Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ஹபீபி!

நன்றி குங்குமம் தோழி

வாழ்க்கை முறை, குடும்ப உறவுகள், காதல் மற்றும் சமூக கட்டுப்பாடுகளை மையமாக வைத்து, முழுக்க முழுக்க தமிழ் முஸ்லிம் சமூக மக்களின் வாழ்வியலைக் காட்சிப்படுத்தி இருக்கும் படம் ‘ஹபீபி.’‘ஹபீபி’ என்றால் அரபு மொழியில் ‘அன்பே’ என்று அர்த்தமாம். அன்பால் படம் நம்மை முழுமையாகக் கட்டிப்போடுகிறது. தென்தமிழக கிராமம் ஒன்றில் கைத்தறி நெசவு செய்கிறார் யூசுப். விசைத்தறியின் வருகையால் தொழில் நசிய, அவரின் தம்பி ஷேக், மனைவியை பிரிந்து வளைகுடா நாட்டுக்கு வேலைக்குச் செல்கிறார்.

பதின்ம வயதைத் தாண்டும் யூசுப்பின் மகன் அபுதாஹீரையும் குடும்பச்சூழல் வளைகுடா நாட்டுக்குத் தள்ள, நிலோஃபர் மீதான காதலால் செல்ல மறுக்கிறார். இதைத் தொடர்ந்து வரிசைகட்டும் உணர்ச்சி இழைகளே படத்தின் கதை.சந்ததிகளின் வாழ்வுக்காக இளமைக் காலத்தை வெளிநாட்டில் தொலைத்துவிட்டு நிற்கும் துயரத்தின் வலி கொடூரமானது. ஆம்! தகவல் தொழில்நுட்பம் எட்டிப் பார்க்காத... தபால்களில் மட்டுமே தகவல்களை பரிமாற்றிக் கொண்டிருந்த 1980-களின் காலகட்டம் அது. ஒரு தபால் எழுதி, வெளிநாட்டில் இருக்கும் உறவினருக்குச் சென்று, அவரிடம் இருந்து பதில் வருவதற்கு ஒரு மாதத்திற்கும் மேல் எடுக்கும். தபால்காரர் வைத்திருக்கும் தபால்களில் ஏர்மெயில் கவர்கள் தனியே தெரியும்.

லீவில் வந்து வெளிநாட்டுக்கு மீண்டும் திரும்பிச் செல்பவர்களிடம், கணவனுக்காக மனைவி பேசி அனுப்பும் கேசட்டுகள் கொடுத்து அனுப்புவார்கள். இந்த ‘கேசட் வழி தூது’ காட்சிகளும்

படத்திலும் இடம்பெற்றுள்ளது. ஆணுக்கு இணையாக உழைப்பைச் செலுத்தினாலும், தன் வாழ்க்கை குறித்த முடிவுகளைகூட எடுக்க இயலாத சூழலில் 80-களில் யூசுப்பின் மனைவியும், தம்பியின் மனைவியும் இருக்கிறார்கள்.

சமகாலப் பெண்ணாக வரும் பர்வீனின் துணிச்சலான கதாபாத்திரம் அனைவரையும் ஈர்க்கிறது. உணவகத்தில் தனக்கான உணவையும் சேர்த்துச் சொல்லும் அபுதாஹீரிடம் பர்வீன் இடைமறித்து, தனக்குத் தேவையானதைத் தெளிவாகச் சொல்வதும், தன்னை அபுதாஹீரின் குடும்பத்தினர் அவமானப்படுத்திய பின்னர், ‘‘நான் எதுவும் பேசவில்லை” என்கிற அபுதாஹீரிடம், ‘‘ஏன் பேசவில்லை?” எனக் கேள்வி எழுப்பி அபுதாஹீரை நிராகரிக்கும் காட்சியும், பர்வீன் பாத்திரத்தின் தரத்தை உயர்த்துகிறது. இஸ்லாத்தில் திருமணத்திற்கு மணப்பெண்ணிடம் சம்மதம் பெற வேண்டும் என்பதை அழுத்தமாகக் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.

பின்னணியில் மார்ட்டின் லூதர் கிங்கின், ‘‘நாம் நினைவில் வைத்திருப்பது எதிரிகளின் வார்த்தைகளை அல்ல; நண்பர்களின் மௌனத்தையே” என்ற மேற்கோளைக் காட்டுவதெல்லாம், படம் பார்ப்பவர்களின் சிந்தனையை தட்டி எழுப்பும் காட்சிகள். சுன்னத், மெளலது, ஜனாஷா குளியல், தொழுகை, அடக்கு முறை, திருமண முறை என மாற்றுச் சமூகம் அறியாத இஸ்லாமிய நிகழ்வுகள் இடைச் சொருகலாக அல்லாமல் கதை ஓட்டத்திலே நிகழ்கின்றன.

இறுதியில் நிலோஃபரை அபுதாஹீர் சந்திக்கும் காட்சியும், ‘‘நான் பேசப் பதினைந்து வருடமாயிடுச்சி”, ‘‘நான்கு சுவர் மட்டும் குடும்பமல்ல” போன்ற சின்னச் சின்ன வசனங்களும் படத்தின் ஹைலைட். நிலோஃபர், தன் இரு பதின்ம வயது பிள்ளைகளோடு, அபுதாஹீரிடம் ‘‘நான் குலா வாங்கிட்டேன்” எனச் சொல்வது, கணவன் மட்டும்தான் தலாக் சொல்ல முடியுமா? இல்லை. மனைவியும் கணவனை பிரிந்து செல்ல இஸ்லாத்தில் உரிமை உண்டு என்பது, இயக்குநர் நமக்குச் சொல்லாமல் சொல்லும் தீர்வின் திசை. படம் முடிந்த பின்னரும் கனத்த இதயத்தோடு இருக்கையை விட்டு எழ முடியாமல் தவிப்பதை உணர முடிகிறது.

பின்னணி இசையும், படம் முழுக்க வரும் நாகூர் ஹனீபாவின் பாடல்களும் நமக்குக் கொடுக்கும் அனுபவம் அலாதியானது. நடிகர்கள் அப்படியே கதாபாத்திரங்களாகவே மாறி இருக்கிறார்கள். மூன்று காலக்கட்டங்களில் நகரும் கதையென்பதால், மாறும் மனிதர்களின் முகத்தைக் காட்சிப்படுத்த மிகுந்த மெனக்கெடலைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் மீரா கதிரவன். அது கஸ்தூரி ராஜாவோடு மட்டுமல்லாமல் நடித்த அனைவரின் முகத்திலும் தெரிகிறது. அதைவிட அதிக மெனக்கெடல் ஊரின் முகத்தைக் காட்டுவதிலும் தெரிகின்றது.

வாழ்வாதாரத்திற்காக வெளிநாடு செல்லும் குடும்பங்களில் ஏற்படும் துயரங்களை அழகிய காவியமாக பதிவு செய்து, இஸ்லாமியக் குடும்பத்திற்குள் ஒருவராக நம்மை ஒன்றச் செய்துவிடுகிறது ஹபீபி திரைப்படம். கேரள ஸ்டோரி, காஷ்மீர் பைல்ஸ் என முஸ்லிம்களை பயங்கரவாதிகளாகச் சித்தரித்து உருவாகும் படங்களுக்கு மத்தியில் ஹபீபி சிறந்த படைப்பு.

தொகுப்பு: தோழி டீம்