நன்றி குங்குமம் தோழி
ஆப்பிரிக்காவின் பல சமூகங்களில் சிகை அலங்காரம் என்பது அவர்களின் அடையாளம், கலாச்சாரம், குடும்பம், சமூக அந்தஸ்து, வயது, திருமண நிலை மற்றும் மரபு ஆகியவற்றை வெளிப்படுத்தும் ஒரு முக்கியமான மொழியாக இருந்திருக்கிறது. மேலும், ஆப்பிரிக்கப் பெண்களின் சிகை அலங்காரம் அழகியலை தாண்டி தலைமுடிக்குள் விதைகளையும் தானியங்களையும் மறைத்து எடுத்துச் சென்ற வரலாற்று தகவலை எடுத்துரைக்கிறது.
அடிமை வணிகம் நடைபெற்ற காலக்கட்டத்தில், யூரோப், பிரான்ஸ், போர்ச்சுக்கீசு, ஸ்பெயின் போன்ற வளர்ந்த நாடுகள் ஆப்பிரிக்க மக்களை அடிமைகளாக அழைத்துச் சென்றனர். அந்த சமயங்களில் பெண்கள் பீன்ஸ், அரிசி போன்ற தானியங்கள், விதைகள் போன்றவற்றை தங்களது தலைமுடியில் ஒளித்து வைத்து பின்னல் அலங்காரம் செய்துகொண்டதன் பின்னணியில் ஒரு முக்கிய நோக்கம் மறைந்துள்ளது. ஆப்பிரிக்கர்களை அடிமைகளாக நாடு கடத்தி செல்லும் அந்தப் பயணத்தின் போது, அவசர உணவுத் தேவைக்கு அவற்றை பயன்படுத்தியுள்ளனர். மட்டுமின்றி, அவற்றை நிலத்தில் விதைத்து உணவுப்பயிர்களை வளர்ப்பதற்காக அவை பாதுகாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
காலங்கள் கடந்தப்பின் ஆப்பிரிக்கர்கள் நாடுகடத்தப்பட்டவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு சிறிய நிலங்கள் வழங்கப்பட்டன. ஆனால், அதில் விவசாயம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. காலப்போக்கில் நாடு கடத்தப்படும் போது பெண்கள் தங்கள் தலைமுடியில் ஒளித்து வைத்து எடுத்து வரப்படும் அந்த உணவுப்பயிர்களை, அவர்களுக்கு வழங்கப்படும் நிலங்களில் சிறிது சிறிதாக விவசாயம் செய்ய தொடங்கி உணவை பெருக்கி தங்களது தலைமுறைகளை காப்பாற்றியுள்ளனர்.
கறுப்பின புரட்சி நடந்த காலக்கட்டத்தில் சிக்கலான சிகை அலங்காரம் ரகசிய தகவல்களை சமிக்ஞை செய்யும் ஒரு மறைமுகமான காட்சி மொழியாகச் செயல்பட்டன. அடிமைப்படுத்தப்பட்ட ஆப்பிரிக்கர்கள், மக்களைச் சுதந்திரத்தை நோக்கி வழிநடத்துவதற்காக தப்பிக்கும் வழிகளின் வரைபடங்களை சிக்கலான சோளப் பின்னல் (Cornrows) முறைகளை பயன்படுத்தினர். அவை பாதைகள், ஆறுகள் மற்றும் முக்கிய சந்திப்பு இடங்களைக் குறிப்பதாக இருந்தன. இன்று ஃபேஷனாக பார்க்கப்படும் Cornrows, Box braids, Twists, Locs, Beaded braids போன்ற ஆப்பிரிக்க ஹேர்ஸ்டைல்களில் ஆப்பிரிக்க வரலாறு மற்றும் கலாச்சாரம் வேரூன்றியுள்ளது. ஆப்பிரிக்க பெண்களின் சிகை அலங்காரம் உயிர் வாழ்வதற்கும், தகவல் தொடர்புக்கும், அரசியல் எதிர்ப்புக்கும் முக்கிய கருவிகளாக விளங்கின.
தொகுப்பு : ஆர்.ஆர்


