Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நான் போன்சாய் செடிகளின் டாக்டர்

நன்றி குங்குமம் தோழி

‘போன்சாய்’... என்ற சொல்லுக்கு குட்டையான மரம் அல்லது பூந்தொட்டியில் வளர்க்கப்படும் மரம் என்பது பொருள். இதன் தோற்றத்தை ஆராய்ந்தால் சீனாவில் தொடங்கி ஜப்பான் நாட்டு பக்கம் செல்கிறது. சீனாவில் வழிபாட்டுக்கு உரிய மரங்களை போன்சாய் முறையில் கத்தரித்து பூந்தொட்டியில் பராமரித்து வந்துள்ளனர். நாளடைவில் அதுவே ஒரு கலையாக மாறிவிட்டது. ஆயுட்காலம் அதிகம் உள்ள மரங்களை 3 அடிக்குள் அடக்கும் போது மனம் அமைதி கிடைப்பதாக நம்பப்படுகிறது. போன்சாய் வளர்ப்பு ஒரு சிறந்த தியானமாக பார்க்கப்படுகிறது. இது மன அமைதியை தந்து பொறுமையை அதிகரிப்பதால், கார்ப்பரேட் அலுவலகங்கள், ரிசார்ட்டுகள் போன்ற இடங்களில் தங்கள் வளாகங்களில் இதற்கென தனியாக இடம் அமைத்து பராமரித்து வருகிறார்கள். இந்தச் செடிகளை வீட்டிலும், அலுவலக மேசைகளிலும் வளர்ப்பது இன்று ட்ரெண்டாகி வருகிறது. வீட்டில் போன்சாய் வைத்திருப்பது இயற்கையின் ஒரு பகுதியை வைத்திருப்பது போன்றது என்கின்றனர் போன்சாய் வல்லுநர்கள்.

இந்தச் செடிகள் மன அழுத்தத்தைக் குறைத்து, மனிதனுக்கும் இயற்கைக்குமான தொடர்பை மேம்படுத்துகிறது. வீடு, அலுவலக வரவேற்பறை அல்லது பால்கனியில் வைக்கும் போது கண்களுக்குக் குளிர்ச்சியையும், மனதிற்கு அமைதியையும், நேர்மறை எண்ணங்களையும் வளர்க்கும் என்கிறார் கோயம்புத்தூர் சௌரிப்பாளையத்தில் ‘ஐபோன்சாய்ஸ்’ என்ற பெயரில் போன்சாய் மரம் மற்றும் செடிகளின் விற்பனை அங்காடியை நடத்தி வரும் கமலேஷ் மற்றும் விமல்ராஜ். அவர்களிடம் போன்சாய் மரங்கள் வளர்ப்பு மற்றும் நன்மைகள் குறித்து கேட்டபோது கமலேஷ் தொடர்ந்தார்.

‘‘எனக்கு சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் நெய்காரப்பட்டி. நான் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் தோட்டக்கலையில் முதுகலைப் படித்தேன். அம்மா நிறைய செடிகள், மரங்கள் வளர்ப்பாங்க. அவங்கள பார்த்து வளர்ந்ததால என்னவோ எனக்கும் செடிகள், மரங்கள், தோட்டம் என ஆர்வம் வந்து இத்துறையை தேர்ந்தெடுத்தேன். ஆரம்பத்தில் ஃபிரிலான்சராக இருந்தேன். நண்பர்கள், உறவினர்கள் என கேட்கிறவங்களுக்கு வீடு மற்றும் அலுவலகங்களில் லாண்ட்ஸ்கேப், கார்டனிங் அமைத்துக் கொடுத்து வந்தேன். கூடவே என்ன மாதிரி செடிகள் மற்றும் மரங்கள் சந்தையில் விற்பனையில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளன என ஆய்வும் செய்ய துவங்கினேன். பிறகு என் மாமா விமல்ராஜுடன் சேர்ந்து 2021ல் போன்சாய் விற்பனை அங்காடியை அமைத்தேன். நான் படிக்கத்தான் கோயம்புத்தூர் வந்தேன். இங்கு தோட்டக்கலைக்கு நல்ல வரவேற்பு இருந்ததால் சௌரிப்பாளையத்திலேயே கார்டன் சென்டர் அமைத்து விட்டேன். முதலில் செடிகள், மரக்கன்றுகள், உரங்கள், பூந்தொட்டிகள் என சிறிய அளவில்தான் தொடங்கினோம். தற்போது பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு லாண்ட்ஸ்கேப்பிங் அமைப்பை பிரதான தொழிலாக செய்து வருகிறோம். ஒரு நிறுவனத்திற்கு தேவையானதை நாங்களே 3டி வடிவத்தில் டிசைன் செய்து வாடிக்கையாளர்களிடம் காண்பிப்போம். அதில் அவர்கள் மாற்றங்கள் செய்தால் அதற்கேற்றபடியும் வடிவமைத்து

தருவோம். தோட்டம் அமைப்பது முதல் பராமரிப்பது வரை மாதம் மற்றும் வருடக்கணக்கில் செய்து தருகிறோம். தமிழ்நாடு அல்லாத பிற மாநிலங்களிலும் கார்டன் அமைத்துள்ளோம்’’ என்றவர், லைட்டிங் முதல் நீர் பாசனம் வரை செய்து தருவதாக கூறுகிறார்.

‘‘செடிகள் பெரும்பாலும் நாங்களே வளர்க்கிறோம். சில வகை செடிகளை மட்டும் சீனா, தாய்லாந்தில் இருந்து இறக்குமதி செய்கிறோம். நகர்ப்புற பகுதிகளில் விருப்பம் அதிகம் இருந்தாலும் இடப் பற்றாக்குறை காரணத்தினால் இன்டோர் வகை செடிகள், தாவரங்களையே அதிகம் விரும்புகின்றனர். பால்கனி இருந்தாலும் அதிலும் செடிகள் வளர்க்க ஆர்வம் காட்டி வருவதால் இத்துறை இன்றளவில் நன்றாகவே வளர்ந்து வருகிறது. சிறிய வீடாக இருந்தாலும் செல்ஃப்களில் கூட வளர்த்துக் கொள்கிறோம் என்று சொல்கிறவர்கள் இருக்கிறார்கள். நாங்கள் 500 வகையான இன்டோர் பிளான்ட்களை விற்பனை செய்கிறோம். தற்போது வாஸ்து படி இன்டோர் பிளான்ட்களை வளர்ப்பது ட்ரெண்டாகி வருவதால் அதையும் விற்பனைக்கு வைத்துள்ளோம். சிலருக்கு வீடு முழுக்க செடி வளர்க்க விருப்பமாக இருக்கும். அவர்கள் பல்வேறு செடிகளை வாங்கிச் செல்வார்கள்.செடிகளை வளர்க்க ஆர்வம் இருந்தாலும் நேரமின்மையால் அவற்றை பராமரிக்க முடிவதில்லை என்று சிலர் வருத்தப்படுகிறார்கள். அவர்களுக்கு குறைந்த பராமரிப்புள்ள செடிகள், தானாக நீர் உறிஞ்சும் பூந்தொட்டிகள், கண்ணாடி கண்டெய்னர்கள் எல்லாம் தற்போது எங்கள் அங்காடியில் கிடைக்கின்றன. ஆன்லைனிலும் வாங்கிக் கொள்ளலாம். அவ்வாறு வாங்கும் போது செடியினை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்று ஆலோசனையும் வழங்கி வருகிறோம். ஒரு செடியின் நிறம், அளவு, வடிவம் வைத்தே அதன் வளர்ச்சி மற்றும் நோய் தாக்கம் குறித்து அறிந்து என்னால் சரி செய்ய முடியும்’’ என்கிறார் பிளான்ட் டாக்டரான கமலேஷ்.

செல்வத்தை தரும்!

வேலைக்குச் செல்லும் பெண்களுக்கும், இல்லத்தரசிகளுக்கும் வீட்டைப் பராமரிப்பதற்கே நேரம் சரியாக இருக்கும். இதில் செடிகளையும் பராமரிப்பது கடினம் என்று நினைப்பார்கள். ஆனால், வாரத்திற்கு ஒருமுறை மட்டும் தண்ணீர் ஊற்றினாலும், குறைந்த வெளிச்சத்திலும் மிக அழகாக வளரக்கூடிய ஆறு முக்கிய இண்டோர் செடிகள் தொடக்க நிலையில் வளர்ப்பவர்களுக்கு மிகவும் ஏற்றவை.

மூங்கில் போன்சாய் (Lucky Bamboo Bonsai):

வீட்டில் செல்வத்தையும், நிலையான முன்னேற்றத்தையும், நல்வாழ்வையும் ஈர்க்கும் என வாஸ்து மற்றும் ஃபெங்சுய் சாஸ்திரம் கூறுகிறது.

பராமரிப்பு: இதன் வேர்கள் எப்போதும் தண்ணீரில் மூழ்கியிருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். வாரம் ஒருமுறை தண்ணீரை மாற்ற வேண்டும். மண்ணில் வளர்த்தால், மண் எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும்.

நன்மைகள்: நேர்மறை ஆற்றலை ஈர்க்கும். இது அழகிய தோற்றத்தைத் தருவதோடு, குறைந்த பராமரிப்பில் நீண்ட காலம் வளரக்கூடியது.

ஸ்நேக் பிளான்ட் (Snake Plant):

செடியின் இலைகள் கத்தி போல நீளமாக, பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

பராமரிப்பு: 2 வாரத்திற்கு ஒருமுறை தண்ணீர் ஊற்றினால் போதும். குறைந்த வெளிச்சம் உள்ள அறைகளிலும் நன்றாக வளரும்.

நன்மைகள்: 24 மணி நேர ஆக்ஸிஜன் வெளியிடும். இரவு நேரத்திலும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இதை படுக்கையறையில் வைக்கலாம். காற்றில் உள்ள பென்சீன், ஃபார்மால்டிஹைட் போன்ற நச்சு வாயுக்களை உறிஞ்சி காற்றை சுத்திகரிக்கும்.

மணி பிளான்ட் (Money Plant / Pothos):

வீடுகளில் அதிகமாக வளர்க்கப்படும் எளிய கொடி வகை செடி. மண்ணிலும் வளர்க்கலாம். கண்ணாடி பாட்டிலில் தண்ணீரிலும் இது வளரும்.

பராமரிப்பு: மண்ணில் வளர்த்தால் வாரம் ஒருமுறை தண்ணீர் வேண்டும். தண்ணீரில் வளர்த்தால் 10 நாட்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்.

நன்மைகள்: மன அழுத்தம் குறையும். இதன் பச்சைப்பசேல் இலைகள் கண்ணுக்கும் மனதிற்கும் குளிர்ச்சியையும், நேர்மறை ஆற்றலையும் தரும். வீட்டின் வரவேற்பறை, ஜன்னல் அல்லது சமையலறை அலமாரிகளில் படரவிட்டால் பார்க்க அழகாக இருக்கும்.

இசட் இசட் பிளான்ட் (ZZ Plant):

இதன் இலைகள் மெழுகு பூசியது போல பளபளப்பாகவும், கரும்பச்சை நிறத்திலும் இருக்கும். பார்ப்பதற்கு பிளாஸ்டிக் செடி போல காட்சியளிக்கும்.

பராமரிப்பு: மூன்று வாரங்களுக்கு ஒருமுறை தண்ணீர் ஊற்றினால் போதும். நிழலான இடத்தில் மிக நன்றாக வளரும். வேலை செய்யும் ஆபீஸ் டேபிளில் வைக்க இது மிகச் சிறந்த தேர்வு.

ஸ்பைடர் பிளான்ட் (Spider Plant):

இதன் இலைகள் சிலந்தியின் கால்களை போல மெலிதாக வளைந்திருக்கும்.

பராமரிப்பு: வாரத்திற்கு இரண்டு முறை தண்ணீர் ஊற்ற வேண்டும். ஓரளவிற்கு வெளிச்சம் இருக்கும் இடத்தில் வைத்தால் நல்லது.

நன்மைகள்: சமையலறை மற்றும் வீட்டிற்குள் உள்ள காற்றில் இருக்கும் கார்பன் மோனாக்ஸைடு போன்ற நச்சு வாயுக்களை வேகமாக நீக்கும் திறன் கொண்டது. இந்தச் செடி நச்சுத்தன்மை அற்றது என்பதால், வீட்டில் குழந்தைகள் அல்லது செல்லப்பிராணிகள் கடித்தாலும் எந்த ஆபத்தும் இல்லை.

பீஸ் லில்லி (Peace Lily):

அமைதியின் அடையாளமாக கருதப்படும் இந்தச் செடியில், அழகான வெள்ளை நிறப் பூக்கள் பூக்கும். இலைகளும் அடர்ந்த பச்சை நிறத்தில் இருக்கும்.

பராமரிப்பு: வாரத்திற்கு ஒருமுறை தண்ணீர் ஊற்ற வேண்டும். தண்ணீர் தேவைப்படும் போது இதன் இலைகள் தொய்வாக காணப்படும். தண்ணீர் ஊற்றிய சில மணி நேரங்களில் செடி புத்துணர்ச்சியடையும்.

நன்மைகள்: காற்றில் உள்ள ஈரப்பதத்தை சமநிலைப்படுத்தும். படுக்கையறையில் வைக்கும் போது நல்ல அமைதியான தூக்கம் வரும். பூக்கள் பூக்கும் என்பதால், வீட்டிற்குள் வளர்க்கும் போது அழகாக எடுத்துக்காட்டும்.

கோல்டன் ரூல்: இண்டோர் செடிகளுக்கு அதிகமாக தண்ணீர் ஊற்றக்கூடாது. மண் காய்ந்த பிறகு மட்டுமே தண்ணீர் ஊற்ற வேண்டும்.

தொகுப்பு: கலைச்செல்வி