Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

50 வயதில் பட்டப் படிப்பு மற்றும் ஆடிட்டர்!

நன்றி குங்குமம் தோழி

47 வயதில் B.com பட்டப் படிப்பு முடித்தவர், தன்னுடைய 50வது வயதில் C.Aவினை வெற்றிகரமாக முடித்து, 92 வயது வரை ஆடிட்டராக பணியாற்றியுள்ளார் பத்மாவதி. மதுரை பிபிகுளம் பகுதியில் வசித்து வருகிறார். இந்த வயதிலும் சுறுசுறுப்பாக இருக்கும் இவரை நேரில் சந்தித்த போது... ‘‘என் சொந்த ஊர் கரூர் அருகிலுள்ள கிராமம். அப்பா டாக்டர், அம்மா இல்லத்தரசி, நான்தான் வீட்டிற்கு மூத்தப் பெண். எனக்கு மூன்று தம்பிகள், மூன்று தங்கைகள். எனக்கு 14 வயது இருக்கும் போது அம்மா தவறிட்டார். அப்பா மருத்துவ பணியில் இருந்ததால், தம்பி, தங்கைகளை வளர்க்க வேண்டிய பொறுப்பு என்னுடையதானது.

எங்கு என்னுடைய வாழ்க்கை தம்பி, தங்கைகளுக்காகவே போய்விடுமோ என்று அப்பா பயந்துட்டார். அதனால் வருமான வரித்துறையில் வேலை பார்த்து வந்த ஹரிஹரன் என்பவருக்கு 18 வயசிலேயே திருமணம் செய்து வைத்துவிட்டார். திருமணமானாலும் என் தம்பி, தங்கைகளை நல்ல நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்ற கடமையை பூரணமாக செய்து முடித்தேன். திருமணத்திற்குப் பிறகு நான் மதுரைக்கு வந்துவிட்டேன். குடும்பச்சூழல் காரணமாக என்னால் மேலும் படிக்க முடியவில்லை என்பதால், என் கணவரின் அலுவலக பணிகளுக்கு உதவியாக இருந்தேன். அது அவருக்கு உயர் பதவி கிடைக்க உதவியது’’ என்றவர், குழந்தைகள் பிறந்த பிறகுதான் பட்டப் படிப்பினை முடித்துள்ளார்.

‘‘திருமணத்திற்குப் பிறகு குழந்தைகள், குடும்பம்னு மதுரையில் செட்டிலாகிட்டேன். அவர்கள் வளர்ந்து ஆளாகும் வரை நான்தான் அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும். ஆனால், என்னுடைய மனதில் பட்டதாரியாக வேண்டும் என்ற ஏக்கம் இருந்து கொண்டே இருந்தது. காரணம், என் உறவினர்களின் மகன், மகள்கள் எல்லோரும் பட்டப் படிப்பு முடித்திருந்தார்கள். ‘படிக்க வயதில்லை பத்மா.

இப்போது நினைத்தாலும் உன்னால் படிக்க முடியும். கடினமாக உழைத்தால் எத்தனை பட்டம் வேண்டும் என்றாலும் வாங்கலாம்’ என்று என் கணவர்தான் எனக்கு தைரியம் தந்தார். ‘அம்மா நீ எங்கள் கூடவே படிக்கலாம்’ என்று என் பிள்ளைகளும் ஊக்கமளிக்க, 1982ல் மதுரை பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழிக் கல்வியில் பி.காம் படிக்க 47வது வயதில் சேர்ந்தேன். பெண்கள் படித்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் என் கணவர்.

அவரின் நண்பர் மதுரையில் புகழ்பெற்ற ஆடிட்டர். அவர் படிக்க எனக்கு அத்தனை உதவிகளை செய்தார். 1985ல் பி.காம் முடித்தவுடன் எம்.காம் மற்றும் ஆடிட்டர் படிப்பிற்கான சி.ஏவும் படிக்கச் சொன்னார். என்னுடைய 50வது வயதில் ஆடிட்டிங் படிச்சேன். இந்தப் படிப்பில் இன்டர் பைனல் தேர்வு கடினமாக இருக்கும். அதில் தேர்ச்சிப் பெற பல இளைஞர்கள் போராடி வருகிறார்கள்.

ஆனால், நானோ என்னுடைய ஐம்பதாவது வயதில்தான் சி.ஏ படிக்கவே போறேன். உன்னால் முடியுமா என்று பலரும் கேட்ட போது என் தோழிகள் மற்றும் கணவர், பிள்ளைகள், என் கணவரின் நண்பர்கள் தான் ஊக்கம் கொடுத்தார்கள். எம்.காம், சி.ஏ இரண்டும் ஒரே நேரத்தில் படிக்கும் எனக்கு பிரபல எழுத்தாளரும் ஆடிட்டருமான வரலொட்டி ரங்கசாமி அவர்கள்தான் பேருதவி செய்தார். படிப்புடன் என் குடும்பக் கடமைகளை செய்யவும் நான் தவறியதில்லை. இதில் வேடிக்கை என்னவென்றால் என் மகன்கள், மகளுடனும் நானும் சேர்ந்து தேர்வு எழுதியதுதான்.

காலை எம்.காமிற்கான தேர்வு எழுதுவேன். மதியம் மற்றொரு கல்லூரியில் சி.ஏ தேர்வு என கடினமாக உழைத்தேன். எம்.காமில் முதல் ரேங்கிலும், சி.ஏ இன்டர்பைனலில் முதல் முறையே தேர்ச்சிப் பெற்று, என்னுடைய 50வது வயதில் ஆடிட்டராக என்னுடைய பணியினை ஆரம்பித்தேன்’’ என்றவர், மகன் ஆடிட்டர் என்பதால், அவர்களுடன் இணைந்து தன் பணியினை துவங்கியுள்ளார்.‘‘என் இளைய மகனும் சி.ஏ படித்து ஆடிட்டர் என்பதால், நானும் அவரும் சேர்ந்து எங்களின் ஆடிட்டிங் பணியினை சேர்ந்து செய்தோம். குறிப்பாக தேனி, கம்பம், போடி, பழனி என்று பல ஊர் வங்கிகளின் ஆடிட்டிங்கை நான் பார்த்து வந்தேன். நான் வேலைக்கு போகும் இடங்களில் மிகவும் கண்டிப்பாக இருப்பேன். 1985 முதல் 2019 வரை 34 வருடங்கள் வெற்றிகரமான ஆடிட்டராக 86 வயது வரை செயல்பட்டு வந்தேன். ஆனால், என் உடல் வாழ்க்கையில் ஏற்பட்ட விபத்தில் இருந்து நான் பிழைத்தது மெடிக்கல் மிராக்கல் என்றுதான் சொல்ல வேண்டும்.

வயது மூப்பு காரணமாக என்னால் ஆடிட்டர் பணியினை தொடர முடியவில்லை. என் கணவர் மறைவிற்குப் பிறகு என் குழந்தைகள்தான் என்னை கவனமாக பார்த்துக் கொள்கிறார்கள். இரண்டு வருடங்களுக்கு முன் கீழே விழுந்து தலையில் அடிபட்டது. அதனால் மூளையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர் சொன்னார். அப்போது என்னுடைய வயது 90. இந்த வயதில் ரிஸ்க் எடுக்க வேண்டுமா என்று என் குடும்பத்தினர் பயந்தார்கள். ஆனால், நான் தைரியமாக அந்த அறுவை சிகிச்சையினை எதிர்கொண்டேன்.

உயிர் பிழைத்தும் வந்தேன். வயதானாலும் மனதிடத்தோடு நல்லோரின் ஒத்துழைப்புடன் நான் பட்டங்கள் பெற்று ஆடிட்டராக பணிபுரிந்த அந்தக் காலங்களை பெருமையாக பார்க்கிறேன். நான் கர்நாடக சங்கீதம் பயின்றிருக்கிறேன். நிறைய கச்சேரிகளும் செய்திருக்கிறேன். அவை தவிர தையல், வீணை வாசிப்பு, ஜோதிடம், ஜெம்மாலஜி போன்றவற்றையும் பயின்றிருக்கிறேன்’’ என்றார் பூரிப்புடன் பத்மாவதி.

தொகுப்பு: விஜயா கண்ணன்