Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

தேஜஸ் போர் விமானத்தின் முதல் பெண்பைலட்

நன்றி குங்குமம் தோழி

வி மானப் பயணங்களின் போது பயணிகளுக்கு உதவும் பணியை ஏர் ஹோஸ்டஸ் எனச் சொல்லப்படும் விமானப் பணிப்பெண்கள் செய்வது வழக்கம்.ஆனால், விமானத்தை இயக்கும் பைலட் பணியை ஆண்களே அதிகமாக செய்வார்கள். அதிலும் இந்திய விமானப் படையில் பெண் விமான ஓட்டிகள் ஆண்களை விடக் குறைவு. இந்தச் சூழலில் விமானப் படையைச் சேர்ந்த போர் விமானம் ஒன்றை இயக்கும் முதல் பெண் என்ற பெருமையை பெற்றிருக்கிறார் முப்பத்தி நான்கு வயதாகும் மோஹனா சிங் என்ற பெண்மணி.2016 ஆம் ஆண்டில் பாவனா காந்த் மற்றும் அவ்னி சதுர்வேதி ஆகிய மற்ற இரு பெண்களுடன் மோஹனா சிங் போர் விமானியாக இந்திய விமானப் படையில் சேர்ந்தார். விமானப்படை வரலாற்றில் முதன் முதலில் போர் விமானிகளாகச் சேர்ந்தவர்கள் இவர்களே!

2016 ஆம் ஆண்டு முதல் இந்திய போர் விமானங்களை பெண்கள் இயக்க அரசு வழிவகை செய்தது. தற்போது சுமார் 20 பெண்கள் போர் விமானங்களை இயக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இதற்கு முன்னர் பெண் விமானிகள் ஹெலிகாப்டர்கள் மற்றும் சரக்கு விமானங்களை மட்டுமே ஓட்டிக் கொண்டிருந்தனர். இந்திய விமானப் படையில், ஸ்குவாட்ரான் லீடர் என்ற பதவியை மோஹனா சிங் வகிக்கிறார். இவர் இயக்கும் தேஜஸ் போர் விமானம் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டிருக்கிறது. எல்சிஏ (LCA) வகையைச் சேர்ந்தது. இது ஒரு லகு ரக விமானம் ஆகும். இந்தப் போர் விமானம் (லைட் காம்பேட் ஏர்கிராஃப்ட்-Light Combat Aircraft) LCA என்ற வகையைச் சேர்ந்தது. இந்த ஜெட் விமானம், இந்திய விமானப் படையால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இவர் சார்ந்த படைப் பிரிவுக்கு, ‘எலைட் 18 பறக்கும் தோட்டாக்கள்’ என்று பெயர். இந்தப் போர் விமானப் படையில் இணைந்திருக்கும் முதல் பெண் மோஹனா சிங்தான். இவர் பொறுப்பேற்றிருக்கும் படைப்பிரிவு நலியா விமானத் தளமாகும். இது பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள குஜராத் செக்டார் என்ற இடத்தில் உள்ளது.

இதற்கு முன் மோஹனா மிக்-21 (MiG-21) ரக விமானத்தை இயக்கி வந்தார்.2024 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 14 வரை ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில், இந்திய விமானப் படை சார்பில் தாரங் சக்தி என்ற பெயரில் நடைபெற்ற பயிற்சியில் மோகனா சிங்கும் பங்கேற்றார். இந்திய விமானப் படையின் துணைத் தலைவர் ஏர் மார்ஷல் அமர் ப்ரீத் சிங், மற்ற இரண்டு துணைத் தலைவர்களான லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ்.ராஜா சுப்ரமணி மற்றும் வைஸ் அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் ஆகியோரும் கலந்து கொண்டனர். அப்போது ராணுவம் மற்றும் கடற்படை துணைத் தளபதிகளுக்கு விமானத்தின் இயக்கங்கள் குறித்த செயல் விளக்கங்களை மோஹனா அளித்தார். இந்தப் பன்னாட்டுப் பயிற்சியில் அமெரிக்கா, கிரீஸ், இலங்கை, ஆஸ்திரேலியா மற்றும் பல நாடுகளின் உயர்மட்ட போர் விமானங்களும் கலந்து கொண்டன.

1992 ஆம் ஆண்டு, ஜனவரி இருபத்திரெண்டாம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் ஜுன்ஜுனு என்ற நகரத்தில் மோஹனா பிறந்தார். மோஹனாவின் குடும்பமே விமானப் படைப் பின்னணி கொண்டதுதான். இவரது தாத்தா விமானப் போர்ப் படையின் உளவு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் துப்பாக்கிகளை கையாளுபவராக இருந்திருக்கிறார். மோஹனாவின் தந்தை இந்திய விமானப் படையில் வாரன்ட் ஆபீஸர் என்ற பதவியை வகித்தவர். 2019 ஆம் ஆண்டில், ஹாவ்க் வகை விமானத்தை ஓட்டிய முதல் பெண் பைலட் என்ற பெருமையும் மோஹனாவுக்கு உண்டு. 2020 ஆம் ஆண்டு, நாரி சக்தி விருது இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

மோஹனா சிங் ஜிதர்வால் அடிக்கடி சொல்வது இவைதான்:

* பறப்பதில் இருக்கும் சாகச உணர்வு ஈடில்லாதது.

* எனது பணி பறப்பது மட்டும் அல்ல; நாட்டுக்குச் சேவை செய்வதும் ஆகும்.

*அர்ப்பணிப்புடனும் கடின உழைப்புடனும் செயலாற்றினால் எந்தத் துறையிலும் பெண்கள் சிறந்து விளங்க முடியும்.

தொகுப்பு: லதானந்த்