Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

உங்களது தனித்துவமான அடையாளத்தை வெளிப்படுத்துங்கள்!

நன்றி குங்குமம் தோழி

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த பட்டதாரிப் பெண்மணி காயத்ரி, மைக்ரோ கிரீன்ஸ் விவசாயத்தில் சாதித்து காட்டியிருக்கிறார். ‘‘பெண்கள் சிறியதாக தொழில் தொடங்குவதற்கு பயப்பட வேண்டாம். எல்லோருக்கும் ஆரம்பத்தில் சவால்கள் இருக்கும். ஆனால், தொடர்ந்து கற்றுக் கொண்டு, பொறுமையுடன் முயற்சி செய்தால் வளர்ச்சியுடன் வெற்றி பெறலாம்’’ என்ற காயத்ரி, தான் கடந்து வந்த பாதை குறித்து பேசத் துவங்கினார்.

‘‘நான் கணிதப் பட்டதாரி. ஆசிரியர் தகுதித் தேர்விலும் தேர்ச்சிப் பெற்றுள்ளேன். ஆனால், குழந்தை பிறந்த பிறகு என்னால் வேலைக்கு செல்ல முடியவில்லை. ஒரு இல்லத்தரசியாக இருப்பதால் குடும்பத்தையும் குழந்தைகளையும் கவனித்துக் கொண்டே சிறிய அளவில் தொழில் செய்யலாம்னு நினைத்தேன். அப்படித்தான் மைக்ரோகிரீன்ஸ் தொழிலை வீட்டிலிருந்தே செய்ய துவங்கினேன்.

மைக்ரோகிரீன்ஸ் என்பது காய்கறி, தானிய வகைகளின் இளம் நாற்றுகளை 7 முதல் 14 நாட்களுக்குள் அறுவடை செய்யக்கூடிய நவீன சாகுபடியாகும். இதனை சிறிய டிரேக்கில் வைத்து வீட்டிலேயே வளர்க்கலாம். அல்லது மிகக்குறைந்த இடத்தில் குறைந்த முதலீட்டில் நவீன விவசாயம் போல உற்பத்தி செய்ய முடியும். ஆண்டு முழுவதும் உற்பத்தி, அதிக ஊட்டச்சத்து மதிப்பு, நகர்புறங்களில் உணவுச் சந்தையில் அதிக தேவையும் இதற்கு உள்ளது.

ஒரு ஆரோக்கியமான தொழில் செய்கிறோம் என்கிற திருப்தியும், வருமானமும் கிடைக்கிறது. இவை ஆரோக்கிய உணவு தவிர எந்த நோயையும் குணப்படுத்தும் மருந்தல்ல என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

சாதாரண காய்கறிகளை விட பலமடங்கு சக்தி நிறைந்த வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்டுகளை கொண்டுள்ளதால் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

நாங்க தற்போது 35க்கும் மேற்பட்ட வகையான விதைகள் மற்றும் பயறுகளை பயன்படுத்தி மைக்ரோகிரீன்ஸ் வளர்த்து வருகிறோம். இதில் சூரியகாந்தி, பட்டாணி, பச்சைப்பயறு, கொள்ளு, கொண்டைக்கடலை, வெந்தயம், முள்ளங்கி, கோதுமை, கடுகு, சிவப்புத் தண்டுக்கீரை, சிவப்பு முள்ளங்கி, கருப்பு உளுந்து, காராமணி போன்றவை முக்கியமானவை. தொடர்ந்து புதிய வகையில் பயறுகளை கொண்டு வர ஆராய்ந்து வருகிறோம்.

மக்கள் தினசரி உணவில் எளிதாக சேர்க்கும் விதத்தில் மைக்ரோகிரீன்ஸ்களை சூப், ஹெல்த் மிக்ஸ், ஸ்மூத்தி மிக்ஸ், மைக்ரோகிரீன்ஸ் மால்ட், புரோட்டீன் மிக்ஸ், ஆரோக்கிய உணவு கிட்கள் மற்றும் பயிற்சி வகுப்புகள் போன்ற புதிய முயற்சிகளை திட்டமிட்டு வருகிறோம்.

வாடிக்கையாளர்களுக்கு நேரடியாகவும், மாதச் சந்தா முறையிலும் வழங்குகிறோம். அத்தோடு ஹோட்டல்கள், ஜூஸ் கடைகள், ஆரோக்கிய உணவகங்கள், சூப்பர் மார்க்கெட்டுகள், நம்மாழ்வார் பசுமை உணவகங்கள் ஆகியவற்றுடன் இணைந்து, Tray உடன் விற்பனை செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறோம். மைக்ரோகிரீன்ஸை சாலட், சூப், சாண்ட்விச், மைக்ரோகிரீன்ஸ் சப்பாத்தி, தோசை, கூட்டுப் பொரியல் மற்றும் உணவுகளில் அலங்காரத்திற்காகவும் பயன்படுத்தலாம் என்ற விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறோம். பொதுவாக முளைகட்டிய பயறுகளை 24 முதல் 48 மணி நேரத்திற்குள் சாப்பிடுவது சிறந்தது. குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்தால் 2-3 நாட்கள் வரை பயன்படுத்தலாம். ஊட்டச்சத்து அதிகம்.

எங்களிடம் சொந்த நிலம் இல்லை. இருக்கும் இடத்திலேயே, வீட்டிலிருந்தே மைக்ரோகிரீன்ஸ் வளர்த்து வருகிறோம். மைக்ரோகிரீன்ஸின் சிறப்பு இதனை பயிர் செய்ய பெரிய நிலம் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. சிறிய இடத்தில் தரமான முறையில் உற்பத்தி செய்ய முடியும். தற்போது குடும்ப உறுப்பினர்களின் உதவியுடனும் மேலும், ஒருவரையும் உதவிக்கு வைத்து தொழிலை நடத்தி வருகிறோம். தேவை அதிகரிக்கும் போது மேலும் வேலை வாய்ப்புகளை பெண்களுக்கு உருவாக்கும் திட்டமும் உள்ளது.

மக்கள் தினசரி உணவில் எளிதாக சேர்க்கும் விதத்தில் மைக்ரோகிரீன்ஸ்களை சூப், ஹெல்த் மிக்ஸ், ஸ்மூத்தி மிக்ஸ், மைக்ரோகிரீன்ஸ் மால்ட், புரோட்டீன் மிக்ஸ், ஆரோக்கிய உணவு கிட்கள் மற்றும் பயிற்சி வகுப்புகள் போன்ற புதிய முயற்சிகளை திட்டமிட்டு வருகிறோம். மேலும், பள்ளி, கல்லூரி மற்றும் விவசாய பயிற்சி மையங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்த ஆர்வமாக உள்ளோம்.

என் கணவர் மற்றும் குடும்பத்தினர் தொடர்ந்து ஊக்கமும் ஆதரவும் அளித்து வருகிறார்கள். என்னுடைய பலமே என் அம்மாதான். இது பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு சிறந்த சுய தொழில். சிறு தொழில் செய்ய விரும்புபவர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய திறமையை நம்பி முதல் அடியை எடுத்து வையுங்கள். நமக்குள் இருக்கும் தன்னம்பிக்கை மற்றும் நம்முடையை தனித்துவமான அடையாளத்தையும் வெளிப்படுத்தும்’’ என்றார் காயத்ரி.

தொகுப்பு: மதுரை ஆர்.கணேசன்