Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

வலைத் தளங்களால் வந்த விடியல்!

நன்றி குங்குமம் தோழி

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவிலுக்கு அருகிலிருக்கும் மா.கொளக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மெர்லின். மெட்ரிக் கல்விமுறையில் பிளஸ் டூவில் அறுநூறு மதிப்பெண்ணுக்கு 593 மதிப்பெண்கள் பெற்றார். தமிழ் பாடத்தில் 95 மதிப்பெண்களும், ஆங்கில பாடத்தில் 98ம் எடுத்துள்ளார். மற்ற பாடங்களான கணக்கு, உயிரியல், ரசாயனம், இயற்பியலில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்துள்ளார். இதன் காரணமாக, கோவை வேளாண்மை கல்லூரியில் 200க்கு 200 கட் ஆஃப் மதிப்பெண் பெற்று நேரடியாக படிக்க மெர்லினுக்கு இடம் கிடைத்துள்ளது.

மெர்லின் அப்பா உணவு விடுதியில் வேலை செய்கிறார். அம்மா சித்ரா கிடைத்த வேலைகள் செய்யும் தொழிலாளி. மெர்லினுக்கு இரண்டு தங்கைகள். வங்கிக் கடன் பெற்று வீடு கட்டினாலும், கடனை திரும்பக் கட்ட முடியாமல் வங்கியிலிருந்து ஜப்தி நோட்டீஸ் வந்திருப்பதால் குடும்பமே இடிந்து போயிருந்த சூழலில், மெர்லின் பெற்ற மதிப்பெண்கள்தான் அவர்களுக்கு ஆறுதலாக அமைந்தது. அதிக மதிப்பெண்கள் எடுத்தாலும் மெர்லினை மேல் படிப்பு படிக்க வைக்க முடியாத சூழ்நிலையில் தனக்கு ஏற்பட்ட விடியல் குறித்து பகிர்ந்தார்.

‘‘நான் பத்தாம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் தமிழ் வழி படித்தேன். பிளஸ் ஒன், பிளஸ் டூ ஆங்கில வழியில் சேர்ந்து படித்தேன். அப்பா சம்பாத்தியத்தில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் சிரமப்பட்டுதான் என் படிப்பை முடித்தேன். அம்மா பிளஸ் டூ, தட்டச்சு படித்திருந்தாலும் கிடைத்த சிறு சிறு வேலைகளை செய்து எங்களை படிக்க வைப்பதில் அப்பாவுக்கு துணையாக இருந்தார். வீட்டுக்கான கடனை அடைக்க முடியாத காரணத்தால் வீடு ஏலத்திற்கு வந்துவிடும் என்ற இக்கட்டான சூழ்நிலையில், என்னதான் நான் அதிக மதிப்பெண்கள் எடுத்தாலும், என்னால் மேல் படிப்பு படிக்க முடியாத சூழலுக்கு நான் தள்ளப்பட்டேன். ஆனால், நான் படிப்பை தொடராவிட்டால் என்னுடைய கடின உழைப்பு வீணாகிவிடும் என்று மட்டும் எனக்குத் தெரிந்தது. மேல் படிப்பு படிக்கவும் வழி தெரியவில்லை. கடன் கொடுத்து உதவவும் யாருமில்லை.

வலைத்தளங்கள் மூலமாக உதவி கேட்கலாம் என்றால் எத்தனை பேர்கள் எனது வேண்டுகோளை பார்ப்பார்கள்... அப்படி பார்ப்பவர்கள் நான் சொல்வதை எப்படி நம்புவார்கள். அந்த நெருக்கடியான நிலையில்தான் அறந்தாங்கியில் செயல்பட்டுவரும் யூடியூபர் குமரேசனின் நினைவு எனக்கு வந்தது. உதவி கேட்டு அவரை அணுகுபவர்களை நேரில் சென்று உண்மை நிலையை அறிந்து உறுதி செய்த பிறகு, காணொளிகளை நடுநிலையோடு வெளியிட்டு வலைத்தள ஆர்வலர்களிடமிருந்து உதவிகள் பெற உதவி வருபவர். அவரைத் தொடர்பு கொண்டு எனது கையறு நிலையை எடுத்துச் சொன்னேன். உடனே நேரடியாக வந்தார். அவரிடம் என்னுடைய நிலைமையை விளக்கினேன். என்னைப் பற்றி முழுமையாக படம் பிடித்தவர் அவரது ‘ஹேப்பி வில்லேஜ் குக்கிங்’ சேனலில் அந்தக் காணொளியை பதிவேற்றம் செய்தார். அது வைரலானது. எனது வங்கிக் கணக்கிற்கு நன்கொடைகள் வரத் தொடங்கின. இரண்டு நாட்களில் சுமார் இரண்டரை லட்சம் ரூபாய் சிறு துளி பெரு வெள்ளமாய் சேர்ந்து விட்டது. சிங்கப்பூரைச் சேர்ந்த ஸ்டாலின் தண்டபாணி என்பவர் லேப்டாப்பிற்கான பணத்தினை குமரேசனுக்கு அனுப்பி வைத்தார். அவரும் அந்தப் பணத்தில் எனக்கு ஒரு நல்ல லேப்டாப்பினை வாங்கிக் கொடுத்தார்.

அந்தக் காணொளியை பார்த்து பல நல்ல உள்ளங்கள் எனது படிப்புச் செலவை ஏற்க முன்வந்துள்ளார்கள். உதவி செய்ய தமிழ் நெஞ்சங்கள் உலகம் முழுவதும் இருப்பது எனக்கு வாழ்க்கையில் நம்பிக்கை கொடுத்துள்ளது. நாகப்பட்டினத்தை சேர்ந்த காஜா அண்ணன் என்னுடைய படிப்பிற்கான செலவினை ஏற்றுக் கொண்டுள்ளார். எனது குடும்பத்திற்கு இருந்த பொருளாதார சுமை கணிசமாகக் குறைந்ததாலும், எனது படிப்பு, கல்லூரி விடுதிக்கான செலவினை காஜா அண்ணன் ஏற்றுக் கொண்டுள்ளார். மேலும், நிதி உதவியினை இனிமேலும் பெறுவது நியாயம் இல்லை என்பதால், குமரேசன் உட்பட தனக்கு உதவிய கருணை உள்ளங்களுக்கு நன்றி’’ சொல்லி, மேலும், பண உதவி செய்ய வேண்டாம் என்று காணொளி பதிவேற்றம் செய்துள்ளார்.

‘‘கவுன்சலிங்கில் நான் விருப்பப்பட்டது போலவே கோவை வேளாண்மை கல்லூரியில் படிக்க இடம் கிடைத்துள்ளது. ஆகஸ்ட் மாதம் வகுப்புகள் தொடங்கும். எனது மூத்த தங்கை பிளஸ் டூ படிக்கிறார். அவரும் என்னைப் போலவே நன்றாக படிப்பார். அவருக்கும் என்னைப் போல உதவி கிடைத்தால்தான் மேல் படிப்பு படிக்க முடியும். நான் வேளாண்மை பட்டப்படிப்பு படித்து முடித்து, IAS தேர்வு எழுதி அதிகாரியாக வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். படிப்பு முடித்து நான் வேலைக்கு சென்ற பிறகு என்னைப் போல பொருளாதாரத்தில் தாழ்ந்த நிலையில் உள்ள மாணவிகளுக்கு என்னால் ஆன உதவிகளை செய்வேன்’’ என்றார் மெர்லின்.

தொகுப்பு: கண்ணம்மா பாரதி