Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

உலகப் பணக்காரர்கள் எத்தனை மணிநேரம் தூங்கறாங்க?

நன்றி குங்குமம் டாக்டர்

நமக்குள் ஆயிரம் கனவுகளும் லட்சியங்களும் உண்டு. அவற்றில் ஒன்று உலகப் பணக்காரராக மாறவேண்டும் என்பது.அதாவது எலான் மஸ்க், பெசோஸ், மார்க் ஜுக்கர்பெர்க் போல. இப்படி நினைக்கும்போதே அல்லது கற்பனை செய்யும்போதே உலகப் பணக்காரர்கள் அனைவரும் தூங்காமல், பொழுதுபோக்கில் ஈடுபடாமல் எந்நேரமும் உழைப்பதாக நம்புகிறோம்.ஆனால், அப்படியில்லை. இதை சம்பந்தப்பட்ட அந்த உலகப் பணக்காரர்களே ஒப்புக் கொள்கிறார்கள்.

உதாரணமாக, முன்பு டுவிட்டராக இருந்து இன்று ‘எக்ஸ்’ தளமாக மாறியிருக்கும் சமூகவலைத்தளத்தை தன்வசம் வைத்திருக்கும் எலான் மஸ்க்கை எடுத்துக் கொள்வோம். விண்வெளிப்பயணம் முதல் எலக்ட்ரிக் வாகன உற்பத்தி வரை பல சர்வதேச நிறுவனங்களுக்கு சொந்தக்காரரான இவர், இன்று நம்பர் ஒன் உலகப் பணக்காரராகத் திகழ்கிறார்.

இவரது வருமானம், பல நாடுகளின் ஆண்டு வருமானத்தை விட அதிகம் என்பது மிகைப்படுத்தப்பட்ட செய்தியல்ல. சமீபத்தில் புள்ளிவிவரங்களுடன் வெளியாகியிருக்கும் நியூஸ். இப்படிப்பட்ட எலான் மஸ்க், ஒரு பன்முகத் திறமையாளர். டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களுக்கான கூட்டங்களில் கலந்துகொள்வதுடன், ‘எக்ஸ்’ தளத்திலும் அடிக்கடி பதிவிடுகிறார். இந்தப் புதிய டிரில்லியனர், தினமும் இரவு ஆறு மணிநேரம்உறங்குகிறார். இதைவிட குறைவான நேரம் உறங்கினாலும் தன்னால் எனர்ஜியாக இருக்க முடியுமா என பரிசோதித்திருக்கிறார்.

ஆனால், உறங்கி எழுந்த பிறகு அன்று முழுக்க எனர்ஜி குறைவாக இருப்பதை உணர்ந்தவர், அதன்பிறகு 6 மணி நேர உறக்கம் என்பதைத் தவறாமல் பின்பற்றத் தொடங்கியிருக்கிறார்.அதிகாலை 3 மணிவரை வேலை பார்க்கும் எலான் மஸ்க், அதன்பிறகு உறங்கத் தொடங்கி காலை 9 மணிக்கு கண்விழிக்கிறார். அதேபோல்தான் ‘அமேசான்’ நிறுவனரான ஜெஃப் பெசோஸும். உலகின் முன்னணிப் பணக்காரர்களில் ஒருவரான இவர், தனது அன்றாட வாழ்வில் உறக்கத்திற்கும் நேரம் ஒதுக்க வேண்டியிருக்கும் என்று நீங்கள் நினைத்தால் உடனே அதை டெலிட் செய்யுங்கள்.

ஏனெனில் புத்திசாலித்தனமான முடிவுகளை எடுக்க போதுமான ஓய்வு தேவை என்பதை உறுதியாக நம்புபவர் ஜெஃப் பெசோஸ்.எனவே தினமும் எட்டு மணி நேரம் தூங்குகிறார். செப்டம்பர் 2018ல், கார்லைல் குழுமத்தின் இணை நிறுவனரும், வாஷிங்டன் பொருளாதாரக் கழகத்தின் தலைவருமான டேவிட் ரூபென்ஸ்டைனுடன் நடந்த ஓர் உரையாடலின்போது, ​​தான் ஏன் தூக்கத்திற்கு இவ்வளவு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறேன் என்பதை விளக்கினார்.

இந்த விளக்கம் சமூகவலைத்தளத்தில் பெரும் வைரலாகி இப்போது வரை சுற்றிக் கொண்டிருக்கிறது. இந்த உரையாடலில் அவர் குறிப்பிட்ட முக்கியமான விஷயம் என்ன தெரியுமா? ‘எட்டு மணி நேர உறக்கத்தைக் குறைத்து நான்கு மணி நேரம் நான் உறங்கினால், மறுநாள் என்னால் தொழிலில் கவனம் செலுத்த முடியாது. அது உற்பத்தியை பாதிக்கும்...’ என்றார். அதாவது பெசோஸைப் பொறுத்தவரை, அவர் விழித்திருக்கும் நேரம் ஆக்கபூர்வமாகவும் பயனுள்ளதாகவும் இருப்பதை உறுதி செய்ய எட்டு மணி நேர உறக்கம் அவருக்கு அவசியம்.

சரி... ‘ஃபேஸ்புக்’, ‘இன்ஸ்டா’ உள்ளிட்ட சமூகவலைத்தளங்களை தன்வசம் வைத்திருக்கும் மெட்டா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான மார்க் ஜுக்கர்பெர்க் என்ன சொல்கிறார்?

நிறுவன முடிவுகளில் மட்டுமல்லாமல் நீதிமன்ற விசாரணைகளிலும் ஈடுபடும் இவர், ‘ஃபோர்ப்ஸ்’ பத்திரிகை தெரிவித்துள்ளபடி, இரவில் அதிக நேரம் விழித்திருப்பதில்லை.

இவரது காலைப்பொழுது, கவனத்தைக் கோரும் ஏராளமான மின்னஞ்சல்களுடன்தான் விடிகிறது. மின்னஞ்சல்களுக்குப் பதிலளித்த பிறகு, அவர் தினமும் உடற்பயிற்சி செய்கிறார்.

இப்படி உடல் தகுதியை கவனமுடன் பராமரிக்கும் மார்க் ஜுக்கர்பெர்க், உறக்கத்தையும் கவனமுடன் பின்பற்றுகிறார். ஆம். தினமும் எட்டு மணிநேரம் உறங்குகிறார்.

சிப் உலகின் முடிசூடா மன்னரும் ‘என்விடியா’ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜென்சன் ஹுவாங், தனது பணி நெறிக்காக கொண்டாடப்படுபவர். இதனாலேயே சமீபத்தில் ‘ஃபோர்ப்ஸ் 250: அமெரிக்காவின் மிகவும் வெற்றிகரமான குடியேறிகள்’ பட்டியலில் இடம்பெற்றார். இவர் சொல்லும் முக்கியமான கருத்து என்ன தெரியுமா? ‘கடின உழைப்புக்கும் அதீத கடின உழைப்புக்கும் வித்தியாசம் இருக்கிறது’ என்பதுதான்.

ஜென்சன் ஹுவாங், தினமும் இரவு 9.30க்கு உறங்கச் சென்று, அதிகாலை 5 மணிக்கு கண்விழிக்கிறார். ‘‘என் உறக்கம் எனக்குப் பிடிக்கும். தூக்கம் எனக்கு மிகவும் மிக மிக முக்கியம். குடும்பம் மற்றும் நண்பர்களுடன் நேரம் செலவிடுவதே என்னை புத்துணர்ச்சியாக வைத்திருக்கிறது...’’ என்கிறார் ஜென்சன் ஹுவாங்.இப்போது நீங்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்ற லட்சியத்துடன் தினமும் எத்தனை மணிநேரம் உறங்குகிறீர்கள்... இரவில் எத்தனை மணிநேரம் கண்விழிக்கிறீர்கள் என யோசித்துப் பாருங்கள்.ஓய்வு எடுத்தால்தான் ஜெயிக்க முடியும்!

தொகுப்பு: - காம்ஸ் பாப்பா