Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

ஆட்டிசம் குழந்தைகளுக்கு ‘இயர்லி இன்டர்வென்ஷன்’ அவசியம்!

நன்றி குங்குமம் தோழி

சில தசாப்தங்களாகவே ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உலகளாவிய எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. சிறப்புக் குழந்தைகளுக்கு பயிற்சிகளும் சிகிச்சைகளும் வழங்கி அவர்களை வழிநடத்த வேண்டிய பொறுப்புகளும் பெற்றோர்களுக்கு கூடிக்கொண்டேதான் இருக்கிறது. பாதிக்கப்பட்ட குழந்தை மட்டுமின்றி அவர்களுடன் கூடுதல் நேரமும் உழைப்பும் செலுத்தும் பெற்றோர்களும் பல்வேறு போராட்டங்களை சந்திக்கின்றனர். சில நேரங்களில் சோர்வடைவதும் உண்டு. இதனை கருதி, ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் ஆரம்பகால தலையீடு தொடங்கி அவர்களை சரியாக வழிநடத்துவதற்கான ஆலோசனைகளை எளிமையான நடையில் ‘Gift of Guidance’ எனும் புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார், குழந்தை நடத்தை சிகிச்சையாளர் ஷரண்யா ரவிச்சந்திரன்.

“சிறப்பு கவனிப்பு தேவைப்படும் குழந்தைகளுக்கு நிறைய நடத்தை சார்ந்த சிக்கல்களும், பெற்றோர்களுக்கு அது சார்ந்த நிறைய சந்தேகங்களும் இருக்கும். குழந்தைகளுக்கு பயிற்சிகளும் சிகிச்சைகளும் மிகவும் முக்கியமாக இருக்கும் பட்சத்தில் ‘Gift of Guidance’ புத்தகம் குழந்தைகளின் சிக்கல்களையும் அவர்களின் தேவைகளையும் புரிந்துகொள்ள உதவுகின்ற ஒரு பொதுவான வழிகாட்டியாக இருக்கும். குழந்தைகளுக்கான சிகிச்சையின் போது தொடர்பு கொள்ளுதல், நடத்தைகள், வளர்ச்சி பற்றிய பெற்றோர்கள் கேட்கும் சந்தேகங்கள், சிகிச்சை பலன்கள், மதிப்பீடு இவற்றையெல்லாம் அடிப்படையாகக் கொண்டு இப்புத்தகத்தை எழுதியுள்ளேன்.

ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் ஒவ்வொருவரும் ஒருவிதமாக இருப்பார்கள். எல்லோருமே பேச்சு வார்த்தைகள் மூலமாக பேசமாட்டார்கள், சிலர் செயல்களாலும், சிலர் உணர்ச்சி வெளிப்பாடுகள் மூலமாகவே தொடர்பு கொள்வார்கள். இவற்றை பெரியவர்களால் சுலபமாக புரிந்துகொள்ள முடியாது, அதற்கான நேரம் எடுக்கும். ஒரு குழந்தைக்கு ஆட்டிசம் அறிகுறிகள் இருக்கிறதென்றால், உடனே அவர்களை புரிந்துகொள்ள முடியாது. அந்தக் குழந்தையுடன் அதிக நேரம் செலவிடும்போதுதான், தன் குழந்தை ஏன் இந்த செயல்களை செய்கிறார்கள், இதைத்தான் சொல்ல வருகிறது என்பதையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக தெரிந்துகொள்வார்கள். இதுபோல சிறப்புக் குழந்தைகளை புரிந்து கொண்டு, அவர்களை ஆதரித்து வழிநடத்தும் ஆலோசனைகளை இப்புத்தகத்தில் சொல்லியிருக்கிறேன்.

சிறப்பு கவனிப்பு தேவைப்படுகிற குழந்தைகளின் பெற்றோர்களுக்கு மட்டுமின்றி, மழலை மற்றும் ஆரம்பநிலை பள்ளி ஆசிரியர்கள், பராமரிப்பாளர்கள், தெரபிஸ்ட் என குழந்தைகளுடன்

செயலாற்றும் எல்லோருக்கும் இந்தப் புத்தகம் வழிகாட்டியாக இருக்கும். சிக்கலான, மருத்துவ கலைச்சொற்கள் ஏதுமின்றி, எல்லோராலும் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் நடைமுறை தகவல்களை கொடுத்திருக்கிறேன்’’ என்றவர், ஆட்டிசம் பாதிக்கப்பட்ட பெற்றோர்களுக்கான சில வழிமுறைகளையும் வழங்கினார்.

“ஆட்டிசம் பாதிப்பு விகிதம் அதிகரித்துதான் வருகிறது. அதேசமயம் அதற்கான விழிப்புணர்வும் தற்போது அதிகரித்திருக்கிறது. ஒரு குழந்தையிடம் ஆட்டிசம் குறைபாட்டிற்கான அறிகுறிகள் தென்படுகிறதென்றால் மருத்துவர்களிடம் ஆலோசனை பெற வேண்டும். இரண்டு வயதாகியும் பேச்சு வரவில்லை, கண்களை பார்ப்பதில்லை, பெயர் சொல்லி அழைத்தால் ரியாக்ட் செய்வதில்லை போன்ற நடத்தைகள் வித்தியாசமாக இருப்பதை பெற்றோர்களும் கவனிக்கின்றனர்.

இதனால் ஆரம்பகால சிகிச்சைகளை தொடங்கலாம். முன்பெல்லாம் ஆட்டிசம் குறித்தான விழிப்புணர்வின்றி ஐந்து வயதிற்கு மேல் கண்டறிந்து சிகிச்சைக்கு வருவார்கள். ஆரம்பகால தலையீடு (Early Intervention) ரொம்பவும் முக்கியம். அப்போதுதான் குழந்தையை புரிந்துகொண்டு சிகிச்சை, பயிற்சியளித்து வழிநடத்தினால் அந்தக் குழந்தை வளரும்போது தன் அன்றாட தேவைகளை சுயமாக செய்து கொள்ளுமளவு வளர்ச்சியை ஏற்படுத்த முடியும்.

குழந்தைக்கு ஆட்டிசம் இருப்பது தாமதமாக கண்டறியப்படும்போது, மூளை ஏற்கனவே பழகியிருக்கும் ஒழுங்குமுறையை கடைபிடித்திருக்கும். மீண்டும் அதிக பயிற்சியளித்து அதனை மாற்றுவதற்கு காலம் ஆகலாம். நான்கு வயதுக்குள் கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்க தொடங்கினால் கணிசமான வளர்ச்சியை மேம்படுத்த முடியும். பயிற்சி மற்றும் சிகிச்சைகளினால் குழந்தைகள், காலைக் கடன் முடிப்பது, சாப்பிடுவது, குளிப்பது போன்றவற்றை தானாக செய்கிறார்கள். பேச்சு, செயல் அல்லது உணர்ச்சி வெளிப்பாடு மூலமாகவோ தகவல் தொடர்பு செய்கின்றனர். படிக்கிறார்கள், வேலையும் செய்கிறார்கள்.

முதலில் குழந்தையின் மொழி, பேச்சு எப்படியிருக்கிறது என்பதை சோதிப்போம். அம்மா, அப்பா என்று கூப்பிடவில்லை, தனக்கு தேவையானதை கேட்க தெரியவில்லை, மற்றவர்களை பார்த்தால் ஒரு புன்னகை கூட செய்யவில்லையெனில் அந்தக் குழந்தைக்கு தகவல் தொடர்பு மிகவும் குறைவாக இருக்கலாம். நன்றாக பேசுகின்ற குழந்தைக்கு கூட ஆட்டிசம் அறிகுறிகள் இருக்கலாம். இவை ஒவ்வொரு குழந்தைக்கும் வேறுபடலாம்.

பேசவே செய்யாத குழந்தைகளுக்கு துணை மற்றும் மாற்றுத் தொடர்பு அமைப்பு முறைகள் மூலமாக பயிற்சியளிக்க முடியும். எனக்கு உணவு வேண்டும், நான் கழிப்பறைக்கு செல்ல வேண்டும் போன்ற அடிப்படை தேவைகளை குழந்தை கேட்டு பெறுவதற்கான பயிற்சியை அளிக்கலாம். குளிப்பது, சாப்பிடுவது, ஆடைகளை அணிவது, பேக் செய்வது போன்ற சிறிய விஷயங்களை செய்வதற்கான பயிற்சிகள் அளிக்கப்படும்.

தெரபியின்போது குழந்தைக்கு பயிற்சியளிப்பதோடு, குழந்தையிடம் இச்செயல்களை அன்றாடம் எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதை பெற்றோர்களுக்கும் சொல்லி வழிநடத்துவோம். தொழில்சார் சிகிச்சையில் (Occupational therapy) கிராஸ் மோட்டார், ஃபைன் மோட்டார் மற்றும் சென்சரி அடைப்படையிலான செயல்கள் போன்றவற்றை மேம்படுத்தலாம். குழந்தையின் வளர்ச்சியை மேம்படுத்த இதுபோன்ற பல சிகிச்சை முறைகள் உள்ளன.

குழந்தைக்கு ஆட்டிசம் என்றதுமே பெற்றோர்கள் பயந்துவிடக்கூடாது. குழந்தையின் வாழ்க்கை அவ்வளவுதான் என்று நினைத்துவிடக்கூடாது. இரண்டு வயதுக்குள்ளாகவே அறிகுறிகள் தென்பட்டால் சிகிச்சையை தொடங்குவதுதான் பெற்றோர்களின் முதல் வேலை. வளர்ச்சியை மேம்படுத்தி சாதாரண மனிதர்களை போல அவர்களின் வாழ்வையும் சுதந்திரமாக மாற்றலாம்.

பெற்றோர்களுக்கு ஒரு முக்கியமான வேண்டுகோள், குழந்தைக்கு ஆட்டிசம் என்றால் ஆன்லைனில் தேடிப் பார்த்து, குழந்தை இனி இப்படித்தான், சரி செய்யவே இயலாது என்று முடிவு செய்துவிடாதீர்கள். ஒவ்வொரு குழந்தைக்கும் சிக்கல்கள் வேறுபடலாம். சில குழந்தைகளை எளிதான பயிற்சிகளுடன் மேம்படுத்திவிட முடியும். பெற்றோர்கள் முதலில் வலுவாக இருந்தால்தான் குழந்தையை வளர்ச்சியின் பாதையில் கொண்டு செல்ல முடியும். சிறப்புக் குழந்தைகளின் பெற்றோர்கள் குறைந்த விலையில் இப்புத்தகம் பெற்றுக்கொள்ளலாம். இப்புத்தகம் பயனுள்ள வகையில் அமைந்தாலே எனக்கு மகிழ்ச்சி” என்றார்.

தொகுப்பு: ரம்யா ரங்கநாதன்