நன்றி குங்குமம் தோழி
பெண்கள் படிக்கிறார்கள், வேலைக்குச் செல்கிறார்கள். சில பெண்கள் வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்கக்கூடிய வழியினை அமைத்துக் கொண்டு அதில் தங்களுக்கு என ஒரு அடையாளத்தை அமைத்துக் கொள்கிறார்கள். வீட்டில் இருந்து கொண்டு என்ன வருமானம் பார்க்க முடியும் என்ற கேள்விகளுக்கு இன்றைய பெண்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். தனக்கான ஒரு வருமானத்தை இதில் ஈட்ட முடியும் என்பதை நிரூபித்தும் உள்ளனர். அப்படிப்பட்ட பெண் தொழில்முனைவோர்களுக்காகவே சென்னையில் இம்மாதம் நான்காம் தேதி ‘அமிதிஸ்ட் ஃபோலி’ கூடத்தில் கண்காட்சி நடைபெற இருக்கிறது. இதில் சிறு தொழிலில் ஈடுபட்டு வரும் பெண்கள் தங்களின் பொருட்களை விற்பனைக்காக வைக்க இருக்கின்றனர்.
‘‘ஸ்டைல் சிகா என்னுடைய கனவு பிராஜக்ட்’’ என்று பேசத் துவங்கினார் குன்ஜெயின். ‘‘நான் அடிப்படையில் சமூக வலைத்தளத்தில் இன்ஃப்ளூயன்சராக இருக்கிறேன்.‘சுஸ்டி’ என்ற பிராண்டின் இணை நிறுவனராகவும் உள்ளேன். இதில் பிளாக் பிரின்ட் டிசைன்கள் கொண்டு ஷர்ட்டுகளை விற்பனை செய்து வருகிறோம். நானும் ஒரு தொழில்முனைவோர் என்பதால், என்னைப் போல் இருக்கும் பலருக்கு ஒரு பிளாட்ஃபார்ம் அமைத்து தர விரும்பினேன். அதன் அடிப்படையில் துவங்கப்பட்டதுதான் ஸ்டைல் சிகா. எங்களின் முக்கிய நோக்கமே பெண் தொழில்முனைவோரினை நேரடியாக மக்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டும் என்பதுதான். மேலும் இதன் மூலம் அவர்களுக்கும் விற்பனை குறித்த ஒரு அனுபவம் கிடைக்கும்.
பெண்கள் பலர் வீட்டில் இருந்தபடியே தொழிலை செய்து வருகிறார்கள். தங்களுக்கு தெரிந்தவர்கள், நண்பர்கள், உறவினர்கள்தான் இவர்களின் பெரும்பாலான வாடிக்கையாளர்களாக இருப்பார்கள். நல்ல திறமை மற்றும் பொருட்களில் தரம் இருந்தும், அதனை எவ்வாறு மார்க்கெட்டிங் செய்வது என்று சிலருக்கு புரியாது. ஒரு சிலர் சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் தங்களுக்கான மார்க்கெட்டிங் செய்து கொள்கிறார்கள்.
நண்பர்கள், உறவினர்கள் மற்றும் இணையம் மூலம் புதுப்புது வாடிக்கையாளர்கள் இவர்களை நாடினாலும், நேரடியாக வாடிக்கையாளர்களை சந்திக்க ஒரு வாய்ப்பினை ஏற்படுத்த துவங்கப்பட்டதுதான் ஸ்டைல் சிகா. இது முழுக்க முழுக்க பெண் தொழில்முனைவோர்களுக்கான கண்காட்சி என்றுதான் சொல்ல வேண்டும். அவர்கள் தங்களின் பொருட்களை இங்கு விற்பனைக்காக வைக்கலாம். இதன் மூலம் புதிய வாடிக்கையாளர்கள் அவர்களுக்கு கிடைக்கவும் வாய்ப்புள்ளது. இவர்களின் பொருட்கள் பிடித்திருந்தால் அவர்கள் நிரந்தர வாடிக்கையாளராகவும் மாறுவார்கள்.
கண்காட்சியில் உணவு முதல் நகைகள், உடைகள், காலணிகள், கைப்பைகள், கைவினை ஆபரணங்கள், கைவினைப் பொருட்கள், சருமப் பராமரிப்புப் பொருட்கள் என அனைத்தும் இக்கண்காட்சியில் இடம் பெற இருக்கிறது. இணையத்தின் மூலம் மட்டுமே தங்களின் பொருட்களை விற்பனை செய்பவர்கள் இக்கண்காட்சியில் பங்கு பெற இருக்கிறார்கள். வாடிக்கையாளர்களுக்கு அனுமதி இலவசம் என்பதால் அனைவரும் வரலாம்... பொருட்களை பெற்று பெண் தொழில்முனைவோர்களுக்கு ஆதரவு தரலாம். நீங்களும் ஒரு தொழில்முனைவோராகவும் மாறலாம்’’ என்றார் குன்ஜெயின்.
தொகுப்பு: நிஷா


