Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ஃபாத்திமாவின் வெற்றி இன்ஸ்டாவில்

நன்றி குங்குமம் தோழி

ஒரு நல்ல பொருள் இருட்டறையில் இருந்தால் யாருக்கும் வெளியில் தெரியாது இல்லையா? முதலில் அதை வெளியில் கொண்டு வரணும். பிறகு அதை காட்சிப்படுத்தணும். நாகர்கோவிலை சேர்ந்த ரோஷன் ஃபாத்திமா, கொரோனா லாக்டவுனில் முடங்கிப்போன தன் தொழிலை எப்படி மீட்டெடுத்தார் என்கிற அவரின் பயணமே இது.ஆம்! 165 ஃபாலோவர்ஸ் மட்டுமே இருந்த தனது இன்ஸ்டா பக்கத்தில், பாரம்பரியம் நேச்சுரல் புராடெக்ட் என்ற பெயரில் பாரம்பரிய பொருட்களை தேடிக் கொண்டுவந்து, கடை விரிக்க ஆரம்பித்திருக்கிறார் ஃபாத்திமா. பொருட்களின் பயன்பாட்டை, அதன் தரத்தை இன்ஸ்டாவில் விளக்கிப் பேசுவது ஃபாத்திமா கிடையாது. எட்டாம் வகுப்பு படித்து வருகிற அவரின் மகளும், ஐந்தாம் வகுப்பு படித்து வரும் மகனுமே ஆர்வமாய் இந்த வேலையினை முன்னெடுக்கிறார்கள்.

கமர்சியல் விளம்பரத்தில் தொலைக்காட்சிகளில் வருகின்ற குழந்தை மாடல்கள் மாதிரி, செயற்கையாக நடிக்காமல், அந்தப் பொருட்களுக்குப் பின்னால் இருக்கும் அறிவியலை, அதன் மதிப்பை பார்வையாளர்களுக்கு தங்கள் மழலை மொழியில் உணர்த்துகிறார்கள் அவர்கள். உதாரணத்திற்கு சிரட்டை கரண்டியில் சமைத்தால், செரிமானத்திற்கு எப்படியெல்லாம் உதவும் என ஒரு வீடியோ போடுவதுடன், மண் பாத்திரத்தில் சமைத்தால் உடலுக்கு எவ்வளவு நல்லது எனவும், கல் பொருட்களில் மசாலா அரைப்பதின் மகத்துவத்தையும் விளக்கி இன்னொரு வீடியோ போடுகிறார்கள். இதுதான் டிஜிட்டல் மார்க்கெட்டில் உள்ள நம்பகத்தன்மையின் உச்சம். அதாவது, ஆதென்டிசிட்டி.

இன்றைக்கு சோசியல் மீடியாவில பளபளப்பான விளம்பரங்கள் எத்தனையோ கொட்டிக்கிடக்க, அவற்றைப் பெரிய பெரிய கேமரா வைத்து, லட்சங்களை செலவு செய்து எடுக்கிறார்கள். ஆனால், இவற்றையெல்லாம் மக்கள் ஒரே நிமிடத்தில் ஜஸ்ட் லைக் தட் என கடக்கிறார்கள். காரணம், மக்கள் உண்மையை தேடுகிறார்கள்.

ஃபாத்திமாவின் இன்ஸ்டா பக்கத்தில் வருகின்ற, அவரின் குழந்தைகள் பெர்ஃபெக்டாக பேசவில்லை. அவர்களது கேமரா குவாலிட்டி சினிமா தரத்திற்கு இல்லை. ஆனால், அவர்களின் காணொளியில் உண்மை இருக்கிறது. ஈடுபாடும் வெளிப்படுகிறது.விளம்பரதாரரை வைத்து ஒரு காணொளியை போடுவதைவிட, குழந்தைகள் இயற்கையாக சமைத்து, அம்மியில் அரைத்து போடுகின்ற வீடியோக்களுக்கு, கஸ்டமர்ஸ் இயல்பாவே கனெக்ட் ஆகின்றார்கள். இந்த கனெக் ஷன் ஃபாத்திமாவுக்கு 45,000 ஃபாலோவரை கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. ஒருநாளைக்கு 5 முதல் 20 ஆர்டர்கள் ஃபாத்திமாவுக்கு நேரடியாக இன்ஸ்டா தளம் வழியாக வருகிறது. லட்சங்களில் ஃபாத்திமாவுக்கு வியாபாரமும் நடக்கின்றது.

ஃபாத்திமா படித்தது பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ். முதலில் வீடுகளுக்குச் சென்று தவணை முறையில் புடவை விற்கும் தொழிலையே செய்திருக்கிறார். தொழில் கொஞ்சமாக சூடு பிடித்த நேரத்தில் கொரோனா லாக்டவுன் ஃபாத்திமாவை முடக்கிப் போட, வியாபாரம் அப்படியே நின்ற நிலையில் மாற்று வழியை தேடியிருக்கிறார் ஃபாத்திமா.

இருண்ட சூழ்நிலையிலும், விரக்தியான மனநிலையிலும் இருந்தபோது, டிஜிட்டல் மார்க்கெட்டிங் குறித்து ஜெபஸ்டீன் என்பவர் யு டியூப் தளத்தில் கொடுத்த விளக்க காணொளி ஒன்று ஃபாத்திமாவின் கண்களில் பட, நடுக்கடலில் புயலில் சிக்கித் தவிக்கின்ற படகுக்கு திடீரென திசை காட்டி கிடைத்த மாதிரியான உணர்வே ஃபாத்திமாவுக்கும் ஏற்பட்டிருக்கிறது.

கையில சுத்தமாக காசு இல்லாத நெருக்கடியான நேரத்திலும், எப்படியோ கஷ்டப்பட்டு பணத்தை புரட்டி ஜெபஸ்டீன் அவர்களின் டிஜிட்டல் மார்க்கெட்டிங் காணொளிகள் அனைத்தையும் விலைக்கு வாங்குகிறார். இரவு, பகல் பாராமல் இரண்டே நாட்களில் வெறித்தனமாக அவற்றை பார்த்து முடித்தவர், அது தொடர்பான பயிற்சிகளை மேற்கொண்டு, கொஞ்சமும் தாமதிக்காமல், முதலில் Amazon, Flipkart போன்ற விற்பனைத் தளங்களில் தனது பொருட்களை லிஸ்ட் செய்ய ஆரம்பிக்கிறார்.

இதிலும் ஃபாத்திமாவுக்கு பெரிய அளவில் வெற்றி இல்லை. மனம் தளராதவர், விற்பனைக்கென ஓரமாக தான் வைத்திருந்த சில பாரம்பரிய பொருட்களை, குறிப்பாக சின்னச் சின்ன மினியேச்சர் மண்பாத்திரங்களை இத்தளங்களில் காட்சிப்படுத்த, மிகப்பெரிய வரவேற்பு உடனடியாய் அவருக்குக் கிடைக்கின்றது.

ஏனெனில் வீட்டு உபயோகத்திற்கான பாரம்பரிய பொருட்களை, அந்த நேரத்தில் யாரும் ஆன்லைனில் அவ்வளவாக விற்பனைக்கு கொண்டுவரவில்லை. இதைத் தொடர்ந்து பனையோலையில் செய்த இடியாப்ப தட்டு, வீட்டு பயன்பாட்டுக்கு தேவையான கிச்சன் பொருட்கள் என பாரம்பரிய பொருட்களை தேடிக் கண்டுபிடித்து கொண்டு வந்து, ஒவ்வொன்றாய் களமிறக்க

ஆரம்பித்திருக்கிறார் ஃபாத்திமா.

Amazon மாதிரியான மிகப்பெரிய விற்பனை தளத்தில், பொருட்கள் விற்கும்போது, பணம் உடனடியாய் கைகளுக்கு வராது. வாரம் ஒரு முறையோ அல்லது 15 நாளைக்கு ஒரு முறையோதான் வங்கிக் கணக்கில் பணம் வந்து சேரும். இதற்கு நடுவில் பொருட்கள் ரிட்டர்ன் ஆகும் பிரச்னையும் இதில் இருக்கிறது. பொருட்களை விற்று வருகின்ற பணத்தில்தான், அடுத்த விற்பனைக்கான பொருட்களை முதலீடு செய்து வாங்க வேண்டிய கட்டாயத்தில் ஃபாத்திமா இருந்ததால், பண முடக்கம் மிகப்பெரிய சிக்கலாய் அவருக்கு மாறுகிறது. இந்த பேமென்ட் சைக்கிள் சிஸ்டம் ஃபாத்திமாவை மூச்சுத் திணறவும் வைக்கின்றது.

இந்த நெருக்கடிகள்தான், இன்ஸ்டா தளம் பக்கமாக ஃபாத்திமாவின் கவனத்தை திருப்புகிறது. இதுவொரு நேரடி கன்ஸ்யூமர் மாடல் வலைத்தளம் என்பதால், நுகர்வோர் நேரடியாக கூகுள் பே செய்து பொருளுக்கான பணத்தை செலுத்துவதுடன், ரிட்டர்ன் பாலிசி தலைவலியும் இதில் இருக்காது என்பதால், இன்ஸ்டா தளத்தில் தன் தொழிலை மாற்றியதுமே, வியாபாரம் சூடு பிடிக்கத் தொடங்கியதுடன், ஃபாத்திமா கொண்டுவந்த அனைத்து பாரம்பரிய பொருட்களும் மிகமிக வித்தியாசமானதாகவும், தரமானதாகவும் இருந்தது.

விற்பனையில் நமது பொருள் மற்றவர்களிடம் இருந்து எப்படி தனித்துவமாய் இருக்கின்றது? இன்றைய தலைமுறையின் தேவைக்கு எப்படியாக உதவுகிறது என்பதை புரிந்துகொண்டதே அவரின் மிகப்பெரிய பலம்.ஆம்! “மாறும் உலகில் மாறா பழமை, பாரம்பரியத்தை மீட்டெடுக்க எங்களோடு இணைந்திருங்கள்” என்கிற டேக் லைனுடன், கேரளாவின் கருப்பு களிமண் பாத்திரங்கள்(Black clay pottery), தமிழ்நாட்டின் பாரம்பரிய மண்பாத்திரங்கள், கல் பொருட்கள், மூங்கில் கூடைகள், பனை ஓலை பொருட்கள், தேங்காய் சிரட்டையில் தயாரான பொருட்கள் என்று, இயற்கை முறையில் தயாரித்த விதவிதமான பொருட்களாய் தேடிப்பிடித்து விற்பனைக்குக் கொண்டு வருவதுடன், அவற்றை வகைப்படுத்தி லிஸ்ட் ஒன்றையும் உருவாக்கி வைத்திருக்கிறார்.

நல்ல பொருட்களை விற்க வேண்டுமெனில், அதற்குப் பின்னால் மிகப்பெரிய தேடல் எப்போதும் இருத்தல் வேண்டும். ஃபாத்திமா சும்மா ஒரு போன் செய்து பொருட்களை மொத்தமாய் ஆர்டர் செய்வதில்லை. கேரளா, நாகர்கோவில், நெல்லை, திசையன்விளை, மணப்பாடு, மதுரை, திருச்சி என தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் நேரில் பயணித்து, அங்குள்ள பாரம்பரிய பொருட்கள் தயாரிப்பவர்களை நேரில் சந்தித்து, தரத்தை சோதித்து, அவற்றில் சில புதுமைகளையும் புகுத்தி, தேவையான வடிவத்தில் அவற்றை தயாரித்து வாங்குகிறார். எந்தவொரு பெரிய வெற்றிக் கோட்டையும் ஒருவரால் மட்டுமே கட்ட முடியாது. பலரின் கண்ணுக்குத் தெரியாத உழைப்பே இந்தத் தொழிலின் ஆணிவேர்.

உதாரணத்திற்கு, பனை ஓலை தட்டுக்கு மேல் கொசு, ஈ உட்காராமல் இருக்க வலை மூடி ஒன்றை அத்துடன் இணைக்கிறார். மண் பாத்திரத்தில் டீ போட வசதியாய் கைப்பிடி வைத்த சாஸ் பேனையும் விற்பனைக்கு கொண்டு வந்து, இன்ஸ்டா பக்கத்தில் காட்சிப்படுத்தியுள்ளார். எளிதில் உடையக்கூடிய மண்பாண்டப் பொருட்களை அவர்கள் பேக்கிங் செய்கிற விதம் மிகவும் வித்தியாசமானது. ஒரு மண் பானையை பேக் செய்ய, 3 முதல் 5 மீட்டர் நீள பபுள் ராப் கவர் போட்டு அதன் மீது முழுமையாக நான்கு ஐந்து சுற்று சுற்றுகிறார்கள். பிறகு பொருட்கள் ஆடாத அளவுக்கு நான்கு பக்கமும் தெர்மாகோல் வைத்து, உறுதியான கார்ட்போர்ட் பெட்டிக்குள் பொருட்களை வைத்து டைட்டாக பேக் செய்து முடிக்கிறார்கள். பேக்கிங் செய்ய, தனியாக இரண்டு பெண்களை பணிக்கு அமர்த்தியிருக்கிறார் இவர்.

வாடிக்கையாளர்கள் பார்சலை கைகளில் பெற்று, பிரிக்க பிரிக்க, ஃபாத்திமா விற்பனை செய்கின்ற பிராண்டின் மேல் இருக்கின்ற மதிப்பும், மரியாதையும் தானாகவே கூடுகின்றது. கணவர் வெளிநாட்டில் பணியில் இருப்பதால், தனி ஆளாக நின்று, இந்த மொத்த பிசினஸையும் கவனிப்பதுடன், குழந்தைகளின் விடுமுறை நாளில், அவர்களோடு இணைந்தே பொருட்களை கொள்முதல் செய்ய செல்வது, ஆர்டர்களை பேக்கிங் செய்வதென பாரம்பரிய பொருள் விற்பனையில் பம்பரமாய் சுழல்கிறார் ஃபாத்திமா.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்