Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

மண் வாசனையில் மலர்ந்த தொழில் முனைவு!

நன்றி குங்குமம் தோழி

ஒரு கிராமத்துப் பெண், தன் கை மணத்தையே மூலதனமாகக் கொண்டு உலகின் பல்வேறு இடங்களில் வசிக்கும் மக்களிடம் கவனத்தை ஈர்க்க முடியும் என்பதற்குத் திருவாரூர் மாவட்டம், மேலநாகை கிராமத்தைச் சேர்ந்த மலர் ஒரு சிறந்த உதாரணம். விவசாயக் கூலித் தொழிலாளியாகத் தன் வாழ்க்கையைத் தொடங்கி, இன்று தன்னை சுற்றியுள்ள பெண்கள் சிலருக்கு வேலை வாய்ப்பளிக்கும் ஒரு தொழில்முனைவோராக அவர் உருவெடுத்துள்ள கதை மிகவும் உத்வேகமானது.

“திருவாரூர் மாவட்டம், மன்னார்குடிக்கு அருகில் உள்ள மேலநாகை கிராமம்தான் எங்க பூர்வீகம். நாங்க இரண்டு தலைமுறைகளாக இதே ஊரில் விவசாயத்தையே நம்பி வாழ்ந்து வருகிறோம். நான் வயலில் நாற்று நடுவது, களை எடுப்பது, காய்கறிகள் பறிப்பது என விவசாயம் சார்ந்த எல்லா வேலைகளையும் செய்து வந்தேன். என் கணவர் குமார் ஒரு சென்ட்ரிங் தொழிலாளி. வறுமையும் கடின உழைப்பும் நிறைந்த ஒரு சாதாரண கிராமத்து வாழ்க்கை முறையை நாங்க வாழ்ந்து வருகிறோம்.

இயல்பாகவே எனக்கு சமையலில் ஆர்வம் அதிகம். என் பிள்ளைகளின் நண்பர்கள் எங்க வீட்டிற்கு வரும்போது நான் சமைத்துக் கொடுக்கும் உணவு சுவையாக இருப்பதாக பாராட்டுவார்கள். ‘‘நீங்கள் ஏன் இதை ஒரு வீடியோவாகப் போடக்கூடாது?” என்று அவர்களை போல் பலரும் கொடுத்த ஊக்கம்தான் எனக்குள் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.

ஆரம்பத்தில், எங்க கிராமத்தில் இதைப் பற்றி ஏதாவது விமர்சனம் பேசுவார்களோ என்று தயங்கினேன். ஆனால், என் மகனும் மகளும் எனக்கு ஆதரவாக இருந்து என் தயக்கத்தை உடைத்தனர். என் மகன் மணிகண்டன், பி.இ.சிவில் பட்டதாரி. என் மகள் துளசி, பி.எஸ்சி இயற்பியல் பட்டதாரி. என் பிள்ளைகள் இருவரும் எனக்கு ஊக்கம் அளித்ததால், நான் சமையல் செய்வதை வீடியோ எடுக்க சம்மதித்தேன்.

இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்களில் நான் சமையல் செய்யும் வீடியோக்களை பதிவிடத் தொடங்கினர். என் பாரம்பரிய சமையல் முறையை கண்ட மக்கள், ‘‘நீங்கள் பயன்படுத்தும் மசாலாப் பொருட்களை எங்களுக்கும் தயாரித்துக் கொடுப்பீர்களா?” என்று கேட்கத் தொடங்கினார்கள். தொடக்கத்தில் இது போல கேட்பவர்களுக்காகவே சிறிதளவில் பொருட்களை தயாரிக்க தொடங்கினேன்” எனும் மலரின் வணிகப் பயணத்தின் தொடக்கப்புள்ளியாக இது அமைந்துள்ளது. பாரம்பரிய முறையிலான தரமான தயாரிப்புகள் குறித்து அவர் விளக்குகையில்...

“என் தயாரிப்புகள் தனித்துவமாக இருப்பதற்கு முக்கியக் காரணம் நான் பின்பற்றும் பாரம்பரிய முறைகள்தான். மசாலாப் பொருட்களைத் தயாரிக்கும்போது, அவற்றை வெயிலில் காயவைத்து, வறுத்து, ‘திருவை’(கல் இயந்திரம்) கொண்டு அரைத்து விடுவேன். என் பாட்டியின் பக்குவத்தில் தயாரிக்கப்படும் இந்த மசாலாக்கள் ஆறு முதல் எட்டு மாதம் வரை கெட்டுப்போகாமல், நிறம் மாறாமல் இருக்கும்.

மோர் மிளகாய், கத்தரி வத்தல், மாங்காய் வத்தல், கொத்தவரங்காய் வத்தல், சுண்டைக்காய் வத்தல் போன்ற வத்தல் வகைகள், குழம்புத் தூள், தனி மல்லி மற்றும் மிளகாய்த் தூள், சிக்கன், மட்டன் மற்றும் மீன் மசாலா வகைகள், பிரண்டை, கறிவேப்பிலை, முருங்கைக்கீரை, பூண்டு மற்றும் வல்லாரை என ஐந்து வகையான சத்தான இட்லிப் பொடிகள் போன்றவையும் தாளிப்பு வடகம், அரிசி கிள்ளு வடகம், பீட்ரூட், கறிவேப்பிலை, வெங்காயம் மற்றும் பிரண்டை வடகங்கள் ஆகிய பொருட்களை தயாரித்து வருகிறேன்.

தேவையான காய்கறிகள், மற்ற பொருட்கள் அனைத்தையும் நேரடியாக விவசாயிகளிடம் இருந்து புதிதாக வாங்குகிறோம் என்பதால் உணவுப்பொருட்களின் சுவை என்றுமே குறைவதில்லை. சென்னை போன்ற நகரங்களில் வசிக்கும் அலுவலகம் செல்லும் பெண்கள் மற்றும் வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் என பலரும் என் தயாரிப்புகளை மிகவும் விரும்பி வாங்குகின்றனர். சுத்தமான முறையில், உப்பு அதிகம் சேர்க்காமல் தயாரிக்கப்படுவதால் மக்கள் மத்தியில் இந்தப் பொருட்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது” என்று நெகிழும் மலர், வாடிக்கையாளர்கள் பலரின் ஆதரவே தன்னை உந்திச் செல்கிறது என்பதை குறிப்பிடுகிறார்.

“என்னுடைய இந்தப் பயணம் அவ்வளவு எளிதாக அமைந்தது அல்ல. கடந்த சில ஆண்டுகளில் நான் சந்தித்த தனிப்பட்ட இழப்புகள் என்னை நிலைகுலையச் செய்தன. என் தாயார், சகோதரர், சகோதரரின் மனைவி மற்றும் தங்கை என அடுத்தடுத்து நான்கு மரணங்கள் என் குடும்பத்தில் நிகழ்ந்தன. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான நான், ஒரு கட்டத்தில் வீடியோக்கள் எடுத்து பதிவிடுவதை அப்படியே நிறுத்திவிட்டேன்.

அந்தச் சமயத்தில், என் பிள்ளைகளும், என் வீடியோக்களை பார்த்துப் பழகிய வாடிக்கையாளர்களாகிய என் சொந்தங்களும் எனக்கு பெரும் ஆதரவாக இருந்தனர். ‘‘மனம் உடையக்கூடாது, உங்கள் பிள்ளைகளுக்காக நீங்கள் எழுந்து வர வேண்டும்” என்று பலரும் எனக்கு தொலைபேசியில் அழைத்து ஆறுதல் கூறினர். மருத்துவர்களின் ஆலோசனையும், வேலையில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வது மட்டுமே அந்தத் துயரத்திலிருந்து விடுபட வழி என்ற எண்ணமும்தான் நான் மீண்டும் என் தொழிலை தொடங்க காரணம்.

தொடக்கத்தில் கூலி வேலை செய்து கொண்டு எதுவுமே தெரியாத நான், இன்று ஒரு சுயதொழில் செய்து பொருளாதார ரீதியாகவும் முன்னேற்றம் அடைந்துள்ளேன். நான் மட்டும் வளரக்கூடாது என்ற எண்ணத்தில், என் கிராமத்தைச் சேர்ந்த சில பெண்களுக்கு வேலை வாய்ப்பளித்தேன். அவர்களும் என்னுடன் இணைந்து வேலை செய்கிறார்கள். என் பிள்ளைகளின் கல்வியறிவு மற்றும் தொழில்நுட்ப உதவியால் இன்று மேலநாகை என்ற சிறிய கிராமத்திலிருந்து சென்னை போன்ற பெருநகரங்களுக்கு எனது தயாரிப்புகளை அனுப்பி வைக்கிறேன்.

எவ்வளவு தடைகள் வந்தாலும், ‘நம்மால் எதையும் சாதிக்க முடியும்’ என்ற எண்ணத்தில் தொடர்ந்து உழைத்து வருகிறேன்” என்று தன்னம்பிக்கையோடு பேசிய தன் அம்மாவை தொடர்ந்தார் மகன் மணிகண்டன், “வாழ்வில் சில இன்னல்களை சந்தித்த எங்க அம்மாவை தேற்றி, அவரால் முடிந்தவற்றை செய்ய ஊக்கப்படுத்தினோம். இன்று அம்மாவின் கைப்பக்குவத்தில் தயாராகும் பொருட்களை பலரும் விரும்புகின்றனர்.

உணவுப் பொருட்களை தயாரிக்க தேவையான மூலப்பொருட்களை ஏற்பாடு செய்வது முதல் டிஜிட்டல் மார்க்கெட்டிங், ஆர்டர் எடுப்பது போன்ற தொழில்நுட்ப வேலைகளை நானும் என் தங்கையும் எடுத்து செய்கிறோம். துளசி ட்ரடிஷனல் ஃபுட்ஸ் (Thulasi Traditional Foods) என்கிற ப்ராண்ட் பெயரில் எங்க தயாரிப்பு பொருட்கள் வெளியாகின்றன. தற்போது thulasitraditionalfoods.com என்கிற வெப்சைட் தொடங்கி, இதன் மூலமும் ஆர்டர்கள் எடுக்கிறோம். அம்மாவின் இந்த முயற்சி அனைவரின் ஆதரவுடன் மேலும் வளர வேண்டுமென விரும்புகிறோம்” என்றார்.

செய்தி: ரம்யா ரங்கநாதன்