Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

விருதுநகரை மேம்படுத்தும் குப்பை வங்கி!

நன்றி குங்குமம் தோழி

நவீன உலகத்தில் நிலத்திற்கும் நிலத்தில் உள்ள எல்லா உயிர்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது பிளாஸ்டிக். அதே சமயத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு என்பது மனிதர்களின் அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. வெறும் பிளாஸ்டிக் மட்டும் சவாலாக இல்லை. உடைந்த கண்ணாடி துண்டுகள், உலோகங்கள் ஆகியவற்றை குப்பைகளிலிருந்து பிரித்தெடுத்து அதனை மறுசுழற்சிக்கு அனுப்புதல் என்பது கூடுதல் சவாலான ஒன்றாக உள்ளது.

வீடு முதல் கடைகள், மருத்துவமனை, அலுவலகங்கள், உணவகங்கள், தொழிற்சாலைகள் வரை பல்வேறு விதமான குப்பைக் கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன. ஆனால், அவற்றை முறையாக மேலாண்மை செய்வது என்பது அரசுக்கும் பல்வேறு கழிவு மேலாண்மை நிறுவனங்களுக்கும் பெரிய பிரச்னையாக உள்ளது. ‘‘கழிவுகள் மேலாண்மையில் முதன்மை பணி குப்பைகளை பிரித்தல். இந்த சவாலான பணியைதான் எங்கள் ‘குப்பை வங்கி’ பல ஆண்டுகளாக எளிமையாக செய்து வருகிறது’’ என்கிறார் பிரபல ‘இதயம் நல்லெண்ணெய்’ குழுமத்தைச் சேர்ந்த ராஜவள்ளி ராஜீவ். இவர் விருதுநகரில் குப்பைகளை தரம் பிரிக்கும் பணியை வித்தியாசமான முறையில் செய்து வருகிறார்.

இவர் ‘குப்பை வங்கி’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, வீடுகள் முதல் எல்லா இடங்களிலும் குப்பைகளை தன்னார்வலர்கள் மூலம் சேகரித்து, அவர்கள் மூலமே தரம் பிரித்து அதனை மறுசுழற்சிக்கு அனுப்பியும், மட்கும் குப்பைகள் மூலம் உரங்கள் தயாரித்தும் குப்பையில் ஒரு புரட்சியை அமைதியாக தன் மாமியார் மலர்விழி முத்துவுடன் செய்து வருகிறார். இதனால் விருதுநகர் குப்பை இல்லா பகுதியாக மாறி வருகிறது.

அவரிடம் ‘குப்பை வங்கி’ செயல்பாடு குறித்து கேட்ட போது…‘‘சிறுவயதில் நான் பயணங்களில் பார்த்து ரசித்த இயற்கை இப்போது இல்லை. காணாமல் போய்விட்டது. இது குறித்தான கவலை என்னை அவ்வப்போது தொற்றிக் கொள்ளும். இதனை மாற்ற ஏதோ ஒரு வகையில் இந்த சமுதாயத்திற்கு என் பங்களிப்பை தர முடிவெடுத்தேன். படிப்பை முடித்து திருமணம் ஆனவுடன் தொடங்கிய இந்த சேவை இன்று வரை வெற்றிகரமாக தொடர்கிறது’’ என்றவர், சமூக மாற்றத்திற்கான தன் முன்னெடுப்பைப் பற்றி விளக்குகிறார்.

‘2018ல் முதன்முதலில் 20 ஆயிரம் பள்ளி மாணவர்களை ஒன்று சேர்த்து ‘நமது ஊர்! நமது கடமை!’ என்ற பெயரில் வீட்டிலேயே குப்பை ரகம் பிரித்தல் குறித்த செயல்பாட்டையும் அதன் முக்கியத்துவத்தையும் விளக்கினோம். இந்நிகழ்வு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது. 2019லும் 8 மணி நேரத்தில் இரண்டு லட்சம் குப்பைகளை சேகரித்து தரம் பிரித்தது சாதனையானது. 2020ல் கொரோனா காலத்தில் ஆன்லைனில் 1500 பள்ளி மாணவர்கள் பங்கேற்ற ‘தூய்மை இந்தியா’ குறித்த கருத்தரங்கம் இந்திய அளவில் சாதனையானது.

இதையறிந்த மதுரையைச் சேர்ந்த பிளாஸ்டிக் மறுசுழற்சி வல்லுநரும் எங்கள் வழிகாட்டியுமான பேராசிரியர் வாசுதேவன், ‘சாதனைகள் மட்டும் நிரந்தர மாற்றத்தை உருவாக்காது. ஒவ்வொரு வீட்டிலிருந்தும் மாற்றம் துவங்க நீங்கள் உழைக்க வேண்டும்’ என்றார். அவரது ஆலோசனையில் 2019ல் உருவானதுதான் ‘குப்பை வங்கி’ என்றவர், அதன் செயல்பாடுகள் குறித்து விளக்கினார்.

‘‘குப்பை வங்கி’ என்பது குப்பைகளை பிரித்தல், மறுபயன்பாடு (Upcycling) மற்றும் மறுசுழற்சி (Recycling) ஆகியவற்றில் எந்த அளவிலான பிரச்னையையும் கையாளக்கூடிய ஒரு தனித்துவமான பணியை செய்யும் அமைப்பாகும். எங்களை பொறுத்தவரை ‘கலப்பு குப்பைகள்’ அடிமட்ட அளவிலான பிரச்னை.

இதனை அவ்வப்போது கண்டறிந்து உடனடியாகத் தீர்க்கப்படவில்லை என்றால் பெரிய சுற்றுச்சூழலை பாதிக்கக்கூடிய பிரச்னையாக உருவெடுக்கும். இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், அதிகாரமளித்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவையே எங்கள் நோக்கங்கள். எங்கள் வீட்டு வளாகத்தில் மூன்று குடும்பங்களிலிருந்து தொடங்கிய இப்பணி தெருக்கள், குடியிருப்பு பகுதிகள், பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், நிறுவனங்கள் என விரிவடைந்துள்ளது. வகுப்புகள் மூலம் மறுசுழற்சி மற்றும் மறுபயன்பாட்டிற்காகக் குப்பைகளை எவ்வாறு பிரித்து சேகரிப்பது என்பதை மக்களுக்குக் கற்றுக் கொடுக்கிறோம். எங்கள் வங்கியின் மூலம் இதுவரை 15,73,176 கிலோ குப்பைகளை சேகரித்துள்ளோம்’’ என்று கூறி ஆச்சரியப்படுத்துகிறார் ராஜவள்ளி.

‘‘ஆரம்பத்தில் வகுப்புகள் மற்றும் பயிலரங்குகளை மட்டுமே நடத்தி ஒரு கல்வி சார்ந்த அமைப்பாக நாங்கள் செயல்பட்டோம். அப்போது, ​​வெறும் விழிப்புணர்வுடன் மட்டும் நின்றுவிடாமல் அடுத்தகட்டத்திற்குச் செல்ல வேண்டும் என்று சில நிபுணர்கள் எங்களுக்கு அறிவுறுத்தினர். அதன்பிறகே நாங்கள் குப்பைகளை சேகரிக்கும் பணியை தொடங்கினோம். மாணவர்களுக்கும் மற்றவருக்கும் குப்பைகளை ரகம் பிரித்து கொடுக்க பைகளை வழங்குவோம். அவர்கள் கொண்டு வந்ததை ஓரிடத்தில் சேகரிப்போம்.

வெவ்வேறு நாட்களில், வெவ்வேறு இடங்களில் குப்பைகளை சேகரிக்க ஒரு நபர் அல்லது ஒரு குழுவினர் நியமிக்கப்படுகிறார்கள். சில சமயங்களில், குப்பைத் தொட்டிகள் நிரம்பியதும் மக்கள் நேரடியாக எங்களை தொடர்பு கொள்கிறார்கள். அப்போது நாங்கள் உடனடியாகச் சென்று அவற்றைச் சேகரிக்கிறோம். மட்கும் கழிவுகள் உரம் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. எல்லோரும் கொண்டு வருவதை எடைபோட்டு வாங்கி குறித்துக் கொள்வோம். ரகம் பிரித்துதான் தர வேண்டும். ரகம் பிரிக்காத குப்பைகளை வாங்கக் கூடாது என்பது எங்கள் கொள்கை.

விருதுநகரை ஆறு மண்டலங்களாக பிரித்து ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒவ்வொரு குறிப்பிட்ட நாளில் குப்பையை சேகரித்தோம். இந்த திட்டத்திற்கு மிகவும் வரவேற்பு கிடைத்தது. குப்பையை சேகரித்தவர்களுக்கு 300 கிலோ கிராம் கணக்கு சேர்ந்தவுடன் அதற்கான தொகை கணக்கிட்டு அவர்களுக்கு தந்திடுவோம்’’ என்றவரை தொடர்ந்தார் மலர்விழி முத்து.

‘‘எனக்குக் கழிவுகள் என்றால் மிகவும் பிடிக்கும்” என்ற குழுவின் மூலம் ‘மாணவர்கள், ஆசிரியர்கள், இல்லத்தரசிகள் மற்றும் பொதுமக்களுக்காகக் கழிவு மேலாண்மை குறித்த 130-க்கும் மேற்பட்ட விழிப்புணர்வு மற்றும் கல்விசார் அமர்வுகளை எங்கள் குழு நடத்தியுள்ளது. இந்த அமர்வுகள் மூலம், விருதுநகரில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கழிவுகளை உருவாகும் இடத்திலேயே தரம் பிரிப்பதை ஒரு வழக்கமாக மாற்றிக்கொண்டுள்ளன. இதோடு நிற்காமல் இயற்கை உரம் மற்றும் பஞ்சகவ்யம் தயாரித்தல், மாடித் தோட்டம் அமைத்தல் போன்ற செயல்பாடுகளையும் செய்து வருகிறோம். நாங்கள் ஒரு முறையான அமைப்பு அல்ல, ஏனெனில் இங்குள்ள உறுப்பினர்கள் அனைவருக்கும் முழுநேர வேலைகள் உள்ளன.

இதில் தொழில்முனைவோர்கள், பள்ளி முதல்வர்கள், தகவல் தொழில்நுட்பத்துறை வல்லுநர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளனர். அவர்கள் தங்கள் ஓய்வு நேரத்தை பயன்படுத்தி இச்செயல்பாடுகளில் ஈடுபடுகிறார்கள். இக்குழுவின் உறுப்பினர்கள் அனைவரும் 20 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள். காகிதக் கழிவுகளைக் கொண்டு குறிப்பேடுகளை (Notebooks) உருவாக்கி, அவற்றை பள்ளி மாணவர்களுக்கு இலவசமாகவும் வழங்குகிறோம். கழிவுகளை புதிய பொருட்களை உருவாக்கக்கூடிய ஒரு பொக்கிஷமாக இந்தக் குழு கருதுவதால் ‘கார்பேஜ் பேங்க்’ (Garbage Bank) என்ற பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டது” என்று விளக்கினார் இத்திட்டத்தின் தலைவரான மலர்விழி முத்து.

‘‘நாங்கள் 34 டிரையினிங் பேட்ச் என ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு இது குறித்து பயிற்சி வழங்கியுள்ளோம். மக்களின் மனநிலையை மாற்றுவதிலும் நாங்கள் வெற்றி கண்டுள்ளோம். நாங்கள் சொல்ல வரும் விஷயத்தை மக்கள் புரிந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். இது முக்கியமாக குழந்தைகள் மூலமாகவே சாத்தியமாகிறது. அவர்கள் விஷயங்களை விரைவாக புரிந்துகொண்டு செயல்படுவதால் எங்கள் பணி மிகவும் எளிதாகிறது. விழிப்புணர்வு வகுப்புகளுக்கு பிறகு அவர்களை உறுதிமொழி ஏற்கவும் வைக்கிறோம்.

‘இனி குப்பை கிடங்குகள் இல்லை’ என்பதே எங்கள் முழக்கம்; அதை நாங்கள் நிச்சயமாக அடைவோம். வேறு யாரேனும் இத்தகைய மையங்களை அமைக்க விரும்பினால், நாங்கள் அதற்கான உதவிகளையும் மாதிரி அமைப்புகளையும் (Prototypes) வழங்குகிறோம். விருதுநகர் ஒரு தொடக்கம் மட்டுமே. இது போன்ற பல குழுக்கள் ஊக்கம் பெற்று, தங்கள் நகரங்கள் அல்லது கிராமங்களில் இதே போன்ற செயல்பாடுகளை தொடங்கும் என்று நம்புகிறோம்’’ என்று நம்பிக்கையுடன் கூறும் ராஜவள்ளி சூழலியல் சார்ந்த பல விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொகுப்பு:கலைச்செல்வி