Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

துப்பாக்கி முனையில் இரட்டை வெள்ளி!

நன்றி குங்குமம் தோழி

அசத்திய இளவேனில் வாலறிவன்

2026ஆம் ஆண்டுக்கான 20வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானின் அய்ச்சி - நகோயா நகரங்களில் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4 வரை நடைபெற்று வருகிறது. இதில் இந்திய துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலறிவன், 10 மீட்டர் ஏர் ரைஃபிள் போட்டியில் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைஃபிள் தனிநபர் பிரிவின் இறுதிப் போட்டியில், இளவேனில் 252.4 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றார். ஜப்பானின் ஹினாட்டா தைச்சி 253.0 புள்ளிகளுடன் தங்கப் பதக்கம் வென்றார்.

இதற்கு முன்னதாக, பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைஃபிள் அணிப் பிரிவிலும் இளவேனில், சோனம் உத்தம் மஸ்கர் மற்றும் விதர்ஷா விநோத் ஆகியோருடன் இணைந்து வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். இதன் மூலம் ஒரே நாளில் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்று அசத்தியிருக்கிறார் இளவேனில் வாலறிவன்.தமிழ்நாட்டைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன், சர்வதேச துப்பாக்கிச்சுடுதல் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு வருவதுடன், உலகக் கோப்பை உள்ளிட்ட முக்கிய சர்வதேசப் போட்டிகளிலும் ஏற்கனவே பதக்கங்களை வென்றவர்.

2019ம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற உலகக் கோப்பையில் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற துடன், இரண்டு முறை ஒலிம்பிக் போட்டிகளிலும் பங்கேற்றவர். 2022 ஆம் ஆண்டு அவருக்கு இந்திய அரசின் அர்ஜுனா விருதும் வழங்கப்பட்டது.இன்று 2026 ஆசிய விளையாட்டில் தனிநபர் பிரிவிலும், அணிப் பிரிவிலும் வெள்ளிப் பதக்கம் வென்று, இந்திய துப்பாக்கிச்சுடுதல் அணிக்கு பெருமை சேர்த்திருக்கும் இளவேனில் வாலறிவனின் சாதனை, அவரது சர்வதேச விளையாட்டுப் பயணத்தில்

குறிப்பிடத்தக்க மைல்கல்.

2019ல் அவர் உலகக் கோப்பையை வென்றது மிகப்பெரிய சாதனை என்றாலும், அந்த வெற்றியின் மமதையில் அப்படியே இருந்துவிடாமல், 2026 வரை தன்னை மெருகேற்றி, தன்னுடைய கண்டத்திலும் வெற்றியை பதிவு செய்திருப்பது எல்லோராலும் பாராட்டப்படுகிறது.ஏழு வருஷ காத்திருப்பிற்கு பின், ஜப்பானின் நகோயா நகரில், தன் அறைக்கு திரும்பும் இளவேனில் வாலறிவனின் கழுத்தில் இரண்டு வெள்ளிப் பதக்கங்கள், மிகப்பெரிய அங்கீகாரமாக பெருமையுடன் தொங்கிக் கொண்டிருக்கும்.

வெற்றி என்பது ஒருபோதும் நேர்கோட்டில் பயணிப்பது கிடையாது. ஒரு துறையில் நாம் உலக அளவிலான வெற்றியை அடைந்துவிட்டால், அதற்குப் பிறகு வருகிற சவால்கள் சுலபமாக இருக்கும் என்றே நினைக்கிறோம். அது உண்மை இல்லை என்பதையே இளவேனில் வாலறிவனின் வெற்றி நமக்கு உணர்த்துகிறது.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்