Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வீட்டுக்குள் முடங்கும் பெண் மருத்துவர்கள்

நன்றி குங்குமம் தோழி

திருச்சியை சேர்ந்தவர் ஹோமியோபதி மருத்துவர் திவ்யா ராதாகிருஷ்ணன். திருச்சி மற்றும் சேலத்தில் ஹோமியோபதி மருத்துவமனைகளை நடத்தி வரும் இவர், தான் படித்த BHMS ஹோமியோ மருத்துவத்தில் உடும்புப் பிடியாய் நின்று, 15 ஆண்டுகளுக்கு மேலாக மருத்துவம் தொடர்பாக அதன் அடிவரை நுழைந்து அனுபவங்களை சேகரிப்பவர். சேகரித்த அனுபவங்களை நோயாளிகளுக்கு மருந்தாக மட்டுமே வழங்காமல், BHMS படித்து முடித்த அல்லது படித்து வருகிற மாணவர்களை ஒருங்கிணைத்து, பயிற்சி பட்டறைகளையும் நடத்தி வருகிறார். தனது தன்னலமற்ற மருத்துவ சேவைக்காக விருதுகள் பலவும் வென்றிருக்கிறார். ஹோமியோபதி மருத்துவர் திவ்யாவிடம் பேசியதில்...

முதலில் உங்களைப் பற்றி..?

BHMSல் மூன்றாம் ஆண்டு படிக்கும்போதே, இத்துறை சார்ந்த, அனுபவம் பெற்ற மருத்துவர் ஒருவரின் அறிமுகம் கிடைத்தது. அவர் சாதாரண சளி, காய்ச்சலுக்கு மருத்துவம் பார்ப்பவர் கிடையாது. மருத்துவ உலகால் இனி பிழைக்க மாட்டார்கள் எனக் கைவிடப்பட்ட கேன்சர், சிறுநீரக செயலிழப்பு நோயாளிகளுக்கும் சிகிச்சை அழித்து குணப்படுத்தியவர். ‘இறுதியாக ஒருமுறை அவரைச் சென்று பார்த்து விடுங்கள்’ எனச் சொல்லும் அளவுக்கு புகழ் பெற்ற ஹோமியோபதி மருத்துவராக அவர் இருந்தார்.

இறுதி ஆண்டு நான் படிக்கும்போது, குறிப்பிட்ட மருத்துவர் எதிர்பாராமல் இறந்துவிட, நோயாளிகள் ‘இனி நாங்கள் யாரிடம் எங்கள் வலியை சொல்வோம்’ என அழுத அழுகைதான், மாபெரும் பொறுப்பை என் தோள்களில் சுமத்தியது. அவரைப் போலவே சிறந்த மருத்துவராகி, நோயாளிகள் துயர் துடைக்கும் அந்த விதை எனக்குள் ஆழமாய் ஊன்றபட, என்னை தீவிரப்படுத்தினேன்.

ஹோமியோபதி மருத்துவம் குறித்து சொல்லவும்?

கண்ணுக்குத் தெரியாத மனித மனதின் வரைபடத்தை வைத்து கண்ணுக்குத் தெரியும் உடல் நோய்களை குணப்படுத்தும் சுவாரசியமான மருத்துவ முறையே ஹோமியோபதி. நோயாளிகளை தனித்துவப்படுத்தி (Individualized) அணுகுவதே ஹோமியோபதியின் சிறப்பு.ஒரு வீட்ல பெற்றோருக்கு நீரிழிவு நோய் இருக்குன்னு வச்சுப்போம். நான்கு குழந்தைங்க இருக்காங்க. ஒரே சாப்பாடு, ஒரே தண்ணீர், ஒரே சூழல் ஆனா, ஒரு குழந்தைக்கு மட்டும் ஏன் அந்த நீரிழிவு நோய் வருது? அல்லது ஒருத்தருக்கு மட்டும் ஏன் சிறுநீரகத்தில் கல் உருவாகுது? இதுக்கு வழக்கமா நாம சொல்ற பதில் மரபியல்னு(Genetic). ஆனா, குறிப்பிட்ட ஒருத்தருக்கு மட்டும் ஏன் அந்த ஜீன் தூண்டப்படுது?

ஹோமியோபதி மருத்துவம், மனித மனநிலையிலிருந்து இதற்கான பதிலை தேடுது. அதாவது, ஒரு குறிப்பிட்ட நபருக்கு குறிப்பிட்ட நோயை ஏற்கும் தன்மை, அதாவது, நிலைத்தன்மை(Sustainability) இருந்தால் மட்டுமே அந்த நோய் அவரைத் தாக்கும்.ஒரு குடும்பத்தில் உருவாகும் பிரச்னையை ஒவ்வொருவரும் எப்படி உணர்வு பூர்வமாக எதிர்கொள்கிறார் என்பதைப் பொறுத்தே, நோய் உருவாகும். ஒருவர் கோவப்படலாம். இன்னொருவர் பதட்டப்படலாம். மூன்றாம் நபர் யாரிடமும் பேசாமல் தனிமைப்படலாம். இந்த மன அழுத்தமே உடலை சிதைச்சு நோயா வெளிப்படுத்துது. இதில் நோய்க்கான மூல காரணத்தை கண்டுபிடித்து, நிரந்தர தீர்வை வழங்குவதே ஹோமியோபதி மருத்துவம்.

அஞ்சு நீரிழிவு நோயாளிகள் மருத்துவரிடம் வந்தாலும் ஒரே மருந்து கொடுக்கப்படுவதில்லை. அவர்களின் உடல், அப்புறம் மனதின் தனித்துவத்திற்கு ஏற்ப ஐந்து வெவ்வேறு மருந்துகள் வழங்கப்படும். இதில் மருந்துகள் நபருக்கு நபர் மாறுபடும்.

ஹோமியோபதிக்கான வெள்ளை நிற இனிப்பு உருண்டை மருத்துவமுறை குறித்து விளக்கவும்..?

ஹோமியோபதி மருத்துவத்தைக் கண்டுபிடித்த டாக்டர் சாமுவேல் ஹானிமன். அடிப்படையில் இவர் அலோபதி மருத்துவர் என்றாலும், கடுமையான மருத்துவ முறைகளால் ஏற்பட்ட பக்க விளைவுகளையும், நோயாளிகள் பட்ட துன்பங்களையும் பார்த்து மனம் வெதும்பி, அந்த முறையிலிருந்து விலகினார்.ஏற்கனவே வலியிலும் வேதனையிலும் இருக்கும் நோயாளிக்கு நாம் கொடுக்கும் மருந்துகளும் துன்பத்தை தரக்கூடாதென உறுதியாக நம்பினார். ஒரு சின்னக் குழந்தை கூட முகம் சுளிக்காமல், சுலபமாக சுவைக்கும்படி சுகர் ஆஃப் பில்ஸ் முறையினைக் கொண்டு வந்தார்.

இந்த இனிப்பு உருண்டைகள் இந்த மருத்துவத்தில், வெறும் வாகனங்கள் மட்டுமே. இதற்குள் வீரியமிக்க மருந்துகள் செலுத்தப்பட்டு, அவை ஊடுருவி உடலுக்குள் சென்று வேலை செய்யத் தொடங்கும். இதில் மருந்துகள் வேலை செய்யும் விதம் வித்தியாசமானது. சில நேரங்களில் மருந்தினை சாப்பிடக்கூட வேண்டியதில்லை. சுவாசிப்பதன் மூலமாகவும், நோயாளியின் தோலில் மருந்தை தேய்ப்பதன் மூலமாகக்கூட நிவாரணம் கிடைக்கும்.

ஹோமியோபதிக்கான மருத்துவ முறை குறித்தும் விளக்கவும்?

ஹோமியோபதி மருத்துவத்தின் மைய அறிவியல் என்பது ஒத்ததிர்வு(Resonance) முறை. அதாவது, இயற்கையில் உள்ள தாவரங்கள்(Plants), கனிமங்கள் (Minerals), விலங்கினங்களில்(Animals) இருந்தே மருந்துகள் தயாராகிறது. உதாரணத்துக்கு, ஆரோக்கியமான ஒரு மனிதனை குறிப்பிட்ட பாம்பு தீண்டினால், அதன் விஷம் நரம்பு மண்டலத்தை தாக்கி, தீவிர பதற்றம், மூச்சுத் திணறல், பிறகு ரத்த உரைதலை ஏற்படுத்தும். நோயாளி ஒருவருக்கும் இதே போன்ற தீவிர பதற்றம், மூச்சுத் திணறல் அல்லது உடல் சார்ந்த அறிகுறிகள் நோயாய் வரும்போது, அதே பாம்பின் விஷத்திலிருந்து அதன் நச்சுத்தன்மையை முழுவதுமாக நீக்கிட்டு அதன் எனர்ஜி பேட்டனை மட்டும் எடுத்து, மிக நுண்ணிய அளவில் மருந்தாக பில்ஸ்கள் வழியாக ஊடுருவச் செய்து கொடுக்கப்படுகிறது.

நோயாளியின் ஆற்றலும் சுழற்சியும் மருந்தின் ஆற்றலோடு இணையும்போது, நோய் நிரந்தரமாக விலகும். மருத்துவர் மிக நுணுக்கமாக நோயாளியை கவனித்து, மருந்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஹோமியோபதிக்கான BHMS படிப்பு குறித்தும் விளக்கவும்..?

BHMS என்பது Bachelor of Homeopathic Medicine and Surgery. இதுவும் MBBS போலவே ஐந்தரை ஆண்டுகளும் படிக்கும் முழுமையான மருத்துவப் படிப்பு. இதிலும் அனட்டமி, சர்ஜரி, பெத்தாலஜி, பிஸியாலஜி, கைனகாலஜி என அத்தனையும் உண்டு. இவற்றுடன் மருந்துகள் குறித்தும், மனித உடல் சார்ந்த அறிகுறிகள், அப்புறம் மனம் சார்ந்த அறிகுறிகள்னு இரண்டையும் இணைத்தும் படிக்கிறோம்.படிப்பை பொறுத்தவரை, புத்தகத்தில் உள்ள தியரியை மனப்பாடம் செய்து தேறிவிடலாம். ஆனால், ஒரு நோயாளியின் முன் அமர்ந்து அவர்கள் வெளிப்படுத்தாத மௌனத்தை எப்படி வாசிப்பது என்பதை கல்லூரி சிலபஸ் சொல்லி கொடுக்காது.

மனிதர்களோட ஒவ்வொரு உணர்ச்சியையும் பிரித்து மேய்ந்து அதற்கு இணையான தாவரத்தின் அல்லது கனிமத்தின் அல்லது விலங்கின் எனர்ஜியை தேடிப்பிடிப்பது சாதாரண விஷயமில்லை. இதற்கு தனிப்பட்ட பயிற்சிகள் தேவைப்படுகிறது.கல்லூரியில ஐந்து வருடம் படித்துவிட்டு உடனே மருத்துவம் செய்துவிட முடியாது. பலருக்கும் ஹோமியோபதி என்பது ஏதோ ஆறு மாசம், ஒரு வருடம் அல்லது ஐந்து ஆண்டுகள் படிக்கிற படிப்பு என்கிற தவறான எண்ணம் இருக்கிறது. மருத்துவ படிப்பு மனித உடலோட வரைபடத்தை கொடுக்கும். ஆனால், முறையான மெண்டார்ஷிப் அல்லது குருகுலக் கல்வியே மனித மனதின் வரைபடத்தை கொடுக்கும்.

நான் BHMS முடித்ததுமே ஹோமியோபதி மருத்துவத்தில் எம்டி.,எம்எஃப்டி, பிஎச்டி முடித்த மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த டாக்டர் சந்திரசேகர் விஸ்வநாத் ஆல்குண்ட்கி என்பவரை குருவாய் ஏற்று, 2013ல் இருந்தே அவரோடு பயணிக்கிறேன். அவரது குருகுலக் கல்வி வாயிலாக, நோயின் அத்துனை கூறுகளையும், அவற்றைக் கண்டறியும் முறையையும் செயல்முறை பயிற்சியாக, அவரின் பயிற்சி பட்டறை மூலமே முழுமையாக அறிந்தேன்.

தங்களின் Sakthi empowerment, Aspire to Inspire, Man of mission campaign குறித்தெல்லாம் சொல்லவும்...

ஒரு சிறந்த மருத்துவர் நோயாளி சொல்லும் வார்த்தைகளை மட்டுமே கேட்பவர் கிடையாது. அந்த வார்த்தைக்குப் பின்னுள்ள மௌனத்தை, ஆற்றல் சுழற்சியை படிக்கத் தெரிந்தவராக இருக்க வேண்டும். இதில்தான் நோயாளியின் உண்மையான மருந்து மறைந்திருக்கிறது.

தமிழகத்தில் ஹோமியோபதிக்கு ஒரே ஒரு மருத்துவக் கல்லூரி மட்டும் மதுரையில் இருக்கிறது. இதற்கும் நீட் தேர்வு உண்டு. வருடத்துக்கு 50 இடங்கள் மட்டுமே. 2011ல் நான் BHMS படித்த போது என் வகுப்பில் 45 மாணவிகள், 5 மாணவர்கள். எல்லா ஆண்டுகளும் இதே நிலைதான். இன்றைக்கு என்னையும் சேர்த்து நால்வர் மட்டுமே இத்துறை சார்ந்த மருத்துவராகத் தொடர்கிறோம். மீதமுள்ள 99% பெண்கள் என்ன ஆனார்கள் என்பதே இதில் மிகப்பெரிய கேள்வி.

பெண்கள் ஐந்தரை ஆண்டுகளும் இரவு பகலாய் உடற்கூறியல், அறுவை சிகிச்சை எனக் கஷ்டப்பட்டு படித்துவிட்டு, ஒரு நோயாளியை கையாளும் பிராக்டிக்கல் நாலேஜ் இல்லாமல், சொந்தமாக கிளினிக் தொடங்கும் தன்னம்பிக்கை இன்றி, கடந்த 15 வருஷங்களா வீட்டின் சமையல் அறையில் முடங்கிக் கிடப்பதே இதில் நிதர்சனம்.பெற்றோர் ஹோமியோபதி மருத்துவராக இருந்தால் வாரிசுகளுக்கு பயிற்சி கிடைத்துவிடும். இல்லாதபட்சத்தில் நேரடி பயிற்சிக்கான குருகுலக் கல்வி தேவைப்படுகிறது.

வீட்டில் முடங்கிய BHMS பெண்களை தேடிப்பிடித்து, புத்துயிர் கொடுத்து தூக்கி நிறுத்தவே என்னுடைய ‘சக்தி எம்பவர்மென்ட்’ திட்டம். மருத்துவத்தை மறந்து, கிளினிக் வைக்க தயங்கி, வீட்டுக்குள் முடங்கிய பெண்களை, சொந்தமாக கிளினிக் வைத்து வெற்றிகரமாக நடத்தும் அளவுக்கு மாற்றி இருக்கிறேன்.ஹோமியோபதி கல்வி நிறுவனங்களுக்கு நேரடியாகச் சென்று என் சொந்த கேஸ்கள் மூலமாக, மாணவர்களுக்கு செயல்முறை கல்வியின் முக்கியத்துவத்தை விளக்குவதுடன், வாரத்தில் ஒருநாள் இரண்டு மணி நேரம் ஆன்லைன் வெப்பினார் வகுப்புகளையும் எடுத்து வருகிறேன்.

இந்திய அளவில் சில பயிற்சி பட்டறைகளை ஏற்பாடு செய்து வழங்குவதன் மூலமாகவும் மாணவர்களை தயார்படுத்தி வருகிறேன். இதற்கென, எனது குரு டாக்டர் ஷேகர் ஆல்குண்ட்கி தலைமையில் நடைபெறும் Man of mission campaign, Aspire to Inspire போன்ற தேசிய அளவிலான முன்னெடுப்புகளிலும் முக்கிய பங்கு வகிக்கிறேன்.நேஷனல் செமினார்களில் நோயாளிகளிடம் கேஸ் எடுப்பது... கனெக்ட் ஆவது... கம்யூனிகேட் செய்வது குறித்தெல்லாம் செயல் முறையாக கற்பிக்கப்படுகிறது. கூடுதலாக ஹோமியோபதி மருத்துவத்தின் பயன்கள் குறித்தும் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.எங்களின் நோக்கமே நல்ல மருத்துவர்களை உருவாக்குவதே. எங்களுக்கு பிறகு இத்துறை முடங்கிவிடக் கூடாது.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்