நன்றி குங்குமம் தோழி
‘‘சிறுவயதில் ஏற்பட்ட பல இனிமையான நினைவுகள் நம் மனதில் காலம் காலமாக நிலைத்திருக்கும். ஆனால், என்னுடைய வாழ்வில் நான் பல சோதனைகள் மற்றும் வலியினைதான் சந்தித்திருக்கிறேன். இந்த வலி என்னுடைய எதிர்காலம் குறித்து அச்சத்தினை ஏற்படுத்தியது. ஆனால், வாழ்க்கை ஒரே இடத்தில் நின்றுவிடாது என்று மட்டும் புரிந்துகொண்டேன். ஒவ்வொரு நாளையும் புது வாய்ப்பாக எடுத்துக்கொண்டு முன்னேற துவங்கினேன். கல்வியிலும், விளையாட்டிலும் முழு கவனம் செலுத்த ஆரம்பித்தேன்’’ என்கிறார் ஸ்ருதி. சென்னையில் வசித்து வரும் இவர், கூடைப்பந்து வீராங்கனை.
‘‘மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் போது நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு பல பரிசுகளை எல்லாம் வென்றிருக்கிறேன். அந்தப் பள்ளியில் 9ம் வகுப்பு வரைதான் பயின்றேன். அதன் பிறகு தள்ளாக்குளத்தில் உள்ள பள்ளியில் 10ம் வகுப்பு முடித்தவுடன் நான் சென்னையில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, தேசிய போட்டியில் விளையாடச் சென்றிருந்தேன். அப்போது என் அம்மாவுக்கு திடீரென்று உடல் நிலை சரியில்லாமல் போனது. அதனால் என்னால் போட்டியில் பங்கு பெற முடியவில்லை. ஆனால், நான் ஊருக்கு வந்த போது அம்மா தவறிவிட்டார் என்ற செய்தி என்னை பெரிய அளவில் பாதித்தது.
அதன் பிறகு பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கல்லூரியில் சேர்ந்தேன். ஆனால், நான் முதலாமாண்டு படிக்கும் போது, என் அப்பாவும் காலமானார். அப்பாவை இழந்த துயரம் ஒரு புறம், மறுபக்கம் அவரின் மருத்துவ செலவு ரூ.5 லட்சம். அந்தக் கட்டணத்தை எப்படி செலுத்துவதுன்னு எனக்கு புரியவில்லை. அம்மாவின் நகைகளை அடமானம் வைத்து மருத்துவமனை கட்டணத்தை செலுத்தினோம்.
பெற்றோரை இழந்த நிலையில் என் தம்பிதான் எனக்கு பெரிய ஆறுதல். இருந்தாலும் என்ன செய்ய போகிறோம் என்று தெரியவில்லை. வாழ்க்கை இருளில் சூழ்ந்தது போல் இருந்தது. பொருளாதார ஆதரவும் இல்லை. அந்த சமயத்தில் கூடைப்பந்து விளையாட்டு தான் எனக்கு கை கொடுத்தது. அதற்கான பயிற்சியில் முழுமையாக ஈடுபட ஆரம்பித்தேன். தீபாவளி, பொங்கல் என எந்த பண்டிகைக்கும் வீட்டிற்கு செல்லமாட்டேன். சென்னையில் கடுமையாக பயிற்சி செய்தேன்’’ என்றவர், அந்த விளையாட்டில் தன் முழு கவனத்தையும் செலுத்த ஆரம்பித்துள்ளார்.
‘‘கூடைப்பந்துக்கான போட்டி அனைத்திலும் பங்கு பெற்றேன். ஒவ்வொரு போட்டியிலும் புதிய விஷயங்களை கற்றுக் கொண்டேன். தோல்விகள் வந்தபோதும் மனம் தளராமல் அவற்றை அனுபவமாக எடுத்துக் கொண்டேன். பயிற் சியாளர்களின் வழிகாட்டுதலும், அணியினரின் ஒத்துழைப்பும் எனது திறமையை மேலும் வளர்த்தன. கூடைப்பந்து எனக்கு வெறும் விளையாட்டாக மட்டும் இல்லாமல், ஒழுக்கம், பொறுப்பு, தலைமைத்துவம் மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றை கற்றுக் கொடுத்தது. அதுவே என்னை தேசிய அளவிலான வீராங்கனையாக உயர்த்த அடித்தளமாக அமைந்தது.
சில நேரங்களில் உடல் சோர்வும், காயங்களும் பயிற்சியை பாதித்தன. அதே நேரத்தில் மனரீதியான அழுத்தங்களும் இருந்தன. ஆனால், ஒவ்வொரு சவாலும், என்னை மேலும் வலிமையாக்கும் என்று நம்பினேன். தேசிய அளவில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தபோது, அந்தப் பொறுப்பை முழுமையாக உணர்ந்து சிறப்பாக செயல்பட முயன்றேன். அந்த உழைப்பிற்கு இன்று நல்ல பலன் கிடைத்தது. கடந்த 6 ஆண்டுகளாக தமிழ்நாடு அணிக்காக விளையாடி பல பதக்கங்களை வென்றுள்ளேன். தேசிய போட்டிகளில் எனது ஆட்டத்தை பார்த்து இந்திய அணிக்குத் தேர்வு செய்யப்பட்டது என் வாழ்க்கையின் மிகப்பெரிய பெருமை. தொடர்ந்து ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய அணிக்காக தங்கப்பதக்கம் வென்றது என் வாழ்நாளின் மறக்க முடியாத தருணம்’’ என்று கூறும் ஸ்ருதிக்கு, FIBA Asia Cup போட்டியிலும் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
‘‘என் அப்பா ஒரு ஹாக்கி வீரர். இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பது அவருடைய மிகப்பெரிய கனவு. அவரின் கனவினை நான் நிறைவேற்றி வருகிறேன். என் ஜெர்சியில் அப்பாவின் பெயர் பார்த்த போது அந்தத் தருணம் விவரிக்க முடியாத அளவுக்கு பெருமையும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது. என்னுடைய விளையாட்டுத் திறமையினால், TNPL நிறுவனத்தில் அதிகாரி ஆக பணியில் சேரும் வாய்ப்பு கிடைத்தது. விளையாட்டின் மூலம் கிடைத்த இந்த அங்கீகாரம் எனது நீண்டகால உழைப்புக்கு கிடைத்த பாராட்டாக கருதுகிறேன். இந்த வேலை எனக்கு பொருளாதார பாதுகாப்பை மட்டுமல்லாமல், சமூகத்தில் ஒரு தனித்த அடையாளத்தையும் வழங்கியுள்ளது.
விளையாட்டும், பணியும் இரண்டுமே எனது வாழ்க்கையில் முக்கியமான பொறுப்புகள். பணி நேரத்திற்கு பிறகு தினசரி உடற்பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிகளை தவறாமல் மேற்கொள்வேன். உடல்நலத்தை பராமரிக்க சீரான உணவுமுறை, போதுமான ஓய்வு மற்றும் ஒழுங்கான வாழ்க்கை முறையை கடைபிடித்து வருகிறேன். வேலை, வாழ்க்கைக்கு நிலைத்
தன்மையை அளிக்கிறது. விளையாட்டு எனது அடையாளத்தை பிரதிபலிக்கிறது.
வாழ்க்கையில் ஏற்பட்ட இழப்புகள் என்னை பலமுறை சோர்வடையச் செய்தன. ஆனால், அந்தச் சூழ்நிலைகளில் நான் என்னை மட்டுமே நம்பினேன். இழப்புகள் வாழ்க் கையின் முடிவல்ல... புதிய தொடக்கத்திற்கான பாடம். சூழ்நிலைகளை காரணமாகக் காட்டாமல், கிடைக்கும் வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்த வேண்டும். ஒழுக்கமான பயிற்சி, கடின உழைப்பு மற்றும் பொறுமை ஆகியவை வெற்றிக்கான முக்கிய அடிப்படைகள். இளம் விளையாட்டு வீரர்களுக்கு எனது அனுபவத்தை பயன்படுத்தி நல்ல வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. உங்களை நம்பினால், ஒருநாள் நிச்சயம் உங்களுக்கு வெற்றியையும், சமூகத்தில் மதிப்பையும் பெற்றுத்தரும்’’ என்றார் ஸ்ருதி.
தொகுப்பு: பொ.ஜெயச்சந்திரன்


