Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

6000 பெண்களின் நம்பிக்கையை சம்பாதித்து இருக்கிறேன்!

நன்றி குங்குமம் தோழி

‘‘உடைகளை அதன் நிறம் மற்றும் டிசைன்களை பார்த்துதான் நாம் தேர்வு செய்வது வழக்கம். சில சமயம் நம்மிடம் இருக்கும் நிறங்களிலேயே உடைகள் கண்களில் தென்படும். அல்லது நாம் செல்லும் கடைகளில் ஒரே நிற உடைகள் மட்டுமே விற்பனையில் இருக்கும். சில சமயம் நாம் ஒரு குறிப்பிட்ட நிறத்தில் உடையினை வாங்க வேண்டும் என்று கடைக்கு செல்வோம். ஆனால் அங்கு அந்த நிறம் இருக்காது. ஆனால் இன்று அப்படி இல்லை. நாம் விரும்பும் நிறங்களை நம்முடைய உடைகளில் கொண்டு வரலாம். அதுவும் எளிய டையிங் முறையில்’’ என்கிறார் க்ருத்தி சுதா. இவர் உடைகளில் சாயம் ேபாடுவது மட்டுமில்லாமல் பெயின்டிங் குறித்த வர்க்‌ஷாப்களையும் சென்னை மற்றும் பெங்களூரில் நடத்தி வருகிறார்.

‘‘என்னுடைய பூர்வீகம் ராஜஸ்தான். பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில். படித்தது பெங்களூரில். நான் ஒரு டெக்ஸ்டைல் டிசைனர். எனக்கு சிறுவயதிலிருந்தே கலை மற்றும் கைவினைப் பொருட்கள் மீது ஆர்வம் அதிகம். இதன் ஆரம்பமாக ஓவியம் கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன். எனது ஆர்வத்தைப் பார்த்த எனது பெற்றோர் என்னை புதிய கலை வடிவங்களை கற்றுக் கொள்ள தூண்டினார்கள். என் அப்பா ஜவுளி சார்ந்த தொழில் செய்து வந்ததால், நான் துணிகளுக்கு நடுவேதான் வளர்ந்து வந்தேன். என்னுடைய துறையில் தொழில் பின்னணி உள்ளது. அந்த வகையில் டிசைனிங் மற்றும் டெக்ஸ்டைல்ஸ் மீது எனக்கு சிறிது நாட்டம் இருந்தது. 2018ல் 11ம் வகுப்பு படிக்கும் போது, ​​எனது கலைப்படைப்பைக் காண்பிக்க இன்ஸ்டாகிராம் பக்கத்தைத் தொடங்கினேன்.

16 வயதில், என் படைப்புகளை பகிர்ந்து கொள்ளும் நோக்கத்துடன் ‘The Kreative K’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தைத் தொடங்கினேன். ஆனால் அப்போது அதனைப் பற்றி எந்த ஒரு யோசனையும் இல்லாமல்தான் எனக்கான படைப்பினை நான் பொறுமையாக பதிவு செய்து வந்தேன். கொஞ்சம் கொஞ்சமாக மக்களும் என் படைப்பாற்றலை விரும்பத் தொடங்கினார்கள். அதன் பலனே, எனது முதல் ஆர்டரைப் பெற்றேன். அப்படித்தான் எனது கலைப் பக்கம் சிறு வணிகமாக மாறியது.

இதற்கிடையில், பெங்களூரில் ஃபேஷன் தொழில்நுட்ப கல்லூரியில் சேர்ந்தேன். கோவிட் காரணமாக இரண்டு வருடங்கள் ஆன்லைனில்தான் படித்தேன். அந்த சமயத்தில் நேரம் அதிகமாக இருந்ததால், என் வணிகத்தை விரிவுபடுத்த நினைத்தேன். டிஜிட்டல் இலஸ்ட்ரேஷன் மற்றும் ரெசின் ஆர்ட் குறித்து ஆர்டர்கள் எடுத்து செய்து கொடுத்து வந்தேன். என்னுடைய கலைப் பயணத்தைப் பார்த்து சென்னை மற்றும் பெங்களூரில் பிரபலமான க்ராப்ட் ஸ்டோர் ஒன்று அவர்களின் வாட்டர்கலர்கள் குறித்து விளக்கம் அளிக்க சொல்லி என்னை அணுகினார்கள். அங்குதான் எனது வர்க்‌ஷாப் பயணம் தொடங்கியது.

அதன் பிறகு கல்லூரிகளில் ஃப்ளூயிட் ஆர்ட் குறித்து இலவசமாக வர்க்‌ஷாப் நடத்தினேன். அதைப் பார்த்து தன்னார்வ நிறுவனம் என்னை அணுகி அவர்களுடன் இணைந்து Tie - Dye குறித்த வர்க்‌ஷாப் நடத்த சொல்லிக் கேட்டார்கள். நானும் செய்து கொடுத்தேன். அதற்கு நாங்க எதிர்பார்க்காத அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றோம். இது எனது முதல் கமர்ஷியல் வர்க்‌ஷாப் என்பதால், அதன் மூலம் நான் பல விஷயங்களை கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன். அதனைத் தொடர்ந்து வர்க்‌ஷாப்களை நடத்த அடிக்கடி சென்னைக்கு பயணமானேன்’’ என்றவர், தான் நடத்தி வரும் வர்க்‌ஷாப்புகள் பற்றி குறிப்பிட்டார்.

‘‘ப்ளூயிட் ஆர்ட் வர்க்‌ஷாப் மட்டுமில்லாமல், ரெசின் ஆர்ட் மற்றும் Tie - Dye குறித்து இலவசப் பட்டறைகளையும் நடத்தி வருகிறேன். இதில் கல்லூரி மாணவர்கள் மட்டுமில்லாமல், கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் பிளேஸ்கூல் குழந்தைகள் என அனைத்து வயதினருக்கும் அவர்களுக்கு ஏற்ப வர்க்‌ஷாப்களை செய்கிறேன். என்னுடைய வர்க்‌ஷாப்பிற்கு வரும் பெரும்பாலானோருக்கு அந்தக் கலையினை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். அவர்கள் காட்டும் அந்த ஆர்வம்தான் என்னை மென்மேலும் பல வர்க்‌ஷாப்களை நடத்த வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டியது.

இதன் மூலம் நாம் மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுத்தாலும் என்னை நானே மெருகேற்றிக் கொள்வதற்காகவும் அமைந்தது. குறிப்பாக எனக்கான தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள உதவியது. இவற்றை பார்க்கும் போது எனக்கு தோன்றுவது ஒரே எண்ணம்தான். நான் இந்தக் கலைகளை கற்றுக் கொண்ட போது, அதற்கான வர்க்‌ஷாப்களை நடத்துவேன் என்று நினைக்கவில்லை. குறிப்பாக என்னுடைய சிறிய கூட்டில் இருந்து வெளியேறி என்னாலும் பல விஷயங்களை கற்றுக் கொள்ள முடியும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

இதுவரை இந்தக் கலையின் மூலம் 6000க்கும் மேற்பட்ட மக்களின் நம்பிக்கையை சம்பாதித்து இருக்கிறேன். என்னை பொறுத்தவரை வர்க்‌ஷாப் நடத்துவது பணத்திற்காக மட்டுமல்ல... ஒரு கலையை ஒருவருக்கு சொல்லிக் கொடுக்கும் போது, அதுவே அவர்களின் தொழிலாக மாற வாய்ப்புள்ளது என்பதையும் உணர்ந்தேன். படித்துக்கொண்டே இந்த வேலையும் பார்ப்பது அவ்வளவு சுலபமாக இல்லை என்றாலும், என் குடும்பத்தினர் எனக்கு கொடுத்த ஆதரவினால் என்னால் அதை எந்த தடையுமில்லாமல் செய்ய முடிகிறது.

எனக்கு ஒரு கனவுண்டு. நான் எந்த தொழில் துவங்கினாலும், அதனை முழுமையாக கற்றுக் கொண்டுதான் துவங்க வேண்டும் என்று விரும்பினேன். தற்போது பட்டப்படிப்பு முடித்துவிட்டு சென்னைக்கே வந்துவிட்டேன். டெக்ஸ்டைல் ​​டிசைனிங் ஃப்ரீலான்ஸ் முறையில் செய்ய திட்டமிட்டுள்ளேன். காரணம், அப்போதுதான் என்னால் பிசினஸ் மற்றும் வர்க்‌ஷாப் இரண்டிலும் கவனம் செலுத்த முடியும். என்னுடைய 16 வயதில் துவங்கிய இந்தப் பயணம் தற்போது பலரின் வாழ்க்கையில் என்னால் அவர்களுக்கு தனிப்பட்ட அங்கீகாரத்தை ஏற்படுத்தி தர முடிந்துள்ளது என்று நினைக்கும் போது மனதுக்கு நிறைவாகவும் பெருமையாகவும் உள்ளது’’ என்று புன்னகைத்தார் க்ருத்தி சுதா.

தொகுப்பு: காயத்ரி காமராஜ்