நன்றி குங்குமம் தோழி
85 வயது கைத்தறி நெசவாளரான தன் தாத்தாவின் உழைப்பை உலகமறிய செய்ததன் மூலம், நலிந்து வரும் நெசவாளர் சமூகத்திற்கு புதிய நம்பிக்கையை அளித்து வருகிறார் இளைஞர் பிரவீன். சேலம் மாவட்டம், காக்காபாளையம் அருகே அமைந்துள்ள கனககிரி கிராமத்தை சேர்ந்த 85 வயது சின்னசாமி, கைத்தறி தொழிலையே சுவாசித்து வருபவர். இவரது பேரன் பிரவீன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் தாத்தா தறி நெய்யும் வீடியோ ஒன்றை பதிவேற்றவே, யதார்த்தமாக பகிரப்பட்ட அந்த வீடியோ, சுமார் 20 லட்சம் பார்வைகளை கடந்து இணையத்தில் வைரலானதோடு, தாத்தாவின் புன்னகையும் அந்த வயதிலும் உழைப்பின் மீது அவர் காட்டும் ஆர்வமும் பலரையும் கவர்ந்துள்ளது.
“நான் அம்மா, அப்பாவுடன் சேலத்தில் வசித்து வருகிறேன். விடுமுறை தினங்களில் தாத்தாவை பார்க்க காக்காபாளையம் செல்வேன். அங்கு நான் போகும் போது எல்லாம் தாத்தா தறியில் வேலை பார்த்துக் கொண்டிருப்பார். ஒருமுறை அவர் தறியில் துணி நெய்து கொண்டிருக்கும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டேன். அது வைரலாக, நான் பதிவிடும் வீடியோக்களில் தாத்தாவை பார்க்க பலரும் ஆர்வமாக இருந்தனர். தாத்தா கைத்தறியால் நெய்த துணி எங்களுக்கு வேண்டுமென்றும் கேட்கத் தொடங்கினர். அவர் நெய்த துணியை மீட்டர் அளவுகளில் பலருக்கும் கொடுத்தோம். ஆனால், கேட்டிருந்த எல்லோருக்கும் தரமுடியவில்லை. வயது மூப்பின் காரணமாக அவரால் ஒரு நாளைக்கு குறிப்பிட்ட அளவில் மட்டுமே துணி நெய்ய முடியும். தாத்தாவிடமிருந்து கைத்தறியால் நெய்யப்பட்ட சேலை கிடைக்குமா என்று ஃபாலோவர்ஸ்கள் கேட்கத் தொடங்கினர்.
தனி ஆளாக ஆர்டர்கள் எடுத்து சேலை நெய்து கொடுப்பது தாத்தாவினால் மட்டுமே முடியாது என்பதால், எனக்கு ஒரு யோசனை தோன்றியது. தாத்தாவை போல நெசவை மட்டுமே நம்பி பிழைக்கும் பல நெசவாளர்கள் எங்களை சுற்றிலும் உள்ளனர். பெரும்பாலான நெசவாளர்கள் கூலித் தொழிலாளிகளாக உள்ளனர். நேரடியாக மக்களிடம் விற்க முடியாத காரணத்தினால் அவர்களின் வருமானமும் குறைவாக கிடைக்கிறது. தாத்தாவை போன்ற கைத்தறி நெசவாளர்களை ஆதரிக்கும் வகையில் அவர்கள் நெய்த சேலையை வாங்கி ஆர்டர் செய்தவர்களுக்கு கொடுத்தேன். கைத்தறி சேலையின் தரம் மக்களுக்கு பிடித்ததால் ஆர்டர்கள் அதிகரித்தது. நெசவாளர்களுக்கு உரிய வருமானம் கிடைத்தது. தரகர்களிடம் துணிகளை நல்ல விலைக்கு விற்க முடியாமல் தவிக்கும் நெசவாளர்களிடமிருந்து துணிகளை நேரடியாகப் பெற்று, அவற்றை இணையதளம் மூலம் நியாயமான விலையில் மக்களுக்குக் கொண்டு சேர்க்க ஆரம்பித்தேன். தொடக்கத்தில் வாட்ஸ்ஆப் மூலம் ஆர்டர்கள் எடுத்தோம். பின்னர் இன்ஸ்டாவின் மூலம் எங்களுக்கு இணையதளம் உருவாக்கி கொடுக்க ஒருவர் முன்வந்தார்.
‘தாத்தா’ஸ் க்ளோத்திங்’ என்ற பெயரிலேயே ப்ராண்ட் தொடங்கினோம். முறையாக ஜிஎஸ்டி பதிவு செய்தோம். வருகின்ற ஆர்டர்களை எங்க கிராமத்தை சுற்றியுள்ள நெசவாளர்களுக்கு பகிர்ந்து கொடுக்கிறோம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறோம்” என்கிறார் பிரவீன்.85 வயதிலும் ஓய்வை விரும்பாமல் தறி ஓட்டிக்கொண்டிருக்கும் சின்னசாமி தாத்தாவிடம் பேசியபோது, “எனக்கு 20 வயதாக இருக்கும் போது நெசவு வேலை செய்ய தொடங்கினேன். 65 வருஷங்களா நான் தறி ஓட்டிட்டு இருக்கேன். ஆரம்ப காலத்துல என்கிட்ட சொந்தமா தறி இல்லாமல், கூலிக்கு வேலையாக செஞ்சுட்டு இருந்தேன். ஒரு நாளைக்கு 5 ரூபாய் கூலி. அதன் பிறகு கொஞ்சம் அதிகமானது. எனக்கு கல்வியறிவு இல்லை என்பதால், என் 3 மகன்களையும் படிக்க வைத்தேன்.
என் மூத்த மகன் தேவராஜ், தனியாரில் வேளாண் விற்பனை நிர்வாகியா இருக்கார். மற்ற இரண்டு மகன்கள் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார்கள். மூத்தவரின் மகன்தான் பிரவீன், இப்போதுதான் கல்லூரி படிப்பை முடித்தார். நான் கூலிக்கு தறி நெய்ய போகும்போது மாதம் 200 ரூபாய் சம்பாதிப்பேன். அந்தக் காலத்துக்கு அந்தப் பணம் எனக்கு கட்டுப்படியாச்சு. அதன் பிறகு என் மகன் இரண்டு தறி வாங்கி கொடுத்தார். கடந்த 26 வருஷமா வீட்டுலயே தறி வச்சு துணி நெய்துட்டு இருக்கேன். நூல் வாங்கிட்டு வந்து கூலிக்கு சேலை நெய்து தருவேன். 6 மீட்டர் சேலை என்றால் 60 ரூபாய் கிடைக்கும். மொத்தமா இருபது சேலை நெய்து கொடுத்தால் 1000 முதல் 1500 ரூபாய் கிடைக்கும். நெசவுத் தொழிலை தவிர்த்து வேறு எந்த வேலையும் எனக்கு பழக்கமில்லை, சொந்தமாக தொழில் செய்யவும் வசதியில்லை.
கைத்தறியால் நெய்யும் ஆடைகள் ரொம்ப தரமானதாக இருக்கும். இப்போதெல்லாம் நல்ல பட்டு மட்டும்தான் கைத்தறியால் நெய்யப்படுகிறது. பெரும்பாலும் விசைத்தறிதான் பயன்படுத்துகிறார்கள். என் பேரன் ஒருநாள் என்னை வீடியோ எடுத்து போட்டதும் மக்களிடம் இருந்து ஆதரவு கிடைச்சுது. என்னை மாதிரி நிறைய நெசவாளர்கள் இருக்கிறார்கள். பேரனின் இந்த முயற்சியால் அவர்களுக்கும் பலன் கிடைக்கிறது. என்னால் பணம் கொடுத்து உதவ முடியாது. ஆனால், இந்த மாதிரி வாய்ப்பு கிடைக்கும் போது மற்றவர்களோட முன்னேற்றத்துக்கு நிச்சயம் உதவலாம். வயதாகிவிட்டதால என்னால் சும்மாவும் படுத்திருக்க முடியாது. கை, கால்களை அசைத்து ஏதாவது வேலை பார்த்தால்தான் உடம்பும் மனசும் தெம்பா இருக்கும். அதனால் என்னால் முடிந்தளவு துணியை நெய்கிறேன். என் வீடியோவை பார்த்து ஆதரவு கொடுத்த மக்கள் எல்லோருக்கும் நன்றிதான் சொல்லணும். தாத்தா’ஸ் க்ளோத்திங் மூலமா ஆடைகளை வாங்கி நெசவாளர்களுக்கு ஆதரவு கொடுங்கள். என் பேரன் பாரம்பரியமான நெசவுத் தொழிலுக்கு ஆதரவாக நெசவாளர்களுக்கு அவனால் முடிந்த உதவியை செய்வது சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கு” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார்.
நெசவுத் தொழில் பெரும் சவால்- காஞ்சனா, நெசவாளர்
‘‘நெசவுதான் எங்களின் பாரம்பரியமான தொழில். என் அப்பாவும், மாமனாரும் நெசவாளர்கள்தான். தலைமுறைகளாக நெசவு செய்தாலும், நேரடி விற்பனை செய்ய முடியாத காரணத்தினால் உழைப்பிற்கு ஏற்ற வருமானம் ஈட்ட முடியாது. பாரம்பரிய நெசவுத் தொழில் பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ளது. பிரவீன் போன்ற இளைஞர்கள் ஆன்லைன் தளம் மற்றும் வீடியோக்கள் மூலம் நெசவாளர்களுக்கு பெரும் ஆதரவை வழங்கி வருவதால், இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக புடவைகளை வாடிக்கையாளர்களுக்கு நியாயமான விலையில் கொண்டு சேர்க்க உதவுகிறது. ஆன்லைன் ஆர்டர்கள் மூலம் வெளி ஊர்களுக்கு விற்பனை செய்யும் போது கூடுதலாக ஒரு புடவைக்கு 100 ரூபாய் லாபம் கிடைப்பது கூட எங்களுக்கு மிகப்பெரிய உதவிதான். சின்னசாமி தாத்தா 85 வயதிலும் உழைத்து வருகிறார். பிரவீனின் முயற்சி தாத்தாவிற்கு மட்டுமின்றி என்னை போன்ற நெசவாளர்களுக்கு வேலை வாய்ப்பையும் உதவியும் பெற்றுத் தருகிறது. ஆர்டர்களுக்கு ஏற்றாற் போல சேலையை நெய்து வைப்போம். பிரவீன் நேரடியாக வந்து எங்களிடமிருந்து வாங்கி அவரே அனுப்பி வைப்பார்.’’
தொகுப்பு: ரம்யா ரங்கநாதன்


