Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

பெண்கள் தனித்து முன்னேற பாலமாக இருக்க விரும்புகிறேன்!

நன்றி குங்குமம் தோழி

இல்லத்தரசி... குடும்பம், குழந்தைகள்தான் இவரின் உலகமாக இருந்தது. நான்கு பட்டம் பெற்றிருந்தாலும் மற்றவர்களிடம் பேசுவதில் தயக்கம்... வெளியே செல்ல பதட்டம்... இதை எல்லாம் தகர்த்து இன்று ஒரு தொழில்முனைவோராக வலம் வருகிறார் கோவையை சேர்ந்த மஞ்சு. பேக்கரி மட்டுமில்லாமல் ஃேபஷன் துறையிலும் பயிற்சி அளித்து வருகிறார். ‘‘என்னோட பூர்வீகம் கோவை. நான் ஒரு ஆர்ட்ஸ் மாணவி என்றாலும், சி.ஏ, ஃபேஷன் டெக்னாலஜி மற்றும் உலகளாவிய வர்த்தகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறேன். இதை தவிர மேலும் சில கோர்ஸ்களும் படிச்சிருக்கேன். அப்பா சொந்தமா பிசினஸ் செய்து வந்தார். அம்மா இல்லத்தரசி.

அக்கா கல்லூரியில் பேராசிரியர். என் கணவர் ெசாந்தமா சாஃப்ட்வேர் ஸ்டார்டப் நிறுவனம் வச்சிருக்கார். 2012லதான் பேக்கிங் செய்ய ஆரம்பிச்சேன். சொந்த தொழில் செய்ய விருப்பம் இருந்தாலும், அப்பாவிற்கு நான் நிறைய படிக்கணும். அதனால அவருக்காக நான் நாலு டிகிரி வாங்கினேன். திருமணத்திற்குப் பிறகுதான் பேக்கிங் துறையில் இறங்கினேன். அதற்கு முக்கிய காரணம் என் கணவர். அவர்தான் ‘நீ எடுத்து செய்... உன்னால முடியும்’னு எனக்கு ஊக்கம் ெகாடுத்தார்’’ என்று கூறும் மஞ்சு ஆரம்பத்தில் வீட்டில் இருந்தபடியேதான் தன் பிசினஸினை துவங்கியுள்ளார்.

‘‘என்னதான் எனக்கு பேக்கிங் துறையில் விருப்பம் இருந்தாலும், படிப்படியாக அந்தத் தொழிலில் முன்னேறினேன். முதலில் OTG வாங்கி, அதில் பிரவுனி செய்ேதன். என் கணவர் டேஸ்ட் ரொம்ப நல்லா இருக்கு இதையே பிசினஸா செய்ய சொன்னார். அன்றிரவே ‘லிட்டில் ப்ளூம் கப் கேக்ஸ்’ன்னு பிராண்ட் பெயர் வைத்து சமூகவலைத்தளப் பக்கம் ஒன்றை துவங்கியும் கொடுத்தார்.

அப்படித்தான் என்னுடைய இந்தப் பயணம் ஆரம்பிச்சது. முதலில் நண்பர்கள், தெரிந்தவர்களுக்கு கொடுத்தோம். அதன் பிறகு கடைகளுக்கு சப்ளை செய்தோம். ஆனால், ஆரம்பத்தில் யாரும் ஆர்டர் தரல. அந்த சமயத்தில் நான் இரண்டாம் முறை கருவுற்று இருந்ததால், என் கணவர் எனக்கு உதவியா மார்க்கெட்டிங் செய்ய ஆரம்பித்தார். அவர்தான் ஒவ்வொரு கடையா ஏறி இறங்கி விற்பனைக்கான ஆர்டர் பெற்றார். இன்ஸ்டா பக்கத்திலும் வீடியோ எல்லாம் எடிட் செய்து போஸ்ட் செய்தார். அப்படித்தான் கொஞ்சம் கொஞ்சமா எங்களைப் பற்றி மக்களுக்கு தெரிய ஆரம்பிச்சது. ஆர்டரும் வர ஆரம்பிச்சது.

நான் இல்லத்தரசி என்பதால், மற்றவர்களிடம் பேசவே எனக்கு தயக்கமா இருக்கும். தனியா போய் பொருட்கள் வாங்க கூட போகமாட்டேன். என் கணவர் யாரிடம் எப்படி பேசணும், பொருட்கள் எவ்வாறு வாங்கணும், மார்க்கெட்டிங் என ஒவ்வொன்றும் சொல்லிக் கொடுத்தார். இதற்கிடையில் என் கணவருக்கும் வேலை இல்லாம போனது. அதனால் அவர் ஸ்டார்டப் நிறுவனம் ஒன்றை துவங்கினார். மேலும் என்னுடைய பிசினஸுக்கும் ரொம்பவே சப்போர்ட்டா இருந்தார். அவர்தான் பேக்கிங் செய்வது மட்டுமில்லாமல் அதற்கான பயிற்சியும் அளிக்க சொன்னார்’’ என்றவர், இதற்காக தன்னை மேம்படுத்திக் கொண்டுள்ளார்.

‘‘ஆரம்பத்தில் அடிப்படை பேக்கிங்தான் செய்து வந்தேன். அதை பயிற்சியாக அளிக்கும் போது, யாரும் பெரிய அளவில் ஈடுபாடு காண்பிக்கவில்லை. அப்போதுதான் எனக்கு புரிந்தது. முதலில் நான் என்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று. பேக்கிங் குறித்து பயிற்சிகள் மற்றும் நுணுக்கமான விஷயங்களை கற்றுக் கொண்டேன். அது எனக்கு மாணவர்களுக்கு பயிற்சி அளித்த போது ரொம்பவே பயனுள்ளதாக இருந்தது.

யாரும் சொல்லித்தராத விஷயங்கள், சின்னச் சின்ன டிப்ஸ்களை எல்லாம் நான் பயிற்சி எடுக்க வருபவர்களுக்கு சொல்லித் தந்தேன். அது அவர்களை வெகுவாக கவர்ந்தது. பலர் என்னிடம் பயிற்சி எடுக்க முன்வந்தார்கள். நான் பேக்கிங் பயிற்சி அளிப்பேன். என் கணவர் மார்க்கெட்டிங் குறித்து சொல்லித் தருவார். பிரவுனியில் ஆரம்பித்து இன்று 25 வகையான கேக் வகைகளை நான் பயிற்சி அளித்து வருகிறேன்’’ என்றவர், நட்சத்திர ஓட்டல்கள், பேக்கரி, பள்ளிகள் மற்றும் பார்ட்டி போன்ற விசேஷங்களுக்கும் பிரவுனிகளை சப்ளை செய்ய ஆரம்பித்துள்ளார்.

‘‘பொதுவாக கேக்கினை மைதாவில் தான் செய்வார்கள். ஆனால், நாங்க பள்ளிகளுக்கு சப்ளை செய்ய ஆரம்பித்ததால் அதை ஆரோக்கியமாக கொடுக்க நினைத்தோம். அதனால் சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய அரிசிகள் கொண்டு கப் கேக்குகள் மற்றும் பிரவுனிகளை தயாரித்தோம். இதற்காக பல ஆய்வுகள் செய்தோம். ஆரோக்கியமான முறையில் தருவதால், பள்ளிகளில் நடைபெறும் பெரும்பாலான விழாக்களில் எங்களிடம் பிரவுனிகளை ஆர்டர் செய்வார்கள். இவ்வாறு பல நிகழ்வுகளில் நாங்க பிரவுனிகளை சப்ளை செய்து வருகிறோம்.

மேலும் நிகழ்வுக்கு ஏற்ப கேக்குகள் மட்டுமில்லாமல் மினி டிஃபன், ஸ்னாக்ஸ்கள் போன்ற உணவுகளையும் கஸ்டமைஸ் செய்து தருகிறோம்’’ என்றவர், ஃபேஷன் டெக்னாலஜி குறித்த பயிற்சியும் அளித்து வருகிறார். ‘‘நான் ஃபேஷன் டெக்னாலஜி படித்திருப்பதால், அதற்கான தனிப்பட்ட பயிற்சி மையத்தினை துவங்கி இருக்கிறேன். அதில் ஆரி வேலைப்பாடு, பிளவுஸ் என அனைத்து தையல் கலையும் சொல்லித் தருகிறேன். எனக்கு சின்ன வயசில் இருந்ேத பேக்கிங் மேல் தனிப்பட்ட ஈடுபாடு இருந்தது. என்னுடைய கொள்ளு தாத்தா பேக்கரி வைத்திருந்தார். 70களில் மாடர்ன் பேக்கரி எங்க ஏரியாவில் ரொம்ப ஃபேமஸ். அவருடைய ரெசிபீஸ் பாட்டியிடம் கேட்டு நான் சின்ன வயசில் வீட்டில் செய்து பார்ப்பேன்.

பேக்கிங் எல்லோரும் செய்யலாம். அதில் சின்னச் சின்ன விஷயங்களை நாம் சேர்க்கும் போதுதான் அதன் சுவையில் நம்மால் வித்தியாசத்தை கொடுக்க முடியும். அந்த தேடல்தான் எனக்குள் பல விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டியது. அதே போல் ஒரு உணவு எனக்கு சரியா வரலைன்னா அப்படியே விட்டுவிட மாட்டேன். அது சரியா வரும் வரை நான் திரும்பத் திரும்ப செய்து பார்ப்பேன்.

அப்படித்தான் ஒவ்வொன்றையும் நான் ஸ்பெஷலைஸ் செய்தேன். ஒரு பிரெட் எனக்கு சரியான பதத்தில் வரல. அது சரியா வந்த போது, சாதித்தது போல் இருந்தது. தவறுகள் மூலம்தான் நாம் கற்றுக்ெகாள்ள முடியும். என்னுடைய தவறுகளை நான் என் மாணவர்களுக்கு சொல்லித்தான் அவர்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்று பயிற்சி அளிக்கிறேன்.

ேகக் ெபாறுத்தவரை இன்று நிறைய பேர் செய்றாங்க. சிலர் அதை எளிதாக செய்ய முடியாதுன்னு நினைக்கிறாங்க. கேக் பேக்கிங் அவ்வளவு கஷ்டமானது இல்லை. எளிதாக எவ்வாறு செய்யலாம்னு நான் சொல்லித் தருகிறேன். மேலும் கேக்கிற்கான மாவு கலந்த உடனே அதனை பேக் செய்திடணும்னு சொல்வாங்க. ஆனால், சில சமயம் உடனடியாக தயாரிக்க முடியாமல் போகலாம்.

அந்த இக்கட்டான சூழலில் எந்தவித ஃப்ரீசர்வேடிவ் சேர்க்காமல் அதைப் பதப்படுத்தி பிறகு எவ்வாறு பேக் செய்யலாம்னு சொல்லித் தருகிறேன். அதே போல் மாணவர்கள் எந்த நேரத்தில் சந்தேகம் கேட்டாலும் விளக்க தயாராக இருப்பேன். பயிற்சி பெற வருபவர்கள் எங்களிடம் 90% முழுமையாக பயிற்சி எடுத்துதான் அவங்க வெளியே போவாங்க. இந்த மாதிரி சின்னச் சின்ன விஷயங்கள்தான் எங்களின் USP.

இதுவரை 5000 மாணவர்களுக்கு பயிற்சி அளித்து இருக்கிறோம். அதில் நியூட்ரிஷனில் டாக்டரேட் முடிச்சவங்க எங்களிடம் இன்டர்ன்ஷிப்க் காக வராங்க. எனக்கு ரொம்பவே பெருமையா இருக்கு. இதுபோல் பலருக்கு பயிற்சி அளிக்கணும். குறிப்பாக பெண்கள். என் மூலமாக அவர்கள் தனித்து ஒரு பிசினஸ் ஆரம்பிச்சு முன்னேறணும். பேக்கிங் மட்டுமில்லாமல் என்னுடைய ஃபேஷன் டிசைனிங் பயிற்சியிலும் பலருக்கு பயிற்சி அளிக்கணும். பெண்கள் எல்லோருக்கும் தனிப்பட்ட திறமை இருக்கும். அதை அவர்கள் உணர்ந்து வெளியே கொண்டு வரணும். மேலும் பயிற்சிக்கான கிளைகள் ஆரம்பிக்கணும்’’ என்றார் மஞ்சு.

தொகுப்பு: ஷன்மதி