Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

நடனத்தை விரும்பி நடிப்பில் நிலைத்தவர்! சூர்யகலா

நன்றி குங்குமம் தோழி

செல்லுலாய்ட் பெண்கள்

1950களின் பழைய திரைப்பட ரசிகர்களுக்கு நடிகை சூர்யகலா நன்கு பரிச்சயமானவர். இவருடைய திரை வாழ்க்கை என்பது ஒரே சீரான தாள கதியில் அமையாமல், ஏற்ற இறக்கங்களுடன் கூடியதாகவே அமைந்தது. நடனத்தை ஆத்மார்த்தமாக நேசித்தவர். அதனாலேயே நடிப்பை விட நடன வாய்ப்புகளுக்கு முன்னுரிமை அளித்தவர். முறைப்படி நடனம் பயின்றவர் என்பதாலும், அவர் திரைத்துறைக்குள் நுழைந்த காலத்தில் ஒரு கதாநாயகி நடிகைக்குக் கிடைத்து வந்த மரியாதையும் வாய்ப்புகளும் பேரும் புகழும் நடன மணிகளுக்கும் கிடைத்து வந்த காலம். இதுவே சூர்யகலாவை நடன வாய்ப்புகளை மட்டுமே அதிகம் நாடச் செய்தது. நினைப்பதெல்லாம் நடந்து விடுமா என்ன? காலம் எப்போதும் வேறு விதமாகத்தானே நிலைக்கும்… அதுவே சூர்யகலாவுக்கும் நேர்ந்தது.

பட்டினிப் போராட்டத்தால் கிடைத்த வெற்றி!

ஜனவரி 01, 1940 ஆம் ஆண்டில் அன்றைய மதராஸ் ராஜதானியில் அமைந்த பெஜவாடா மாவட்டம் (பின்னர் விஜயவாடா) காக்கிநாடாவில் பிறந்தவர் சூர்யகலா. தந்தையார் ராமி ரெட்டி, தாயார் சுபத்ராலா. மிகப்பெரிய வேளாண் குடும்பத்தைச் சார்ந்தவர். சிறு வயதிலிருந்தே நடனத்தின் மீது ஓர் அலாதி ப்ரியம் அவருக்கு இருந்தது. தியேட்டரில் பார்க்கும் படங்களில் இடம் பெற்ற நடனங்கள் அவரை வெகுவாக ஈர்த்தன.

அதனால் படிப்பில் பெரிய ஈடுபாடு இல்லாமல் போனது. பரத நாட்டியத்தை முறைப்படி மிகச் சிறு வயதிலேயே கற்றுக்கொண்டவர் சூர்ய கலா. இசையமைப்பாளர் ராஜேஸ்வர ராவ் இவர்கள் குடும்பத்தின் நெருங்கிய உறவினர். அதனாலும் திரைப்படப் பாடல்களை ரசித்துப் பார்ப்பதோடு, அந்த நடனங்களையும் ஆடிப் பார்த்துப் பயிற்சி செய்வதும் ஒரு இயல்பான செயலாகவே சூர்யகலாவுக்கு அமைந்தது. சூர்ய கலாவுக்கு மிகவும் ஆதரவாக இருந்தார் ராஜேஸ்வர ராவ். ‘படிப்பு வரவில்லை என்றால் போகட்டும், விட்டு விடுங்கள். அவளுக்கு என்ன வருகிறதோ, எதில் ஆர்வம் இருக்கிறதோ அதையே கற்றுக் கொள்ளட்டும்’ என்று அவர் மட்டுமே ஆறுதல் மொழிகளை பேசியதுடன் அவரது பெற்றோரை கண்டிக்கவும் செய்தார்.

சூர்யகலாவுக்கு படிப்புதான் வரவில்லை; எனவே உடனடியாக திருமணத்தைச் செய்து வைத்து விட வேண்டுமென்பதில் பெற்றோர் தீவிரம் காட்ட ஆரம்பித்தனர். கிராமம் சார்ந்த விவசாயக் குடும்பத்தில் வேறு எப்படி யோசிப்பார்கள்? சூர்யகலா அதற்கு எதிராகப் பட்டினிப் போராட்டத்தை வீட்டுக்குள் ஆரம்பித்துவிட்டார். வேறு வழியில்லாமல், பெற்றோர் தங்கள் பிடிவாதத்தைத் தளர்த்திக் கொள்ள வேண்டியிருந்தது.

இத்தனைக்கும் 9 வயதுதான் ஆகியிருந்தது அவருக்கு. பால்ய விவாகங்கள் நடைபெறும் காலம் அல்லவா அது? ராஜேஸ்வர ராவ் அளித்த ஆதரவு, சூர்யகலாவுக்கு சினிமாவில் நடனம் ஆட வேண்டும் என்ற தீராத ஆசையை தோற்றுவித்தது. மகளுக்கு அதுதான் விருப்பம் என்பதை உணர்ந்து கொண்ட பெற்றோரும் வேறு வழியில்லாமல் மகளின் விருப்பத்துக்குச் சம்மதித்தனர்.

அமர்க்களமாய் நடந்தேறிய அரங்கேற்றம்!

காக்கிநாடாவில் இருந்த நிலபுலன்கள், வீடு என இருந்த கொஞ்சம் சொத்துகளையும் விற்றுவிட்டு, மதராஸுக்கு ரயிலேறியது குடும்பம். அங்கு தேனாம்பேட்டை பகுதியில் இசையமைப்பாளர் ராஜேஸ்வர ராவ் வீட்டிலேயே சில காலம் குடியேறினார்கள். பின்னர் அவரே பார்த்துக் கொடுத்த புதிய வீட்டுக்கும் மாறினார்கள். அவரை நம்பியே மொழி தெரியாத புதிய ஊரில் தங்கள் மகளுக்கான எதிர்காலத்தை நம்பி வந்தவர்கள் சூர்ய கலாவின் பெற்றோர். அன்றைய தமிழ்த் திரையுலகில் சகலகலா வல்லவராக அறியப்பட்ட பிரபல நடிகர் ரஞ்சனின் குரு எல்லப்ப நட்டுவனார், சூர்யகலாவுக்கும் குருவாக இருந்து பரதம் மட்டுமல்லாமல் பலவிதமான நடனங்களிலும் பயிற்சிகளை அளித்தார். இரண்டு ஆண்டுகள் அவரிடம் பெற்ற நடனப் பயிற்சி தன்னை மென்மேலும் மெருகேற்றிக் கொள்ள சூர்யகலாவுக்கு உதவியது.

9 வயது சிறுமியாக இருந்தபோதே மதராஸுக்கு வந்துவிட்டதால் நடனத்தோடு அடிப்படைக் கல்வியும் தொடர்ந்தது. தமிழ் வழியில்தான் அன்றைய SSLC வரை கல்வி பயின்றிருக்கிறார். என்னதான் நடனம் மீது பித்து இருந்தாலும் அவர் கல்வியை முழுவதுமாகப் புறக்கணித்து விடவில்லை. சொந்த ஊரான காக்கிநாடாவில் திரைப் பிரபலங்களான நடிகையர் சௌகார் ஜானகி, அவரது தங்கையும் நாயகியுமான கிருஷ்ண குமாரி, பாடகர்கள் ஏ.எம்.ராஜா, ஜிக்கி முன்னிலையில் நடன அரங்கேற்றம் அமர்க்களமாக, அரங்கு நிறைந்து சொந்த ஊர் மக்கள் பாராட்ட மிகச் சிறப்பாக நடந்தேறியுள்ளது. பின்னர் அந்த அரங்கத்தின் பெயரையே ‘சூர்யகலா மந்திர்’ என்று மாற்றும் அளவுக்கு அத்தனை சிறப்பான நிகழ்ச்சியாக அரங்கேற்றம் நிகழ்ந்துள்ளது.

கலைவாணர் பாராட்டிய கிளிமூக்குப் பாப்பா!

பள்ளி மாணவியாக இருந்த போதே சில பள்ளித் தோழிகள் தி.நகரிலிருந்த கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் வீட்டுக்கு சூர்யகலாவை அழைத்துச் சென்றிருக்கிறார்கள். இவரைப் பார்த்ததுமே என்.எஸ்.கே. வுக்குப் பிடித்துப் போய்விட்டது. ‘கிளிமூக்குப் பாப்பா’ என்று மூக்கைச் செல்லமாகத் திருகிப் பாராட்டியிருக்கிறார். சில நாட்களுக்குப் பின் படப்பிடிப்பை வேடிக்கை பார்க்கலாம் என தோழிகள் அழைக்கவே அங்கும் வேடிக்கை பார்க்கும் எண்ணத்துடன் கலைவாணர் அனுமதி பெற்று சென்றிருக்கிறார். அங்கு லலிதா, பத்மினி, ராகினி சகோதரிகள் மற்றும் வேறு சில நடனப் பெண்களும் பாவாடை, சட்டையணிந்து நடனமாடிக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் இவருக்கும் நடனமாடும் ஆசை வந்துவிட்டது.

அது என்.எஸ்.கே. இயக்கிய ‘மணமகள்’ படத்தின் படப்பிடிப்பு. அப்படித்தான் அந்தப் படத்தில் முதன்முதலில் நடனமாடும் வாய்ப்பும் சூர்யகலாவுக்கு கிடைத்தது. மெய்கண்டார்(என்.எஸ்.கிருஷ்ணன்) நடத்தி வரும் ஆதரவற்றோர் ஆசிரம விழாவில், அடைக்கலமாக வந்து சேர்ந்த கைம்பெண் ராதா(டி.ஏ.மதுரம்) ‘நல்ல பெண்மணி மிக நல்ல பெண்மணி’ என பாட, குசலகுமாரி தலைமையில் சிறுமிகள் குழுவாக சேர்ந்து ஆட, ஒரே டேக்கிலேயே காட்சி ஓ.கே. ஆனதால், கலைவாணர் மனதார அவரைப் பாராட்டியதோடு, ‘கிளிமூக்குப் பாப்பாவுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது’ என்று வாழ்த்தியும் இருக்கிறார். சூர்யகலாவின் விருப்பம் போலவே பள்ளி மாணவப் பருவத்தில் பதினொரு வயதில் முதன்முதலாக திரைப்படத்தில் குழுவில் சேர்ந்து நடனமாடும் வாய்ப்பு கலைவாணர் படத்தில் அற்புதமாய் அவருக்கு அமைந்தது. இதுவே அவர் விரும்பிய முதல் திரைப்பட நடன வாய்ப்பு.

பார்வையற்ற தங்கையாக தெலுங்கில் அறிமுகம்!

தமிழில் எம்.ஜி.ஆர் நடித்து 1952ல் வெளியான துன்பியல் திரைப்படம் ‘என் தங்கை’. வறுமையின் பிடியில் சிக்கியிருக்கும் குடும்பத்தைக் கடைத்தேற்றுவதற்காக அவர் படுகின்ற பாடு, அத்தோடு கண் பார்வையற்ற தங்கை மீனாவை (ஈ.வி.சரோஜா) கண் போல் பேணுவதும், இறுதியில் தங்கையின் மறைவுக்குப் பின் அவள் உடலோடு தானும் கடலுக்குள் இறங்கித் தன்னை மாய்த்துக் கொள்வதுமாக, முற்றிலும் எம்.ஜி.ஆர். படங்களிலிருந்து மாறுபட்டதொரு திரைப்படம். பொதுவாக எம்.ஜி.ஆரின் படங்கள் பாஸிட்டிவ் எனர்ஜியை, சிந்தனையை ரசிகர்களிடம் ஏற்படுத்தக்கூடியவை. ஆனால், இப்படமோ அதற்கு முற்றிலும் நேர்மாறானது. கதாநாயகனான எம்.ஜி.ஆர். தற்கொலை செய்து கொண்டு வாழ்க்கையை முடித்துக்கொள்வது போன்ற காட்சி இந்த ஒரு படத்தில் மட்டுமே வெளியானது.

இதே படம் 1953 ஜனவரியில் தெலுங்கில் ‘நா செல்லலு’ என ஆண்டின் தொடக்கத்திலேயே வெளி வந்தது. கண் பார்வையற்ற தங்கை வேடத்தில் நடித்தவர் சூர்யகலா. இப்படத்தின் இயக்குநர் சித்ரப்பு நாராயண மூர்த்தி. நடனம் ஆடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என ஆர்வத்துடன் காத்திருந்த சூர்யகலாவுக்கு சற்று ஏமாற்றம். இயக்குநரின் வற்புறுத்தலுக்கு இணங்கி 13 வயதில் பார்வையற்ற தங்கை வேடத்தினை ஏற்று சிறப்பாகவே நடித்திருந்தார்.

தமிழ்ப் பெண்ணாகவே மாறியவர்!

அழகான, அகன்ற வட்ட முகம்; காதளவோடிய பெரிய கண்கள். சற்றே பூசினாற் போன்ற உடல் வாகு. தெலுங்குப் பெண் என்ற போதும் மிக அழகான தெளிவான தெலுங்கு கலப்பற்ற தமிழ் உச்சரிப்பு ஆச்சரியம். மிக இனிமையான குரல் வளம் அவருக்கு. நடனத்தை விரும்பி, திரைத்துறைக்கு வந்திருந்தாலும், ஆடுவதை விடவும் நடிப்பதற்கான வாய்ப்புகளே அவரைத் தேடி வந்தன. ஆர். நாகேந்திர ராவ் இயக்கத்தில் வெளியான ‘ஜாதகம்’ தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் 1953 டிசம்பரில் வெளியானது. சூர்யகலா கதாநாயகியாக நடித்து வெளியான முதல் தமிழ்த் திரைப்படம் இது.

‘மாடுகள் மேய்த்திடும் பையன்’, ‘குலவும் யாழிசையே’, ‘மனதில் புதுவித இன்பம் காணுதே’ என மூன்று அற்புதமான பாடல்களை எம்.எஸ்.ராஜேஸ்வரி இவருக்காகப் பாடியிருப்பார். அதிலும் ‘மாடுகள் மேய்த்திடும் பையன்’ அக்கால சூப்பர் ஹிட் பாடல். 70 ஆண்டுகளுக்கு முன்னதாகவே ஜாதகம் மூட நம்பிகையை வளர்க்கக்கூடியது; முற்றிலும் புறக்கணிக்கப்பட வேண்டியது என்ற கருத்தினை வலியுறுத்திய அதே நேரம் நகைச்சுவை இழையோட எடுக்கப்பட்ட திரைப்படம். இவ்வாறான விமர்சன நோக்கில் படம் எடுத்திருப்பதும் வியப்பை ஏற்படுத்துகிறது.

பெண்ணரசியின் இளவரசி மஞ்சுளா!

பெண்ணரசியாக நாட்டை ஆள்பவர் கண்ணாம்பா. ஆனால், உண்மையிலேயே படத்தின் கதாநாயகியாக, சிறு வயதிலேயே காணாமல் போன இளவரசனை(ஏ.பி.நாகராஜன்) காதலித்து, பல்வேறு போராட்டங்களுக்கும் இடர்களுக்கும் இடையில் அவரை கைப்பிடிக்கும் வேறோர் நாட்டின் இளவரசி மஞ்சுளாவாக நடித்தவர் சூர்யகலா. பின்னாட்களில் பல பக்திப் படங்களையும் இயக்கிப் புகழ் பெற்ற ஏ.பி.நாகராஜன் நாயகனாக நடித்த ஒரு சில படங்களில் பெண்ணரசியும் ஒன்று. ‘இன்பம் என்றும் இங்கே ஆட்சி புரியுது’ என்று திருச்சி லோகநாதன், எம்.எஸ்.ராஜேஸ்வரி இருவரும் பாடிய ஒரு இனிமையான புகழ் பெற்ற டூயட் பாடலும் இருவருக்கும் உண்டு. உன்மையிலேயே பாடல்கள்தான் பல படங்களையும் இன்றைக்கு நமக்கு நினைவூட்டிக் கொண்டிருக்கின்றன. இப்படத்தில் சூர்யகலா தவிர ராஜ சுலோசனா, ஈ.வி.சரோஜா நடித்திருந்தாலும், ராஜ சுலோசனா தந்திரம் மிக்க வில்லி.

‘அன்பு எங்கே?’ படத்திலும் பண்டரிபாய், தேவிகா, மைனாவதி என பல நாயகிகள். நாட்டியக்காரப் பெண்ணாக, பலன் கருதி மட்டுமே நாயகன் பாலாஜியை சுற்றிச் சுற்றி வரும் வில்லி சூர்யகலா ஏற்றது Vamp பாத்திரம். கிளப் டான்ஸ் வகையைச் சார்ந்த நடனத்தை 1950களில் ஆடி நடித்தவர் இவர். ஆனால், பாடல் ஓகோவென்று பெயர் பெற்றது. ‘மேலே பறக்கும் ராக்கெட்டு… மின்னல் பூச்சி ஜாக்கெட்டு… ஆளை மயக்கும் ஃபேஸ் கட்டு… அதுதான் இப்போ மார்க்கெட்டு… மாமா… மாமா…. மஜ்ஜா’ என்ற தஞ்சை ராமையா தாஸ் எழுதிய இப்பாடல் பட்டிதொட்டி எங்கும் ஒலித்து மக்களை கிறுகிறுக்க வைத்தது. சூர்யகலா அந்தப் பாடலுக்கு மிக அற்புதமாக ஆட, சமீபத்தில் மறைந்த பாடகி ஜமுனா ராணியின் குரலில் மாயம் புரிந்த பாடல் அது.

குணச்சித்திர நடிப்பின் ஒரு துளி!

1954ல் வெளியான ‘அந்த நாள்’ திரைப்படம் மறக்க இயலாத ஒன்று. 54ல் படம் வெளியாகி இருந்தாலும் கதை நிகழும் ஆண்டு 1943, இரண்டாம் உலகப்போரில் ஜப்பான், மதராஸ் நகரின் மீது நள்ளிரவை நெருங்கும் நேரத்தில் குண்டு வீசுவதில் துவங்குகிறது. கதையில் நிகழும் ஒரு கொலை பலர் மீதும் சந்தேகத்தை எழுப்புகிறது. அவ்வாறு காவல்துறை சந்தேகம் கொள்ளக்கூடிய ஒரு நபராக நாட்டியக்காரி அம்புஜம் (சூர்யகலா) இருக்கிறாள். கொலையுண்ட ரேடியோ என்ஜினியர் ராஜனின் ஆசை நாயகி அவள்.

ஏற்கெனவே சின்னையாப் பிள்ளையின் (பி.டி.சம்பந்தம்) உடைமையாக இருந்த அவளை தன் வசமாக்கிக் கொண்டு காதல், காமக் களியாட்டங்களுக்கு அவளை ஆட்படுத்தி கர்ப்பவதியாகவும் ஆன பின் அவளை கைவிட்டு விடுகிறான் ராஜன் (சிவாஜி கணேசன்). இதுவே கொலைக்கான காரணமாகவும் இருக்கலாம் என போலீஸ் அவளை தேடுகிறது. இந்தப் பாத்திரத்தில் மிக இயல்பாக நடித்திருந்தார் சூர்யகலா. ஒரு திறமையான நடிகையால் எந்தப் பாத்திரத்தையும் ஏற்று நடிக்க முடியும் என்பதற்கு சூர்யகலா ஏற்ற அம்புஜம் பாத்திரம் வெகு பொருத்தம். இப்படத்தில் அவரைப் பார்க்கும் போது, 80களில் கங்கை அமரனின் ‘கோழி கூவுது’ படத்தில் அறிமுகமாகி பிரபலமான நடிகை இளவரசியின் சாயல் அவரிடம் தென்பட்டது.

பருத்த உடலும் நகைச்சுவை வாய்ப்புகளும்!

நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ் தன்னுடைய சில படங்களில் சூர்யகலாவுக்கு நடிப்பதற்கான சிறு சிறு வேடங்களை அளித்து உதவினார். பிற்காலத்தில் உடல் பருத்துப் போனதும் கூட இவருக்கான வாய்ப்புகள் கிடைக்காமல் போனதற்கு முக்கியமான காரணம். பருத்த உடல் நகைச்சுவை நடிப்புக்கு ஏற்றது என்று கருதப்படுவதால், அவ்வாறு சில வாய்ப்புகள் அவரைத் தேடி வந்தன. நடிகைகள் அங்கமுத்து, பிந்து கோஷ் போன்றவர்கள் இதற்கு மிக நல்ல உதாரணங்கள்.

1966ல் வெளியான ‘சாது மிரண்டால்’ படத்தில் ஒரு சில நகைச்சுவை காட்சிகளில் மட்டுமே இடம் பெற்றார். ஏ.வீரப்பனும் சூர்யகலாவும் திருமணம் செய்துகொண்டு புது மணத் தம்பதிகளாக ஒரு டாக்ஸியில் பயணம் செய்ய நேரிடும். ஏற்கனவே அந்த டாக்ஸியின் பின் சீட்டுக்குக் கீழே ஒரு பிணம் இருப்பதை அறியாமல் டாக்ஸி டிரைவர் (நாகேஷ்) அதை ஓட்டிக் கொண்டு வர, புது மணத் தம்பதிகள் இருவரும் டாக்ஸியில் ஏறி பின் சீட்டில் அமர்ந்து கொண்டு வர நகைச்சுவையில் தியேட்டர் அதிரும்.

கே.பாலசந்தரின் ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்திலும் சூர்யகலா மறக்க இயலாத ஒரு பாத்திரத்தில் நடித்திருப்பார். ரஜினிக்கு ஒரு அநாமதேய கேசட் கைக்கு வந்து சேர, ‘அன்பரே! உங்களை ஒருமுறை பார்த்தேன். பார்த்ததும் பரம ரசிகை ஆகிவிட்டேன். அதென்ன… இப்படி ஒரு பூகம்பத்தை என இதயத்தில் ஏற்படுத்தி விட்டீர்கள்? பொல்லாத போக்கிரி சார் நீங்கள்..! நாட்டி பாய்..!’ என்று அதில் பேசப்படும் பெண்ணின் குரலும் அந்தக் கொஞ்சு மொழிகளும் வெகு பிரபலமானவை. அந்தப் பெண்ணைத் தேடி ரஜினி சிங்கப்பூரில் அலைய… ரஜினியை ஏமாற்ற அவரது நண்பர்கள் இருவரும் செய்யும் வேலைதான் ஒரு துப்புரவுப் பணி செய்யும் பெண்ணை ‘கேசட் சுந்தரி’யாகக் கொண்டு வந்து நிறுத்துவது. அந்த நகைச்சுவை காட்சியில் தியேட்டரை சிரிப்பால் அதிர வைத்தவர் சூர்யகலா.

பல படங்களிலும் நடனத்துடன் நாயகியாக, வில்லியாக, குணச்சித்திர கதாபாத்திரமாக, நகைச்சுவையாக என பலவிதமான பாத்திரங்களையும் ஏற்று நடிக்கக் கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் அவர் பயன்படுத்திக் கொண்டார். வாழ்க்கையின் தேவைகளும் பாடுகளும் தானே அனைத்தையும் இங்கு தீர்மானிக்கின்றன. ஆசைகள் இருக்கலாம், அது ஒருபுறம் எப்போதும் மறைந்தே இருக்கும். ஆரம்ப காலத்தில் அவர் பிரபலமாக இருந்த அளவு பின்னாட்களில் இல்லை. சிறு சிறு பாத்திரங்களையும் அம்மா, அத்தை, பெரியம்மா என கிடைத்த வாய்ப்புகள் அனைத்தையும் ஏற்றார். திரை வாழ்க்கை முற்றுப்பெற்ற போது சின்னத்திரையிலும் தொடர்ந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளிலும் 500 படங்களுக்கும் மேல் நடித்தவர். 1951ல் திரையில் தோன்றியவர், நாற்பதாண்டு காலம் நடிப்பைத் தொடர்ந்துள்ளார்.

நுங்கம்பாக்கம் புஷ்பா நகரில் அடித்தட்டு மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வாழ்க்கை கழிந்தது. கணவர் செல்வராஜ், இவர்கள் குடும்ப வாழ்க்கையின் சொத்தாக மூன்று மகன்கள்; ஒரு மகள் மட்டுமே. வயது மூப்பின் காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் 2014, ஜூன் 30 அன்று காலமானார். கணவரும் சில ஆண்டுகளுக்கு முன் காலமானார். சிலர் திரை வாழ்க்கையில் உச்சம் தொட்டவர்களாக இருக்க, வேறு சிலரோ புகழுக்காக மட்டுமல்லாமல் வாழ்க்கைப் பாட்டுக்காகத் திரையில் தோன்றினால் போதும் என்ற நிலையில் தொடர்கிறார்கள். அவ்வாறான ஒரு சிலரில் சூர்யகலாவும் ஒருவர்.

சூர்யகலா நடித்த சில திரைப்படங்கள்...

ஜாதகம், அந்தநாள், பெண்ணரசி, அன்பு எங்கே?, டவுன் பஸ், ராஜா மலையசிம்மன், சங்கிலித்தேவன், பிறந்தநாள், குமார ராஜா, சௌபாக்கியவதி, மணாளனே மங்கையின் பாக்கியம், இல்லறமே நல்லறம், பால நாகம்மா, மகிஷாசுரமர்த்தினி, அன்பே தெய்வம், நான் வளர்த்த தங்கை, அருமை மகள் அபிராமி, காவேரியின் கணவன், எங்கள் குல தேவி, கண் திறந்தது, மறக்க முடியுமா?, நிரபராதி, மௌன கீதங்கள், முந்தானை முடிச்சு, தாவணிக் கனவுகள், அபூர்வ சகோதரிகள், மனைவி ரெடி, கோடை மழை, ஆராரோ ஆரிராரோ, சுந்தர காண்டம், மகளிர் மட்டும், சின்னக்குயில் பாடுது.

தொகுப்பு : ஸ்டில்ஸ் ஞானம்