Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

தடகள வீராங்கனை to மயான வாகன ஓட்டுநர்!

நன்றி குங்குமம் தோழி

பெண்கள் ஆண்களுக்கு நிகராக அனைத்து துறைகளிலும் சாதித்துக் கொண்டிருக்கும் வேளையில் இன்றும் பல ஊர்களில் சில சமூகத்தினர் பெண்களை பாலின ரீதியாக ஒடுக்குகின்றனர். சில இடங்களுக்கு செல்லக்கூடாது என்றும் பாகுபடுத்தி வைத்துள்ளனர். இதற்கு ஆழமான மூட நம்பிக்கையும் பாலின வேறுபாடே காரணம். குடும்பச்சூழல் மற்றும் வாழ்வாதார தேடலில் உள்ள பெண்களுக்கு இக்கட்டுப்பாடுகள் பெரும் பாதிப்பை உண்டாக்குகின்றன. இதனுடன் சாதிய அடக்குமுறைகளும் சேர்ந்து கொள்கின்றன. குறிப்பிட்ட சமூகத்தினரை தவிர மற்ற சமூகத்தினர் சில வேலைகளை செய்யக்கூடாது என்று சில எழுதப்படாத விதிகளை வகுத்து உழைத்து வாழ வேண்டும் என்று எண்ணத்துடன் இருப்பவர்களை ஒடுக்குகின்றனர். ஆனால், இதுபோன்ற அனைத்து வாய் சொல் வசைகளையும் தனக்கான படிக்கற்களாக மாற்றி சத்தமில்லாமல் சாதித்துக் கொண்டிருக்கிறார்

கல்லூரி மாணவி நிதினா செந்தில்குமார். இரண்டாம் ஆண்டு கல்லூரியில் படித்து வரும் இவர் சிறந்த சிலம்ப வீராங்கனையாக மட்டுமில்லாமல், தன் தந்தையுடன் சேர்ந்து மயான வாகன ஓட்டுநராகவும் பணியாற்றி வருகிறார்.

‘‘எங்க ஊர் திண்டுக்கல் மாவட்டம், அய்யம்பாளையம். அப்பா ஆம்புலன்ஸ் ஓட்டுநர். ஊர்ல யாராவது இறந்துட்டா, அதுகுறித்த செய்தியை ஆட்டோவில் மைக் செட்டில் தெரிவிப்பது வழக்கம். அந்த செய்திக்கான குரல் என் அம்மாவுடையது.

தங்கச்சி பி.டெக் படிக்கிறா. தம்பி ஸ்கூல் போறான். அப்பா ஆரம்பத்துல ஆட்டோதான் ஓட்டிட்டு இருந்தார். வயசானவங்க, கர்ப்பிணிக்கெல்லாம் காசு வாங்க மாட்டார். ரெண்டு, மூணு தடவை உடல் நலமில்லாத வயசானவங்களை அப்பா மருத்துவமனைக்கு ஆட்டோவில் கூட்டிக் கொண்டு போகும் வழியில் அவங்க இறந்துட்டாங்க. அதனால் அப்பாவின் ஆட்டோவில் ஊர் மக்கள் ஏற பயந்தாங்க. அப்ப அப்பா ஒரு முடிவு செய்தார். இனி இறந்தவர்களுக்கான மயான வண்டி ஓட்டப்போறதா அப்பா முடிவு செய்தார். ஒரு வண்டியை வாங்கி அதை சொர்க்க ரதம் போல ரெடி பண்ணார். இதைத் தொடர்ந்து ஃப்ரீசர் பாக்ஸ், மைக் செட் என இறுதி சடங்குக்கு தேவைப்படும் அனைத்தும் சப்ளை பண்ண ஆரம்பிச்சார். என் அப்பாவின் வண்டியில் ஏற மறுத்தவங்க, இன்று சுத்துப்பட்டு 50 கிலோ மீட்டரிலுள்ள அனைவரின் வீட்டில் யாராவது இறந்துட்டா நாங்கதான் அதற்கு தேவையான அனைத்தும் சப்ளை செய்கிறோம்’’ என்றவர், அப்பாவை தொடர்ந்து இவர் இந்த வேலையினை தான் கையில் எடுத்தது பற்றி விளக்கினார்.

‘‘நாங்க பசங்க மூணு பேர். விடுமுறை நாட்களில் எங்க மூவரையும் அம்மாவால் சமாளிக்க முடியாது. அதனால் விடுமுறை நாட்களில் நான் அப்பாவுடன் சென்றுவிடுவேன். அந்த நேரத்தில் யாராவது இறந்த செய்தி வந்தா நானும் அப்பாவுடன் சேர்ந்து அவங்க வீட்டுக்கு போவேன். அப்பா அங்கு இறுதிச் சடங்கு செய்வதை எல்லாம் பார்த்து நான் தெரிந்து கொண்டேன். சில சமயம் கடைசி ஈமச்சடங்கு செய்யக்கூட பணம் இருக்காது. அப்பாதான் அந்தச் செலவினை எடுத்து செய்வார். ஆனால், அப்பா கூட இருந்தவங்க, அவருக்கு தெரியாமல் காசு வாங்க ஆரம்பிச்சாங்க. ஒருமுறை அப்பா ஊர்ல இல்லை. அந்த நேரத்தில் ஐஸ் பாக்ஸ் கேட்டு வந்தாங்க. அம்மா அப்பா இல்லாமல் தர முடியாதுன்னு சொல்ல... நான் பாக்ஸ் எடுத்து வைத்து வண்டி எடுத்துட்டு போய்ட்டேன். அங்க போன போது, ‘பொம்பள பொண்ணு நீ ஏன் வந்த’னு கேட்டாங்க. ஆனால், நான் அப்பா செய்ற மாதிரியே எல்லா வேலைகளையும் செய்தேன்.

அப்பாவிற்கு பெருமையாக இருந்தாலும் தொடர்ந்து செய்ய ஒத்துக்கல. நான் அவரை சமாதானம் செய்து அவருடைய வேலையை நானும் செய்ய ஆரம்பிச்சேன்’’ என்றவர், ஆம்புலன்ஸ் டிரைவராகவும் செயல்பட்டு வருகிறார்.

‘‘நாங்க குடும்பமா இந்த வேலையில் ஈடுபட ஆரம்பித்த பிறகு எங்க சொந்தக்காரங்க கூட எங்கள ஒதுக்கி வச்சுட்டாங்க. வீட்டு விசேஷங்களுக்கு கூப்பிடுறது இல்லை. எங்க ஊர் பக்கத்துல விபத்து நடக்கும் போது அப்பாதான் ஆம்புலன்ஸ் கொண்டு போவார். அவரே அடிபட்டவரை ஹாஸ்பிட்டலில் சேர்ப்பார். ஒருமுறை நான் போன போது, விபத்தில் அந்த நபர் இறந்துவிட்டார். நான்தான் அவரை ஆம்புலன்ஸில் வைத்து பிரேத பரிசோதனைக்கு கொண்டு போனேன். சுத்தி இருந்தவங்க வேடிக்கை பார்த்தாங்களே தவிர யாரும் கிட்டக்கூட வரல. அவங்க வீட்டு உறவுக்காரங்களா இருந்தா இப்படி இருப்பாங்களா என்ற எண்ணம் அந்த விபத்தை பார்த்ததை விட ரொம்ப வலிச்சது’’ என்றவர், மாநில அளவில் தடகள விளையாட்டு வீராங்கனையாகவும் வலம் வருகிறார்.

‘‘பெரும்பாலும் விபத்து நிகழும் போது அங்கு அசம்பாவிதம் நடந்தா, யாரும் முன் வருவதில்லை. காரணம், அவங்க மேலும் போலீஸ் கேஸ் ஆகும் என பயப்படுகிறார்கள். விபத்தில் உள்ளவர்களுக்கு உதவி செய்தா, போலீஸ் அவங்களை தொந்தரவு செய்யக்கூடாதுனு அரசு ஒரு அறிவிப்பு தரணும். அவ்வாறு உதவி செய்ய முன் வந்தா, பலரின் உயிரை தக்க நேரத்தில் சிகிச்சை அளித்து காப்பாற்றிவிடலாம். உதவிக்கு வாங்கணு கூப்பிட்டாலும் அந்தப் பயத்தினால் யாரும் வருவதில்லை.

அப்பாவை பார்த்துதான் நான் வேலையை செய்ய ஆரம்பித்தேன். சில சமயம் இறந்தவர்களின் வீட்டுக்கு வண்டி கொண்டு போகும் போது அங்குள்ள இளைஞர்கள் குடிச்சிட்டு தகராறு செய்வார்கள். ஆரம்பத்தில் கஷ்டமா இருந்துச்சு, அதன் பிறகு அதை கண்டு கொள்ளாமல், காதில் ஹெட்ஃபோன் மாட்டிக்குவேன்’’ என்றவரை தொடர்ந்தார் நிதினாவின் அப்பா செந்தில்.

‘‘ஆட்டோ டிரைவராக இருந்த என்னை எங்க ஊர்க்காரங்க பேசிப் பேசியே இந்த வேலைக்கு வர வச்சுட்டாங்க. இந்த வேலையை செய்றதை நான் புண்ணியமா நினைக்கிறேன். இப்ப இதுல என் குடும்பமே உழைக்குது. நான் காசு வாங்கி செய்வதைவிட இல்லாதவங்களுக்கு இலவசமா செய்யும் போதுதான் மனசுக்கு நிம்மதியை தருது. என் மனைவி சுகந்தி இன்றும் ஆட்டோவில் இறந்தவர்களை பற்றிய செய்தியை அறிவிக்கிறார். நானும் என் மனைவியும் எங்க பசங்களை இந்த வேலையில் ஈடுபட சொல்லி வற்புறுத்தியதே இல்லை. அவங்களா முன்வந்து செய்றாங்க. நாங்க எங்க பசங்களுக்கு வசதியை தேடி தரவில்லை என்றாலும் ஒழுக்கமாக வாழவும் தைரியத்தையும் கத்துக் கொடுத்திருக்கோம். யார் என்ன சொன்னாலும் இறந்தவங்களுக்கான இறுதி மரியாதையை குடும்பமாக செய்றதை விடமாட்டோம். நாங்க இந்த வேலையை எங்களின் கடமையாக நினைக்கிறோம்’’, அதுல முழு மனத்திருப்தியும் நிம்மதியும் கிடைப்பதாக கூறுகின்றனர் நிதினா குடும்பத்தினர்.

தொகுப்பு: கலைச்செல்வி