Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

நான் செய்வதெல்லாம் என் மகனுக்காக...

நன்றி குங்குமம் தோழி

ஒரு வீட்டின் அடித்தளம் செங்கல் கற்களால் உருவானதில்லை. நாம் கடந்துவந்த சவால்களால் உருவானது. திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஹேமலதா-சிவபாலன் இணையரின் உலகம், சுவரில்லாத சித்திரமாய் கலைந்த நொடி, அவர்கள் எடுத்த ஒற்றை முடிவு இன்று 11 பேருக்கு மறுவாழ்வு கொடுத்ததுடன், அவர்கள் தொழிலில் வெற்றியைதந்துள்ளது. என்ன நடந்தது. வாங்க பார்க்கலாம்...

2024 ஜூலை, 28. கல்லூரியில் படித்து வந்து நரேன் என்கிற 19 வயது இளைஞன் தன் நண்பர்களோடு காரில் சென்றபோது, சாலையில் நிகழ்ந்த கோர விபத்தில் சிக்க, அவருடன் பயணித்த நண்பர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்துவிடுகின்றனர். நரேனுக்கு உடம்பில் காயமோ, ரத்தம் வெளியேறலோ இல்லை. ஆனால், தலையில் பலமாக அடிபடுகிறது.மூளைக்குச் செல்லும் ரத்தம் உறைந்த நிலையில், மூளை செயலிழக்கிறது. நரேன் சுவாசித்தாலும் உயிருடன் இல்லை. ரேன் இஸ் ப்ரெயின் டெத் என மருத்துவ உலகம் சொல்லும்போது, பாச உணர்வுகளால் பின்னப்பட்ட பெற்றோரின் மனம் எப்படி இதை ஏற்கும்?

மருத்துவமனையில நரேன் 11 நாட்களும் உயிருக்குப் போராட, பெற்றோர்கள் நம்பிக்கையை விடவில்லை. நரேன் மூளை செயலிழந்தாலும், தாயின் குரலும்... தொடு உணர்வும்... நரேனுக்குள் ஏதாவது ஒரு ரசாயன மாற்றத்தை உருவாக்கும் என்கிற அறிவியல் கலந்த நம்பிக்கையில், நரேனின் தாய் ஹேமலதாவை, நரேன் இருந்த ஐசியு அறைக்குள் சென்று தொட்டு பேச மருத்துவர்கள் அறிவுறுத்த, ஒரு நாளைக்கு 10 முறை அந்த தாய், தன் நெஞ்சில் படுத்து தூங்கிய மகன் கால்களைப் பிடித்து கதறி அழுகிறார்.

நரேன் விடைபெற இருந்த இறுதிநாள், அதிகாலை 4 மணி முதல் 5 மணி வரை, மகன் உடலை தொட்டு அவர் உடலெங்கும் முத்தமிட்டவர், நரேனிடம் ஏன் இந்த பூமிக்கு வந்த? இப்ப எங்களை விட்டு ஏன் போற? என கண்ணீர் ததும்ப கேள்விகளைக் கேட்டு மகனோடு இதயபூர்வமாய் பேசுகிறார். ஒரு மணி நேர இந்த உரையாடலில், மகனுக்கும் தனக்கும் இருந்த ஆத்மார்த்தமான தொடர்பு கொஞ்சம் கொஞ்சமாக அறுபடுவதை ஹேமலதா உணர்கிறார். மாவின் உள்ளுணர்வு

மகனின் நிரந்தர பிரிவை உணர்த்த ஆரம்பிக்க, துயரத்தின் உச்சத்தில் இருந்த அந்தத் தாய், எப்படி தன் மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்யும் முடிவுக்கு நகர்ந்தார் என்பதே இந்த ஒட்டு மொத்த சம்பவத்தில் நாம் உணர வேண்டிய விஷயம். ஹேமலதா இதற்கு சொன்ன காரணம்...

‘‘என் மகன் நரேன் நான்கு வருடமாக தொடர்ந்து ஜிம்மிற்கு செல்பவன். அவனது உடலின் மீது அவனுக்கு அதீத காதல் உண்டு. அவனது உயரம் 172 சென்டி மீட்டர். எடை 96 கிலோ. விபத்தை சந்தித்து உயிருக்குப் போராடும் நிலையிலும், அதே உடற்கட்டோடு உயிரோடு இருக்கும் போது படுத்திருப்பதைப் போன்றே அவனை நான் பார்த்து வருகிறேன். தன் உடலை நேசித்த நரேனின் உடல், இந்த மண்ணில் சாம்பலாய் கரைந்து வீணாகக் கூடாது.

மூளை சாவு அடைந்தாலும், ஆரோக்கியமாய் எனர்ஜியா இருக்கிற என் மகனின் உடல் உறுப்புகளையாவது நான் வாழ வைக்க வேண்டும் என அந்த நொடியில் முடிவெடுத்தேன்’’ என்றவர், கணவரிடமும், மருத்துவர்களிடமும் தன் விருப்பத்தை உடனே தெரிவிக்கிறார்.

ஹேமலதாவின் இந்த முடிவுக்கு காரணம் கணவர் சிவபாலன். ஆம்! சிவபாலன் போலியோவால் பாதிக்கப்பட்ட தவழும் மாற்றுத்திறனாளி. ‘‘உடல் குறைபாட்டில் பிறப்பவர்கள், இந்த சமூகத்தில் படும் சிரமங்களை, அருகில் இருந்து என் கணவர் மூலமாக பார்த்தவள் என்கிற முறையில், ஒரு உறுப்புலில் இல்லை என்றாலும், வாழ்க்கை சுருங்கிப் போகும் என எனக்குத் தெரியும்.

நான் பார்த்து பார்த்து... ஊட்டி ஊட்டி வளர்த்த நரேனின் உடல் உறுப்புகள் வீணாகாமல், அவரின் இதயம், இரண்டு சிறுநீரகங்கள், கணையம், கல்லீரல், நுரையீரல், மண்ணீரல், இரண்டு கண்கள், துணை உறுப்புகள், தோல் மற்றும் விரல் எலும்புகளையும் தானம் செய்ய முடிவெடுத்தோம். தன் மகன் நரேனின் மரணம் முடிவல்ல... இன்னொரு உடலுக்குள் நடக்கும் தொடர்ச்சி’’ என நம்ப ஆரம்பிக்கிறார்கள் ஹேமலதா-சிவபாலன் இணையர்.

கடுமையான மருத்துவ நெறிமுறைகள், உறவினர்கள் எதிர்ப்பு, சொந்த மனப் போராட்டம் என எல்லாவற்றையும் கடந்து முடிவில் இறுதிவரை உறுதியாக, தெளிவாக நிற்கிறார்கள்.இருட்டை நீக்க விளக்கேற்றினால் அந்த வெளிச்சத்தை பார்த்து பாராட்டாமல், பூதக் கண்ணாடி கொண்டு இருட்டையே தேடும் உலகம் இது. ஒரு மனுஷன் துக்கத்தில் இப்படித்தான் இருக்கணும் என சமூகம் வரைந்த வரைபடத்தை மீறினால் அவர்களை பழுதான பொருளைப்போல விசாரிக்கத் தொடங்குவர் இல்லையா, ஹேமலதா-சிவபாலன் தம்பதியருக்கும் இதுதான் நடந்தது.

இதனால் வீட்டுக்குள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்ட இருவரும், உடல் ரீதியாக சில உபாதைகளையும் சந்திக்கின்றனர். அதிலிருந்து தங்களை மீட்டெடுக்க, நரேன் நினைவாக தன்முனைப்போடு மீண்டும் எழுந்து நிற்க முயற்சிக்கிறார்கள்.ஹேமலதா சொல்கிறார், ‘‘நரேன் ஜிம் பாய் மட்டுமில்லை... உணவுப் பிரியரும். இயற்கை விவசாயத்தில் ஆர்வம் உள்ளவர். இயற்கை உணவுகளை தேடித்தேடி

உண்பவர். எங்கள் வீட்டு மாடியில் நானும் நரேனும் ஆர்கானிக் தோட்டம் ஒன்றை வைத்திருந்தோம். தனியாக விவசாயத் தோட்டம் ஒன்றை வாங்கி, அதில் இயற்கை முறையில் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம் செய்து, உணவு உற்பத்தியில் கால் பதிக்க வேண்டும் என்பது நரேனின் கனவுகளில் ஒன்றாய் இருந்தது.

எங்கள் ஊரைச் சுற்றி விவசாயம் சார்ந்து எந்த நிகழ்ச்சி நடந்தாலும், என்னையும் அழைத்துக் கொண்டு நரேன் அங்கு செல்வார். பல்வேறு சிறு, குறு விவசாயிகளை அவரும் நானும் சந்தித்து விவசாயம் சார்ந்து நிறைய சியிருக்கிறோம். கல்லூரியில் படித்தவாறே, ஆர்கானிக் உணவுப் பொருள் தயாரிப்பில் என்னை முன்னிறுத்தி, என் பின்னால் நின்று என்னை ஊக்குவித்தவர். இன்று நரேன் இல்லை.

ஆனால், அவன் இதயம் எங்கோ ஓர் இடத்தில் துடித்துக்கொண்டேதான் இருக்கிறது. அவன் நினைவாய் ‘மை நரேன் ஃபுட் இன்டஸ்ட்ரீ’ என்ற பெயரில் ஆர்கானிக் உணவுப் பொருட்கள் தயாரிப்பை தொடர்ந்து நடத்தி வருகிறேன்’’ என்கிற ஹேமலதா, இன்றைய இளைஞர்களும், குழந்தைகளும் விரும்புற நவீன மேற்கத்திய உணவு வடிவங்களில், நம் பழங்கால தானியங்கள் மற்றும் மூலிகைகளை ஒளித்து வைத்து உணவாய் கொடுக்கும் முயற்சியில் தன்னை முழுமையாய் ஈடுபடுத்தியுள்ளார்.

அதாவது, சாக்லேட் மூஸ்லி, ஸ்டாபெர்ரி மூஸ்லி, ஹனி ஃப்ளேவர் மூஸ்லி, கோதுமை பீட்ரூட் மூஸ்லி, கோதுமை முருங்கை மூஸ்லி, கம்பு, சாமை, வரகு போன்ற தானியங்களிலும் மூஸ்லி, கோதுமை பீட்ரூட் நூடுல்ஸ், கோதுமை முருங்கை நூடுல்ஸ், மல்டி கிரெயின் நூடுல்ஸ், கம்பு, சாமை, வரகு நூடுல்ஸ் மற்றும் பாஸ்தா மாதிரியான மேற்கத்திய உணவுப் பொருட்களையும் பாரம்பரியமான வீட்டு தயாரிப்பு முறையில் தயாரித்து விற்பனையில் அசத்துகிறார்.

அத்துடன் துளசி பிஸ்கெட், தூதுவளை பிஸ்கெட், முடக்கத்தான் பிஸ்கெட், திருநீற்று பச்சை பிஸ்கெட், வல்லாரை பிஸ்கெட், ஆம்லா பிஸ்கெட், நவதானிய பிஸ்கெட், கருப்பு கவுனி, கம்பு, ராகியால் செய்த பிஸ்கெட் என 24 வகையான பிஸ்பிஸ்கெட்டுகள், குழந்தைகள் செர்லாக் பவுடராக பீட்ரூட் மால்ட், கேரட் மால்ட், ஏபிசி மால்ட், ரெட் பனானா மால்ட் என 4 வகை

யான மால்ட்டுகளையும் தயாரிக்கிறார்.

மேலும், 15 வகையான மசாலாப் பொருட்கள், கொங்குநாட்டு சாம்பார் பொடி, 8 வகையான சாதப் பொடி, ஊறுகாய் வகைகள், 2 விதமான களி மிக்ஸ், மூலிகை சூப் மிக்ஸ், தானிய அவல்கள், பச்சைப் பயறு அவல், கருப்பு கவுனி வெயிட் லாஸ் மிக்ஸ், டேட்ஸ் பவுடர், உளுந்தம் கஞ்சி பவுடர், முளைகட்டிய சத்து மாவு, 5 விதமான ஹெர்பல் பவுடர், இவற்றுடன், விவசாயிகளிடமிருந்து நேரடி கொள்முதல் செய்த எள், கடலையில் எடுக்கப்பட்ட ஒரிஜினல் நல்லெண்ணெய், கடலெண்ணெய், தேங்காய் எண்ணெய், சுத்தமான நாட்டு மாட்டு நெய் போன்றவற்றையும், மை நரேன் ஃபுட்ஸ் வழியாக ஆர்டர்களாகப் பெற்று அஞ்சல் வழியாக அனுப்பி வைக்கிறார்.

வெளிப்படைத் தன்மைதான் ஆகச்சிறந்த மார்க்கெட்டிங் என்கிற ஹேமலதா, தரத்தை உறுதி செய்கிற வகையில், ஆர்டர் வந்து உறுதியான பிறகே, பொருட்களை தயாரித்து அனுப்புகிறேன் என்பதுடன், தமிழகம் தாண்டி கர்நாடகா, ஆந்திரா மற்றும் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களும் ஆர்டர் செய்கிறார்கள் என்கிறார்.பாரம்பரிய முறைகளை இறுகப் பிடித்து, அதேசமயம் நவீன வாழ்க்கை முறைக்கு ஏற்ப, உணவின் வடிவங்களை மாற்றியதே என் அசுர வளர்ச்சிக்கும், மனநிலை மாற்றத்துக்கும் காரணம் என்றவாறு விடைபெற்றார்.

செய்தி: மகேஸ்வரி நாகராஜன்

படங்கள்:எபினேசர்