Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad Cement
search-icon-img
Advertisement

இருமனம் இணைந்தால் வாழ்க்கையும் வெற்றியாகும்!

நன்றி குங்குமம் தோழி

எழுத்தாளர், கவிஞர், பாடலாசிரியர் என பன்முகங்களை கொண்டவர் கீதா தெய்வசிகாமணி. இவர் ‘கீதம் மேட்ரிமோனியல்’ எனும் திருமண தகவல் மையத்தை நிறுவி கடந்த 30 வருடங்களாக நிர்வகித்து வருகிறார். ‘‘எங்களுடையது மற்ற மேட்ரிமோனியல் நிறுவனங்கள் போல் கிடையாது. முழுக்க முழுக்க தனிப்பட்ட முயற்சியால்தான் நான் இதனை நிர்வகித்து வருகிறேன். எங்களுக்கு என தனிப்பட்ட விதிமுறைகள் உள்ளன. அதை இன்று வரை நாங்க பின்பற்றி வருகிறோம். அதாவது, எங்களின் தகவல் மையத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றால் பெற்றோர் நேரடியாக வந்துதான் ரிஜிஸ்டர் செய்ய வேண்டும்.

தேவைப்பட்டால் மணப்பெண் மற்றும் மணமகனை நேரடியாக சந்தித்து அவர்களின் விருப்பம் என்ன என்று தெரிந்து கொண்டு அதற்கு ஏற்பவும் நாங்க வரன்களை பார்த்து தருகிறோம். ஜாதகம் பொருந்திய வரன்களின் பெற்றோரை நேரடியாக எங்கள் அலுவலகத்தில் சந்திக்க வைக்கிறோம். பிடித்திருந்தால் அதன் பிறகு பெண், பையன் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ள வாய்ப்பினை ஏற்படுத்தி தருகிறோம். ஜாதகம் பொருந்தி இருந்தாலும் மனப் பொருத்தமும் அவசியம் என்பதால் தான் இந்த சந்திப்பினை ஏற்படுத்தி தருகிறோம். இப்போதெல்லாம் ஒரு திருமணம் முடிப்பது என்பது பெரிய சவாலாக இருக்கிறது.

ஒரு வரனுடைய ஜாதகம் பொருந்தி இருந்தாலோ அல்லது நேரடி சந்திப்பில் பிடித்திருந்தாலும் அவசரமாக முடிவினை எடுக்காமல் நிதானமாக பெற்றோரும், வரன்களும் பேசிப் பார்த்து அதன் பிறகு நிச்சயம் செய்து கொள்ள வேண்டும் என்பதில் நான் மிகவும் உறுதியாக இருக்கிறேன். அப்படிப்பட்ட புரிதல்கள்தான் வெற்றிகரமான திருமணங்களாக அமைகிறது.

எங்களிடம் பதிவு செய்பவர்களின் உத்தியோக படிப்பு அதாவது, இஞ்சினியர், டாக்டர், ஆடிட்டர் (CA), IAS, IPS மற்றும் பட்டப்படிப்பினை முடித்திருப்பவர்களின் வரன்களையே எடுத்துக் கொள்கிறோம். பிசினஸ் செய்வதாக இருந்தாலும் கண்டிப்பாக படித்திருக்க வேண்டும்.

காரணம், கல்வியினால் ஆண், பெண் இருவரிடமும் வேறுபாடுகளை பார்க்க முடிகிறது. பொதுவாக ஒரு வரன் பார்க்கும் போது, பெண், பையன் இருவரும் அன்பாக அரவணைப்பாக இருந்து பொறுப்பாக குடும்பம் நடத்துவார்களா என்பதை மட்டுமே மனதில் வைத்து பார்த்தார்கள். இன்று வசதி வாய்ப்பிற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். பணம், வசதி எல்லாம் அவசியம்தான். ஆனால், அது மட்டுமே சிறந்த குடும்ப வாழ்க்கையை தந்து விடாது என்பதை இன்றைய தலைமுறையினர் உணர்வதில்லை.

குறிப்பாக பெண்கள், வீட்டில் பெரியவர்கள் இருந்தால் அது தங்கள் சுதந்திரத்திற்கு தடை என்று நினைக்கிறார்கள். கணவராக இருந்தாலும் தன் தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடக் கூடாது என்பது பெரும்பாலான பெண்களின் கருத்தாக இருக்கிறது. இவ்வாறு பல எதிர்பார்ப்புகள் இரு தரப்பிலும் இருப்பதால், திருமணம் தள்ளிக் கொண்டே போகிறது. எங்கள் நிறுவனத்தில் 30 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் நிறைய இருக்கிறார்கள். நல்ல படிப்பு, லட்சக்கணக்கில் சம்பளம், இருந்தாலும் விட்டுக் கொடுத்து போகும் மனப்பான்மை இல்லாத காரணத்தால் அவர்களின் திருமணங்களும் தள்ளிப் போகிறது.

பெண்கள் ஒரு விதி விதித்தால், பையன்களின் மனநிலையும் வேறாக உள்ளது. குடும்பத்தின் முழு பொறுப்பும் ஆண்கள்தான் பார்த்துக் கொண்டார்கள். மனைவி வேலைக்குப் போனாலும் போகாவிட்டாலும் அன்பு என்பது இருவரிடமும் பிரதானமாக இருந்தது. ஆனால், இன்று பையன்கள் வேலைக்குச் செல்லும் பெண்தான் வேண்டும் என்கிறார்கள். அதிலும் அவர்களின் சம்பளம் இவ்வளவு இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.

மேட்ரிமோனியல் பொறுத்தவரை நான் சொல்வது ஒன்றுதான். திருமண வயதைத் தாண்ட விடாமல் சீக்கிரமாகவும் அதே சமயம் நன்கு கலந்து ஆலோசித்து பார்த்தால் நல்ல இடமாக அமையும். வயதாகி பார்க்கும் போது சரியான முடிவு எடுக்க முடியாமல் திணறும் நிலை ஏற்படுகிறது. தன்னை முழுமையாக நம்பி திறம்பட குடும்ப வாழ்க்கையை இருவரும் இணைந்து நிர்வகிக்க முடியும் என்று மணப்பெண் மற்றும் மணமகன் உறுதியாக இருந்தால் நிச்சயமாக அவர்கள் இருவருக்கும் வெற்றிகரமான வாழ்க்கையாக அமையும்.

வாழ்த்துக்கள். என் கணவர் வக்கீல் என்பதால், இந்த மேட்ரிமோனியல் ஆரம்பித்த நாளில் அவர் எனக்கு முழு உறுதுணையாக இருந்து வருகிறார்’’ என்று கூறும் கீதா, இறைநம்பிக்கையை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காகவே அவருடைய பெயரில் யுடியூப் சேனல் ஒன்றை நிர்வகித்து வருகிறார். முழுக்க முழுக்க பக்திப் பாடல்கள் கொண்ட இந்த சேனலில் இடம் பெறும் பாடல்களை கீதா அவர்களே எழுத அவருடைய கணவர் அதை பாடியுள்ளார்.

தொகுப்பு: ரிதி