Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

First Lady of New York City

நன்றி குங்குமம் தோழி

தனது தனித்துவமான அடையாளங்களுடன் ஓவியர் ரமா துவாஜி நியூயார்க் நகரின் ஃபர்ஸ்ட் லேடியாகி இருக்கிறார்.

யார் இந்த ரமா துவாஜி?

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயர் தேர்தலில் அபார வெற்றி பெற்று, அமெரிக்க அதிபர் ட்ரம்பை தெறிக்கவிட்டு கவனம் ஈர்த்தவர் 34 வயது இளம் மேயரான ஜோஹ்ரான் மம்தானி (Zohran Mamdani). இவர் ஒரு சட்ட வல்லுநர் என்பதுடன், நியூயார்க் நகர மேயர் தேர்தலில் வெற்றி பெற்ற முதல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். மேலும், முதல் இந்திய

அமெரிக்க முஸ்லிம் என்பதும், நியூயார்க்கின் இளம் மேயர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கடந்த 2015ல் அரசியலுக்குள் நுழைந்த மம்தானி, டெமாக்ரடிக் சோஷியலிஸ்ட்ஸ் ஆஃப் அமெரிக்காவின் உறுப்பினராகி இன்று நியூயார்க் நகரின் மேயராகிவிட்டார். மம்தானியின் தந்தை மஹ்மூத் மன்தானி மும்பையில் பிறந்த இஸ்லாமியர். புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் மீரா நாயர் இவரின் தாயார். இவர் ரூர்கேலாவில் பிறந்தவர்.நியூயார்க் மேயர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட மம்தானி, தனது அபார வெற்றிச் சரித்திரத்தை பதிவு செய்து, வரும் ஜனவரி மாதம் நியூயார்க் நகர மேயராய் பதவியேற்க உள்ளார்.

தனது தேர்தல் உரைகளில், “அமெரிக்க அரசியலில் மாற்றம் தேவை. இது மக்களுக்கான, அவர்களின் தேவைகளுக்கான அரசியலாக இருக்க வேண்டுமே தவிர உயர் அடுக்கு மக்களுக்கானதாக இருக்கக்கூடாது” எனக் கூறி இருந்தார். ஜோஹ்ரான் மம்தானியின் காதல் மனைவிதான் ஓவியர் ரமா துவாஜி.

இவர் அரசியல்வாதியின் மனைவி மட்டுமல்ல, சர்வதேச அங்கீகாரம் பெற்ற சிறந்த ஓவியர். அமெரிக்காவில் டமாஸ்கை சேர்ந்த பெற்றோருக்கு ஹூஸ்டனில் பிறந்து துபாயில் வளர்ந்து, பாரிஸ் வழியாக நியூயார்க் நகரை அடைந்த பயணம் ரமா துவாஜியினுடையது.ஜோஹ்ரான் மம்தானியுடன் Hinge app வழியே 2021ல் அறிமுகமானாலும், இவர்கள் திருமணம் 2025ல் சமீபத்தில்தான் நடைபெற்றுள்ளது. ஜோஹ்ரான் மம்தானியின் தேர்தல் பிரச்சாரத்தில் ரமா துவாஜி காட்சி வடிவமைப்பில் கை கொடுத்து முக்கிய பங்காற்றியதை அங்கிருந்து செய்தி ஊடகங்கள் பதிவு செய்துள்ளன.

28 வயதே நிறைந்த இந்த இளம் அமெரிக்க ஓவியர் GenZ தலைமுறையை சேர்ந்தவர் என்றாலும், கலை மற்றும் அரசியல் இரண்டையும் இணைக்கும் புதிய தலை

முறைக்கு முன்னோடியாக இருப்பது இவரது தனிச் சிறப்பு. ஆம்! நியூயார்க் டைம்ஸ், பிபிசி போன்ற பிரபல பத்திரிகைகளுக்கு இல்லஸ்ட்ரேஷன்ஸ் பணிகளைச் செய்திருப்பதுடன், ஸ்பாடிஃபை(Spotify) ஆப்பிள் நிறுவனங்களுடன் இணைந்தும் பணியாற்றியவர்.

உலக அளவில் பிரபலமடைந்த கலைக்கூடங்கள் பலவற்றிலும் இவரின் ஓவியங்கள் இடம்பிடித்திருக்கின்றன.இவரது பெரும்பாலான ஓவியங்களில் பெண்களின் உரிமைகள், சமூக நீதி பிரச்னைகளை தூரிகை வழியாக வலுவாக உணர்த்தி வெளிப்படுத்தி இருப்பதுடன், பெண்களுக்கு எதிரான வெறுப்பு, பெண்களின் வாழ்வில் எப்படியாக ஆதிக்கம் செலுத்துகிறது என்பதைச் சொல்லும் விதமாக, அரபு கலாச்சாரத்தையும் தனது ஓவியங்களில் இணைத்து ஆய்வு செய்யும் விதமாக உருவாக்கியுள்ளார்.2021ல் பாலஸ்தீனத்துக்கு தனது ஆதரவை வெளிப்படையாய் தெரிவித்து, தனது நிலைப்பாட்டை படைப்பின் வழியாக ரமா வெளியிட்டதைத் தொடர்ந்து அவதூறுகளை எதிர்கொண்டாலும், தனது கருத்தில் உறுதியாக நின்றவர் இந்தக் கலைப் படைப்பாளி.

முதல் இஸ்லாமிய இளம் மேயர்

கடந்த 1665ல் இருந்து இதுவரை நியூயார்க் நகரை 110 மேயர்கள் நிர்வகித்துள்ளனர். ஜோஹ்ரான் மம்தானி 111வது மேயராய் பதவியை அலங்கரிக்க இருக்கிறார். இத்தனை வருடங்களில் ஒரு இஸ்லாமியர்கூட நியூயார்க் நகர மேயராய் தேர்ந்தெடுக்கப்பட்டதில்லை என்பதே இவர் வெற்றியின் சிறப்பு. மம்தானியின் வெற்றிக்கு இது மட்டுமே காரணம் இல்லை.

நியூயார்க்கின் முதல் தெற்காசிய மேயர், முதல் இந்திய வம்சாவளி மேயர் மற்றும் முதல் இளம் வயது மேயர் என்ற சிறப்புகளையும் சேர்த்தே பெற்றிருக்கிறார்.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்