்கத் தொடங்குகிறார்கள்.

பல்லாயிரம் ஆண்டுகளாக நம் மண்ணில் கொண்டாடப்பட்ட மாநிறமும், பெண்களின் இயல்பான உடல் வளைவுகளும் இன்று ‘அழகு’ என்ற வார்த்தைக்குள் அடங்காதது போல ஒரு போலித் தோற்றம் சமூக வலைத்தளங்களால் கட்டமைக்கப்பட்டு, நம் வீட்டுப் பெண்களை தங்களின் சுய அடையாளத்தை இழந்து திணற வைக்கிறது. இது தற்காலக் கவலை என்று கடந்து போய்விட முடியாது. இது அவர்களின் ஒட்டுமொத்த ஆளுமையை சிதைக்கும் வல்லமை கொண்டது. ஆல்பர்ட் பாண்டுராவின் ‘சமூகக் கற்றல் கோட்பாட்டின் படி’ மனிதர்கள் தங்களைச் சுற்றியுள்ள பிம்பங்களை பார்த்துத்தான் தங்கள் நடத்தையை வடிவமைத்துக் கொள்கிறார்கள்; அதன்படி இன்று இளம்பெண்கள் 24 மணி நேரமும் திரையில் பார்க்கும் போலியான அழகை தங்களின் இலக்காக மாற்றிக் கொள்கிறார்கள்.

தங்களை மற்றவர்களோடு, குறிப்பாக இணையத்தில் வாழும் கற்பனைக் கதாபாத்திரங்களோடு ஒப்பிட்டுக் கொண்டே இருப்பதால், அவர்களின் சுயமதிப்பும் (Self-esteem) சுய நம்பிக்கையும் முற்றிலுமாகச் சிதைகிறது. இந்தத் தொடர் ஒப்பீடு அவர்களை தீவிரமான சமூகப் பதற்றத்திற்கு உள்ளாக்குகிறது, இதனால் நாலு பேர் கூடும் இடத்தில் ஒருவித தாழ்வு மனப்பான்மை அவர்களுக்குள் நிழலாய் பின்தொடர்கிறது. கண்ணாடி முன்னால் தங்கள் உடலின் குறைகளை மட்டுமே பார்த்து, தங்களை சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்திக் கொள்ளும் ஒரு கொடூரமான மனச்சோர்வு நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

​இதன் உச்சகட்ட பாதிப்பு, இளம்பெண்களை ஆபத்தான உணவு முறை நோயான ‘ஈட்டிங் டிஸார்டர்ஸ்’ என்ற உளவியல் நோய்க்குள் தள்ளிவிடுகிறது. சமூக வலைத்தளங்களில் உள்ள ‘ஸ்லிம்’ பிம்பத்தை அடைய ஆரோக்கியமான உணவினை தவிர்த்து பட்டினி போட்டுக் கொள்ளும் ‘அனோரெக்ஸியா’ என்ற நிலைக்குப் பெண்கள் ஆளாகிறார்கள். சிலர் மன அழுத்தத்தினால், அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டுவிட்டு, உடல் எடை கூடிவிடும் என்ற குற்ற உணர்ச்சியால் வற்புறுத்தி வாந்தி எடுக்கும் ‘புலிமியா’(Bulimia) போன்ற உயிருக்கே ஆபத்தான நோய்களுக்கு பலியாகிறார்கள். நம் தமிழ்நாட்டுச் சூழலில் இன்று பல பெண்கள் முறையான ஊட்டச்சத்து இன்றி ரத்த சோகையாலும், ஹார்மோன் குறைபாடுகளாலும் அவதிப்படுவதற்குப் பின்னால், இந்த ‘எடை குறைப்பு’ என்ற போலி சமூக வலைத்தள மோகமும் ஒரு மறைமுகக் காரணியாக இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

​உளவியல் அறிஞர் எரிக் எரிக்சனின் மனித வளர்ச்சிக் கோட்பாட்டின்படி, இளமைப் பருவம் என்பது ‘சுய அடையாளம் vs அடையாளக் குழப்பம்’ நிறைந்த ஒரு காலக்கட்டமாகும். சமூக வலைத்தளங்கள் தரும் போலி அழுத்தங்கள் அவர்களின் அடையாளத்தை திசை திருப்பி விடுகின்றன. பிறர் தரும் ‘லைக்ஸ்’ மற்றும் ‘கமெண்ட்ஸ்’ வைத்தே தன் வாழ்வின் சந்தோஷத்தை தீர்மானிக்கும் ஒரு அடிமைத்தனமான மனநிலைக்கு இன்றைய தலைமுறை பழகிவிட்டது.

முகம் கொஞ்சம் கருப்பாகவோ, உடல் எடை சற்று அதிகமாக இருந்தாலோ வாழ்வதற்கே தகுதியற்றவர்கள் என்ற ஒரு மாயத் தோற்றத்தை அவர்களின் ஆழ்மனதில் இந்த சமூக வலைத்தளம் விதைத்து விடுகிறது. கல்வி, தனித்திறமை ஆகியவற்றில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு, தங்களின் தோற்றத்தை எப்படி மாற்றலாம் என்ற கவலையிலேயே தங்கள் பொன்னான நேரத்தையும் ஆற்றலையும் வீணடிப்பது ஒட்டுமொத்த சமூகத்தின் வளர்ச்சிக்கும் ஒரு பெரும் பின்னடைவாகும்.

இந்த மாய வலையிலிருந்து வெளிவர சில அத்தியாவசிய உளவியல் பயிற்சிகள் மற்றும் வாழ்வியல் மாற்றங்களை பின்பற்றலாம். முதலாவதாக, நம்மை மனரீதியாக பலவீனப்படுத்தும், போலி அழகை ஊக்குவிக்கும், தாழ்வு மனப்பான்மைக்கு உள்ளாக்கும் சமூக வலைத்தளக் கணக்குகளை அடையாளம் கண்டு Unfollow செய்வதன் மூலம் ‘டிஜிட்டல் டிடாக்ஸ்’ முறையை ஒவ்வொரு பெண்ணும் பழக வேண்டும்.

இயல்பான உடலமைப்பை, ஆரோக்கியமான வாழ்வியல் மற்றும் திறமைகளை கொண்டாடும் நேர்மறையான பக்கங்களை பின்தொடர வேண்டும். நம் உடல் பிறர் ரசிப்பதற்கான காட்சிப் பொருள் அல்ல, இந்த பூமியில் வாழ வைக்கவும், சாதிக்க தூண்ட செய்யும் உன்னதமான இயற்கை இயல்பு என்பதை உணர வேண்டும். தோலின் நிறமோ, இடுப்பின் அளவோ அல்லது முகத்தில் இருக்கும் பருக்களோ ஒருபோதும் பெண்ணின் திறமையை தீர்மானிக்காது.

​கண்ணாடி முன்னால் நிற்கும்போது குறைகளை தேடாமல், உங்களின் தனித்துவமான அழகையும் நேர்மறையான விஷயங்களையும் பார்த்து ‘சுய அன்பு’ (Self-Love) எனும் உளவியல் பயிற்சியினை மேற்கொள்ளுங்கள். ‘நிபந்தனையற்ற நேர்மறை மரியாதையை பெண்கள் தங்களுக்கு கொடுத்துக் கொள்ள வேண்டும். தன் உடல் எப்படி இருந்தாலும் அதை முழுமையாக ஏற்றுக்கொண்டு நேசிக்க வேண்டும். அழகு, இன்ஸ்டாகிராம் ஃபில்டர்களிலோ, ஸ்னாப்சாட் எஃபெக்ட்களிலோ அல்லது முகம் தெரியாத மனிதர்கள் இணையத்தில் தட்டிவிடும் லைக்குகளிலோ இல்லை. மாறாக நம்மை எவ்வளவு கண்ணியத்தோடு பார்க்கிறோம் என்பதில்தான் இருக்கிறது. இந்தத் தெளிவை பெற்றோர்களும் ஆசிரியர்களும் இளம்பெண்களுக்கு ஆரம்பத்திலிருந்தே ஊட்டி வளர்க்க வேண்டும்.

சமூக வலைத்தளங்கள் காட்டும் அந்தப் பளபளப்பான உலகம் நிஜமல்ல. மென்பொருட்களால் உருவாக்கப்பட்ட ஒரு வியாபார மாயை என்பதைப் பெண்கள் புரிந்து கொள்ளும் காலம் வந்துவிட்டது. போலி பிம்பங்களை கடந்து, நம் நிஜமான உடலையும், ஆரோக்கியமான மனதையும், இயற்கையான தோற்றத்தையும் பெருமையோடு கொண்டாடத் தொடங்க வேண்டும். சமூகம் வகுத்து வைத்திருக்கும் போலியான அழகியல் சிறைகளை உடைத்தெறிந்து, தன் இயல்பை அப்படியே ஏற்றுக்கொண்டு நிமிர்ந்து நடக்கும் ஒவ்வொரு பெண்ணும் உளவியல் ரீதியாக இந்த உலகத்தை வெல்வாள். பெண்கள் அக அழகையும், அறிவுத்திறனையும் ஆயுதமாகக் கொண்டு இந்த டிஜிட்டல் மாயையை வென்று சாதனை பாதையில் பயணிக்க வேண்டும்.

தொகுப்பு: அர்ஷதா