Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

காஸ்மெடிக் சர்ஜரி பாதுகாப்பானதா?

A to Z Guide!

நன்றி குங்குமம் டாக்டர்

காஸ்மெடிக் சர்ஜரி என்பது சினிமா பிரபலங்கள் மற்றும் மாடல்களுக்கானது என்று பார்க்கப்பட்ட நிலைமாறி, இன்று தோற்றத்தில் மாற்றம் வேண்டும், இளமையாக தெரிய வேண்டும் என்பது முதல், பிறவிக் குறைபாடுகள் அல்லது விபத்துக்குப் பிறகு ஏற்பட்ட மாற்றங்களைச் சரிசெய்ய என பலரும் காஸ்மெடிக் சர்ஜரியை நாடுகின்றனர். அழகுக்காக செய்யப்படும் இந்த அறுவைசிகிச்சைகள் பாதுகாப்பானதா, அதன் நன்மைகள், பக்கவிளைவுகள், மருத்துவரின் தகுதி, எதிர்பார்க்கக்கூடிய முடிவுகள் போன்றவற்றில் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன என்பதை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் மறுசீரமைப்பு மற்றும் அழகியல் அறுவைசிகிச்சை நிபுணர் கார்த்திகேயன். அவர் கூறியதாவது:

காஸ்மெடிக் சர்ஜரி என்பது என்ன? எந்த நிலையில் தேவைப்படுகிறது?

காஸ்மெடிக் சர்ஜரி என்பது உடலின் தோற்றத்தை அழகுபடுத்தும் மற்றும் சீரமைக்கும் சிகிச்சை ஆகும். இதில் பல வகைகள் உள்ளன. அறுவைசிகிச்சை மூலமாகவும் செய்யலாம். அறுவைசிகிச்சை இல்லாமலும் செய்யலாம். உதாரணமாக பில்லர்ஸ் (Fillers) என்ற முறையில், முகத்தில் சிலருக்கு தோல் மேடு பள்ளமாக, சுருக்கமாக இருக்கும் அந்த இடங்களை நிரப்புவோம். இதனால், முகத்தில் இருந்த மேடு பள்ளங்கள் மறைந்து சுருக்கங்கள் மறைந்து தோல் இளமையாக தோற்றமளிக்கும். மேலும், லேசர் (Lasers) மற்றும் போட்டாக்ஸ் (Botox) போன்ற அறுவைசிகிச்சை அல்லாத சிகிச்சைகளும் இருக்கிறது. அடுத்தகட்டமாக அறுவைசிகிச்சை. இந்த அறுவைசிகிச்சையில் மார்பகங்கள், வயிற்றுப்பகுதி, மூக்கு, புருவங்கள் ஆகியவற்றில் காஸ்மெடிக் சர்ஜரி செய்யலாம்.

பொதுவாக, காஸ்மெடிக் சர்ஜரி என்றால் அது பெண்களுக்கானது என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், ஆண்களுக்கும் காஸ்மெடிக் சர்ஜரி சில நிலைகளில் தேவைப்படுகிறது. உதாரணமாக, இன்றைய காலகட்டத்தில் சிறுவயதிலேயே ஆண்கள் பலருக்கும் முடி உதிர்தல் பிரச்னை அதிகமாக இருக்கிறது. அதனால், ஹேர் டிரான்ஸ்பிளான்ட் சிகிச்சை அவர்களுக்கு தேவைப்படுகிறது. அதுபோன்று, சிறு வயதில் அடிபட்டதாலோ அல்லது வேறு காரணத்தினாலோ மூக்கு சற்று வளைந்திருக்கலாம் அல்லது தழும்புகள் ஏற்பட்டிருக்கலாம் அதை சரி செய்து கொள்ளவும் அறுவைசிகிச்சை மேற்கொள்கிறார்கள்.

காஸ்மெடிக் சர்ஜரியைப் பொருத்தவரை முக்கிய சிகிச்சைகள் என்ன?

முகத்திற்கான சிகிச்சைகள்: தோல் சுருக்கங்களைக் குறைக்க பில்லர்ஸ், மூக்கு சீரமைப்பு (Rhinoplasty), கண் இமை சிகிச்சை (Blepharoplasty), ஃபேஸ் லிஃப்ட் (Face lift) மற்றும் நெக் லிஃப்ட் (Neck lift).ஆண்களுக்கான சிகிச்சைகள்: இளவயதில் முடி கொட்டுதலுக்கான முடி மாற்று சிகிச்சை (Hair transplant) மற்றும் மூக்கு சீரமைப்பு சிகிச்சைகள்.

பெண்களுக்கான சிகிச்சைகள்

பிரசவம் அல்லது உடல் எடைக் குறைப்பிற்குப் பின் தொங்கும் வயிற்றுத் தோலையும் சதையையும் நீக்கும் டம்மி டக் (Tummy tuck / Abdominoplasty). மார்பகப் பெருக்கம் (Breast augmentation - இம்ப்ளான்ட் அல்லது உடலின் பிற பகுதியிலிருந்து கொழுப்பு எடுத்து வைப்பது) மற்றும் மார்பகக் குறைப்பு (Breast reduction). பெண் உறுப்புச் சீரமைப்பு (Genital cosmetic surgery).

உடலின் பிற பகுதிகள்: கைகள் (Brachioplasty), தொடைகள் மற்றும் கால்களுக்கான சீரமைப்பு சிகிச்சைகள் போன்ற சிகிச்சைகள் இருக்கிறது. இதில் யாருக்கு என்ன தேவையோ அதைப் பொருத்து சிகிச்சை முறைகள் மாறும்.

காஸ்மெடிக் சர்ஜரி பாதுகாப்பானது தானா?

தகுதியான பிளாஸ்டிக் சர்ஜன் (Qualified Plastic Surgeon) மூலம், சரியான மருத்துவமனை அமைப்பில் செய்யப்படும் போது இச்சிகிச்சை முற்றிலும் பாதுகாப்பானதுதான். லேசர் மற்றும் போட்டாக்ஸ் போன்ற அறுவைசிகிச்சை அல்லாத முறைகளை டெர்மட்டாலஜிஸ்ட் (Dermatologist) அல்லது எம்பிபிஎஸ் மருத்துவர்கள் செய்கின்றனர்.கட்டுப்படுத்த முடியாத சர்க்கரை நோய் (Uncontrolled diabetes) மற்றும் ரத்தக் கசிவுப் பிரச்சினைகள் உள்ளவர்களைத் தவிர மற்றவர்கள் தகுந்த மருத்துவ ஆலோசனைக்குப் பின் இதைச் செய்து கொள்ளலாம்.

அதேசமயமே ரிஸ்க்கே இல்லை என்றும் சொல்ல முடியாது. ஏனென்றால் எந்தவொரு அறுவைசிகிச்சை என்றாலும், அதில் சின்னதாக ரிஸ்க் இருக்கத்தான் செய்யும் அதுபோன்று இதிலும் சின்னதாக ரிஸ்க் இருக்கும். அதேசமயம் எல்லாருக்குமே ரிஸ்க் இருக்கும் என்பதும் கிடையாது. அது அவர்கள் எடுத்துக் கொள்ளும் சிகிச்சையைப் பொருத்து மாறுபடும். அதையும் அனுபவமிக்க மருத்துவர்களை அணுகி தகுந்த ஆலோசனை பெற்றபின் சிகிச்சை எடுத்துக் கொண்டால் காஸ்மெடிக் சர்ஜரி பாதுகாப்பானதுதான்.

இந்த அறுவைசிகிச்சையை மேற்கொள்ள ஏற்ற வயது என்ன? எல்லோருக்கும் காஸ்மெடிக் சர்ஜரி செய்ய முடியுமா? யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்?

காஸ்மெடிக் சிகிச்சையைப் பொருத்தவரை வயது வரம்பு எதுவும் கிடையாது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். அதேசமயம், குழந்தைப் பருவத்தில் செய்து கொள்வதைவிட கொஞ்சம் வளர்ந்தபின் செய்து கொள்வது நலமாக இருக்கும். யாரெல்லாம் தவிர்க்க வேண்டும் என்றால், சர்க்கரை அதிக அளவில் இருப்பவர்கள் மற்றும் ரத்த உறைதலில் பிரச்னை உள்ளவர்கள் தவிர்ப்பது நலம். மற்றபடி எல்லாரும் செய்து கொள்ளலாம்.

அறுவை சிகிச்சையின் நன்மைகள் மற்றும் ஆபத்துகள் என்ன?

உடலின் தோற்றத்தைச் சீரமைப்பதன் மூலம் நோயாளிகளின் சுயநம்பிக்கை அதிகரிக்கும். ஆபத்துகள் என்றால் எந்தவொரு அறுவைசிகிச்சையையும் போல லேசான வீக்கம், ரத்தக் கசிவு, தொற்றுகள் (Infection) அல்லது மயக்கமருந்தினால் தொண்டை எரிச்சல் போன்ற லேசான பக்கவிளைவுகள் ஏற்படலாம்; அதனால், உயிருக்கு ஆபத்தான விஷயங்கள் மிகவும் அரிதானவை. மீண்டு வரும் காலம்: சிகிச்சையின் தன்மையைப் பொறுத்து ஒரே நாளில் அல்லது 5 முதல் 10 நாட்களில் இயல்புநிலைக்குத் திரும்பலாம்.

காஸ்மெடிக் சர்ஜரியைப் பொருத்தவரை மக்களுக்கிருக்கும் தவறான புரிதல்கள் என்னென்ன?

காஸ்மெடிக் சிகிச்சை பொருத்தவரை சிலருக்கு தவறான புரிதல்கள் இருக்கத்தான் செய்கிறது. உதாரணமாக, சிலர் என்ன நினைக்கிறார்கள் என்றால், சினிமாவில் காண்பிப்பது போன்று ஒருவரின் முகத்தை அப்படியே வேறு ஒருவரின் முகமாக மாற்ற முடியும் என்று நினைக்கிறார்கள். ஆனால், அது அப்படியில்லை. ஒருவரது முகத்தை வெட்டி அப்படியே இன்னொருவர் முகமாக தத்தரூபமாக மாற்ற முடியாது; ஆனால், ஒருவரின், புருவங்கள், மூக்கு, கண் என்று தனிப்பட்ட அம்சங்களை (Features) மட்டுமே மாற்ற முடியும். இப்படி இன்னொருவரின் அம்சங்களை மாற்றும்போது அவரது தோற்றம் இருப்பது போன்று தோன்றும்.

உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால், உலகப் புகழ்பெற்ற பாப் இசைப் பாடகர் மைக்கல் ஜாக்சன், இறந்து போன தனது தங்கையின் நினைவாக தனது முகத்தை மாற்றி அமைத்துக் கொண்டார் என்று நாம் கேள்விப்பட்டிருக்கிறோம் அல்லவா, அதுவும் இதுபோன்றதுதான். அவரது தங்கையின் முகத் தோற்றத்தைப் போன்று ஒரு சில அம்சங்களை அவர் மாற்றிக் கொண்டதால் அவரது முகத் தோற்றம் மாறியது போல் தோன்றுகிறது அவ்வளவுதான்.

மற்றபடி முக அமைப்பை முழுவதுமாக மாற்றுவது என்பது செய்ய முடியாது. அடுத்ததாக, காஸ்மெடிக் சிகிச்சையைப் பொருத்தவரை இது பணக்காரர்களுக்கானது அல்லது சினிமா பிரபலங்களுக்கானது என்று பலரும் நினைக்கிறார்கள் அது முற்றிலும் தவறானது. ஒருவருக்கு அவருக்கு பிடித்தமான முறையில் அவரது உடலமைப்பு இல்லை என்றால், பிடித்தமான முறையில் மாற்றிக் கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும். அதனால் தேவைப்படுவோர் யார் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்.

காஸ்மெடிக் அறுவைசிகிச்சைக்கு முன்பு என்னென்ன மருத்துவப் பரிசோதனைகள் செய்ய வேண்டும்?

பரிசோதனைகள் என்றால், பொதுவாக எல்லா அறுவை சிகிச்சைக்கும் செய்கிற அடிப்படையான ரத்தப் பரிசோதனை, சர்க்கரை அளவு போன்றவற்றை பரிசோதிப்போம். இதுதவிர அவர்களுக்கு உடலில் வேறு ஏதும் பிரச்னை இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் அவ்வளவுதான். இதில் முக்கியமாக பார்க்க வேண்டியது நமக்கு அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர் அனுபவம் வாய்ந்தவர்தானா, நாம் தேர்ந்தெடுக்கும் மருத்துவமனை உரிய அங்கீகாரம் உடையதா என்பதைத்தான் பார்க்க வேண்டும்.

காஸ்மெடிக் சர்ஜரியில் லேப்ராஸ்கோபி, ரோபோடிக் போன்ற நவீன கருவிகள் பயன்படுத்தப்படுகிறதா?

இதுவரை காஸ்மெடிக் சர்ஜரியில், லேப்ராஸ்கோபி, ரோபோடிக் முறைகள் பயன்படுத்தப்படுவதில்லை. ஓபன் அறுவை சிகிச்சைதான் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எதிர்பார்த்த தோற்றம் கிடைக்கவில்லை என்றால் மீண்டும் அறுவைசிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்படுமா? முடிவு நிரந்தரமானதா? அல்லது காலப்போக்கில் மாற்றம் ஏற்படுமா?

இந்த அறுவை சிகிச்சையைப் பொருத்தவரை, செய்து கொள்ள விரும்பும் நபர், முதலில் தங்களுக்கு என்ன தேவை என்பதை அனுபவமிக்க மருத்துவரை அணுகி தெளிவாக சொல்ல வேண்டும்.

சிலர் எங்களிடம் வந்து எனக்கு அந்த செலிபிரிட்டி போன்று முக அமைப்பை மாற்றுங்கள் என்று கேட்பார்கள். அப்படியெல்லாம் மாற்றுவது கூடாது என்பதை நாங்கள் சொல்லிவிடுவோம். பின்னர், அவர்களுக்கு என்ன பிரச்னை, என்ன தேவை அவர்கள் என்ன எதிர்ப்பார்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டு அதற்கு தகுந்த சிகிச்சையை மேற்கொள்வோம். ஒருவேளை அவர்களுக்கு அந்த மாற்றம் போதவில்லை.

வேறு எதிர்ப்பார்க்கிறார்கள் என்றால், மீண்டும் அறுவை சிகிச்சை தேவைப்படும். மற்றபடி இது நிரந்தரமா என்று கேட்டால், நிரந்தரமாகத்தான் இருக்கும். அதேசமயம், அறுவை சிகிச்சை செய்து கொண்ட நபர் பின்னாளில் உடல் எடை கூடினாலோ, குறைந்தாலோ அதற்கு எற்றவாறு அவரது தோற்றத்தில் மாற்றங்கள் ஏற்படுவது இயல்பானதுதானே. அதுபோன்று வயதாகும்போது, உடலில் ஏற்படும் மாற்றங்களால் சில மாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

தொகுப்பு: - ஸ்ரீதேவி குமரேசன்