Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பண்டிகை காலங்களில் வீட்டை நேர்த்தியாக மாற்ற சில யோசனைகள்!

நன்றி குங்குமம் தோழி

புரட்டாசி மாதம் பிறந்துவிட்டாலே போதும் நவராத்திரி, தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என பண்டிகைகள் அணிவகுத்து வரும். ஒவ்வொரு பண்டிகைக்கும் நாம் வீட்டை சுத்தம் செய்வது, அலங்கரிப்பது என இப்போது தொடங்கும் வேலைகள் தை மாதம் வரை நடைபெறும். உங்கள் வீட்டை மிக நேர்த்தியாக அலங்கரிக்க இதோ சில டிப்ஸ்கள்...

*வீடு முழுக்கப் பொருட்களை அடைத்து வைக்காதீர்கள். அப்புறம் உங்களுக்கு உள்ளே புழங்குவதற்கு இடமே இருக்காது. உங்களுக்குப் பிடித்தமான, அவசியமான பொருட்கள் மட்டுமே இருக்கட்டும்.

*நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் இருக்கும் பொருட்களைப் பார்த்து, அதேபோல வேண்டும் என வாங்கி வைக்காதீர்கள். உங்கள் வீட்டுக்கு எது பொருத்தம், உங்கள் தேவை என்ன என்றெல்லாம் பாருங்கள். எது வசதி என்பதையும் உணர்ந்து முடிவெடுங்கள்.

*ஃபர்னீச்சர்களை தேவையில்லாமல் வாங்காதீர்கள். வீட்டில் நல்ல நிலையில் ஒரு சோபா இருக்கும்போது, தள்ளுபடியில் கிடைக்கிறதே என இன்னொன்று வாங்குவது அபத்தம். ஃபர்னீச்சர்களை வாங்கும்போது, அதை வீட்டில் எங்கே வைக்கப்போகிறோமோ, அந்த இடத்தை அளந்து கொள்ளுங்கள். அதன் பிறகு போய் வாங்குங்கள்.

*ஹால் மற்றும் படுக்கை அறைகளில் 60% மேற்பட்ட தரைப்பரப்பை ஃபர்னீச்சர்கள் ஆக்கிரமிக்கக்கூடாது, அப்படி இருந்தால், நெரிசலான போக்குவரத்தில் பயணிக்கும்போது ஏற்படும் உணர்வு வீட்டுக்குள் வந்ததும் ஏற்படும்.

*ஜன்னல்களில் அகன்ற திரைச்சீலை மாட்டி வைப்பது அறையையும் நேர்த்தியாகக் காட்டும். வீட்டுக்குள் தூசு படிவதையும் தடுக்கும்.

*அறையில் அடிக்கும் வண்ணங்களில் பட்டையான கோடுகளை வேறு வண்ணங்களில் அடிப்பதும், அழகிய டிசைன்களை சுவர்களில் பதிப்பதும் வீட்டை இன்னும் அழகாக்கும். வீட்டில் எல்லா விளக்குகளுமே பிரகாசமாக எரிய வேண்டும் என்பதில்லை. சில சமயங்களில் அதுவே கண்களை கூச வைக்கும். உங்கள் வசதிக்குத் தேவையான அளவு வெளிச்சம் இருப்பதே போதுமானது.

*சிறிய ஹாலில் ஒரு மூலையில் போடப்படும் வட்டமான டைனிங் டேபிள், இடத்தையும் அடைக்காது, பார்க்க அழகாகவும் இருக்கும்.

*சுவர்களில் தேவையில்லாத படங்களை மாட்டி வைக்காதீர்கள், சின்னச்சின்னதாக நிறைய படங்களை மாட்டிவைத்தால், பார்க்க நன்றாக இருக்காது.

*சுவர்கள் பளிச்சென இருப்பது போலவே, கதவுகளும் பொலிவுடன் இருக்க வேண்டும். கதவுகளில் தேவையற்ற ஸ்டிக்கர்களை ஒட்டி வைப்பதைத் தவிர்க்கவும்.

*சுவர்களில் பொருத்தமான இடங்களில், சரியான அளவில் கண்ணாடிகள் வைக்க வேண்டும். சிறிய அறையில் பிரமாண்ட கண்ணாடி பொருத்தமாக இருக்காது. பெரிய ஹாலின் சுவற்றில் சின்னதாக கண்ணாடி மாட்டியிருந்தாலும் அழகாக இருக்காது.

*தினம் தினம் பார்த்துப் பழகிவிடுவதால், உங்கள் வீட்டில் பொருட்கள் அலங்கோலமாக குவிந்து கிடக்கின்றனவா என்பது உங்கள் பார்வையில் படாது. அதனால் புதிய கண்களால் வீட்டைப் பாருங்கள். சுத்தம் செய்து அடுக்கி வையுங்கள்.

தொகுப்பு: கவிதா பாலாஜிகணேஷ், சிதம்பரம்.