Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

‘டான்ஸ் வித் வீல்ஸ்’

நன்றி குங்குமம் தோழி

2018 நடந்த சாலை விபத்தில் தண்டுவடப் பாதிப்புக்குள்ளான பிரியா ஷர்மா, நடனத்தின் மூலம் மீண்டு வந்துள்ளார். 2024ல், இந்தியாவின் 16 மாநிலங்களில் உள்ள மாற்றுத்திறனா ளிப் பெண்களை ஒன்றிணைக்க விரும்பியவர் ‘டான்ஸ் வித் வீல்ஸ்’ (Dance With Wheels) என்ற தளத்தை உருவாக்கினார். கடந்த ஆண்டு இந்தியாவில் முதல் முறையாக ஜெய்ப்பூரில் நடைபெற்ற ‘அஸ்தித்வா 2025’ என்ற நிகழ்வில் ஒன்பது மாற்றுத்திறனாளிப் பெண்கள் சக்கர நாற்காலிகளில் அமர்ந்தவாறு நடன நிகழ்ச்சியை அரங்கேற்றினர்.

மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாராவைச் சேர்ந்தவர் பிரியா. நடுத்தர குடும்பப் பின்னணியைக் கொண்டவர். முதுகலைப் பட்டம் மற்றும் கணினிப் பயன்பாட்டில் முதுகலை டிப்ளமோ முடித்திருந்தார் பிரியா. அதன் அடிப்படையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நிலையான வருமானம், பொருளாதார சுதந்திரம் என தன் குடும்பத்திற்கு முழு ஆதரவு அளித்து வந்திருந்தார்.

செப்டம்பர் 2018ல் ஏற்பட்ட சாலை விபத்தில் பிரியாவிற்கு தண்டுவடப் பாதிப்பு ஏற்பட்டது. ஒரே இரவில் பிரியாவின் வாழ்க்கை சக்கர நாற்காலியில் என்று முடிவானது. தண்டுவடப் பாதிப்பினால் உடலின் கீழ்ப்பகுதி முழுதும் செயலிழந்து விட்டது. இதனால் அவரின் வாழ்க்கை கேள்விக்குறியாக மாறியது. ‘‘சின்னச் சின்ன வேலைகளை கூட என்னால் செய்ய முடியவில்லை. இனி என் வாழ்க்கையை எப்படி நான் வாழ்வேன் என்ற பயம் எனக்குள் ெதாற்றிக் கொண்டது.

எல்லாவற்றுக்கும் பிறரை சார்ந்திருக்க வேண்டும். என்னால் மீண்டு வர முடியுமா என்ற கேள்வியே எனக்கு பெரிய சவாலாக இருந்தது. அதனால் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டேன். என்னுடைய வேலைகளை நானே செய்துகொள்ள கற்றுக் கொண்டேன். அப்போதுதான் என் சகோதரிக்கு திருமணம் நிச்சயமானது. முதலில் நான் நிகழ்ச்சிக்கு வரவே தயங்கினேன். ஆனால், என் சகோதரி வற்புறுத்த சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டு, திருமணத்தில் கலந்து கொண்டேன். அப்போது வரை நான் நடனமாடுவேன் என்று நினைத்து பார்க்கவில்லை. விபத்துக்குப் பிறகு, முதல் முறையாக நான் மகிழ்ச்சியை உணர்ந்த தருணம் அதுதான்’’ என்றவர், அதை செயல்படுத்தியது பற்றி விவரித்தார்.

‘‘நான் அடிப்படையில் நடனக் கலைஞர் எல்லாம் கிடையாது. நடனம் கற்றுக் கொண்டதில்லை. சகோதரியின் திருமணத்தில் உறவினர்கள் எல்லோரும் நடனமாடிக் கொண்டிருந்தார்கள். அந்த மகிழ்ச்சியான தருணம் என்னை அறியாமல் நடனமாட செய்திருக்கிறது. சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டு நானும் அந்தக் கூட்டத்தில் நடனமாடினேன்.

என்னுடைய நெருங்கிய தோழிதான் எங்களைப் போன்ற மாற்றுத்திறனாளி பெண்களுக்கு ஒரு கருவியாக நடனம் ஆடலாம் என்று ஊக்குவித்தார். நான் மற்ற மாற்றுத்திறனாளிப் பெண்களுடன் ஆலோசித்த போது அவர்கள் இதற்கான சரியான தளம் மற்றும் வாய்ப்பு இல்லை என்பதை குறிப்பிட்டார். எங்களுக்காக உருவாக்கப்பட்ட தளம்தான் ‘டான்ஸ் வித் வீல்ஸ்.’ வெவ்வேறு மாநிலங்களில் எங்களைப் போல் உள்ள பெண்களை ஆன்லைன் மூலமாக இணைத்தோம். இந்த அமைப்பு மூலமாக நடனப் பயிற்சி மட்டுமில்லாமல் வாழ்க்கை குறித்த சவால்களை பகிர்ந்து கொண்டோம். எல்லாவற்றையும் விட எங்களின் நட்புக்கான தளமாகவும் இது அமைந்தது’’ என்றவர், நடனப் பயிற்சி குறித்து விவரித்தார்.

‘‘சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே விளையாட்டுகளை விளையாடும் போது நடனமும் ஆட முடியும். சின்னச் சின்ன நடன அசைவுகளை பயிற்சி செய்தோம். எங்களுக்கான ஒரு தனிப்பட்ட பாணியை அமைத்துக் கொண்டோம். வார இறுதி நாட்களில் இதற்கான பயிற்சியினை மேற்கொள்வோம். தற்போது இந்தக் குழுவில் 15 முதல் 55 வயதுள்ளவர்கள் இணைந்துள்ளார்கள். நாங்க பயிற்சியோடு நில்லாமல் அதனை அறங்கேற்ற திட்டமிட்டோம்.

எங்களின் முதல் நடன நிகழ்ச்சி ஜெய்ப்பூரில் என்று முடிவானது. நாங்க இதுவரை இணையத்தில்தான் பழகி இருக்கிறோம். முதல் முறையாக அனைவரும் ஜெய்ப்பூரில் சந்தித்துக் கொண்டோம். ஒத்திகைகள் அரங்கேறியது. அந்த நாள் வந்தது. நன்றாக பயிற்சி பெற்றிருந்தாலும் உள்ளுக்குள் ஒரு பதட்டம் இருந்தது எங்களுக்கு. எங்களின் நடனத்தை ரசித்து பார்த்த பார்வையாளர்கள் கைத்தட்ட எங்களுக்கு ரொம்பவே சந்தோஷமாக இருந்தது. சமுதாயத்தில் நாங்க புறக்கணிக்கப்பட்டவர்கள்.

மற்றவர்களால் விமர்சிக்கப்படுபவர்கள். ஆனால், அன்று எங்களை கலைஞர்களாக பார்த்தார்கள். எங்களை ‘நடனக் கலைஞர்கள்’ என்று அறிமுகப்படுத்திக் கொள்கிறோம். அடுத்த மேடை நிகழ்ச்சியினை தென்னிந்தியாவில் மங்களூரில் நடத்த முடிவு செய்துள்ளோம்’’ என்றவர், கடந்த ஆண்டு மத்தியப் பிரதேசத்தில் மாற்றுத்திறனாளி தடகளப் போட்டியில் ஈட்டி எறிதல் மற்றும் குண்டு எறிதலில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளார்.

‘‘எங்களைப் போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பிசியோதெரபி செய்வது அவசியம். ஆனால், அந்தப் பயிற்சிக்கு மாற்றாக நடனம் மாறிவிட்டது. இன்று, டான்ஸ் வித் வீல்ஸ் அமைப்பு, இந்தியாவின் 16 மாநிலங்களில் உள்ளது. அதில் 45-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிப் பெண்கள் மற்றும் சிறுமிகள் இணைந்துள்ளனர். இணையம் மூலம் செயல்பட்டாலும், நாங்க சந்திக்கும் அன்றாட சவால்கள், பிரச்னைகள் குறித்து அவ்வப்போது எங்களுக்குள் கலந்துரையாடல் செய்து கொள்வோம். மாற்றுத்திறனாளிகளான நாங்கள் தனியாக இல்லை என்பதை எங்கள் அமைப்பு மூலமாக உணர்ந்துள்ளோம்” என்றார் பிரியா.

தொகுப்பு: கண்ணம்மா பாரதி