நன்றி குங்குமம் தோழி
‘‘இ யற்கை என்றுமே அழகானது. ஆனால், மனிதர்களான நாம் அதனை அழித்து வருகிறோம். இதனால் இயற்கை மட்டுமில்லை, அதை நம்பி வாழும் உயிரினங்களும் அழிவுநிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றன. சொல்லப்போனால் உலகளவில் பல உயிரினங்கள் அழிவு நிலையில் உள்ளன. அதை மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பு நம்மில் அனைவருக்கும் உள்ளது. அதே சமயம் இந்த உயிரினங்கள் அழிந்து வருகிறது என்பது பலருக்கு தெரியவில்லை.
அதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்ததான் இந்தக் கண்காட்சி’’என்றார் கல்யாணி பிரமோத். இவர் ‘த லாஸ்ட் கிளிம்ஸ்’ என்ற தலைப்பில் சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள அலயானஸ் பிரான்சைஸில் ஜுலை 18 முதல் 31ம் தேதி வரை அழிந்து வரும் உயிரினங்கள் குறித்து கண்காட்சி வைத்திருந்தார். இதன் சிறப்பம்சமே குப்பை என்று நாம் தூக்கிப்போடும் பொருட்களை கொண்டு அழியும் நிலையில் உள்ள உயிரினங்களை தத்ரூபமாக உருவாக்கி இருந்தார்.
‘‘நான் அடிப்படையில் உடை வடிவமைப்பாளர். 76ல் நான் ஆடை வடிவமைப்பாளர் குறித்து பட்டப் படிப்பு முடிச்சேன். அதன் பிறகு கைத்தறி துறை சார்ந்த வேலையில் ஈடுபட ஆரம்பித்தேன். 19,500 நெசவாளர்களுடன் வேலை பார்த்தேன். அவர்களுக்கு என்ன தேவை, அரசிடம் இருந்து உதவிகளை பெற்றுத் தந்து அவர்களின் மேம்பாட்டிற்காக வேலை பார்த்தேன். இதற்காக 2016ல் ‘நாரி சக்தி புரஸ்கார்’ என்று விருது வழங்கப்பட்டது.
அதன் பிறகு அந்தத் துறையில் இருந்து விலகி முழுமையாக கலைஞராக மாறினேன். நான் படித்த படிப்பிற்கும் இப்ப நான் செய்யும் வேலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனக்கு ஒரு பழக்கம். என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை கவனிப்பேன். அது எதனால் ஏற்படுகிறது. அதன் பக்கவிளைவுகள் என்ன என்று ஆராய்வேன். நம்மைச் சுற்றி கெட்டது மட்டுமில்லை, அழகான விஷயமும் இருக்கும். இரண்டையும் கவனிக்க ஆரம்பித்த பிறகுதான் முழுமையாக கலை துறைக்குள் ஈடுபடுத்த ஆரம்பித்தேன்’’ என்றவர், ‘பூமி’ என்ற தலைப்பில் காலநிலை மாற்றம் குறித்து கண்காட்சி ஒன்றை நடத்தியுள்ளார்.
‘‘நம்மைச்சுற்றி பல நிகழ்வுகள் நடக்கிறது. அதனால் ஏற்படும் பாதிப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நினைத்தேன். என்னுடைய முதல் கண்காட்சி காலநிலை மாற்றம் குறித்தது. இன்றைய சூழலிலும் நாம் இந்தப் பிரச்னையை சந்தித்து வந்தாலும், மக்கள் மத்தியில் இது பற்றி தெரியவில்லை. அதற்காக நான் கொடி பிடித்துக் கொண்டு போராட்டம் செய்ய விரும்பல. என் கலை மூலம் மக்களிடம் அன்பான முறையில் எடுத்துரைக்க விரும்பினேன்.
அதற்கான ஆய்வில் ஈடுபட்ட போது, கடலில் நடப்பது, பவளப்பாறை அழிந்து வருவது, மரங்களை அழிப்பது என இயற்கையை முற்றிலும் பாழாக்கிவிட்டோம் என தெரிந்து கொண்டேன். விளைவு கடல் வாழ் உயிரினங்கள், மிருகங்கள் எல்லாம் அழிவு நிலையில் உள்ளன. அது என்னை பெரிய அளவில் பாதித்தது’’ என்றவர், ஒரு தகரப்பெட்டி கொண்டு தன் பணியினை துவங்கியுள்ளார்.
‘‘நாம சுயநலவாதியாக மாறிவிட்டோம். நம்முடைய தேவைக்காக இயற்கையை அழிக்கிறோம். ஒரு மரத்தை அழித்தால் அதனால் ஏற்படும் பாதிப்பு நமக்கு தெரிவதில்லை. இது ஒரு சங்கிலி போன்றது. ஒன்று அழிந்தால் அதனால் மற்ெறான்று என்று நீண்டு கொண்டேதான் இருக்கும். சொல்லப்போனால் நம் செயலால் நாம் வாழும் சூழல் முற்றிலும் மாறிவிட்டது. ஜூலை மாதம் கடந்தும் வெயிலின் தாக்கம் குறையவில்லை. அதற்கான விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்படுத்த அழிவு நிலையில் இருக்கும் 73 உயிரினங்களை இங்கு காட்சிப்படுத்தி இருக்கேன். இதனை முழுக்க முழுக்க வேஸ்ட் ெபாருட்கள் கொண்டுதான் வடிவமைத்திருக்கிறேன்.
வேஸ்ட் பொருட்களை பயன்படுத்த காரணம் என் பெற்றோர். நான் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவள். என் அம்மா எந்தப் பொருளையும் தூக்கி எறியமாட்டாங்க. இப்பதான்
ரீசைக்கிள்... அப்சைக்கிள் என்று சொல்கிறோம். ஆனால், அன்று பிளாஸ்டிக் பை கிடையாது. துணிப்பைதான். என் அம்மா எனக்கு அவங்க கையால் ஃபிராக் தைச்சு தருவாங்க. எனக்குப் பிறகு என் தங்கைக்கும் பயன்படுத்துவாங்க. அதேபோல் சாப்பாட்டை வேஸ்ட் செய்யக்கூடாதுன்னு அப்பா சொல்வார்.
நான் ஜவுளித்துறையில் இருந்த போதும் வேஸ்ட் துணி கொண்டுதான் வேலை செய்வேன். என்னை கந்தல் துணி கல்யாணின்னு தான் கூப்பிடுவாங்க. நான் குப்பையை கூட அழகான கலைப் பொருளா மாத்துவேன்னு எங்க பில்டிங்கில் வேலை பார்ப்பவர்கள் குப்பை என்று தூக்கி எறியும் பழைய கேன், டப்பாக்களை என்னிடம் கொடுப்பாங்க’’ என்றவர், அவர் பயன்படுத்திய பழைய பொருட்கள் கொண்டு உருவான கலைகளை பற்றி விவரித்தார்.
‘‘என் கணவர் கட்டிட தொழலில் இருக்கார். அவர் சைட்டில் இருக்கும் வேஸ்ட் பொருட்களை எடுத்து வருவேன். அப்புறம் பழைய பேப்பர் கடையில் இருக்கும் இரும்பு பொருட்
களை வாங்கி வருவேன். முதன் முதலில் என் அம்மாவின் தையல் இயந்திரத்தில் இருந்த தகர டப்பாவைக் கொண்டு பட்டாகு கச்சுகா என்ற ஆமையை வடிவமைத்தேன். மணலை நாம் வீடுகட்ட பயன்படுத்துகிறோம். அந்த மணலை நாம் எடுப்பதால், அந்த ஆமைக்கு முட்டை போட இடம் இல்லை.
தும்பிக்கு ஃபேன் பிளேட்டுகள் பயன்படுத்தி இருக்கேன். மொனார்க் பட்டாம்பூச்சி, ஒரு குறிப்பிட்ட தாவரத்தில்தான் வாழும். அந்த தாவரம் இப்போது இல்லை. அதனால் இதுவும் தற்போது அழியும் நிலையில் உள்ளது. இதனை காய்ந்த சுரைக்காய், வுல்லன் நூல் கொண்டு வடிவமைத்திருக்கேன். காய்ந்த காய்கறி மட்டுமில்லை டீபேக் பேப்பர், கார்ட்போர்ட் அட்டை, டின் கேன், பாத்திரம் தேய்க்கும் கம்பி நார், பழைய துணி, மீன் பிடிக்கும் வலை, எலெக்ட்ரிக் வயர், உலோகக் கழிவு, அலுமினியம் வயர், தெர்மாகோல் என பலதரப்பட்ட பொருட்கள் கொண்டு ஒவ்வொன்றையும் வடிவமைத்திருக்கிறேன்.
நான் ஒருமுறை பழைய பேப்பர் கடைக்கு ேபான போது அங்கு ஃபேன் பிளேட் இருந்தது. அதை எடுத்து வைத்த போது எனக்கு தும்பி பூச்சியின் இறக்கை மாதிரி இருந்தது. அப்படித்தான் ஒவ்ெவாரு ெபாருட்களை பார்க்கும் போது எனக்கு இது செய்யலாம்னு தோணும்.
இங்கு 73 உயிரினங்களை தான் காட்சிப்படுத்தி இருக்கேன். சொல்லப்போனால் நிறைய உயிரினங்கள் இருக்கு. இது முடிக்கவே எனக்கு ஒன்றரை வருடமானது. இதற்கு முன் ‘பூமி’ என்ற தலைப்பில் சுற்றுப்புறச்சூழல் குறித்த கண்காட்சி வைத்தேன். நாம் வாழும் சூழலை பாதிக்கக் கூடியது என்று ஒரு அலை ஏற்படும். அது குறித்து என்னுடைய அடுத்த கண்காட்சி இருக்கும்’’ என்றார் கல்யாணி பிரமோத்.
செய்தி: ஷம்ரிதி




