நன்றி குங்குமம் தோழி
* எண்ணெய் தன்மையுள்ள தலை முடியை கொண்டவர் குளிக்கின்ற நீரில் ஒரு ஸ்பூன் வினிகரோ, எலுமிச்சை சாரோ கலந்து குளிக்க வேண்டும். அப்படி செய்து வந்தால் எண்ணெய் தன்மை தலைமுடியில் குறைந்துவிடும்.
* வாரத்தில் ஒருமுறை கட்டித் தயிரை தலையில் அழுத்தி தேய்த்தப் பின் இளஞ்சூடு உள்ள தண்ணீரில் தலை கழுவுவது எந்த வித தலை முடிக்கும் நல்லதாகும். தலை முடிக்கு நல்ல கறுப்பு நிறம் ஏற்படவும், எண்ணெய் தன்மையை கட்டுப்படுத்துவதற்கும் தயிர் உதவியாக இருக்கும்.
* எலுமிச்சைச் சாறு தலைப்பொடுகைப் போக்குவதற்கு மிகச் சிறந்த மருந்தாகும். ஒரு எலுமிச்சம் பழத்தின் சாரை இரண்டு டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெயுடன் கலந்து, தலையில் நன்கு அழுத்தி தேய்த்து, இரண்டு மணி நேரம் கழித்து இளஞ்சூடான தண்ணீரில் கழுவி விட வேண்டும். வாரத்தில் இருமுறை இவ்வாறு செய்தால் பொடுகு சுத்தமாக ஒழிந்து போகும்.
* தலைமுடி வறண்டதாக இருந்தால் குளிக்கும் முன்பு ஒரு முட்டையை நன்றாக அடித்தெடுத்து, அதில் ஒரு டீஸ்பூன் தேனும், ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயும் சேர்த்து தலை சருமத்தில் அழுத்தித் தேய்க்க வேண்டும். வாரத்தில் இருமுறை இவ்வாறு செய்தால் தலைமுடி செழுமையாகவும், அழகாகவும் இருக்கும்.
* ஒரு கப் தேங்காய்ப் பால், இரண்டு டீஸ்பூன் அரைத்த வெந்தயம் இவை இரண்டையும் கலந்து தலையில் தேய்த்து, பத்து நிமிடத்திற்கு பின் குளிர்ந்த நீரில் கழுவி விட வேண்டும். இவ்வாறு தினமும் செய்தால் முடி கருகருவென வளரும். இளநரை வராது.
* தலைக்கு குளித்தவுடன் சாம்பிராணி புகையை தலையில் நன்கு காட்டினால் பேன் தொல்லை ஒழிந்து போகும்.
* நம் உடம்பில் இரும்புச் சத்து குறைந்தால் முடி உதிர ஆரம்பிக்கும். அதனால் அதிகம் கீரை சாப்பிட வேண்டும். இரும்புச் சத்துள்ள மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனைப்படி அளவுடன் பயன்படுத்தலாம்.
தொகுப்பு: டி.லதா, நீலகிரி.

