Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

குழந்தைகளை ஒப்பிடாமல் தனித் திறமையை ஊக்குவியுங்கள்!

 நன்றி குங்குமம் தோழி

இளம் எழுத்தாளர், ஆய்வாளர், தொகுப்பாளர், பொதுப் பேச்சாளர், மனநல விழிப்புணர்வு செயல்பாட்டாளர் என பல முகங்கள் கொண்டவர் உளவியல் கல்லூரி மாணவியான அர்ஷதா. கல்விப் பயணத்துடன் எழுத்துலகிலும் இவர் தனக்கான ஒரு இடத்தினை நிரப்பி வருகிறார். மனநலம், மனித உறவுகள், உணர்வுகள், பெற்றோர் வளர்ப்பு, சமூக மாற்றம் போன்ற தலைப்புகளில் பல கட்டுரைகளை எழுதி வருகிறார். தன்னுடைய எழுத்து மூலம், ஒருவரின் வாழ்க்கையில் சிறிய மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இவர் எழுதிய ‘The Parent Every Mind Deserves’ என்ற புத்தகம் ‘Books of World Records’ அங்கீகாரத்தை பெற்றுள்ளது.

‘‘ஒரு மனிதனின் வாழ்க்கையை பணம், பதவி மட்டுமே மாற்றிவிடாது. சரியான சிந்தனை, வழிகாட்டுதல் மற்றும் மனநல விழிப்புணர்வு அவசியம். மனித மனம் எவ்வளவு சிக்கலானதோ, அதே அளவிற்கு அழகானது. அந்த மனதைப் புரிந்துகொள்ளவும், மனநலத்தைப் பற்றிய தவறான புரிதல்களை என் எழுத்து மூலம் பிரதிபலிக்க நினைத்தேன். என்னுடைய புத்தகத்திற்கு விருது கிடைத்திருக்கிறது மகிழ்ச்சிதான் என்றாலும், இது எனக்கான பொறுப்பாக பார்க்கிறேன். சமூகப் பிரச்னையை ஆராய்ந்து, அறிவியல் அடிப்படையிலான தீர்வை ஒரு நூலாக வெளியிட விரும்பினேன். புத்தகம் வெறும் காகிதமும் எழுத்துக்களும் அல்ல. ஒரு தலைமுறையின் சிந்தனையை மாற்றக்கூடிய சக்தி கொண்டது. எழுத்து மூலம் மனிதர்களின் வாழ்க்கையை மேம்படுத்த வேண்டும் என்பதே என் நோக்கம்.

சிறுவயதிலேயே புத்தகங்கள் வாசிக்க விருப்பமுண்டு. ஒவ்வொரு புத்தகமும் ஒரு புதிய உலகத்தையும், எழுத்தாளர்கள் புதிய கோணத்தில் வாழ்க்கையை பார்க்க கற்றுக்கொடுத்தார்கள். அதுதான் சமூகத்திற்கு பயனுள்ள ஒரு புத்தகத்தை எழுத வேண்டும் என்ற விதையை என்னுள் விதைத்தது. பள்ளிப் பருவத்தில் மனிதர்களின் உணர்வுகள், உறவுகள், மனநிலை, சமூகத்தில் நடக்கும் மாற்றங்களை கவனிக்கும் பழக்கம் எனக்குண்டு. ஒரே சூழ்நிலையில் இருக்கும் இரண்டு மனிதர்கள் வெவ்வேறாக சிந்திக்கிறார்கள்.

சிலர் தன்னம்பிக்கையுடன் வாழ்கிறார்கள், சிலர் சிறிய பிரச்னைக்கே உடைந்துவிடுகிறார்கள். இது போன்ற கேள்விக்கான பதிலை தேட நான் உளவியல் துறையை தேர்வு செய்தேன். மனநலத்தைப் பற்றிய சிறந்தஆய்வுகள், அறிவியல் தகவல்கள், நடைமுறை வழிமுறைகள் இருந்தாலும், அவை பொதுமக்களை எளிதாகச் சென்றடைவதில்லை. அந்த இடைவெளியை நிரப்பவே நான் எழுத ஆரம்பித்தேன்.

மனநலம், மனித உறவுகள், சமூக விழிப்புணர்வு தலைப்புகளில் நான் எழுதிய கட்டுரைகளுக்கு வரவேற்பு கிடைத்தது. அது எனக்கு மிகப்பெரிய ஊக்கமாக அமைந்தது. நான் எழுதும் புத்தகம் புதிய சிந்தனை உருவாக்கவும், அறிவியல் அடிப்படையில் இருந்தாலும், எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையிலும் இருக்க வேண்டும் என்று விரும்பினேன். பல மாதங்கள் ஆய்வுக்குப் பிறகு ‘The Parent Every Mind Deserves’ நூலை எழுதத் தொடங்கினேன்’’ என்றவர் புத்தகத்தை பற்றி விவரித்தார்.

‘‘இந்தப் புத்தகத்தை எழுத வேண்டும் என்ற எண்ணம் ஒரே நாளில் தோன்றியதல்ல. சமூகத்தில் நான் கவனித்த ஒவ்வொரு நிகழ்வும் இந்த நூல் உருவாகக் காரணம். இன்றைய உலகில் தொழில்நுட்ப வளர்ச்சி, குழந்தைகளுக்கு சிறந்த கல்வி, உயர்ந்த வாழ்க்கைத் தரம் அனைத்தும் உள்ளன. ஆனால், குழந்தைகளின் மனநலம் குறித்து நாம் பேசுவதில்லை. கல்வி முன்னேறியிருந்தாலும், உணர்ச்சி ரீதியாக பாதுகாப்பான குழந்தைப் பருவம் கிடைக்கிறதா? என்ற கேள்விதான் இந்த நூலின் முதல் விதை.

ஒரு குழந்தையின் வாழ்க்கையில் ஆசிரியர்கள், நண்பர்கள், சமூகம் என பலர் தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஆனால், குழந்தையின் முதல் உலகம் குடும்பம்தான். ஒரு குழந்தை அன்பை கற்றுக்கொள்வதும், நம்பிக்கையை உணர்வதும், தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வதும், தோல்வியை எதிர்கொள்வதும் குடும்பத்தில்தான். குழந்தையின் மனநலத்தைப் பாதுகாக்க வேண்டுமென்றால், பெற்றோர்களை வழிநடத்த வேண்டும்.

பெற்றோர்களும் குழந்தைகளுக்கு சிறந்த வாழ்க்கையை அமைக்கவே உழைக்கிறார்கள். சில நேரங்களில், அறியாமல் அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள், ஒப்பீடுகள், ஒழுக்க முறைகள் குழந்தைகளின் மனதில் ஆழமான காயங்களாக மாறுகிறது. குழந்தையை எப்படி வளர்ப்பது? என்ற கேள்விக்கு மட்டும் பதில் அளிக்கக்கூடிய புத்தகமாக இல்லாமல் அவர்களின் மனதை பாதுகாப்பது, எதிர்காலத்தை வடிவமைப்பது, சமநிலையை உருவாக்குவது குறித்த நூலை உருவாக்க முடிவு செய்தேன்.

இந்தப் புத்தகத்தில் உளவியல் கோட்பாடுகளை மட்டும் பேசாமல், மனிதநேயம், மதிப்புகள் மற்றும் நல்லொழுக்கக் கருத்துகளையும் நவீன உளவியலுடன் இணைத்திருக்கிறேன். ஒரு குழந்தையை நல்ல மனிதராக வளர்ப்பதற்கான வழிகாட்டியாக இந்த நூல் அமைய வேண்டும் என்பதே என் நோக்கம். ஒவ்வொரு அத்தியாயமும் வாசகர்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பதால், பல ஆய்வுகளின் அடிப்படையில் உருவாக்கி இருக்கிறேன்.

நூலின் புதுமையான கருத்தாக்கம், சமூகத்திற்கு அறிவியல் அடிப்படையிலான அணுகுமுறை காரணமாக, Books of World Records அங்கீகாரத்தை என்னுடைய புத்தகம் பெற்றிருக்கிறது என்று நினைக்கும் போது சந்தோஷமாக உள்ளது. என்னுடைய புத்தகம் ஆயிரக்கணக்கான குடும்பங்களில் ஒரு சிறிய நேர்மறை மாற்றத்தையாவது உருவாக்கினால், அதுவே ஒரு எழுத்தாளராக எனக்குக் கிடைக்கும் மிகப்பெரிய வெற்றி’’ என்றவர், பல ஆய்வுகளின் அடிப்படையில் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார்.

‘‘குழந்தைகளை எப்படி வளர்ப்பது என்பதை மட்டும் சொல்லாமல், குழந்தையின் மனதையும் புரிந்துகொண்டு, அவர்களின் உணர்வுகளையும், கனவுகளையும், தனித்துவத்தையும் மதித்து வளர்ப்பதற்கான முழுமையான உளவியல் வழிகாட்டிதான் இந்தப் புத்தகம். ஒரு குழந்தைக்கு நாம் கொடுக்கக்கூடிய மிகப்பெரிய பரிசு சொத்தோ, செல்வமோ அல்ல, ஆரோக்கியமான மனநலமும், பாதுகாப்பான குழந்தைப் பருவமும்தான்.

இன்றைய காலகட்டத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சிறந்த கல்வி, உயர்ந்த வாழ்க்கை, அனைத்து வசதிகளையும் கொடுக்கிறார்கள். ஆனால், நிபந்தனையற்ற அன்புடன் ஏற்றுக்கொள்ளும் குடும்பம், உணர்வுகளை தயக்கமின்றி பகிரக்கூடிய சூழல், தவறு செய்தாலும் புரிந்துகொண்டு வழிநடத்தும் பெற்றோரைதான் குழந்தைகள் விரும்புகிறார்கள். பெற்றோரின் ஒவ்வொரு வார்த்தையும், ஒவ்வொரு செயலும், ஒவ்வொரு அணுகுமுறையும் குழந்தையின் தன்னம்பிக்கை, ஆளுமை, எதிர்கால உறவுகள் மற்றும் மனநலத்தை நேரடியாக பாதிக்கிறது.

உதாரணமாக, பெற்றோர்கள் அறியாமலேயே, ‘‘அடுத்த வீட்டுப் பையனைப் பார்… அவன் எவ்வளவு நன்றாகப் படிக்கிறான்!” என்று ஒப்பிடுவார்கள். இது குழந்தையை ஊக்குவிப்பதாக அவர்கள் நினைக்கலாம். ஆனால், உளவியல் ரீதியாக ஒப்பீடுகள் குழந்தையின் தன்னம்பிக்கையை சிதைக்கும். ஒப்பிடுவதற்குப் பதில் தனித்திறமையை அடையாளம் கண்டு பாராட்டுவது முக்கியம். குழந்தைகள் தவறு செய்தால் ஏன் செய்தது என்பதை பெற்றோர் புரிந்துகொள்ள வேண்டும். பயத்தின் மூலம் கிடைக்கும் ஒழுக்கம் தற்காலிகமானது, புரிதலின் மூலம் உருவாகும் ஒழுக்கம்தான் வாழ்நாள் முழுவதும் நிலைத்திருக்கும்.

குழந்தைகளுடன் தினமும் சில நிமிடங்களாவது செலவிடுங்கள். இவ்வாறு பல கருத்துகளை இணைத்து ஒரு சமநிலையான பெற்றோர் வளர்ப்பு அணுகுமுறையை வழங்கியுள்ளேன். பெற்றோரின் அணுகுமுறை மாறினால், குழந்தையின் வாழ்க்கை மாறும். குழந்தையின் வாழ்க்கை மாறினால், நாளைய சமூகமும் மாறும். அந்த மாற்றத்திற்கான ஒரு சிறிய பங்களிப்பாக இந்த நூல் இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

இந்தப் புத்தகம் என் எழுத்துப் பயணத்தின் முதல் அத்தியாயம் மட்டுமே. எதிர்காலத்தில், மனநலம் மற்றும் உளவியல் சார்ந்த நூல்களை எழுத திட்டமிட்டுள்ளேன். உளவியல், ஒவ்வொரு மனிதனின் அன்றாட வாழ்க்கையோடு தொடர்புடைய அறிவியல். ஒரு எழுத்தாளராக நான் புத்தகங்களை எழுதுவதோடு நிறுத்திக் கொள்ள விரும்பவில்லை. ஒவ்வொரு புத்தகத்தையும் மையமாகக் கொண்டு கருத்தரங்குகள், பயிற்சிப் பட்டறைகள், மாணவர்களுக்கான மனநல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், பெற்றோருக்கான வழிகாட்டல் அமர்வுகள் மற்றும் சமூக மாற்றத்தை நோக்கமாகக் கொண்ட பல்வேறு முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டுள்ளேன்.

என்னைப் பொறுத்தவரை, வாழ்க்கையில் வெற்றி என்பது பட்டங்களையோ, விருதுகளையோ, சாதனைகளையோ பெறுவதில் மட்டும் இல்லை. எத்தனை பேரின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றத்தை உருவாக்கியிருக்கிறோம் என்பதில்தான் உண்மையான வெற்றி இருக்கிறது. ஒரு எழுத்தாளராக நான் எழுதும் ஒவ்வொரு புத்தகமும், ஒரு வாசகரின் சிந்தனையை மாற்ற வேண்டும். ஒரு ஆய்வாளராக நான் மேற்கொள்ளும் ஆராய்ச்சிகள் சமூகத்தில் புதிய தீர்வுகளை வழங்க வேண்டும்.

இளைஞர்களுக்கு நான் சொல்ல விரும்புவது ஒன்றுதான். கனவுகள் பெரியதாக இருக்கலாம், ஆனால், அந்தக் கனவுகளை நனவாக்கும் முயற்சி அதைவிடப் பெரியதாக இருக்க வேண்டும்.

எனது பயணம் இதோடு முடிவடைவதில்லை. உலக அளவில் மனநல விழிப்புணர்வை உருவாக்கும் உளவியல் ஆய்வாளராகவும், சர்வதேச எழுத்தாளராகவும், இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் பேச்சாளராகவும் உருவாக வேண்டும் என்பதே என் கனவு’’ என்றார் அர்ஷதா.

தொகுப்பு: நிஷா