Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

கனவுகளை நனவாக்கும் டிரோன் பயிற்சி!

நன்றி குங்குமம் தோழி

ஒவ்வொரு பெண்ணிற்கும் ஒரு கனவு இருக்கும். நன்றாக படிக்க வேண்டும். வேலைக்குச் செல்ல வேண்டும், தொழிலதிபராக வரவேண்டும்... இவ்வாறு பல கனவுகளுடன்தான் அவர்கள் வாழ்கிறார்கள். அவர்களின் கனவுகளை நனவாக்கவே இந்தக் ‘கனவு திட்டம்’ ஆரம்பிக்கப்பட்டதாக கூறுகிறார் காயத்ரி. இவர் சென்னை போட்டோ பினாலே அமைப்பின் இணை நிறுவனர் மற்றும் கனவு திட்டத்தின் இயக்குநர்.

‘‘சென்னை போட்டோ பினாலே அமைப்பு புகைப்பட கலைஞர்களின் திறன்களை வெளிப்படுத்த துவங்கப்பட்டது. புகைப்பட கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களின் படைப்புகளை வருடா வருடம் கண்காட்சியாக வைப்பது வழக்கம். அந்த வரிசையில் தமிழ்நாட்டில் உள்ள பெண்களுக்கு குறிப்பாக புகைப்படத் துறை மேல் ஆர்வம் உள்ளவர்களுக்கு புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதற்கான பயிற்சியினை அளிக்க ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த கனவு திட்டம். இந்த திட்டத்தினை நாங்க 2021ல் துவங்கினோம். நான் அடிப்படையில் புகைப்பட கலைஞர். என்னைப் பொறுத்தவரை பெண் புகைப்பட கலைஞர்கள் மிகவும் குறைவு.

குறிப்பாக தென் தமிழகத்தில் கேமரா முன் நடிகையாகவும், மாடலாகவும், நடன கலைஞர்களாகவும் பெண்கள் வலம் வருகிறார்கள். ஆனால், கேமராவினை இயக்கக்கூடிய பெண் புகைப்பட கலைஞர்கள் மிகவும் குறைவு. இந்த துறையில் பெண்களும் அதிகம் முன்னேற வேண்டும் என்று விரும்பினேன். இதனை ஒரே நாளில் மாற்ற முடியாது என்பதால் பெண்களுக்கு புகைப்பட பயிற்சி அளிக்க முடிவு செய்தோம். அதற்காக துவங்கப்பட்டதுதான் இந்த கனவு திட்டம்.

முதலில் ஐந்து பெண்களை கொண்டுதான் இதனை துவங்கினோம். ஒவ்வொரு வருடமும் சென்னையில் எட்டு மாதப் பயிற்சி அளிக்கப்படும். புகைப்படம் குறித்து அனைத்து தொழில்நுட்பங்களையும் சொல்லித் தருவோம். புகைப்படம் எடுப்பது முதல் திரைப்படம் எடுப்பது வரை அனைத்துக்கான பயிற்சியும் வழங்கி வந்தோம். இதனை மூன்று வருடம் தொடர்ந்து செய்து வந்தோம். ஆனால், அதன் பிறகு அதற்கான நிதி எங்களுக்கு போதிய அளவு கிடைக்கவில்லை. அதனால் எட்டு மாதம் இல்லாமல் இரண்டு முதல் 10 நாட்கள் பயிற்சிகளை அளிக்க ஆரம்பித்தோம்.

இந்த வருடம் சென்னையில் 10 நாள் டிரோன் பயிற்சியினை துவங்க இருக்கிறோம். இன்று புகைப்பட கலைஞர்கள் ஒரு பக்கம் இருந்தாலும் அவர்களுக்கு டிரோனினை இயக்கவும் தெரிந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அந்தப் பயிற்சியினைதான் நாங்க பெண்களுக்கு வழங்க இருக்கிறோம். இந்தப் பயிற்சியினை சென்னை டிரோன் பயிற்சி மையம் வழங்க இருக்கிறது’’ என்றவர் பயிற்சி குறித்து விவரித்தார்.

‘‘பத்து நாட்கள் சென்னையில் வழங்கப்படும் இந்த பயிற்சியில் சென்னை மட்டுமில்லாமல் மற்ற ஊர்களில் உள்ள பெண்களும் இங்கு தங்கி பயிற்சியினை பெறலாம். அவர்கள் தங்கி பயிற்சி பெறுவதற்கான ஏற்பாட்டினையும் நாங்க செய்து தருகிறோம். இந்தப் பயிற்சிக்கான கட்டணம் ரூ.30 ஆயிரம். இந்தக் கட்டணத்தினை எல்லோராலும் செலுத்த முடியாது. வசதியுள்ளவர்கள் இதனை செலுத்தி படிக்கலாம். கட்டணம் செலுத்த வசதி இல்லாதவர்கள் ஸ்காலர்ஷிப் முறையில் இலவசமாக பயிற்சி மற்றும் தங்குமிடம், உணவு அனைத்தையும் நாங்க ஏற்பாடு செய்து தருகிறோம். பயிற்சி பெற விரும்புபவர்களுக்கு யாரேனும் ஸ்பான்சர் செய்ய விரும்பினாலும், அதையும் நாங்க ஏற்றுக் கொள்கிறோம்.

இதில் டிரோன் மூலம் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கும் பயிற்சியினை வழங்குகிறோம். பயிற்சி முடித்ததும் அதற்கான தனிப்பட்ட தேர்வும் நிகழ்த்தப்பட்டு சான்றிதழும் வழங்கப்படும். இதில் செயல்வழி முறைகள் மூலம் அவர்களுக்கு முழுமையான பயிற்சி அளிப்பதால், ஒவ்வொருவரும் பயிற்சி முடியும் போது டிரோனினை முழுமையாக இயக்க கற்றுக் கொண்டிருப்பார்கள். ஒவ்வொரு பேட்சிலும் பத்து நபர்கள் என்பதால் அனைவருக்கும் தனிப்பட்ட முறையில் பயிற்சி அளிக்க முடியும்.

இந்தப் பயிற்சியில் சேர விரும்புபவர்கள் ‘https://forms.gle/egCcyySWF9eKtLnRA’ என்ற இந்த லிங்கில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். பயிற்சியில் சேர பத்தாம் வகுப்பில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். ஏதாவது ஒரு அடையாள அட்டையினை வழங்க வேண்டும். இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். பத்து நாளில், ஆறு நாட்கள் டிரோனினை எவ்வாறு செலுத்த வேண்டும் என்று பயிற்சி அளிக்கப்படும்.

மற்ற நான்கு நாட்கள் டிரோன் மூலம் புகைப்படம் மற்றும் வீடியோ எவ்வாறு எடுக்க வேண்டும் என்பது குறித்த பயிற்சி இருக்கும். இந்தப் பயிற்சி எடுக்க விரும்புபவர்கள் புகைப்படம் எடுக்க தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதற்கான ஆர்வம் இருந்தாலே போதுமானது. பயிற்சி பிப்ரவரி மாதம் என்றாலும், விண்ணப்ப படிவத்தினை ஆங்கிலம் அல்லது தமிழில் இம்மாதம் 30ம் தேதிக்குள் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். மேலும், பயிற்சியில் நன்கு தேர்ச்சிப் பெறுபவர்களுக்கு வேலைக்கான வாய்ப்பு அளிப்பது குறித்து ஆலோசனை செய்து வருகிறோம்’’ என்றார் காயத்ரி.

தொகுப்பு: நிஷா