நன்றி குங்குமம் தோழி
தனி வீடாகக் கட்டுவதானாலும், அடுக்குமாடிக் கட்டடமாக இருந்தாலும் சரி, முதலில் நாம் அங்கு பார்ப்பது வெறும் மண் தரைதான். அடித்தளம் போட்டு கட்டட வேலைகள் ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக கட்டிடம் எழ எழ நம் வீடு எப்படி இருக்கும் என்று ஒரு பதட்டம் இருக்கும். வீடு முக்கால் பாகம் முடியும் போது, வீட்டிலுள்ள ஒவ்வொரு பகுதியிலும் நாம் எதிர்பார்த்த அளவில் அதன் சதுரடி இல்லையே என்று தோன்றும். ஆனால், வீடு முழுமையாக முடிக்கப்பட்டு தரைக்கு டைல்ஸ், மார்பில் என நம்முடைய வசதிக்கேற்ப அமைத்த பிறகுதான் அதன் முழுமையான அழகினை நம்மால் ரசிக்க முடியும். டைல்ஸ் தரையில் பதித்த பிறகுதான் மணலுடன் காணப்பட்ட தரை பெரிய அளவில் நம் கண்களுக்குத் தோன்றும்.
‘வீடு’ என்னும் நம் இல்லத்தை முழுமையடையச் செய்வது நான்கு சுவர்களும் தரையும்தான். தரையை வீட்டின் ஐந்தாவது சுவர் என்று சொல்வதுண்டு. முன்பு தங்களுடையது சிமென்ட் தரை வீடு என்பதை பெருமையாக சொல்லிக் கொள்வார்கள். அதன் பிறகு ரெடாக்சினை (சிவப்பு நிறம்) விரும்பினார்கள். இப்பொழுது வீடு முழுக்க ‘டைல்ஸ்’ போடுகிறார்கள். அதிலும் இன்று பல டிசைன்கள் வந்துள்ளன. குறிப்பாக ஒவ்ெவாரு அறைகளுக்கு ஏற்ப டைல்ஸ்களும் மார்க்கெட்டில் உள்ளது. அதனை நம் விருப்பப்படி போட்டு அழகுப் பார்க்கலாம். உதாரணத்திற்கு பாத்ரூம்களுக்கு வழுக்காத டைல்ஸ் உள்ளன. இன்று ஏற்கனவே கட்டி வீடாக இருந்தாலும், அதை புதிதாகவும் ஆடம்பரமாகவும் அமைக்க முடியும்.
பொதுவாக, அலங்காரப் பொருட்களை நாம் வீட்டை அலங்கரிக்க வாங்குவோம். வீட்டின் தரை நாம் எப்பொழுதும் நடமாடும் இடம் என்பதால் அதற்கு எந்தவித சேதாரமும் ஏற்படாத வகையில் வாழ்நாளில் வீடு உள்ளவரை தரை அப்படியே இருக்க வேண்டும். அதனால் தரையில் பதிக்கப்படும் ‘டைல்ஸ்’ நல்ல தரம் வாய்ந்ததாக இருக்க வேண்டும். புதிய டிசைன்கள் இருந்தாலும் தரம், உழைப்பு, நிறம், அழகு போன்ற அனைத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். டைல்ஸ் மட்டுமில்லாமல் மார்பிள், கிரானைட் போன்றவற்றிலும் பல டிசைன்கள் உள்ளன. அதனை நம்முடைய வசதிக்கேற்ப அமைத்துக் கொள்ளலாம்.
வழுக்கும் தன்மை கொண்ட கற்களை அனைத்து இடங்களுக்கும் போட முடியாது. குறிப்பாக, சமையலறையில். கால்களுக்கு இதமாக இருக்க வேண்டும். கனமான பர்னிச்சர்கள் போடும் பொழுது, தரையின் மீது கீறல்கள் விழாதவாறு உறுதியாக இருக்க வேண்டும். கண்களுக்கு குளிர்ச்சி தரும் பளிச் நிறங்களை தேர்வு செய்யலாம். பராமரிப்பதும் எளிது. கண்ணாடி போன்ற டைல்ஸினை வீட்டில் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் இருந்தால் கவனத்தில் கொள்ள வேண்டும்.
‘கார்ப்பெட்’ போட்டுத்தான் அலங்கரிப்பவர்கள், நடுத்தர விலையில் ‘டைல்ஸ்’ போடலாம். சில ‘டைல்ஸ்’கள் பதித்து முடித்தவுடன், குறிப்பிட்ட இடமே ஒரு ‘டிசைன்’ வடிவில் காணப்படும். அது அந்த அறைக்கு புதிய வடிவத்தை தரும். ‘டைல்ஸ்’னை தரையில் மட்டுமல்லாது சுவரையும் அலங்கரிக்க பயன்படுத்தலாம். இதனால் வீடே கலையம்சம் நிறைந்த இடமாகவும் மாறிவிடும். கண்ணப் பறிக்கும் 3D டைல்ஸ் இன்றைய டிரெண்ட். 3D முப்பரிமாணத்தில் இருப்பதால் இதன் அடர்த்தி மாறுபடும். நல்ல டிசைன், பாதுகாப்பு, உறுதியாகவும் இருப்பதோடு, நம் பட்ஜெட்டுக்குள் அடங்கும். இவற்றிற்கு ஏற்ற ஓவியங்கள் மற்றும் தரைக்கு ஏற்றபடியான வண்ணங்களில் கிடைக்கின்றன. ஆனால், இந்த வண்ணங்கள் ஒருமித்த ஓவிய வடிவில் காட்சி தரும். உதாரணத்திற்கு தரையில் தண்ணீர் ஓடுவது, மீன் துள்ளிக் குதிப்பது... தூரத்தில் நின்று பார்க்கும் ேபாது நிஜமாகவே நீர் ஓடுவது போல இருக்கும். ‘டிராயிங் ரூம்’ மற்றும் ‘டைனிங்’ ஹாலுக்கு இவற்றைப் பயன்படுத்தலாம். சமையல் அறை மற்றும் பாத்ரூமிற்கு வழுக்காத தரை அமைப்புதான் நல்லது. எந்த மாதிரி டைல்ஸினை தேர்வு செய்தாலும், அறையில் அமைக்கும் போது முழு திருப்தியைத் தர வேண்டும். வருபவர் மனம் கவரும் வண்ணம் இருந்தாலே அந்த இடம் சிறப்பாக உள்ளது என்று நாம் கணித்து விடலாம்.
குளிர் பிரதேசங்களில் வீடுகளே மரத்தால் கட்டப்பட்டவையாகும். ஈரப்பசை இல்லாமல் பாதுகாக்கும். நன்கு ‘பாலீஷ்’ செய்யப்பட்டு, அருமையான ‘பினிஷிங்’ உடன் காணப்படும். நம் இருப்பிடங்களில் அதிகமாக போடுவதில்லை. ஒரு சிலர் படுக்கையறையில் மட்டும் மரத் தரையினை விரும்புகிறார்கள். கடற்கரை ஒட்டிய வீடுகள் மற்றும் ‘ரிசார்ட்’களிலும் பெரும்பாலும் மரத்தரையை பார்க்கலாம். தரை டிசைன் அழகாக இருந்தாலும் அதை மேலும் உயர்த்திக் காட்டுவதில் கார்ப்பெட்டுகள் முக்கிய இடம் பிடிக்கின்றன. எந்த இடத்தில் போட விரும்புகிறோமோ, அந்த இடம் நடக்கும் பாதையாக இல்லாமல் வருபவர் மட்டும் அமர்ந்து உரையாடக்கூடிய இடமாக உறுதி செய்யலாம். சில இடங்களில் வரவேற்பறை தனியாக இருக்கும். அங்கு ‘பட்ஜெட்’டில் தரை விரிப்புகள் போட்டால் போதும். வீடுகளில் நுழைந்தவுடன் வரவேற்பறைதான் காணப்படும். அங்கு தரமான தரைவிரிப்புகள் போட்டால் பார்க்க அழகாக இருக்கும். அந்த இடத்தில் தண்ணீர் புழங்காமலும் இருத்தல் நல்லது. சிறுபிள்ளைகள் நடமாடும் இடங்களில் காபி, ஜூஸ், உணவுப் பொருட்களை கொட்டிவிடுவார்கள். இதனை கருத்தில் கொண்டு ‘கார்ப்பெட்’ பயன்படுத்தலாம். காரணம், இதன் பராமரிப்பும் அவசியம் என்பதால் பலர் இதனை விரும்பமாட்டார்கள்.
இதில் பல டிசைன்கள் உள்ளன. இழைகளின் உறுதியை பார்த்து வாங்க வேண்டும். ‘கம்பளி’யில் நெய்யப்பட்ட கார்ப்பெட்டுகள் உறுதியுடன் இருக்கும். சிலவற்றில் நைலான் இழைகள் சேர்க்கப்பட்டிருக்கும். பொதுவாக பிரவுன் நிறம் எல்லா இடங்களுக்கும் ஒத்துப்போகும். அழுக்கடைந்தாலும் தெரியாது. மேலும், இந்த நிறம் அனைத்தையும் ‘பளிச்’சென எடுத்துக் காட்டும். சிறிய சைஸில் ‘பேஜ்’ நிறத்திலும் வருகிறது. இதுவும் அறையின் அமைப்பினை ரிச்சாக எடுத்துக்காட்டும். கார்ப்பெட்டுகள் செவ்வக, சதுர, ஓவல் வடிவங்களில் கிடைக்கின்றன. நம் இடத்திற்கு எது நல்ல அமைப்பைத் தருமோ, அத்தகைய வடிவங்களை நிறம் பார்த்து தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ‘கார்ப்பெட்’ போடும் முறையிலும் ஒரு அழகுண்டு. முழுவதும் விரித்தபின் அதன் மீது பர்னிச்சர்கள் அழுத்தாமல் இருப்பது நல்லது. அதன் ஓரங்களில் குஞ்சங்கள் அழகாக நெய்யப்பட்டிருக்கும். அந்த நெய்யப்பட்ட இழைகளை அப்படியே பிரித்துவிட்டால்தான் முழு அழகையும் ரசிக்க முடியும். பெரும்பாலும் அறையின் நடுவே அமைக்கப்படுவதுதான் சிறப்பு. தொங்கவிடக்கூடிய கார்ப்பெட்டுகளை சுவரில் மாட்டலாம். கார்ப்பெட் அமைப்பில் குட்டி மிதியடிகள் கூட கிடைக்கின்றன. சிறிய அறைகளுக்கு ஓவல் அல்லது ரவுண்டு அமைப்புகள் போடலாம். சிலருக்கு பட்ஜெட்டில் அலங்கரிக்க விரும்புவார்கள். தரையோடு ஒட்டக்கூடிய கார்ப்பெட்களை பயன்படுத்தலாம். மேலும், இன்று கார்ப்பெட்கள் மட்டுமில்லாமல் பல டிசைன்கள் மற்றும் சிறப்பு அம்சங்கள் அதாவது, ‘வாட்டர் ப்ரூப்’ வகைகளும் உள்ளன. வீட்டின் வசதிக்கு ஏற்றவாறு பயன்படுத்திக் கொள்ளலாம். எதுவாக இருந்தாலும் முறையான பராமரிப்பு இருந்தால் மட்டுமே எதுவும் நீடித்து உழைக்கும்.
மேலை நாடுகளில் மரத்தரை இருக்கும் இடங்களில் கூட தரையோடு கார்ப்பெட் ஒட்டியிருப்பார்கள். குளிருக்கு நடக்கும் பொழுது ‘மெத்மெத்’தென்று சுகமாக இருக்கும். அனைத்திற்கும் பராமரிப்பிற்கு ஏற்ற சாதனங்கள் இருப்பதால் அவர்களுக்கு பராமரிப்பும் சுலபமாகி விடும். இங்கு நம்முடைய தட்பவெப்பத்திற்கு ஏற்றாற்போல்தான் அமைத்துக் கொள்ள முடியும். ‘கிரானைட்’ போட நினைப்பவர்கள் செலவு செய்ய இயலாத நிலையில், கிரானைட் போன்ற பி.வி.சி. அல்லது லினோலியம் தரை அமைப்புகளை பயன்படுத்திக் கொள்ளலாம். இடத்தின் அளவை போட்டு மடித்து வைக்கும் ‘நான்-ஓவன்’ கார்ப்பெட்டுகளும் நிறைய வண்ணங்களில் கிடைக்கின்றன. விசேஷ நாட்கள், பார்ட்டி போன்ற சமயங்களில் மட்டும் அலங்கரித்துக் கொள்ளலாம்.
பழமை மற்றும் பாரம்பரியம் விரும்புபவர்களுக்கு சணலில் நெய்யப்பட்ட கார்ப்பெட்டுகள் உள்ளது. கையால் நெய்யப்பட்டவையும் உறுதியும், தரமும் வாய்ந்தவையாக எளிதாக வாங்கக்கூடிய விலையில் கிடைக்கின்றன. இது பராமரிப்பது மிகவும் சுலபம். வீட்டிற்கு மட்டுமில்லாமல் தோட்டத்திற்கு பயன்படுத்த ‘லான் கார்ப்பெட்’. இதனை பால்கனி, வராண்டா அல்லது செடிகள் வைத்து அழகுபடுத்தும் இடத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம். வீட்டு அலங்காரங்களை இயற்கையில் அமைப்பது போலவே அமைப்பதற்கேற்ற அனைத்தும் நமக்குத் தேவைக்கேற்றபடி கிடைக்கும் பொழுது இன்னும் ஏன் தயங்க வேண்டும்?
தொகுப்பு: சரஸ்வதி ஸ்ரீ நிவாசன்

