நன்றி குங்குமம் தோழி
வரலாறு என்பது கடந்த காலத்தைப் பற்றிய பதிவு மட்டுமல்ல; ஒரு இனத்தின் பண்பாடு, நாகரிகம், வாழ்வியல் மற்றும் பெருமைகளை பறைசாற்றும் காலக்கண்ணாடியாகும். அந்த வகையில், பழங்கால நாணயங்கள், பணத்தாள்கள் மற்றும் தொன்மையான பொருட்கள் நம் முன்னோர்களின் வரலாற்றை அறிய உதவும் அரிய ஆவணங்களாகத் திகழ்கின்றன. இத்தகைய வரலாற்றுச் சின்னங்களை பாதுகாத்து, அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் உன்னத நோக்கத்துடன் சென்னை நாணயவியல் அமைப்பு நடத்திய ‘வரலாற்று நாணயக் கண்காட்சி’, தமிழர்களின் தொன்மையையும் பெருமையையும் வெளிப்படுத்தும் சிறப்புமிக்க நிகழ்வாக அமைந்தது.
வரலாற்று ஆர்வலர்கள், நாணயச் சேகரிப்பாளர்கள், மாணவர்கள் எனப் பலரையும் ஈர்த்த இக்கண்காட்சி, அரிய வரலாற்றுச் சான்றுகளை பாதுகாப்பதன் அவசியத்தையும் நமது பாரம்பரியத்தின் மதிப்பையும் உணர்த்தியது. இதுகுறித்து சென்னை நாணயவியல் அமைப்பின் தலைவர் ‘சென்னை மணிகண்டன்’ மேலும் விளக்குகிறார்.
“சென்னை எக்மோர் தமிழ் சாலையில், சென்னை நாணயவியல் அமைப்பின் சார்பில் கடந்த அக்டோபர் 23, 24, 25 ஆகிய மூன்று நாட்கள் ‘வரலாற்று நாணயக் கண்காட்சி’ சிறப்பாக நடைபெற்றது. தமிழர்களின் வரலாற்றையும் அவர்கள் கடந்து வந்த பாதையையும் திரும்பிப் பார்க்கும் ஆவணமாக அமைந்த இக்கண்காட்சியில், 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சேர, சோழ, பாண்டிய மற்றும் மலையமான் மன்னர்களின் அரிதான நாணயங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அத்துடன், இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட ₹50, ₹100, ₹500 மற்றும் ₹1000 மதிப்பிலான வெள்ளி சிறப்பு நாணயங்களும் (Commemorative Coins) பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.
இக்கண்காட்சியில் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மும்பை, கொல்கத்தா மற்றும் ஹரியானா போன்ற பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நாணயச் சேகரிப்பாளர்கள் பங்கேற்று தங்களது சேகரிப்புகளை காட்சிப்படுத்தினர். இதில் 250-க்கும் மேற்பட்ட நாடுகளின் வெளிநாட்டு கரன்சிகள், பாலிமர் பணத்தாள்கள் மற்றும் உலக வரைபடத்திலிருந்து மறைந்து போன ‘இறந்த நாடுகள்’ என்று அழைக்கப்படும் சில நாடுகளின் அரிதான பணத்தாள்களும் இடம் பெற்றிருந்தன. மேலும், சிறப்பு அஞ்சல் தலைகளுடன் பண்டையத் தமிழர்கள் பயன்படுத்திய சுடுமண்ணால் ஆன பொருட்கள் மற்றும் பித்தளைப் பாத்திரங்கள் போன்ற பாரம்பரியப் புழங்கு பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
வரலாற்று ஆர்வத்துடன் திரளான பொதுமக்களும் மாணவ-மாணவிகளும் வந்து இக்கண்காட்சியை கண்டுகளித்தனர். குறிப்பாக, டி.என்.பி.எஸ்.சி (TNPSC) மற்றும் யு.பி.எஸ்.சி (UPSC) போன்ற போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் வரலாற்றுத் தகவல்களை சேகரித்து குறிப்புகள் எடுத்துக்கொண்டனர். தங்கம், வெள்ளி, ஈயம் மற்றும் எஃகு நாணயங்கள் கடைகளில் கொடுத்து உருக்கப்படுவதையோ அல்லது கோயில்களின் உண்டியல்களில் போடப்பட்டு அழிவதையோ தடுத்து, அவற்றைச் சேகரித்துப் பாதுகாக்க வேண்டிய விழிப்புணர்வை இக்கண்காட்சி ஏற்படுத்தியுள்ளது.
சென்னை நாணயவியல் அமைப்பின் மூலம் கடந்த 10 ஆண்டுகளாகச் சென்னையில் இக்கண்காட்சியை தொடர்ந்து நடத்தி வருவதுடன், கடந்த 16 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் மற்ற மாநிலங்களில் நடைபெறும் 200-க்கும் மேற்பட்ட கண்காட்சிகளில் பங்கேற்று தமிழ் மன்னர்களின் நாணயங்களை பெருமையுடன் காட்சிப்படுத்தியிருக்கிறேன். ஒட்டுமொத்தத்தில், அழிந்துவரும் வரலாற்று ஆவணங்களை பாதுகாப்பதோடு, மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் வரலாற்று அறிவை அகலப்படுத்தும் ஒரு முக்கிய அறிவு சார்ந்த நிகழ்வாக இக்கண்காட்சி அமைந்தது” என்றார்.
தொகுப்பு: ஆர்.ஆர்


