Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

என்னால் முடியும் வரை உழைப்பேன்!

நன்றி குங்குமம் தோழி

ஒரு காலத்தில் பிளாஸ்டிக் வயர்கூடைகள் இல்லாத வீடுகளே இருக்காது. வீடுகளில் உள்ள பெண்கள் மட்டுமில்லாமல் ஆண்களும் பால், காய்கறி, அசைவம் என அனைத்திற்கும் வயர் கூடைகளையே பயன்படுத்தி வந்தார்கள். நவீன மாற்றம் ஏற்பட்ட பிறகு அந்தக் கூடை முற்றிலும் மறைந்து போயின என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆனால், தற்போது மீண்டும் அந்த வயர் கூடைகள் மக்கள் மத்தியில் புத்துயிர் பெற்றுள்ளது. இன்று காய்கறிகள் வாங்க மட்டுமில்லாமல், இளம் பெண்கள் அதனை ஸ்டைலிஷ் ஹேண்ட்பேக்காகவும் பயன்படுத்த துவங்கியுள்ளார்கள். கிராமத்தில் சந்தைகளில் மட்டுமே விற்பனைக்கு இருந்த இந்த வயர் கூடைகள் இன்று சூப்பர் மார்க்கெட் மட்டுமில்லாமல் பெண்கள் அதனை சிறு தொழிலாகவும் செய்து வருகிறார்கள். ஆனால், பழமை மாறாமல்.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கிழக்கு கோபுரம் கடந்து வடக்கு கோபுரம் நோக்கி செல்லும் நடைபாதையில் பழமை மாறாமல் வயர் கூடையினை பின்னி சாலையில் விற்பனை செய்து வருகிறார் 60 வயதான நாகலட்சுமி. ‘‘சிவகங்கை வழியில் சக்கிமங்கலம் முன்புள்ள கல்மேடுதான் என் ஊர். என் வீடு அங்குதான் உள்ளது. என் கணவர் இறந்து இருபது வருஷமாச்சு. எனக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி பேரன், பேத்தி இருக்கிறார்கள். நான் இரண்டு வருஷமாதான் வடக்கு கோபுரம் அருகில் வயர் கூடையினை விற்பனை செய்து வருகிறேன்.

மீனாட்சி அம்மன் கோயில் உள்ளே அஷ்டசக்தி மண்டபம் அருகில் 25 வருஷமா என்னுடைய அம்மா வயர் கூடை கடை போட்டிருந்தாங்க. அப்ப நான் சிறுமி. நானும் அம்மாவுடன் கடையில் உதவியாக இருப்பேன். அப்படித்தான் அம்மாவிடம் நான் கூடை பின்ன கத்துக்கிட்டேன். ஒரு முறை கோயில் உள்ளே இருந்த வளையல் கடையில் தீ பிடிச்சு எரிஞ்சது. அதற்குப் பின் ேகாயிலுக்குள் கடைகள் இருக்கக் கூடாதுன்னு சொல்லி எல்லாவற்றையும் காலி செய்ய சொல்லிட்டாங்க. நாங்களும் கடையை காலி பண்ண வேண்டிய நிலை ஏற்பட்டது.

அம்மா காலமான பிறகு, வீட்டில் இருந்தபடியே நான் வயர் கூடைகளை பின்னி விற்பனை செய்து வந்தேன். பத்து வருஷம் மேலாக ரெண்டு மகளிர் சுயஉதவிக்குழுவின் தலைவியாக இருந்தேன். எல்லாம் நல்லபடியா இருந்த நேரத்தில் குழுவில் பணம் வாங்கியவுங்க பணத்தை திரும்ப கட்டாமல் ஏமாத்திட்டாங்க. அவர்களின் பணத்தை நான் கட்டினேன். அப்பதான் இதையே ஒரு தொழிலா மாற்றலாம்னு முடிவு செய்தேன். அன்று ஆரம்பித்த என் பயணம் இன்று வரை தொடர்கிறது. வாரம் ஒருநாள் மட்டும் கோபுர வாசலில் நான் வீட்டில் பின்னிய கூடைகளை கொண்டு வந்து விற்பனை செய்வேன். ேகாயிலுக்கு வரும் மக்கள் மற்றும் வெளிநாட்டினர் இந்தக் கூடையினை விரும்பி வாங்கி செல்றாங்க.

தினமும் காலை எட்டு மணிக்கெல்லாம் வந்திடுவேன். இரவு எட்டு மணி வரை விற்பனை செய்வேன். ஒரு நாளைக்கு இரண்டு சின்னக் கூடைகள் மற்றும் ஒரு பெரிய கூடைகளை பின்னுவேன். சாலையில் கடையினை வைத்திருப்பதால் சின்னச் சின்ன பிரச்னைகள் வரும். அதெல்லாம் சமாளித்துதான் இரண்டு வருஷமா வியாபாரம் செய்து வருகிறேன். விற்பனையாகாத கூடையினை அருகிலுள்ள தெரிந்தவர்கள் வீட்டில் வைத்துவிடுவேன். சில சமயம் எல்லா கூடையும் விற்பனையாயிடும். சிலர் கல்யாண சீருக்காக மொத்தமா வாங்கி செல்வாங்க. இங்கு கூடைக்காரம்மானு கேட்டால் எல்லோருக்கும் தெரியும்.

வயர்கூடையில பட்டை வயர், ரோசா வயர், மீன்பிடி வயர் என பல வகை உள்ளன. முன்னூறு முதல் அறநூறு ரூபாய் வரை என்னிடம் சைஸுக்கு ஏற்ப கூடைகள் உள்ளன. அன்னை மீனாட்சி எல்லோருக்கும் படியளக்கிறா. என்னையும் பார்த்துக் கொள்வானு நம்பித்தான் தினமும் வறேன். என் பிள்ளைகள் அவர்களுடன் வந்துவிட சொல்கிறார்கள். நான்தான் முடிந்த வரை உழைச்சு சாப்பிடணும்னு உழைக்கிறேன். யாருக்கும் தொந்தரவா இருக்கக்கூடாது. என்னால் முடியாமல் போகும் போது பார்த்துக் கொள்ளலாம்’’ என்று சாதாரணமாக சொல்லிவிட்டு கூடையை பின்ன துவங்கினார் நாகலட்சுமி அம்மா.

தொகுப்பு: மதுரை ஆர்.கணேசன்