நன்றி குங்குமம் தோழி
நான் முதல்வன்
பலருக்கும் விரும்பிய பணி கிடைத்துவிடுவதில்லை. ஆனால், கிடைத்த பணியில் இருந்து கொண்டு, தொழில்முனைவோர் ஆகும் தமது கனவை நீர்த்துப்போகச் செய்யாமல் மனதுக்குள்ளேயே அடைகாத்து, அதற்குச் செயல் வடிவமும் தந்து வெற்றி பெற்றிருக்கிறார் பிரேமா சுப்ரமணியன். இவரது ஒவ்வொரு நகர்விலும் அதைரியப்படுத்துதலும், விருப்பத்துக்கு மாறான பணியை மேற்கொண்டாலும், சவால்களை பொறுமையுடன் ஏற்றுக்கொண்டு லட்சியத்தை மட்டும் விட்டுவிடாமல் முன்னேறியிருக்கும் இந்த முன்னாள் ஆசிரியையின் வாழ்க்கைப் பயணம் பல பாடங்களை நமக்குக் கற்றுத் தருகிறது.
கோயமுத்தூரைச் சேர்ந்தவர் பிரேமா. கட்டுப்பாடுகள் நிரம்பிய கூட்டுக் குடும்பத்தில் வளர்ந்தவர். விரும்பியது தையல் பயிற்சி. ஆனால், திணிக்கப்பட்டது தட்டச்சுப் பயிற்சி. அன்பான பெற்றோர் என்றாலும் தந்தை கண்டிப்பானவர். பத்தாம் வகுப்பை முடித்த பிரேமாவுக்குத் தையல் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் ஆர்வம். அவரது தந்தையோ தட்டச்சுப் பயிற்சியில் சேர்த்துவிட்டார். தனக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் தந்தைக்காக கற்றார். கல்லூரியில் சேர்ந்து பி.காம் பட்டமும் பெற்றார். உடனே திருமணமும் நடந்தது.
பிரேமாவுக்குத் தொழில்முனைவோராக வேண்டும் என்பது தணியாத ஆசை. கணவரிடம் அதைச் சொன்னார். அரசுப் பணியில் இருப்பதால் இடமாற்றம் தவிர்க்க இயலாது. எனவே, தொழில்முனைவோராவது சாத்தியமில்லை என கணவர் சொல்லி விட்டார். அது ஏமாற்றமாக அமைந்தது. அத்துடன் குழந்தை வளர்ப்பிலும் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம். ஆனால், வீட்டிலேயே முடங்கி விடவில்லை.விவசாயப் பல்கலைக்கழகத்தில் உணவுப் பொருட்களை தயாரிக்கவும் பதப்படுத்தும் பயிற்சியினை மேற்கொண்டார்.
அன்றாடம் வீடுகளில் பயன்படுத்தப்படும் ஊறுகாய்கள், ஜாம்கள், ஜூஸ்கள், மசாலாப் பொருட்கள் தயாரிக்கும் முறைகளை கற்றார். சிறிய அளவில் தயாரித்து விற்க ஆரம்பித்தார். காய்கறிகளில் புது விதமாக ஊறுகாய்களை தயாரித்தார். நல்ல வரவேற்பும் கிடைத்தது. அங்கேயும் இவருக்கு சிக்கல் தொடர்ந்தது. தயாரித்த பொருட்களை சிறப்பாகவும் முறையாகவும் பேக்கிங் செய்யும் வசதிகள் இல்லாததால் அந்தத் தொழிலை கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
வீட்டில் உட்கார்ந்திருக்காமல் தன் காலில் நிற்க வேண்டும் என்ற உந்துதல் காரணமாக ஆசிரியர் பயிற்சிப் படிப்பை மேற்கொண்டு ஆசிரியராகவும் பணியாற்றினார். இருந்த போதிலும் விவசாயப் பல்கலைக்கழகம் நடத்தும் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ளத் தவறவில்லை. கற்றுக்கொண்டனவற்றோடு தமது கற்பனையையும் கலந்து மேம்பட்ட விதத்தில் பொருட்களை தயாரித்தார். அத்தோடு நிற்காமல், தையல் பயிற்சியும் மேற்கொண்டார். எம்பிராய்டரி வேலைப்பாடுகள் செய்யும் நுணுக்கத்தையும் கற்றுக்கொண்டார். ஆசிரியப் பணியை ராஜினாமா செய்து, ஆடை விற்பனையில் ஈடுபட்டார். குழந்தைகள் மற்றும் மகளிருக்கான ஆடைகளை வடிவமைத்தார். ஆன்லைன் விற்பனை தளம் மூலமாக உடைகளை விற்பனை செய்ய துவங்கினார். பிரேமாவின் கனவுகள் மெல்ல மெல்ல நனவாக ஆரம்பித்தது.
அடுத்த சவால் பண மதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி. பிரேமாவின் இணையத் தொழிலை நசுக்கிப்போட்டது. தொழில் தள்ளாடத் தொடங்கினாலும் பிரேமாவின் நம்பிக்கை தள்ளாடவில்லை. மீண்டும் உணவுத் துறையிலேயே கால்பதிக்க துவங்கினார். மசாலாப் பொடிகளை தயாரித்தார். தரமும் சுவையும் நன்றாக இருந்தாலும் மக்களிடம் கொண்டு சேர்க்கப் பெரிய அளவில் விளம்பரம் தேவைப்பட்டது.
சந்தையில் உள்ள பிராண்டுகளுடன் பிரேமாவால் போட்டி போட முடியவில்லை. சென்னையில் இருக்கும் Tamil Nadu Veterinary and Animal Sciences பல்கலைக்கழகத்தில் நூடுல்ஸ் தயாரிக்கும் பயிற்சியில் சேர்ந்தார். மைதா மாவில் நூடுல்ஸ் தயாரிப்பில் பிரேமாவிற்கு உடன்பாடில்லை. சிறுதானியங்கள் கொண்டு நூடுல்ஸ் தயாரிக்க முயற்சித்தார். இந்தப் பரிசோதனை முயற்சியில் 200 கிலோ மாவு வீணானது. தொடர்ந்து முயற்சித்தார்.
இறுதியில் அந்த ‘வெற்றி ஃபார்முலா’வைக் கண்டுபிடித்தார். மத்திய அரசின் திட்டத்தில் கடன் பெற்று, எந்திரங்களை வாங்கி ‘நற்பவி’ என்ற பெயரில் மைதா கலப்பில்லாத சிறுதானிய நூடுல்ஸ்கள் மற்றும் சேமியா, பொங்கல் மிக்ஸ்கள் போன்றவற்றை உற்பத்தி செய்தார். இதில் சிறப்பம்சம் இவரது தயாரிப்புகளில் தீமை தரும் க்ளூட்டன் கலக்கப்படுவதில்லை.
இப்போது கணவரும் மகனும் பிரேமாவின் தொழிலுக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். இணையத்தின் மூலம் விளம்பரம் செய்து வருகிறார்கள்.அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மன் போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கின்றனர். சராசரியாக மாதம் ஒன்றுக்கு ஒன்றரை டன் அளவுக்கு உற்பத்தி செய்கிறார்கள். தொழிலை அடுத்த கட்டத்துக்கு விரிவுபடுத்தும் உத்வேகத்திலும் இருக்கிறார். தற்போதைய கணக்கின்படி மாதம் ஒன்றுக்கு இரண்டு லட்சம் ரூபாய் வரை விற்பனையாகும் இவரது பொருட்கள் மூலம் இவருக்கு 30 முதல் 40% வரை லாபம் கிடைக்கிறது. ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் அளவுக்குத் தமது வர்த்தகத்தை விரிவுபடுத்த வேண்டும் என்ற இலக்கோடு உழைத்து வருகிறார் பிரேமா.
தொகுப்பு: லதானந்த்


