நன்றி குங்குமம் தோழி
காவ்யா
“வெ ற்றியோ தோல்வியோ நான் விரும்பியதை முயற்சி செய்துவிடுவேன். என் கனவை நோக்கிய அடுத்தகட்ட நகர்வாக தொலைக்காட்சியிலிருந்து விலகி சினிமா வாய்ப்புகளை முயற்சி செய்தேன். இன்று பிரபலமான சினிமா நட்சத்திரங்களுடன் நடிக்கும் வாய்ப்புகள் எனக்கு கிடைத்துள்ளது” என்கிறார் நடிகை காவ்யா அறிவுமணி. சில தினங்களுக்கு முன்பு வெளியான ‘ஹாய்’ திரைப்படத்தில் நடிகர்கள் நயன்தாரா மற்றும் கவின் ஆகியோருடன் இணைந்து காவ்யா தன் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
“பள்ளி படிக்கும் போதிலிருந்தே எனக்கு நடிப்பில் ஆர்வம் இருந்தது. ஒரு நடிகர் மேடையில் தனித்து நின்று ஒன்று அல்லது பல கதாபாத்திரங்களை சித்தரித்து நடிக்கும் மோனோ ஆக்டிங் கலையை சிறப்பாக நிகழ்த்துவேன். என்னை சுற்றியிருக்கும் பலரும் ‘உனக்கு நடிப்பு கலை நன்றாக வருகிறது’ என்று ஊக்குவித்தனர். சிறுவயதிலிருந்தே எனக்கு சினிமா ஆர்வம் இருந்தாலும், சினிமாவில் எந்தப் பின்னணியும் இல்லை, வாய்ப்புகளை எப்படி பெறுவது, எங்கிருந்து தொடங்குவது என்று தெரியல. என் சொந்த ஊர் ஆம்பூர். என் கல்லூரி படிப்பிற்காக சென்னை வந்தேன். வீட்டில் மருத்துவம் படிக்க சொன்னார்கள்.
எனக்கு ஓவியம் வரைவது போன்று கலை சார்ந்து அதிக ஆர்வம் இருந்ததால் ஆர்க்கிடெக்ட் படித்தேன். சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் தொடர்ந்து இருந்ததால், அதற்கான தேடல்களை தொடங்கினேன். எனக்கு தெரிந்தவர் மூலம் குறும்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதுவரை எட்டு குறும்படங்களில் நடித்திருக்கேன். இது என்னுடைய நடிப்புத் திறமையை மேம்படுத்த உதவியது. ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, சருமப் பாதுகாப்பு என மெல்ல மெல்ல என்னை மெருகேற்றினேன்.
ஆல்பம் பாடல்களில் நடித்துக் கொண்டிருக்கும் போது தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதன் மூலம் மக்களின் மனதில் இடம் பிடித்தேன். ஒரு நடிகை என்பதை தாண்டி என்னிடம் அன்பை வெளிப்படுத்தும் ரசிகர்கள் எனக்கு கிடைத்தார்கள்” என்ற காவ்யா, சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது குறித்து பகிர்ந்து கொண்டார்.
“எல்லாம் நன்றாக சென்று கொண்டிருந்தாலும், என் சினிமா கனவு என்னை துரத்திக் கொண்டே இருந்தது. நான் தொடர்களில் நடித்துக் கொண்டிருக்கும் போதே சினிமாவில் சிறிய கதாபாத்திரங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்தன. ஆனால், தொடரில் பிசியாக இருந்ததாலும் திடீரென விலக முடியாத காரணத்தால் வாய்ப்புகளை தவறவிட்டேன். தொடர்களில் பணியாற்றிய சமயங்களில் நிறைய கற்றுக்கொண்டேன். எனக்கான அடையாளத்தை தந்திருந்தாலும் அடுத்தடுத்த கட்டம் செல்ல வேண்டும் என்பதால், அதிலிருந்து விலகினேன். என் சினிமா கனவை நிறைவேற்றவே இந்த ரிஸ்க் எடுத்தேன்.
முதல் வாய்ப்பாக ‘மிரள்’ திரைப்படத்தில் நடிகர்கள் வாணிபோஜன் மற்றும் பரத் ஆகியோருடன் நடித்தேன். இதனைத் தொடர்ந்து ‘நிலை மாறும் உலகில்’ நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதில் வாய் பேச முடியாத பெண்ணின் கதாபாத்திரம். இத்திரைப்படத்திற்கு எதிர்பார்த்த அளவில் ரீச் இல்லையென்றாலும், ஒரு சவாலான கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததில் ஒரு மனநிறைவு கிடைத்தது. சிறிய இடைவேளைக்குப் பின்னர் ‘ஹாய்’ திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. நயன்தாரா மேடம் உடன் நடிக்கப் போகிறேன் என்ற ஆவல் ஒரு பக்கம்... அதே சமயம் பதட்டமாகவும் இருந்தது. ஆனால், அவங்க ரொம்ப கூலா இருந்தாங்க. தமிழ்த் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாருடன் நடிக்கும் போது நான் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். புது அனுபவங்களும் கிடைத்தன.
நான் குறும்படம் நடிப்பதற்கு முன்பெல்லாம், நயன்தாரா மேம் நடித்த காட்சிகளை நடித்து ரீக்ரியேட் செய்து வீடியோக்களை பதிவு செய்து கொண்டிருந்தேன். இப்போது அவங்களோட படத்தில் நடித்த போது ஒரு ட்ரான்ஸிஷன் போல இருக்கிறது” என்றபடி நெகிழ்ந்தவர் மேலும் தொடர்ந்தார்.“ஹாய் திரைப்படத்தில் மைதிலி என்கிற கதாபாத்திரமாக வருகிறேன். ஒரு ஹோம்லியான லுக்கில், இப்போ சில பசங்களுக்கு பிடித்த மாதிரியான சுருள் முடி வைத்துக்கொண்டு, ரொம்பவும் ஜாலியாக பேசிக்கொண்டு இருக்கும் பெண்ணாக நடித்திருக்கேன். ஒரு காட்சியில் கவின் எனக்கு ப்ரொபோஸ் செய்வார், நான் அதை நிராகரித்து விடுவது போன்ற காட்சிகளும் உள்ளன. இந்தப் படம் ஒரு நல்ல கதைக்களமாக அமைந்துள்ளது. இந்த திரைப்படத்திற்குப் பின் மேலும் வாய்ப்புகள் வருமென்று நம்புகிறேன்.
தெலுங்கு திரைப்படம் ஒன்றில் கதாநாயகியாக நடித்திருக்கிறேன். இறுதிக்கட்ட வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. விரைவில் வெளியாகலாம். ஜீவி பிரகாஷ் சாருடன் ஒரு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். சூரி சாருடன் ஒரு படத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடக்கிறது. சினிமாவில் மேலும் நிறைய கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பதே என் ஆசை.
என்னுடைய ஆரம்ப காலத்தில் வாய்ப்புகளை பெற கஷ்டப்பட்டிருக்கிறேன். சில நிராகரிப்புகளும் இருந்துள்ளன.
நான் ஒரு தயாரிப்பு நிறுவனம் தொடங்கி என்னைப் போன்று விடா முயற்சி செய்பவர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும் என்று நினைத்தேன். Xoko க்ரூப்ஸ் பெயரில் நிறுவனம் தொடங்கி அதன் மூலம் என்டர்டெயின்மென்ட், ப்ரொடக் ஷன், மூவிஸ் காஸ்டிங், மார்க்கெட்டிங், ப்ராண்டிங் மட்டுமின்றி ஆர்க்கிடெக்ட் ப்ராஜெக்ட்களும் செய்து கொண்டிருக்கிறோம். இவ்வாறு பிசினஸ் ஒருபுறம், சினிமா வாய்ப்புகள் ஒருபுறம் என போய்க்கொண்டிருக்கிறது” என்று புன்னகைத்தார்.
தொகுப்பு: ரம்யா ரங்கநாதன்


