நன்றி குங்குமம் தோழி
மனித மூளையின் செயல்பாடு பல ஆச்சர்யங்களை கொண்டதுதான். அதிலும் சில மனிதர்கள் நம்மை ஆச்சரியப்படுத்தும் அளவு அசாத்தியமான திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். ஒரு வருடம், மாதம், தேதி, நாள் இவற்றில் எதை இடமாற்றி கேட்டாலும் அதற்கான பதிலை சொல்லும் திறன் ஆச்சரியத்தை ஏற்படுத்தக்கூடியதுதான். உதாரணத்திற்கு ஏதோ ஒரு வருடத்தை எடுத்து அதில் குறிப்பிட்ட மாதம் மற்றும் தேதியை சொன்னால் அதன் கிழமையை சரியாக சொல்லும் திறமை.
இதுபோன்ற மனிதர்களை ‘Human Calendar’ என்று அழைக்கின்றனர். சிலர் இதற்கான பயிற்சிகளை மேற்கொள்கிறார்கள். ஆனால், சிலருக்கு இத்திறன் இயற்கையாகவே அமைந்திருக்கிறது. மூளை வார்த்தைகளை கற்றுக்கொள்வது போல இது போன்றோருக்கு எண்களின் அமைப்பை தானாகவே உள்வாங்கிக்கொள்கிறது. ஒரு வருடத்தையும் தேதியையும் சொன்னதும் அவர்களின் மூளை மிக வேகமாக செயல்பட்டு ஒரு குறிப்பிட்ட அமைப்பை தேர்ந்தெடுத்து அதன் கிழமையை துல்லியமாக சொல்கிறது. இது அசாத்திய நினைவாற்றலை வெளிப்படுத்துகிறது.
சென்னை கொளத்தூரை சேர்ந்த காமராஜ்- மீனா தம்பதியரின் மகன் சிறுவன் ஆதிஸ்வர், இத்தகைய திறனை பயன்படுத்தி 1980 முதல் 2030ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் வரும் 51 நாட்களை, அவற்றின் தேதிகளை கொண்டு 5 நிமிடங்கள், 23 வினாடிகளில் நினைவுக்கூர்ந்து சொல்லி ‘இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ சாதனை புத்தகத்தில் (Indian Book of Records) இடம் பெற்று சாதனை படைத்திருக்கிறார். இதுகுறித்து அவரது தந்தை காமராஜ் பேசியபோது...
“எங்க மகன் ஆதிஸ்வர் இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம் பெற்றிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. எந்த வருடம், தேதியை சொல்லி அதன் கிழமை என்னவென்று கேட்டால் சில நொடிகளில் சொல்லிவிடுவார். தற்போதையை மற்றும் வருங்கால நாட்கள் மட்டுமல்ல, 1960களில் ஒரு தேதியை கேட்டால் கூட அந்த நாளை சொல்லிவிடுவார். இதற்காக அவர் எந்த பயிற்சியும் எடுக்கவில்லை. ஒருநாள் அவன் அம்மாவிடம் எல்லா ஞாயிற்றுக் கிழமையும் நான்-வெஜ் சமைத்து தரவேண்டும் என்று கேட்டான். வரிசையாக அடுத்து வரப்போகிற சில தேதிகளை அடுக்காக சொன்னான். ஏன் இந்த தேதிகளை சொல்கிறான் என்று கேட்டபோது இந்த தேதிகளில் எல்லாம் ஞாயிற்றுக்கிழமைகள் வருகின்றன என்றான்.
எங்களுக்கு பூரிப்பாக இருந்தாலும் அவன் காலண்டரை பார்த்துவிட்டு வந்து சொல்கிறான் என்று நினைத்துக் கொண்டோம். ஆனால், அவன் அவ்வப்போது எங்களுடைய பிறந்த நாள், திருமண நாள் போன்ற முக்கியமான நிகழ்வுகளின் தேதிகள் அடுத்தடுத்த வருடங்களில் என்னென்ன கிழமைகளில் வருகிறது என்பதை சொல்லிக்கொண்டிருப்பான். அவை துல்லியமாக இருந்தன. நாங்கள் ஆச்சர்யப்பட்டு, அவ்வப்போது ஏதாவது ஒரு தேதியை சொல்லி அதன் கிழமையும் மற்றும் வருடம், கிழமையை சொல்லி என்ன தேதி என்பதை கேட்போம். அவனும் சரியாக சொல்வான். முன்னோக்கிய நாட்கள் மட்டுமின்றி 1960களில் ஏதேனும் ஒரு நாளை கேட்டால் கூட அவனால் சொல்ல முடிந்தது.
உன்னால் எப்படி இதை சொல்ல முடிகிறது, இதை கண்டுபிடிப்பதற்கென ஏதேனும் கணக்கீடுகள் வைத்திருக்கிறாயா என்று கேட்டால், அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. எனக்கு தானாக சொல்ல வருகிறது என்றான். அதன் பின்னரே மகன் ஆதிஸ்வருக்கு தனித்திறன் இருக்கிறது என்பதை உணர்ந்தோம். ஆதிஸ்வருக்கு சிறுவயதிலேயே பேச்சு தாமதம் ஏற்பட்டது. நான்கு வயதில்தான் ‘அம்மா’ என்கிற முதல் வார்த்தையை பேசினான். ஆதிஸ்வர் தற்போது ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். பேச்சு தாமதம் உள்ள குழந்தை இப்போது இவ்வளவு துல்லியமாக தேதிகளையும் நாட்களையும் சொல்கிறான் எனில் எங்களுக்கு ஆச்சர்யம்தான்.
மகனின் இந்த திறனை சாதனையாக பதிவு செய்ய வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தோம். பின்னர் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு சில உயர் அதிகாரிகளின் முன்னிலையில், அவர்கள் கேட்ட தேதிகளின் கிழமைகளை தாமதமின்றி சொன்னான். 1980 முதல் 2030 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் வரும் 51 நாட்களின் தேதிகளை 5 நிமிடங்கள், 23 வினாடிகளில் நினைவுக்கூர்ந்து சொல்லிமுடித்தான். இந்த சாதனை இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் பதிவு செய்யப்பட்டது” என்று நெகிழ்ந்தார்.
தொகுப்பு: ஆர்.ஆர்


