Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad Cement
search-icon-img
Advertisement

ஆயிரக்கணக்கான ஒலிகளில் ஒன்றாக நானும் மாறிவிடுவேன்!

நன்றி குங்குமம் தோழி

ஆஷா போஸ்லேவின் கடைசிப் பாடலான ‘The Shadowy Light’(நிழல் சூழ்ந்த ஒளி) அவர் காலமாவதற்குச் சில வாரங்களுக்கு முன்பு, மார்ச் 2026ல் வெளியானது. இப்பாடல், பிரிட்டிஷ் இசைக் குழுவான ‘கொரில்லஸ்’ஸின் ‘பர்வத்’ எனும் இசைத்தொகுப்பில் இடம்பெற்றிருந்தது. “இந்த வாழ்வெனும் நதியைக் கடக்க எனக்கு வழிகாட்டும் படகோட்டியாக எனது இசையே விளங்குகிறது. நான் நதியின் மறுகரையை அடைந்ததும், எனது பயணம் முழுமையடையும். அங்கே நான் ‘மோட்சத்தை’ அடைவேன். அந்த நிலையில், நம்மைச் சூழ்ந்து மிதந்து கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான ஒலிகளில் ஒன்றாக நானும் மாறிவிடுவேன். இயற்கையோடு ஒன்றிணையும் இந்த விடுதலையே, நதியின் மறுகரையில் எனக்காகக் காத்திருக்கிறது” என்று காலமாவதற்கு சில வாரங்களுக்கு முன் பேசியிருந்தார் ஆஷா போஸ்லே.

பாரம்பரிய மெல்லிசையில் காதல் பாடல்கள், கலக்கல் காபரே பாடல்கள், கஜல்கள், பாப், டிஸ்கோ, ஃபியூஷன் இசை என 20 மொழிகளில் 12.500க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

இவரின் கணவர் மறைந்த இசையமைப்பாளரான ஆர்.டி.பர்மனின் இசைக் கூட்டணியில் உருவான பாடல்கள் இந்தியத் திரைப்பட வரலாற்றில் மறக்க முடியாத சங்கீத மகரந்தங்கள். 1970 மற்றும் 1980களில் பாலிவுட் இசையில் நவீன ஒலி வடிவங்களை அறிமுகப்படுத்திய பெருமை இவர்கள் இருவரையும் சேரும். ‘பியா து அப் தோ ஆஜா’, ‘தம் மேரே தம்’, ‘சுராலியா ஹை தும்னே ஜோ தில் கோ’ போன்ற பாடல்கள் இன்றும் மக்களின் ஆல்டைம் ஃபேவரைட் என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்திய சினிமா மட்டுமில்லாமல், பாய் ஜார்ஜ், நெல்லி ஃபுர்டாடோ, மைக்கேல் ஸ்டைப் மற்றும் க்ரோனோஸ் குவார்டெட் போன்ற சர்வதேச கலைஞர்களுடன் இணைந்து ஆஷா உலகளாவிய இசை பாரம்பரியத்தை உருவாக்கினார். மேற்கத்திய இசை வட்டாரங்களில் குறிப்பிடத்தக்க அங்கீகாரத்தைப் பெற்ற ஆரம்பகால இந்தியக் குரல்களில் இவரும் ஒருவர்.

ஆஷா போஸ்லே, 1933-ம் ஆண்டு செப்டம்பர் 8ல் மகாராஷ்டிர மாநிலம் சாங்லியில் வசித்து வந்த இசை மேதை மாஸ்டர் தீனநாத் மங்கேஷ்கரின் இசைக் குடும்பத்தில் பிறந்தார். நாடக நடிகர் மற்றும் பாடகரான அவரின் தந்தையை தன்னுடைய 9 வயதில் இழந்தார். ஆஷா, தனது மூத்த சகோதரி லதா மங்கேஷ்கருடன் இணைந்து, குடும்ப வருமானத்திற்காகத் திரைப்படங்களில் பாடவும் நடிக்கவும் தொடங்கினார். தனது 16-வது வயதில், கணபத்ராவ் போஸ்லேவை திருமணம் செய்து கொண்டார். ஆனால், அந்தத் திருமண வாழ்க்கை தோல்வியடைந்தது. அதன் பிறகு மீண்டும் இசை உலகிற்குள் நுழைந்தார். தனது வாழ்வாதாரத்திற்காக பாடத் துவங்கினார்.

1943ம் ஆண்டு வெளியான ‘மாஜா பால்’ (Majha Bal) என்ற மராத்தித் திரைப்படத்திற்காக முதன் முதலாக பாடினார். அதனைத் ெதாடர்ந்து 1948ல் ஹன்ஸ்ராஜ் பெஹல், ஓ.பி.நய்யார், மதன் மோகன், ஆர்.டி.பர்மன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், தேவா, வித்யாசங்கர் உள்பட பல்வேறு இசையமைப்பாளருடன் இணைந்து பணியாற்றியுள்ளார். இவர் பாடிய அனைத்து பாடல்களும் காலத்தால் அழிக்க முடியாதவை.

2011ல் உலகிலேயே அதிக பாடல்களை பாடியவர் என்ற கின்னஸ் சாதனை பெற்ற இவர், 1981ல் ‘உம்ராவ் ஜான்’ என்ற படத்திற்காக முதல் தேசிய விருதினை பெற்றார். மேலும், இந்திய சினிமாவின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதையும் 2008ல் பத்மபூஷன் விருதினையும் பெற்றுள்ளார். 2022ல் ‘ரூட் பிகே டான்’ என்ற பாடல் தான் இவர் பாடிய கடைசி பாடல். அதன் பிறகு பாடுவதை நிறுத்திக் கொண்டவர் 2024ல் தனது 91வது வயதில் தன் பேத்தியுடன் இணைந்து ‘சையான் பினா’ என்ற பாடலை பாடியுள்ளார்.

பின்னணி பாடகராக மட்டுமில்லாமல் ‘ஆஷாஸ்’ என்ற பெயரில் உணவுச் சங்கிலி ஒன்றையும் நிர்வகித்து வந்துள்ளார். போட்டி நிறைந்த சர்வதேச உணவுத் துறையில் பாரம்பரிய வடக்கத்திய இந்திய உணவுகளை இவரின் ஆஷாஸில் வழங்கி வருகிறார்கள். வளைகுடா நாடுகளில் மட்டுமில்லாமல் எகிப்தில் கெய்ரோவிலும், இங்கிலாந்தில் மான்செஸ்டர், பர்மிங்ஹாமிலும் கிளைகள் உள்ளன. பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் பர்மிங்ஹாமில் உள்ள ஆஷாஸ் உணவகத்திற்கு வருகை தந்துள்ளார். பின்னணி பாடல்களில் முத்திரை பதித்தது போல், இவர் தன் உணவகத்தினை பல இடங்களில் வடிவமைப்பதில் முழுமையாக ஈடுபட்டு வந்தார்.

தொகுப்பு: கண்ணம்மா பாரதி