நன்றி குங்குமம் தோழி
1966ல் வந்த பசுமைப் புரட்சி இந்திய வேளாண் வரலாற்றை புரட்டிப் போட்டது. இது உற்பத்தியை பெருக்கினாலும் ஆரோக்கியத்தை தொலைக்கச் செய்யும் என ஆரம்பத்தில் யாரும் நினைக்கவில்லை. அதுவரை இயற்கை விவசாயம் செய்த விவசாயிகள் லாபம் பார்க்க துவங்கி விளைப்பொருட்களில் ரசாயனத்தை கலக்க ஆரம்பித்தனர். இதனால் மண் வளத்தோடு மனித வளமும் குறைய தொடங்கியது. எங்கும் ரசாயனம்...எதிலும் ரசாயனமானது. கொரோனா பாதிப்பு கெட்டதிலும் நல்லது என்றுதான் சொல்ல வேண்டும். அதன் பிறகு மக்கள் ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்த ஆரம்பித்தனர். இயற்கையான முறையில் விளையும் உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.
உச்சி முதல் பாதம் வரை தாங்கள் பயன்படுத்தும் அனைத்தும் ஆர்கானிக்காக இருக்க வேண்டும் என்ற எண்ணம் மக்களிடத்தில் தலை தூக்கியுள்ளது. அதற்கேற்றார் போல் இயற்கை அங்காடிகளும் பெருகி வருகின்றன. அவ்வகையில் மேடவாக்கத்தின் லேண்ட் மார்க்காக மாறிவிட்டது ‘இட்டர்னல் பிளிஸ்’ என்ற பெயரில் இயங்கும் இயற்கை அங்காடி. பாரம்பரிய அரிசிகள் தொடங்கி பாத்திரங்கள் வரை அனைத்தும் இங்கே ஆர்கானிக்தான். ‘யாண்டும்’ என்ற பெயரில் கஃபேவுடன் இயங்கும் இந்த அங்காடியின் நிறுவனர் மகேஸ்வரியுடன் பேசிய போது…
‘‘சொந்த ஊர் சங்கரன் கோயில் பக்கத்துல கீழக்கலங்கல். அம்மா, அப்பா ரெண்டு பேரும் சென்னை சிந்தாதிரிப்பேட்டை பள்ளியில் ஆசிரியர்களாக இருந்தனர்.
அதனால் சென்னையில்தான் படித்து வளர்ந்தேன். டைப்பிங் கிளாஸுக்கு போகும் போது அங்கு அரசுப் பணி தேர்வுக்காக நண்பர்கள் விண்ணப்பிப்பார்கள். என்னையும் எழுதச் சொல்லி அறிவுறுத்திக் கொண்டே இருப்பாங்க. நானும் எழுதினேன். எனக்கு வருமான வரித்துறையில் ஸ்டேனோகிராஃபர் வேலை கிடைச்சது. ஆனால், அதற்கு +2 தேர்ச்சிப் பெற்றிருந்தாலே போதும். நான் டிகிரி முடிச்சிருந்ததால், டிப்பார்ட்மென்ட் தேர்வுகளுக்காக விண்ணப்பித்தேன்.
1996ல் பணியாளர் தேர்வாணையத்தில் அப்ப சென்ட்ரல் எக்சைஸ், இப்போது அது GST. அந்தத் துறையில் இன்ஸ்பெக்டராக வேலை கிடைச்சது. அரசுப் பணி கிடைச்சதும் வாழ்க்கையில் சாதிச்சிட்டேணு எல்லோரையும் போல நானும் நினைச்சு சந்தோஷமாக இருந்தேன். ஒருநாள் வீட்டு வாசற்படியில் தடுக்கி விழுந்தேன். அதில் இடது கை எலும்பு மூன்று துண்டுகளாக உடைஞ்சு போச்சு. அந்த சம்பவம் என் வாழ்க்கையை மாற்றும்ணு நான் நினைச்சுப் பார்க்கல’’ என்ற மகேஸ்வரி, இயற்கை அங்காடியை தொடங்க காரணமாக இருந்த நிகழ்வுகளை பகிர்கிறார்.
‘‘கையில் ஏற்பட்ட ஃபிராக்ட்ச்சரால் வேலைக்குப் போக முடியாத சூழல். என் சுய வேலைகளை கூட செய்ய முடியாமல் ரொம்ப கஷ்டப்பட்டேன். என் தங்கை கொடுத்த, மோதிலால் என்பவர் எழுதிய ‘நம் நலம் நம் கையில்’ புத்தகம் ஒன்று கண்ணில் பட்டது. அக்குபங்சர் சிகிச்சை முறைகள் பற்றிய புத்தகம். அது அப்பாவோட நண்பர் ஒருவர் ஹோமியோபதி படிச்சிருந்தார். சின்ன வயசில் எங்களுக்கு உடல் நிலை பாதித்தால் அவரிடம்தான் சிகிச்சைக்காக அப்பா அழைத்து செல்வார். அதனால் அந்த சிகிச்சை முறைகள் பற்றி கொஞ்சம் தெரியும். எனக்கும் கை வலிக்காக வலி நிவாரணி அதிகம் சாப்பிட்டதால வயிறு சம்பந்தமான பிரச்னைகள் வர ஆரம்பித்தன.
அதை குறைக்க அந்தப் புத்தகத்தில் ‘ப்ரஷர் புள்ளிகள் மூலம் வலியை குறைக்கலாம்’ என்ற குறிப்பு இருந்தது. மேடவாக்கத்தில தெரிந்த ஒருவர் அக்குபங்சர் சிகிச்சை மற்றும் இன்ஸ்டியூட் வைத்து இருந்தார்கள். அவர்களிடம் சிகிச்சை எடுத்தேன். வலியும் குறைந்தது. அதனால் அக்குப்ரஷர் சிகிச்சையை கற்றுக் கொண்டேன். இதற்கிடையில் என் கையும் சரியானது, மீண்டும் அலுவலகம் செல்ல ஆரம்பித்தேன். அலுவலக நண்பர்களுக்கு ஏற்படும் சின்னச் சின்ன உடல் உபாதைகளுக்கு அக்குப்ரஷர் சிகிச்சைகள் தருவேன்’’ என்றவர், அரசு வேலையிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றிருக்கிறார்.
‘‘அக்குப்ரஷர் சிகிச்சை எனர்ஜி டிரீட்மென்ட் என்பதால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் போது, அவர்கள் உடலில் இருக்கும் வலி எனக்கு வரும். ஆனால், நான் ஏற்கனவே பலவீனமாக இருந்ததால் என்னால் அதனை சரியாக செய்ய முடியவில்லை. பலர் ஆங்கில மருத்துவத்தை போல் உடனடி நிவாரணத்தை எதிர்பார்க்கிறார்கள். அதனால் சிகிச்சை அளிப்பதை நிறுத்திவிட்டேன். இயல்பாகவே எனக்கு இயற்கை சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகம். ‘செம்மை’ என்ற இயற்கை மருத்துவம், மரபு வாழ்வியல் தொடர்பான ஒரு அமைப்பு இருக்கு. அதில் சேர்ந்தேன். அவங்க நடத்துற உணவு தொடர்பான பயிற்சி பட்டறைகளுக்கும் விடுமுறை நாட்களில் போவேன். அதன் பிறகு வேலையை ராஜினாமா செய்துவிட்டு கிளவுட் கிச்சன் ஒன்றை துவக்கினேன். அது சரியாக போகவில்லை.
சென்னையில ஆர்கானிக் பொருட்கள் பிரபலமான சமயம் அது. எல்லாப் பொருட்களின் விலையும் அதிகமாக இருந்தது. பாரம்பரிய அரிசி விற்கும் கடைகள் அப்போது அவ்வளவாக இல்லை என்பதால், அதனை வாங்கி விற்க முடிவு செய்தேன். மதுரையில் யசோதா என்பவர் பாரம்பரிய அரிசிகளை விற்பதாக தெரிய வந்தது. அவரிடம் நேரடியாக வாங்கி வீட்டில் இருந்தபடியே விற்பனை செய்தேன். பாரம்பரிய அரிசி வகைகள் மட்டுமில்லாமல், தேன், நெய்யும் உடன் விற்பனை செய்தேன். 2019ல் ‘எட்டர்னல் பிளிஸ்’ என்ற பெயரில் இயற்கை அங்காடியாக மாற்றினேன். எல்லாப் பொருட்களையும் விவசாயிகளை தேடித் தேடி வாங்கி விற்பனை செய்ய ஆரம்பிச்சேன்.
ஆரோக்கிய உணவு வேண்டும் என்றால் அவை செய்யும் பாத்திரங்களும் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்டவையாக இருக்கணும்னு நினைச்சேன். செம்மண் பாத்திரங்கள் குறிப்பாக மணிப்பூர் ‘லாங்பி’ எனப்படும் கருப்பு மண் பாத்திரங்கள், மூங்கிலால் ஆன வீட்டு உபயோகப் பொருட்கள், காய்கறிகள், ஆடைகள் என 2300க்கும் மேற்பட்ட ஆர்கானிக் பொருட்கள் எங்கள் அங்காடியில் கிடைக்கும்’’ என்றவர், ‘பாரம்பரிய உணவகம்’ ஒன்றை நடத்தி வருகிறார்.
‘‘வருடந்தோறும் சில இடங்களில் கண்காட்சி நடைபெறும். அதில் கலந்து கொள்ளும் விற்பனையாளர்களிடம் பேசி மொத்தமாக வாங்கியும் விற்கிறேன். எங்கள் அங்காடி காலை 7 மணி முதலே இயங்கும். இரண்டு ஷிப்டுகளில் பெண்கள் வேலை செய்கிறார்கள். டெலிவரிக்கு மட்டும் ஒரு தம்பி வேலை செய்கிறார். மத்தபடி எல்லாமே பெண்கள்தான். எனக்கு 500க்கும் மேற்பட்ட ரெகுலர் கஷ்டமர்ஸ் இருக்காங்க.
வெளிநாடுகளுக்கு இந்த உணவகளை அனுப்புவதில் சிக்கல் இருப்பதால், அங்கு வாழும் தமிழர்கள் இங்கு வரும் போது வாங்கிச் செல்கிறார்கள். எங்களின் பாரம்பரிய உணவகத்திலும் முழுக்க முழுக்க ஆர்கானிக்தான். பால் முதல் பயறுகள் வரை எல்லாமே நேரடி விவசாய கொள்முதல் அடிப்படையில்தான் பயணிக்கிறோம். அரசுப் பணியில் இருந்திருந்தால் எனக்கான அடையாளம் கிடைத்திருக்குமானு தெரியல. இன்று மேடவாக்கத்தில் எங்க கடைதான் ஹைலைட். ‘எங்களுக்கு உங்க கடை வரம்தான்’னு மக்கள் கூறும் போது மகிழ்ச்சிக்கு அளவே இல்லை’’ என்கிறார் மகேஸ்வரி பெருமையுடன்.
செய்தி: கலைச்செல்வி



