Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நாசாவின் IASP விண்வெளிப் பயிற்சி திட்டத்தை முடித்த முதல் இந்தியர்!

நன்றி குங்குமம் தோழி

நான் முதல்வன்

ஜான்வி டங்கேட்டி, 24 வயதான இளம் பெண். அமெரிக்காவில் நாசாவின் IASP விண்வெளிப் பயிற்சி திட்டத்தை முடித்த முதல் இந்தியர் என்ற உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறார்!

இவர் ஆந்திரப்பிரதேச மாநிலத்தின், மேற்கு கோதாவரி மாவட்டத்தின், பாலகொல்லு பகுதியைச் சேர்ந்தவர். பள்ளிப் படிப்பை மேற்கு கோதாவரி மாவட்டத்தில் முடித்த ஜான்வி, பொறியியல் படிப்பை பஞ்சாப்பில் இருக்கும் லவ்லி புரஃபெஷனல் பல்கலைக்கழகத்தில் படித்து மின்னணு மற்றும் தகவல் தொடர்புப் பிரிவில் பட்டம் பெற்றவர். இவரின் பெற்றோர் குவைத்தில் வசிக்கின்றனர்.

செவ்வாய் கிரகம் போன்ற சூழல்களில் இயங்க உதவும் பயிற்சியை, போலந்தில் உள்ள அனலாக் விண்வெளி வீரர் பயிற்சி மையத்தில் (AATC) ஜான்வி பெற்றிருக்கிறார். நாசாவின் IASC திட்டத்தின் மூலம் ஹவாயில் உள்ள பான்-ஸ்டார்ஸ் தொலைநோக்கியை பயன்படுத்தி சிறு கோள்களை கண்டறிதலில் ஜான்வி பங்களித்திருக்கிறார். நாசாவின் ஸ்பேஸ் ஆப்ஸ் சேலஞ்ச் மற்றும் தி யங் அச்சீவர் விருதை இஸ்ரோவின் உலக விண்வெளி வாரத்தின் போது பெற்றார்.

2029ம் ஆண்டு, விண்வெளியில் இவர் பறக்க இருக்கிறார். அதற்கான பயிற்சியினை டைட்டன் ஆர்பிடல் போர்ட் ஸ்பேஸ் ஸ்டேஷனில் மேற்கொள்வார். 2029ல் விண்வெளிக்குச் செல்லவிருப்பதன் மூலம் இந்தியாவின் மிக இளம் வயது விண்வெளி வீராங்கனை என்ற பெருமை, தற்போது இவருக்குக் கிடைத்திருக்கிறது. அமெரிக்காவில் இருக்கும் விண்வெளி நிறுவனமான டைட்டன் ஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் 26.6.2025 அன்று இவரைத் தேர்வு செய்திருக்கிறது.

அலபாமாவில் அமைந்துள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் சர்வதேச வான் மற்றும் விண்வெளி திட்டத்தில் (International Air and Space Program - IASP) பயிற்சி பெற உள்ள ஒரே இந்தியர் இவரே ஆவார். இந்த டைட்டன் விண்வெளிப் பயணத்தில் விண்வெளி வீரர்கள் பூமியை இரண்டு முறை சுற்றி வருவார்கள். இந்தப் பயணம் 5 மணி நேரங்கள் நீடிக்கும். அப்போது அவர்கள் இரண்டு சூரியோதயங்களையும் இரண்டு சூரிய அஸ்தமனங்களையும் காண முடியும்.

இந்தப் பயணத்துக்கு நாசாவின் விண்வெளி வீரரும் ஓய்வுபெற்ற அமெரிக்க ராணுவ கர்னலுமான வில்லியம் மெக் ஆர்தர் ஜூனியர் தலைமை ஏற்பார். இவர் தற்போது டைட்டன் ஸ்பேஸ் நிறுவனத்தின் முதன்மை விண்வெளி வீரராக இருக்கிறார். இவர்தான் இனி வரும் ஆண்டுகளில் ஜான்விக்குப் பயிற்சி அளிக்க உள்ளார்.அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM -Science, Technology, Engineering, and Mathematics) ஆகியவற்றிலும் விண்வெளி ஆராய்ச்சிகளிலும் பல ஆண்டுகளாக ஜான்வி ஆர்வம் காண்பித்து வந்திருக்கிறார். பூஜ்யப் புவி ஈர்ப்பு விசை, அதி உயரப் பயணங்கள், விண்வெளிப் பயணச் செயல்பாடுகள் போன்றவற்றில் பயிற்சி பெற்றவர் இவர்.

இந்த வாய்ப்பு தமக்குக் கிடைத்த பெரும் பேறு என்கிறார் ஜான்வி டங்கேட்டி. “2026ம் ஆண்டு முதல் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு டைட்டன்ஸ் ஸ்பேஸின் ஆஸ்கான் திட்டத்தின் மூலம் தீவிர விண்வெளி வீரர் பயிற்சி பெறுவேன்” என நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார். இவரது செயல்பாடுகள் இளம் இந்தியப் பெண்களுக்கு விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளில் சேருவதற்கு நிச்சயம் முன் மாதிரியாக அமைந்து ஊக்கம் தரும்.

தொகுப்பு: லதானந்த்