நன்றி குங்குமம் தோழி
கல்யாணம், பிறந்தநாள் போன்ற விழாக்களில் ரிட்டன் கிஃப்ட் தரும் வழக்கம் தற்போது ஃபேஷனாகி வருகிறது. இதற்காக கடைகளில் ரெடிமேட் பேக் வகைகள் கிடைத்தாலும் பிரத்யேகமாக நாம் விரும்பும் டிசைன்களில் பேக்குகளை வடிவமைத்து வாங்கும் வழக்கம் அதிகமாகிவிட்டது.
சிறு சிறு குடும்ப விழாக்களில் கூட வந்து கலந்து கொள்ளும் விருந்தாளிகளுக்கு தரமான அழகான கிஃப்ட்டுகளை வழங்கி தங்கள் மதிப்பை உயர்த்திக்கொள்ள நினைப்பது பலருக்கும் கௌரவமான விஷயமாகி விட்டது. இதனையே தொழிலாக செய்தால் என்ன என்கிற யோசனை எழ ‘சிட்டி பேக்ஸ்’ என்ற பெயரில் பைகள் தயாரிக்கும் யூனிட்டை துவங்கி அந்த தொழிலை மிகவும் வெற்றிகரமாக நடத்தி வருகிறார், ஈரோட்டை சேர்ந்த பிரவீணா தரன். ஈரோடு பகுதிகளில் இவரது ஜூட் பைகள் மிகவும் பிரபலம்.
தொழில்முனைவோர்..?
சின்ன வயதிலிருந்தே தனியா ஒரு பிசினஸ் செய்து சாதிக்கணும் என்கிற ஒரு பெருங்கனவு இருந்தது. நான் படிச்சது B.B.A. அதன் பிறகு கிடைத்த வாய்ப்பெல்லாம் பயன்படுத்தி கிடைக்கற பல வேலைகளையெல்லாம் செய்திருக்கேன். அதன் பிறகுதான் சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்ற என் கனவினை நினைவாக்க, இந்த தொழிலை 2018ம் ஆண்டு ஆரம்பிச்சேன். இங்கு பருத்தி மற்றும் சணல் பைகள் மட்டுமே தயாரித்து வருகிறோம்.
எனது கடும் முயற்சியினால், இதன் தரத்தினை உயர்த்தி, வாடிக்கையாளர்கள் கேட்கும் பல டிசைன்களை அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வடிவமைத்து தருகிறேன். அதுதான் என்னுடைய சிறப்பம்சம். இதுதான் என் தொழிலை நல்ல நிலையில் சிறப்பாக நடத்த உதவுகிறது. இன்று உலகின் பல பகுதிகளில் இருந்து வாடிக்கையாளர்கள் என் பைகளை வாங்குகிறார்கள்.
தொழிலின் ஆர்வம்..?
கொரோனா காலத்திற்குப் பிறகு செல்போன் நம்முடைய பாதி நேரத்தை ஆக்கிரமித்துக் கொள்ள ஆரம்பித்துள்ளது. நானும் என்னுடைய பாதி நேரத்தை சோஷியல் மீடியாவில் செலவு செய்ய ஆரம்பித்தேன். இது நல்லதல்ல என்று எனக்கே ஒரு கட்டத்திற்கு பிறகு தலையில் நங்கூரம் பாய்ந்தது போல் இருந்தது. அந்த நேரத்தினை நல்ல முறையில் செலவிட செய்ய நினைத்தேன். அந்த சமயத்தில்தான் வானொலியில் ஒரு பிரபல வங்கியின் ஊரக வளர்ச்சி பிரிவில், தொழிற் பயிற்சியாக சணல் மற்றும் துணிப்பை தைக்க கற்றுத் தருவதாக செய்தி பற்றி விளம்பரம் கேட்டேன்.
சும்மா செல்போனை பார்த்துக் கொண்டு இருப்பதற்கு பதில் இது போல் உபயோகமான வேலையில் ஈடுபடலாம்னு நினைத்துதான் அந்த பயிற்சிக்காக விண்ணப்பித்தேன். 16 நாட்கள் தொடர்ந்து அந்த பயிற்சியினை வெற்றிகரமாக முடித்து சான்றிதழும் பெற்றேன். அதன் பிறகு தோழி ஒருவர் தன் மகன் திருமணத்திற்கு 1500 பைகள் ஆர்டர் கொடுத்தார். அதுதான் என்னுடைய முதல் ஆர்டர்.
தைக்க கற்றுக்கொண்ட பிறகு கிடைத்த முதல் ஆர்டர் என்பதால், நான் பல சறுக்கல்களை சந்தித்தேன். ஒரு பெரிய போராட்டத்திற்கு இடையேதான் அந்த ஆர்டரை சிறப்பாக செய்து முடித்தேன். பைகள் அனைத்தும் சிறப்பாக இருந்ததாக அனைவரும் பாராட்ட, அதில் இருந்து எனக்கு மற்ற ஆர்டர்களும் கிடைக்க ஆரம்பித்தது. அப்படி உருவானதுதான் சிட்டி பேக்ஸ் நிறுவனம்.
தொழிலின் தனிச்சிறப்புகள்..?
என்னுடைய தொழிலில் நான் முக்கியமாக கருதுவது வாடிக்கையாளர்களின் திருப்தி மட்டுமே. குறிப்பாக கஸ்டமைஸ்ட் பொருட்கள். அதனை வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப நாங்க பிரத்யேகமாக வடிவமைத்து தருகிறோம். பொதுவாக கடைகளில் ஒரு குறிப்பிட்ட அளவு மாடல்கள்தான் இருக்கும். அப்படி இல்லாமல் வாடிக்கையாளர்கள் விரும்பும் டிசைன்கள் மற்றும் அளவுகளுக்கு ஏற்ப நான் வடிவமைத்து தருகிறேன். முதலில் அவர்கள் கேட்கும் டிசைன்கள் மற்றும் அளவிற்கு ஏற்ப சில மாதிரிகளை தருவோம். அதில் அவர்கள் மாற்றங்கள் செய்து தருவார்கள். அதன் பிறகுதான் நாங்க முழுமையாக வேலையில் இறங்குவோம். தீம் மற்றும் நிறங்கள் என கான்செப்ட் பைகளும் தயாரிக்கிறோம்.
கஸ்டமைஸ்ட் மாடல்..?
ஒரு முறை வி.ஐ.பி ஒருவரின் வீட்டு விழாவிற்காக தமிழ் எழுத்துகள் வைத்து டிசைன் செய்யப்பட்ட பைகளை ஸ்பெஷலாக வடிவமைத்து தந்தேன். அது அவர்களுக்கு ரொம்பவே பிடித்திருந்தது. அவர்கள் அடுத்து கல்யாண இன்விடேஷன் போல தாம்பூலப் பை வேண்டும் என்று கேட்டிருந்தார்கள். அதையும் சிறப்பாக செய்து முடித்தோம். அதைப் பார்த்து குழந்தைகளுக்கான மாரத்தான் போட்டியில் பங்கு பெறும் குழந்தைகளுக்கு வழங்குவதற்கான பிரத்யேக பைகளுக்கான ஆர்டர் கிடைத்தது.
குழந்தைகளுக்கு பிடிக்கும் டிசைன்களை கொண்டு வடிவமைத்து தந்தேன். மேலும் சில கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அவர்களின் கம்பெனி லோகோவுடன் அழகான டிசைன்களில் பைகளை வடிவமைத்து தருகிறேன்.
வியாபார தளங்கள்..?
நாங்க பெரிய அளவில் விளம்பரங்கள் எல்லாம் செய்ததில்லை. எங்களின் தரம் மற்றும் நியாயமான விலையை பார்த்துதான் ஒருவர் மூலம் மற்றொருவர் என வாய்மொழியாகத்தான் ஆர்டர் தருகிறார்கள். இதன் மூலம்தான் நாங்க அதிக அளவில் வாடிக்கையாளர்களை பெற்றுள்ளோம் என்பது எங்களுக்கு பெருமையாகவே உள்ளது. சமூக ஊடகங்களான முகநூல் மற்றும் இன்ஸ்டா மூலமாகவும் பலரும் எங்களை தொடர்பு கொள்வார்கள். அவர்களுக்கு ஏற்றவாறு பொருட்களை செய்து தருகிறோம். தற்போது உலகெங்கும் எங்களுக்கு வாடிக்கையாளர்கள் விரிந்துள்ளனர்.
உங்கள் தயாரிப்புகள்..?
திருமணத்திற்கான தாம்பூல பைகள்தான் அதிக அளவில் தயாரித்து தருகிறோம். வழக்கமாக கொடுக்கும் மஞ்சள் பைகளுக்கு மாற்றாக மாடலா இப்போதைய ட்ரெண்டுக்கு ஏற்றவாறு செய்து கொடுக்கிறோம். எல்லா வகையான கைப்பைகள், பவுச்சுகள், மணி பர்ஸ் வகைகள், மொபைல் பவுச், சுருக்கு பைகள் என அனைத்தும் டிரெண்டியாக சந்தைப்படுத்தியுள்ளேன். கொரோனா காலக்கட்டத்தில் கூட நாங்கள் முடங்கி விடாமல் காட்டன் மாஸ்க் தயாரித்து விற்பனை செய்தோம். மகளிர் குழுக்களுடன் இணைந்து அவர்களுக்கும் வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தருகிறோம்.
எதிர்கால திட்டங்கள்..?
எங்களின் தயாரிப்பு இடத்தினை மேலும் பெரிய அளவில் கொண்டு வரணும். சில வேலைகளை வெளியே ெகாடுத்துதான் செய்து வருகிறோம். அப்படி இல்லாமல் அனைத்தையும் எங்களின் ஒரு கூரையின் கீழ் நடக்கும் தளமாக உயர்த்த வேண்டும். அதன் மூலம் தயாரிப்பு விலை குறைந்து தரமான பொருட்களை குறைந்த விலைக்கு வழங்க வேண்டும் என்பதும் எனது ஆசை. மேலும் முழுக்க முழுக்க பெண்களை கொண்ட நிறுவனமாக மாற்ற வேண்டும்.
அதிலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் ஒற்றை பெற்றோராய் இருக்கும் பெண்களுக்கு வேலையில் முன்னுரிமை தர வேண்டும் என்பது எனது பெரும் லட்சியம். அதற்கான முயற்சிகளை தற்போது சிறிதாக முன்னெடுத்தும், மேற்கொண்டும் வருகிறேன். என்னுடைய இந்த வளர்ச்சிக்கு என் மொத்த குடும்பமும் முழு ஆதரவு அளித்து வருகிறார்கள். அவர்கள் என்னுடைய பல புதிய முயற்சிகளுக்கு ஊக்குவித்தும் கைகொடுத்தும் வருகின்றனர்’’ என்கிறார் பிரவீணா ஸ்ரீதரன்.
தொகுப்பு: தனுஜா ஜெயராமன்

