நன்றி குங்குமம் தோழி
‘பிங்க் பைக் டாக்ஸி’ கேப்டன் புவனேஸ்வரி
வீட்டுக்கு வீடு இளம் பெண்கள் முதல் அனைத்து வயது பெண்கள் வரை வேலைக்குச் செல்கின்றனர். வேலைக்குச் சென்று வர பெரும்பாலானவர்கள் இரு சக்கர வாகனங்களை பயன்படுத்துகிறார்கள். வாகனம் ஓட்டப் பழகாதவர்கள் பொது போக்குவரத்துக்களான பஸ், ரயில், ஆட்டோ போன்றவற்றினை பயன்படுத்துகிறார்கள். தற்போதைய சூழலில் பொது போக்குவரத்தில் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக உள்ளது. இந்நிலையில் பெண்களுக்கு பாதுகாப்பான மற்றும் சுயசார்பு பயணத்தை உறுதி செய்யும் வகையில் ‘பிங்க் பைக் டாக்ஸி’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த சேவை தமிழகத்தில் குறிப்பாக பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பெண்களுக்காக பெண்களால் மட்டுமே இயக்கப்படும் இரு சக்கர வாகன போக்குவரத்துச் சேவை சென்னை, கோயம்புத்தூர் போன்ற முக்கிய நகரங்களில் தொடங்கப்பட்டுள்ளது. இதில் ஓட்டுநர்களாகப் பணிபுரியும் பெண்கள் ‘பைக் கேப்டன்கள்’ என அழைக்கப்படுகிறார்கள். இவர்களுக்காகவே மின்சாரம் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. பிங்க் நிற வாகனங்கள் ஸ்பெஷலாக அமைக்கப்பட்டு இயங்கி வருகின்றன. இவ்வகையில் ஜொமட்டோ உணவு டெலிவரியில் தொடங்கி ரேபிடோ பிங்க் பைக் டாக்ஸி கேப்டனாக இருக்கும் புவனேஸ்வரி தன் அனுபவங்களை பகிர்ந்தார்.
‘‘நான் சென்னை ராமாபுரத்தில் இருக்கேன். 39 வயதாகிறது. +2 படித்த கையோடு திருமணம். குடும்பச் சூழ்நிலையால் கல்லூரியை பாதியிலேயே நிறுத்தினேன். திருமண வாழ்க்கையும் நீடிக்கவில்லை. எனக்கு ஒரு மகள். அவளை நல்ல நிலையில் கொண்டு வர நான் வாழ்க்கையில் உயர வேண்டும். அதனால் பல துறைகளில் வேலைப் பார்த்தேன். சொல்லப்போனால் கார்ப்பரேட் முதல் ரியல் எஸ்டேட் என அனைத்து துறையிலும் வேலைப் பார்த்திருக்கிறேன். அந்த சமயத்தில் தான் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. வேலை இல்லாமல் போனது. வீட்டு வாடகை, குடும்ப பொறுப்புகளை சமாளிக்க ஆன்லைனில் விளம்பரம் மூலம் உணவு டெலிவரி ஆப் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தேன். நிறுவனங்கள் எல்லாம் மூடிய காரணத்தால், உணவு மற்றும் இதர மளிகைப் பொருட்கள் டெலிவரி செய்யும் வேலைதான் கிடைத்தது. என் குடும்பச் சூழ்நிலையை மாற்றியமைத்ததே இந்த வேலைதான்’’ என்று நெகிழ்வுடன் பகிர்கிறார் புவனேஸ்வரி.
‘‘கொரோனா சமயத்தில் நேரக் கட்டுப்பாடுகள் இருந்ததால், குறிப்பிட்ட சமயம் மட்டுமே ஓட்ட முடியும். அந்த கட்டுப்பாட்டிலேயே வாரத்திற்கு பத்தாயிரம் சம்பாதிச்சேன். நான்தான் டெலிவரியில் டாப்பர். இந்த வேலைக்குச் சேர்ந்த போது எனக்கு இது பற்றி எதுவுமே தெரியாது. ஆர்டர் எடுப்பது, மேப் பார்த்த இடத்திற்கு செல்வது என எதுவுமே தெரியாது. ஒரு ஓட்டல் வாசலில் ஆர்டருக்கு நின்றிருந்த போது அங்கு என்னைப்போல் ஆர்டருக்காக காத்திருந்த மற்றொரு டெலிவரி நபர்தான் எனக்கு எல்லாமே சொல்லித் தந்தார். அவரை என் வாழ்நாளில் மறக்கவே மாட்டேன். அவர் சொல்லித் தந்ததைதான் இன்று வரை கடைப்பிடித்து வருகிறேன்.
நான் வேலைப் பார்த்த டெலிவரி நிறுவனத்தில் குறிப்பாக பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான சூழல்தான் இருந்தது. குறிப்பிட்ட சில மீட்டருக்குள் அதாவது, 4 கிலோ மீட்டருக்குள்தான் ஆர்டர்கள் வரும். ஆண்களுக்கு 8 கிலோ மீட்டர்கள் வரை வரும். கொரோனா சமயத்தில் கையில் கூட வாங்க மாட்டாங்க. கதவுக்கு வெளியிலேயே வைக்க சொல்லிடுவாங்க. சிலர் மிரட்டலா பேசுவாங்க. செக்யூரிட்டி ஆட்கள் ஒருமையில் பேசுவாங்க. இது போல சில சங்கடங்களை நான் சந்தித்திருக்கேன். முதலில் கஷ்டமாக இருந்தது. ஆனால், இப்ேபாது பழகிவிட்டது. சொல்லப்போனால் எனக்குள் தைரியம் கொடுத்ததே இந்த வேலைதான்’’ என்றவர், ஐந்து வருடங்கள் டெலிவரி வேலையில் இருந்துள்ளார்.
‘‘டெலிவரி வேலை அவ்வளவு சுலபம் இல்லை. அதே சமயம் என்னால் இந்த வேலையில் தொடர்ந்து இருப்பதால், என் மகளை பார்த்துக்கொள்ள முடியவில்லை. அதனால் அந்த வேலையை விட்டுவிட்டு என் தோழியுடன் மாலை நேரத்தில் தள்ளுவண்டி கடை ஆரம்பிச்சோம். இட்லி, தோசை, சப்பாத்தி, சிக்கன் குருமா போன்ற உணவுகளை வழங்கினோம். என் தோழியால் தொடர முடியவில்லை. அதனால் நானும் என் மகளும் பார்த்துக் கொண்டோம்.
ஒரு பெண்ணை தினமும் 200 ரூபாய் சம்பளத்துக்கு வேலைக்கு வைத்தேன். என் பொண்ணு பள்ளிக்குச் சென்றுவிட்டு எனக்கு உதவி செய்வாள். நான்கு மாதங்கள் பிசினஸ் நல்லா போச்சு. ஒரு நாள் நான் பக்கத்தில் பொருட்கள் வாங்க சென்ற போது, சிலர் குடித்துவிட்டு கடையில் வேலைப் பார்த்து வந்த பெண்ணிடம் தகராறு செய்துள்ளனர். குடும்பச் சூழலுக்காக பெண்கள் கஷ்டப்பட்டு வேலை செய்கிறோம். அதை தவறாக பார்க்கும் போது ரொம்பவே சங்கடமா இருந்தது. அதனால் கடையை மூடிட்டேன். மறுபடியும் டெலிவரி வேலைக்கே போக ஆரம்பிச்சேன்’’ என்றவர், ஒரு நாளைக்கு 16 மணி நேரம் டிரைவிங் செய்துள்ளதாக கூறினார்.
‘‘டெலிவரி வேலைப் பார்க்கும் போது ரேபிடோ போன்று ஜொமட்டோவில் இருக்கும் போதே ரேபிடோவிலும் வண்டி ஓட்டலாம்னு நினைச்சேன். ஆனால், ஆண்களும் வருவார்கள் என்பதால்
தயங்கினேன். அந்த சமயத்தில் நண்பர்கள் கமிஷனர் ஆபீசுக்கு ஆட்டோ ஓட்டுனர்கள் மேல் புகார் தர இருப்பதாக என்னையும் அழைத்தார்கள். அங்கு பிங்க் பைக் டாக்ஸி பற்றி கேள்விப்பட்டேன். பெண்கள்தான் டிரைவர், பெண்கள்தான் வாடிக்ைகயாளர்கள். உடனே அதில் சேர்ந்துவிட்டேன். இப்போது இரண்டு வருடமா பிங்க் பைக் டாக்ஸியில் வேலைப் பார்த்து வருகிறேன்’’ என்றவர், இந்தப் பயணத்தில் தான் சந்திக்கும் பிரச்னைகள் மற்றும் சவால்களை பகிர்ந்தார்.
‘‘பெண்கள் வாடிக்கையாளர்கள் என்பதால், வேகமாக போக முடியாது. கேப்டன், பேசன்ஜர் இருவரும் தலைக்கவசம் போடணும். பெரும்பாலான பெண்கள் தலை அலங்காரம் கலைஞ்சிடும் என்று போட மறுப்பார்கள். அதனால் எங்களுக்கு அபராதம் என்றாலும் கேட்க மாட்டார்கள். ரேட்டிங்கும் குறைவாகத்தான் தருவார்கள். ஒருமுறை நான் தயாராவதற்கு முன்பே பெண் ஒருவர் வண்டியில ஏறிட்டாங்க. வண்டி சாய்ஞ்சிடுச்சு. அவங்க ரொம்ப கோவப்பட்டு மரியாதை இல்லாம பேசினாங்க. அப்படியும் அவங்களை குறித்த இடத்தில் டிராப் செய்ய வண்டியில் ஏற்றிக்கொண்டு கிளம்பினேன். இருந்தாலும் வழி நெடுக அவங்க ஏன் இந்த வண்டியில் தேவையில்லாம வந்தேன்னு பேசிட்டே வந்தாங்க. ஒரு கட்டத்தில் அவங்க பேசுவதை பொறுக்க முடியாமல் பாதியிலேயே இறக்கிவிட்டுட்டேன்.
இப்படி எல்லாம் சிலர் இருப்பாங்க. எங்க பெண்கள் பைக் டாக்ஸி கேப்டன்களுக்கு பிரச்னை செய்வதே ஆட்டோகாரங்கதான். எங்களால அவங்க சவாரி பாதிப்பு அடைவதாக நினைக்கிறாங்க. பஸ் ஸ்டாப், மெட்ரோ ஸ்டேஷன் அருகே நின்றிருந்தால், வழிமறிப்பாங்க. இடிக்கிற மாதிரி வருவாங்க. தகாத வார்த்தைகள் பேசுவாங்க. இதில் அனைவரும் அப்படி என்று சொல்லிட முடியாது. ஒரு சிலர்தான் இப்படி நடந்து கொள்வார்கள். சிலர் ரொம்பவே சப்போர்டிவ்வா இருப்பாங்க’’ என்று சொன்ன புவனேஸ்வரி, பைக் டாக்ஸி ஓட்டுனர் சங்கத்தின் துணைத் தலைவராக இருக்கிறார்.
‘‘பைக் டாக்ஸி பொறுத்தவரை பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பானது. எப்போது வேண்டும் என்றாலும் லாகின் லாக் செய்து கொள்ளலாம். யுனிஃபார்ம் கண்டிப்பாக அணிய வேண்டும் என்றில்லை. எங்களுக்குள் போட்டி நடத்தி பரிசுகள் வழங்குவது, விழாக் கொண்டாட்டம் என ஊக்கம் தருவாங்க. டாப்பராக வருபவர்களுக்கு சிறப்பு பரிசும் உண்டு. டீ சர்ட், தலைக்கவசம், ரெயின் கோர்ட், தலைக்கு பேண்ட் என அனைத்து பாதுகாப்பு கவசமும் நிறுவனம் கொடுத்திடும். வண்டி இல்லாதவங்களுக்கும் அவங்களே வண்டி, லைசென்லாம் தந்து வேலை தராங்க. ஆண்கள், பெண்கள் என பைக் டாக்ஸி கேப்டன்கள் அனைவரும் சேர்ந்து தமிழ்நாடு பைக் டாக்ஸி அசோசியேஷன் ஒன்றை நடத்துகிறோம்.
150க்கும் மேற்பட்ட பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர். சங்கம் மூலம் உறுப்பினர்களுக்கு பிரச்னைகள் ஏற்பட்டால் அதனை சரி செய்கிறோம். சங்க குடும்ப உறுப்பினர்களுக்கு கல்வி, மருத்துவ உதவிகளும் வழங்குகிறோம். தமிழ்நாட்டில் மட்டுமே 3000 பெண் டிரைவர்கள் உள்ளனர். அதில் சென்னையில் 500க்கும் மேற்பட்டோர் கேப்டன்களாக இருக்கிறார்கள்.
என்னைப் போல குடும்பத்திற்காக, குழந்தைகளுக்காக வீட்டிலிருந்து வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பான பயணத்தை தருவதில் நானும் துணையாக இருப்பதில் பெருமையாக இருக்கு’’ என்கிறார் புவனேஸ்வரி.
தொகுப்பு: கலைச்செல்வி


