Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆரோக்கியமான மூலிகை உப்பு!

நன்றி குங்குமம் தோழி

“வழக்கமான உப்பிற்கு மாற்றாக பல மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகைகள் மற்றும் பாறை உப்பு கலந்து தயாரிக்கப்படும் ஒரு ஆரோக்கியமான பொருள்தான் மூலிகை உப்பு (Herbal Salt). முருங்கை கீரை போன்ற சத்தான உணவுகளை நேரடியாக சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்குக் கூட இந்த மூலிகை உப்பின் மூலம் அதன் சத்துக்களை சேர்க்க முடியும்” என்கிறார் குக்கு நேச்சுரல்ஸ் (CuCu Naturals) எனும் ப்ராண்டின் உரிமையாளர் ஜெயராணி. தனது ஓய்வு நேரத்தை முறையாக பயன்படுத்தி சிறு தொழில் தொடங்கியுள்ள ஜெயராணி, மூலிகை உப்பு மற்றும் பல இயற்கை தயாரிப்புகளை ஆரோக்கியமான முறையில் தயாரித்து வருகிறார்.

“நான் மதுரையில் பொன்மேனிப் பகுதியில் வசிக்கிறேன். நான் ஒரு இல்லத்தரசி. என் பிள்ளைகள் வளர்ந்த பிறகு வீட்டில் எனக்கு நிறைய ஓய்வு நேரம் கிடைத்தது. அந்த நேரத்தை பயன்படுத்தி ஏதாவது செய்ய வேண்டுமென்ற உந்துதல் எனக்குள் இருந்தது. தொடக்கத்தில் க்ளவுட் கிச்சன் போல செயல்பட்டு ஆர்டர்கள் எடுத்து வீட்டிலேயே உணவுகளை சமைத்து வழங்கினேன். கல்லூரி மாணவர்கள் பயன்பெற்று வந்தனர். பிறகு சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய அரிசிகளில் லட்டு, சத்துமாவுக் கஞ்சி போன்றவற்றை தயாரிக்க தொடங்கினேன்.

இப்போதும் அதற்கான ஆர்டர்கள் வருகின்றன. பின்னர், கீரைகள் மற்றும் பூக்களில் இருந்து ‘டிப் டீ’ (Dip Tea) எனப்படும் தேநீர் பொடி வகைகளை தயாரிப்பதில் காலடி எடுத்து வைத்தேன். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. முருங்கை, ஆவாரம் பூ, செம்பருத்தி, சங்குப்பூ மற்றும் கொய்யா இலை போன்ற சுவைகளில் டிப் டீ தயார் செய்கிறேன். இந்த மருத்துவ குணம் நிறைந்த பூக்கள் மற்றும் மூலிகைகளை நன்றாக உலர்த்தி எடுத்து, ஒரு சிறிய துணி பையில் முறையாக பேக் செய்து டிப் டீ தயாரிக்கப்படுகிறது. வெளியில் சென்றாலும் ஆரோக்கியமாக சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது எளிமையான சிறந்த தேர்வாக இருக்கும். சுடுநீரில் டிப்-டீ பேக்கினை போட்டுவைத்து சில நிமிடங்களில் அதில் சுவை இறங்கியதும் அதை பருகலாம். குறிப்பாக கொய்யா இலை தேநீர் நல்ல பலனை தருவதாக வாடிக்கையாளர்களே கூறுவார்கள்.

என் வீட்டில் டிப்-டீ அடிக்கடி பருகுவோம். என் கணவருக்கு கொடுத்து அனுப்பும் போது அலுவலகத்தில் அவரது நண்பர்கள் விரும்பி கேட்டனர். அவர்களுக்கு சேர்த்து தயாரிக்க தொடங்கி இன்று அது வணிகமாக மாறியுள்ளது. மூலிகை உப்பு தயாரிப்பு தொடங்கியதும் இப்படியான உந்துதல்தான். எங்க வீட்டில் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் முருங்கை கீரை போன்றவற்றை ஆரோக்கியமான வேறு வழிகளில் எப்படி கொடுக்கலாம் என்று யோசித்தபோது, முருங்கை கீரை சேர்க்கப்பட்ட மூலிகை உப்பினை வீட்டிலேயே தயாரித்தேன். பொதுவாகவே சில குழந்தைகள் கீரை வகைகளை நேரடியாக சமைத்து கொடுத்தால் சாப்பிடாமல் தவிர்த்துவிடுவார்கள்.

வயதானவர்களுக்கும் செரிமான சக்தி குறைவதால் அவர்களின் செரிமான சிக்கலை தவிர்ப்பதற்காக நேரடியாக இல்லாமல் இவ்வாறு வேறு வழிகளில் உணவுடன் சேர்த்துக்கொடுப்பதால் சத்துக்கள் தவிர்க்கப்படுவதும் குறையும்” என்றவர் மேலும் தொடர்ந்தார்.“வீட்டிலுள்ளவர்களுக்கான என்னுடைய இந்த தயாரிப்பை வணிகமாக மாற்றினேன். முருங்கைகீரை உப்பு, வல்லாரைக் கீரை உப்பு, முடக்கத்தான் கீரை உப்பு, பிரண்டை உப்பு என சீசனுக்கு ஏற்ப ஆரோக்கியமான மூலிகை உப்புகளை தயாரித்து வருகிறேன். வழக்கமான கல்லுப்பை எடுத்துக்கொண்டு, அதில் சுத்தமாக கழுவிய கீரைகளை தண்ணீரே சேர்க்காமல் விழுதாக அரைத்து சேர்க்கப்படும்.

பின்னர் மிதமான சூட்டில் அதை லேசாக வறுப்பதன் மூலம் அதிலுள்ள ஈரப்பதம் நீக்கப்பட்டு, நீண்ட நாட்களுக்குக் கெடாமல் இருக்கும். இம்முறையில் தயாரிக்கப்பட்ட மூலிகை உப்பினை நம் அன்றாட சமையலில் வழக்கமான அளவுகளில் சேர்த்துவரும் போது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எளிதாகக் கீரையின் சத்துக்களை பெற உதவுகிறது. வாழைப்பூ மால்ட், முளைக்கட்டிய வெந்தயம் மற்றும் முளைக்கட்டிய ராகி மால்ட் போன்ற ஆரோக்கிய பானங்களையும் தயார் செய்கிறேன். இதில் வாழைப்பூ மால்ட் தனித்துவமாக வழக்கமாக கிடைக்காததால், வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த மால்ட்டாக உள்ளது.

உணவுப் பொருட்கள் மட்டுமின்றி, சருமப் பாதுகாப்புக்காக குப்பைமேனி மூலிகை சோப்பு, குளியல் போடி போன்ற இயற்கை அழகு சாதனப் பொருட்களையும் தயார் செய்கிறேன். இதற்கென்றே சில வழக்கமான வாடிக்கையாளர்கள் உள்ளனர். மேலும், தூயமல்லி, சீரக சம்பா போன்ற பாரம்பரிய அரிசியில் வடாம், கஞ்சி மிக்ஸ், புட்டு மாவு, களி மிக்ஸ் போன்றவையும் தயாரித்து விற்பனை செய்து வருகிறேன். குக்கு நேச்சுரல்ஸ் என்ற பெயரில் எனது வீட்டின் மேலேயே ஒரு சிறிய யூனிட் அமைத்து எனது பணிகளைச் செய்து வருகிறேன்.

என் இரண்டு மகள்களும் எனக்கு பக்கபலமாக இருக்கின்றனர். பேக்கிங் மற்றும் ஸ்டிக்கர் ஒட்டும் பணிகளை அவர்கள் கவனித்துக் கொள்கிறார்கள். தற்போது இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் வாயிலாக ஆர்டர்களைப் பெற்று வருகிறேன். எதிர்காலத்தில் என்னுடைய இந்தத் தொழிலை இன்னும் பெரிய அளவில் விரிவுப்படுத்த வேண்டும் என்கிற ஆசையுள்ளது. ஆரோக்கியமான வாழ்விற்குத் திரும்புபவர்களுக்கு என்னுடைய இந்த இயற்கை தயாரிப்புகள் ஒரு சிறந்த மாற்றாக இருக்கும் என நம்புகிறேன்” என்றார்.

தொகுப்பு: ஆர். ஆர்