நன்றி குங்குமம் தோழி
* வெண்ணெய் காய்ச்சியதும் உடனடியாக அதை குளிர்ந்த பாத்திரத்தில் கொட்டி வைத்தால் மணல் போல் உறையும்.
* ஃபில்டரில் காபி போடும் முன் ஒரு மெல்லிய துணியை ஃபில்டரின் மேல் போட்டு, அதன்பின் காபித்தூள் போட்டு வெந்நீர் ஊற்றினால், ஃபில்டரில் உள்ள துவாரங்கள் அடைத்துக் கொள்ளாமல் டிகாக் ஷன் திக்காக இறங்கும்.
* மெதுவடைக்கு மாவு அரைத்து நீர்த்து விட்டதா? இரண்டு ரொட்டிகளை மிக்ஸியில் போட்டு தூள் செய்து வடை மாவுக் கலவையில் சேர்த்தால் மாவும் கெட்டியாகும், வடை மொறுமொறுவென்றும் வரும்.
* குருமா நீர்த்துவிட்டால் அதில் ஒரு கைப்பிடி ஓட்ஸை பொடித்துப் போட்டால் நன்றாகக் கெட்டிப்படும்.
* பால் அல்லது நெய் காய்ச்சிய பாத்திரங்களிலோ, ஊறுகாய் காலியான பாட்டில்களிலோ அடியில் கொஞ்சம் மிச்சம் ஒட்டியிருக்கும். இதில் கோதுமை மாவைப் போட்டுப் புரட்டி எடுத்து, பிறகு அதைப் பிசைந்து சப்பாத்தி செய்தால் மிருதுவான, டேஸ்ட்டியான சப்பாத்தி கிடைக்கும்.
* எந்தத் துவையல் மீந்துவிட்டாலும் வாணலியில் இரண்டு டீஸ்பூன் நல்லெண்ணெய் விட்டுத் துவையலை போட்டு நன்கு கிளறி இறக்கினால் அடுத்த நாளும் சுவையாக இருக்கும்.
* ரசத்தில் மீந்த அடிமண்டியை தூக்கி எறியாமல், நன்றாக வடித்துக் கோதுமை மாவுடன் பிசைந்து கார சப்பாத்தி செய்யலாம் அல்லது இந்தக் கோதுமை மாவை சிறு துண்டுகளாக்கி எண்ணெயில் பொரித்தால் மொறுமொறு ஸ்நாக்ஸ் ரெடி.
* வாழைப்பழங்கள் சாப்பிட முடியாதபடி நன்றாகக் கனிந்துவிட்டால், அவற்றை கோதுமை மாவுடன் சேர்த்துப் பிசைந்து இனிப்பு சப்பாத்திகளோ, பூரிகளோ செய்யலாம்.
* தேங்காய் சட்னி மீந்துவிட்டால், புளித்த மோரில் கலந்து கொதிக்க வைத்துத் தாளிக்கவும். இன்ஸ்டன்ட் மோர்க்குழம்பு தயார்.
- இரா.அமிர்தவர்ஷினி, புதுச்சேரி.

