நன்றி குங்குமம் தோழி
‘தங்கம் விற்கிற விலைக்கு குண்டு மணி தங்கம் கூட வாங்க முடியாது’ என்பதுதான் இன்று பல பெண்களின் புலம்பலாக உள்ளது. அந்தளவிற்கு ஆபரண தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. ஒரு சவரன் லட்சத்தையும் தாண்டிவிட்டது. தங்கம், இந்திய நாட்டின் பெண்களை பொறுத்தவரை அழகு மற்றும் கௌரவத்தை விட அதை மிகப்பெரிய சேமிப்பாகத்தான் பார்க்கிறார்கள். வீட்டிலிருக்கும் போது தங்க நகைகளை பற்றி யோசிக்காதவர்கள், கல்யாணம் மற்றும் குடும்ப நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போது தங்க நகைகள் இல்லாதது குறித்து வருத்தப்பட துவங்கிவிடுகின்றனர். சிலர் விழாக்களுக்கு செல்ல தவிர்க்கும் சூழலும் உருவாகிறது. மேலும், தற்போது சமூகத்தில் வலம் வரும் வழிப்பறி சம்பவங்களும் கொலைகளும் பாதுகாப்பின்மையும் தங்கம் அணியவும் வாங்கவும் எல்லோரையும் பயம் கொள்ள வைக்கிறது. இதற்கு தீர்வாக வந்துவிட்டது ஐம்பொன் நகைகள். ‘‘ஏழைகளின் தங்கம் என்று எல்லோராலும் அழைக்கப்படும் ஐம்பொன் நகைகளுக்கு சந்தையில் மவுசு கூடி வருகிறது. தங்கம் போன்று நிறத்திலும் வடிவமைப்பிலும் ஜொலிப்பதால் பெண்கள் ஐம்பொன் நகைகளை வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர்’’ என்கிறார் திருநெல்வேலி கோபால சமுத்திரத்தில் ஐம்பொன் நகைகள் உற்பத்தி தொழிற்சாலை நடத்தி வரும் முத்துக்கிருஷ்ணன். இவர் ‘அனுஸ் காஸ்டிங் ஐம்பொன் ஜூவல்லரி’ என்ற பெயரில் ஐம்பொன் நகைகளை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறார்.
‘‘எனக்கு சொந்த ஊர் திருநெல்வேலி. நான் சென்னை தரமணியில் ஜூவல்லரி டெக்னாலஜியில் டிப்ளமோ முடிச்சிருக்கேன். நாங்க பரம்பரையாக தங்க நகைகளை வடிவமைப்பவர்கள். என் தாத்தா, அப்பா எல்லோரும் அந்த வேலைதான் செய்து வந்தார்கள். ஆனால், தொழிலில் பெரிய அளவில் லாபம் கிடைக்காததால் அப்பா சில காலத்திற்குப் பிறகு பிளாஸ்டிக் காஸ்டிங் தொழிலுக்கு மாறினார். அவருக்கு
உதவியாக என் தம்பியும் அந்த வேலையில் ஈடுபட ஆரம்பித்தான். ஆனால், என் சித்தப்பா, பெரியப்பா இன்றும் தங்க நகைதான் செய்றாங்க. அப்பாவால் தொடர முடியவில்லை என்பதால், எங்களின் பரம்பரை தொழிலை விடக்கூடாது என்ற எண்ணத்தில்தான் நான் தங்க நகை வடிவமைக்கும் துறையினை தேர்வு செய்து படிச்சேன்.
எனக்கு தங்க நகை செய்யும் அனைத்து தொழிற்நுட்பங்களும் தெரியும். படிப்பு முடித்த பிறகு ஓசூரில் தனியார் தங்க நகை உற்பத்தி தொழிற்சாலையில் ஒரு வருடம் காஸ்டிங் பிரிவில் வேலை பார்த்தேன். ஆனால், தங்கம் விலை உச்சம் பெற்றதால் எங்களுக்கும் பெரிதாக வேலை இல்லை. கையால் செய்யும் நகைகள் தரம் இருந்தாலும் தரத்திற்கும் வேலைக்கும் ஏற்ற கூலி கிடைக்கவில்லை. அதனால் பலரும் அந்தத் தொழிலை கைவிட துவங்கினார்கள். ஏழைகளுக்கு எட்டாக் கனியாக இன்று தங்கம் மாறி வருகிறது. அதற்கு ஈடாக ஐம்பொன் நகைகள் பிரபலமடைந்து வருகின்றன. அதனால் நானும் ஐம்பொன் நகை உற்பத்தியில் இறங்கினேன். அதனால் சொந்த ஊரான திருநெல்வேலிக்கே மாறினேன்’’ என்ற முத்துக்கிருஷ்ணன் 2015ல் தயாரிப்பு யூனிட்டை தொடங்கி இருக்கிறார்.
‘‘ஐம்பொன் அல்லது பஞ்சலோக நகைகள் என்பது தங்கம், வெள்ளி, செம்பு, துத்தம், ஈயம் ஆகிய ஐந்தும் சேர்ந்து செய்வது. தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்ந்துவிட்டதால், செம்பு உலோகத்தை மட்டுமே அதிகம் பயன்படுத்துகிறோம். செம்போடு மேலும் சில உலோகங்களை கலந்து நகைகளை உருவாக்குகிறோம். வெள்ளியின் விலை அதிகம் என்பதால் அதனை சிறிய அளவில்தான் சேர்க்கிறோம். செம்பு நேர்மறை எண்ணங்கள் மற்றும் உடல் வெப்பநிலையை சமமாக பார்த்துக் கொள்ளக்கூடிய தன்மை கொண்டது. நாங்க செய்வது காஸ்டிங் நகைகள். இது வடமாநிலங்களில்தான் பிரபலமாக இருந்தது. தற்போது தென்னிந்தியாவிலும் பெருகி வருகிறது. குறிப்பாக தமிழ்நாடு, ஆந்திராவில் இத்தொழில் மிகவும் பிரபலமாக உள்ளது. அதனால் இதற்கென பிரத்யேகமான ஐம்பொன் மெட்டலை நாங்களே தயாரிக்கிறோம்.
‘‘எங்களின் ஐம்பொன் நகைகளுக்கு மைக்ரான் கோல்டு பாலிசிங் செய்வதால், நகை மேல் மெல்லிய லேயராக தங்கம் படியும். அதனால் பார்க்க தங்க நகைகள் போலவே ஜொலிக்கும். தங்க நகைகள் தயாரிக்க பயன்படும் உயர்தொழிற்நுட்ப இயந்திரங்களையே இதற்கும் பயன்படுத்துகிறோம். அதைக் கொண்டு டிசைனிங், காஸ்டிங் அனைத்தும் செய்வதால், நகைகள் தரமாக இருக்கின்றன. ஆறு மாதங்கள் நிச்சயம் பளபளப்பாக இருக்கும். விழாக்களுக்கு மட்டும் பயன்படுத்தினால் ஒரு வருடத்திற்கும் மேலாக தங்கம் போன்று ஜொலிஜொலிப்பு மாறாமல் இருக்கும். பராமரிப்புக்கு ஏற்றார் போல் ஐம்பொன் நகைகள் அதன் தன்மை கெடாமல் இருக்கும். இந்த நகைகளை தினமும் பயன்படுத்தலாம். இந்த நகைகளுக்கு தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் மிகுந்த வரவேற்பு உள்ளது. நேரடியாக தொழிற்சாலைகளிலிருந்தே சென்னை, கோயம்புத்தூர், சேலம் என பல ஊர்களில் உள்ள மொத்த விற்பனையாளருக்கு அனுப்பிவிடுவோம். அவர்கள் மூலமாகத்தான் தமிழ்நாடு மட்டுமில்லாமல் மற்ற மாநிலங்களுக்கும் விற்கப்படுகிறது. நாங்கள் ரீடெயில் வியாபாரம் செய்வதில்லை. அனைத்து நகை டிசைன்களும் நாங்க தயாரித்தாலும் காதணிகளுக்கு தான் அதிகம் முக்கியத்துவம் தருகிறோம். குறிப்பாக கல் பதித்த காதணிகள், ஜிமிக்கிகளைதான் வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்புகிறார்கள்’’ என்றார்.
‘‘எங்கள் பகுதியை சுற்றியுள்ள கிராமப் பெண்களை தொழில் அடிப்படையில் ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் நான் இங்கு தொழிற்சாலை அமைத்தேன். என்னிடம் வேலை பார்க்கும் பெண்கள் அனைவருக்கும் தனிப்பட்ட பயிற்சி அளித்து அவர்களை வேலையில் நியமித்திருக்கிறோம். என்னுடைய தொழிற்சாலையில் 80% பெண்கள்தான் வேலை பார்க்கிறார்கள். சொல்லப்போனால் இந்த நிறுவனமே என் மனைவி சுப்புலட்சுமி பெயரில்தான் இயங்குகிறது. இங்க வேலை பார்க்கும் பெண்கள் பாதுகாப்பாக வந்து போக போக்குவரத்து வசதியும் அமைத்து தருகிறோம். தயாரிப்பு மார்க்கெட்டிங், விற்பனை மற்றும் சோசியல் மீடியா கண்காணிப்பு, வீடியோக்கள் பதிவேற்றுதல் என அனைத்து வேலைகளும் பெண்கள் தான் பார்த்துக் கொள்கிறார்கள். சில கடினமான வேலைகளுக்கு மட்டுமே ஆண்கள் இருக்கிறார்கள். விற்பனையிலும் பெண்களை இயக்கி வரும் ரீசெல்லர் குழுவிற்குதான் அதிகம் வாய்ப்பு வழங்கி வருகிறோம்.
பதினைந்து வருடங்களாக மொத்த விற்பனையாளர்களுடன் வியாபாரம் செய்தோம். அதில் அதிகம் லாபம் இல்லை. அதனால் தற்போது பெண்கள் ரீசெல்லர்கள் மூலமாகவே விற்பனை செய்கிறோம். நாங்கள் வழங்கும் வாய்ப்பை பயன்படுத்தி உற்பத்தி மற்றும் விற்பனையில் பெண்களும் உயர்ந்து எங்களையும் வியாபார ரீதியாக உயர்த்தியுள்ளனர். சந்தையில் சிலர் குறைந்த விலையில் கொடுக்கிறார்கள். அவர்களின் பாலீஷ் தரமாக இருக்காது. அதனால் சரும ஒவ்வாமை ஏற்பட வாய்ப்புள்ளது. பாலீஷ் செய்யப்பட்ட அனைத்து நகைகளும் பார்க்கும் போது தங்கம் போல பளபளப்பாகத்தான் தெரியும். ஆனால், தரம் குறைவான நகைகள் அதிகம் மஞ்சள் தன்மையுடன் இருக்கும். வட மாநிலங்களில் இத்தகைய லோ குவாலிட்டி பாலீஷிங் பயன்படுத்தி எங்கள் டிசைன்களையே இமிடேட் செய்து சந்தையில் விற்கின்றனர். சிலர் எங்களிடமே மூலப்பொருட்களை வாங்கி மூன்று விதமான பாலீஷிங் செய்து விற்கிறார்கள்.
நாங்க அப்படி நகைகளை வடிவமைப்பதில்லை. எங்க தொழிற்சாலையில் 12 படிநிலை வேலையில் நகைகள் தயாரிக்கப்படுகின்றன. முதலில் 3டியில் டிசைனிங் செய்கிறோம். பிறகு மெழுகில் அந்த டிசைனை அமைத்து மோல்டிங் மற்றும் காஸ்டிங் செய்து, அதில் தேவையான கற்கள் பதித்து வடிவமைப்போம். பிறகு பாலீஷ் செய்வோம். அதனைத் தொடர்ந்து நகைகளை சிதம்பரத்திற்கு கோல்டு பிளேட்டிங் செய்ய அனுப்புவோம். பிறகு தரம் பார்த்து வாடிக்கையாளர்களை சேரும். சில வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பும் நகைகளை செய்யச் சொல்லி கேட்பார்கள். அவர்களுக்காக தனிப்பட்ட முறையில் கஸ்டமைஸ் செய்து தருகிறோம். இதற்காக கோவையில் எங்களுக்கு என்று டிசைனர்கள் உள்ளனர். பெரும்பாலான தங்க நகை டிசைன்களை ஐம்பொன்னில் கொண்டு வருகிறோம். சரியான கூலியும் விலையும் கிடைத்தால் அச்சு அசல் தங்கத்தைப் போன்றே ஐம்பொன் நகைகளையும் வடிவமைக்க முடியும். தங்கத்திற்கு மாற்றாக ஐம்பொன் நகைகளை எல்லோரும் பயன்படுத்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் உழைக்கிறோம்’’ என்கிறார் முத்துக்கிருஷ்ணன்.
தொகுப்பு: ரம்யா ரங்கநாதன்
